இதுதான் புற்றுநோய்க்கான எதிர்கால மருத்துவம்!



தனி ஒருவனுக்காக!

பொதுவான சிகிச்சை முறையே இதுவரை அளிக்கப்பட்ட நிலை மாறி, புதிய அணுகுமுறையைக் கையாள ஆரம்பித்திருக்கிறது மருத்துவ உலகம். புற்று
நோயால் பாதிக்கப்பட்ட அனைத்து நோயாளிகளுக்கும் ஒரே மாதிரியான சிகிச்சைகள் கொடுக்கப்பட்டு வந்தன.

இதிலிருந்து மாறுபட்டு, ஒவ்வோர் நோயாளிக்கும் ஏற்ற பிரத்யேகமான சிகிச்சை முறை இப்போது நடைமுறைக்கு வந்துள்ளது. இச்சிகிச்சைப்படி, நோயாளியின் மரபணு மூலக்கூறுகளை ஆராய்ந்து, அவருடைய தனித்தன்மைக்கு ஏற்ப அளிக்கப்படுவதை `ப்ரெசிஷன் சிகிச்சை’ என்று அறிமுகப்படுத்துகிறார் புற்றுநோய் சிறப்பு மருத்துவர் அனிதா ரமேஷ்.

“புற்றுநோய் மருத்துவ சிகிச்சைகள் அனைத்தும் சராசரி நோயாளியைக் கருத்தில் கொண்டே வடிவமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வோர் நோயாளியின் உடல் அமைப்பு, மரபணு மூலக்கூறு அமைப்பு மாறுபட்டு உள்ளதால், பொது மருத்துவ முறையானது எல்லா நோயாளிகளுக்கும் சரியாக பலன் தருவதில்லை.

இந்த சிக்கலைத் தீர்க்க, ஒருவரின் மரபணுவை ஆராய்ந்து அவருக்கு ஏற்ற வகையில் அளிக்கப்படும் சிகிச்சையே ப்ரெசிஷன் சிகிச்சை (Precision Treatment). இது நோயாளிகளின் நோய்க்குறி அறிதலில் மிகச்சரியான ஆய்வு முறையாக உள்ளது. அதோடு, நோயாளியின் தனிப்பட்ட மரபியல், சுற்றுச்சூழல், வாழ்க்கைமுறை போன்றவற்றால் ஏற்படும் தனிப்பட்ட வேறுபாடுகளை கருத்தில் கொண்டு புதிய அணுகுமுறையை மேற்கொண்டுள்ளது.

மக்கள்தொகை  ஆய்வுகள் அடிப்படையில், தனிப்பட்ட மருந்து அணுகுமுறை மூலம் புற்றுநோய்க்கான புதிய மருந்தைக் கண்டுபிடிக்கும் முயற்சிகளில்
2 ஆண்டுகளாக ஈடுபட்டு வருகிறோம். புற்றுநோய்களுக்கான எதிர்கால சிகிச்சையாக திகழும் `ப்ரெசிஷன் மருத்துவத் தொழில்நுட்ப’த்தை ஏற்றுக்கொண்டு, அவற்றை இந்தியாவில் உருவாக்கும் பெரும் சவால் நமக்கு ஏற்பட்டுள்ளது.

அடித்தட்டு மக்களுக்கும் இந்த மருத்துவ ெதாழில்நுட்பம் சென்றடைய வேண்டும். இப்போது கீமோதெரபி, ரேடியேஷன் தெரபி  மூலமாக புற்றுநோய்க்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இனிவரும் காலங்களில் ப்ரெசிஷன் மருத்துவம் மூலமாக மரபணு மூலக்கூறு பகுப்பாய்வுகளின் அடிப்படையில் நோயாளிகளின் உடலுக்கேற்ற சரியான மருந்தினைக் கண்டறிந்து, சரியான மருத்துவ சிகிச்சையை மருத்துவர்களால் உறுதி செய்ய முடியும்’’ என்கிறார் அனிதா ரமேஷ்.

- க.கதிரவன்