காபி பிரியர்கள் கவனத்துக்கு Cold is Gold!



காலையில் காபியின் நறுமணம்தான் பலருக்கு அலாரம். ஒரு கையில் சுடச்சுட காபி, மறு கையில் நாளிதழ்... இவை இல்லாத நாட்களின் தொடக்கம் நகரவாசிகளுக்குச் சொற்பமே. ‘சூடாக அரை கப் காபியோ, டீயோ குடிக்காமல் எனக்கு வேலையே ஓடாது’ என்று 11 மணிக்கு ஒரு கப், மீண்டும் 4 மணிக்கு ஒரு கப் என்று அதற்கு அடிமையாகி, வயிற்றைப் பகைத்துக் கொள்கிறோம். சூடான காபியை குடித்தவுடன், வயிற்றில் ஏற்படும் எரிச்சல், எதுக்களிப்பு போன்றவற்றை கவனிக்கிறோமா?

‘காபி பவுடர் தயாரிக்கும்போது காபி கொட்டையை வெப்பத்தில் வறுப்பதாலும், காபி தயாரிக்கும் போதும் நீரில் கொதிக்க வைக்கப்படுவதாலும், காபி கொட்டையிலிருந்து வெளிப்படும் அமிலத்தால் ஆரோக்கிய நலன்கள் அழிக்கப்படுவதுடன், கசப்புச் சுவையும் ஏற்படுகிறது. காபியிலிருந்து வெளிப்படும் அமில எண்ணெய் வயிற்றுப் பிரச்னைகளுக்கும் காரணமாகிறது’ என எலைட் நாளிதழ் தகவல் வெளியிட்டுள்ளது.

இதற்கான தீர்வு ‘கோல்ட் காபி’. இதை தயாரிப்பதும் சுலபம். ஒரு நீண்ட குவளையின் அடிப்பாகத்தில் தேவையான காபி தூள் போட்டு, அதன் மேல் குளிர்ந்த நீரை ஊற்றி ஃப்ரிட்ஜ் உள்ளே, அறை வெப்பத்திலோ 18 முதல் 24 மணி நேரம் வைக்க வேண்டும். மேலே தெளிந்துவரும் டிகாக்‌ஷனை வடிகட்டி பால் ஊற்றினால் அமிலம் இல்லாத, கசக்காத, பேஷ் பேஷ் ‘கோல்ட் காபி’ தயார்!

சூடான காபியில் வெளிப்படும் அமிலத்தைவிட கோல்ட் காபியில் 65 சதவிகித குறைந்த அளவு அமிலம் வெளிப்படுவதாக தனது ஆராய்ச்சி முடிவில் டோடி கூறியிருக்கிறார். ‘இல்லை, காபி எனக்கு சூடாத்தான் வேணும்’ என்று அடம்பிடிப்பவர்கள், கோல்ட் காபியில் கொஞ்சம் சுடுதண்ணீர் கலந்து குடியுங்கள்’ என்கிறார் அவர்.குடித்துதான் பார்ப்போமே!