டியர் டாக்டர்



‘விதைகளை ஆயுதமாக்கும் விபரீத யுத்தம்’ - அட்டைப்பட கட்டுரை அலற வைத்தது. `இந்திய பருத்தி விவசாயத்தின் குடுமி மன்சாண்டோ எனும் விதை நிறுவனத்தின் கையில் இருக்கிறது...

பாரம்பரிய நாட்டு ரக பருத்தி விதைகளைக் காக்க தவறியதால்தான் இந்த அவல நிலை...’ என்கிற எழுத்தாளர் பாமயனின் அறைகூவலை, மக்கள் உடனடியாக உணர வேண்டிய அவசரத்தில் இருக்கிறார்கள். விழித்துக் கொள்ளுமா இந்திய அரசாங்கம்?
- சா.பாலுசாமி, பசுபதிபாளையம்., கே.ஆறுமுகம், போடி.மதுமித்ரா, செங்கல்பட்டு., சி.சாந்தகுமாரி, கடையநல்லூர் மற்றும்
பரசுராமன் (மின்னஞ்சலில்...)

மருத்துவர் தினம் வந்த இனிய மாதத்தில் மருத்துவர்களை கவுரவிக்கும் வகையில் ‘மாண்புமிகு’ என அவர்களை அழைத்தது பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது.  இப்படியும் டாக்டர்கள் இருக்கிறார்கள் என வியப்பூட்டியது.
- சுகந்தி நாராயண், வியாசர் காலனி, சென்னை.

சிறப்பு மருத்துவர் வசுமதி வேதாந்தம் விளக்கிய ‘கண்களையும் தாக்கும் புற்றுநோய்’ செய்தியும், டாக்டர்.கு.கணேசன்  எழுதிய ‘தசைநார் வலிக்கு என்ன தீர்வு’ கட்டுரையும் மிகவும் பயனுடையவை.
- இல.வள்ளிமயில், திருநகர், மதுரை.

மதுவின் கொடுமைகள் குறித்து விளக்கிய (மது... மயக்கம் என்ன?) அடிமை ஆவதின் அறிகுறிகள் என டாக்டர் ஷாமின் கட்டுரை,
பயனுள்ள விழிப்புணர்வாக அமைந்திருந்தது. மதுவுக்கு அடிமையாகிவிட்ட ஆயிரமாயிரம் மது அடிமைகளை மாற்றி யோசிக்க வைத்திருக்கும் இந்த மகத்தான கட்டுரை!
- இரா.வளையாபதி, தோட்டக்குறிச்சி.

குடும்பத்துக்காக பல தியாகங்களைச் செய்கிற பெண்கள், தூக்கத்தையும் தியாகம் செய்வதால் ஏற்படுகிற உடல் மற்றும் மன
நல பாதிப்புகளை டாக்டர் ராமகிருஷ்ணன் நச்சென எடுத்துச்
சொல்லியிருந்தார். தாய்க்குலமே ஜாக்கிரதை!
- வித்யா, நாமக்கல் மற்றும் அனுப்ரியா, சென்னை-11.

‘கொத்தவரங்காயெல்லாம் ஒரு காயா’ என இத்தனை வருடங்களாக அலட்சியமாக இருந்தோம். சித்த மருத்துவர் சக்தி சுப்ரமணியன் அதன் அருமை பெருமைகளைப் பற்றி விளக்கிய பிறகு, ஒருநாள் விட்டு ஒரு நாள் கொத்தவரங்காய் சமையல்தான். கொலஸ்ட்ராலை குறைக்க கொத்தவரங்காய் உதவும் என்பதுதான் ஹைலைட்!
- மார்ட்டின், சென்னை-91.

‘பள்ளிக்கூடத்தைச் சுற்றி பயங்கரம்!’ கட்டுரையின் ஆரம்ப வரியே பயமுறுத்துகிறது. பள்ளிக்கூடங்கள் பாதுகாப்பானவைதானா என
பெற்றோரை யோசிக்க வைத்துவிட்டீர்கள்.
- ஹரித்திரா, மீனம்பாக்கம்.