ஆயிரம் நாட்கள் ஆச்சரியம்!



ஓ பாப்பா லாலி

ஸ்வாதி கொல்லப்பட்ட நாள்... அன்று யுனிசெஃப் நடத்திய பத்திரிகையாளர் கருத்தரங்கில், ‘ஒருநாள்கூட நிம்மதியா பேப்பர் படிக்க முடியல. ஒரே கொலை, கொள்ளை, கற்பழிப்பு…’ என்று நம்மைப் போல புலம்புகிறவர்களுக்கான பதில் கிடைத்தது. பதற்றமான நாட்டு நடப்புக்கும் மருத்துவத்துக்கும் அப்படி என்னப்பா சம்பந்தம் என்று கேட்கிறீர்களா? அது… ஆயிரம் நாட்கள்!

உங்கள் குழந்தையின் எதிர்காலம் முதல் 3 ஆண்டுகளிலேயே முடிவாகிவிடுகிறது. அவன் எதிர்காலத்தில் ஆரோக்கியமானவனாக வாழப் போகிறானா? இல்லை நோயாளியாகவா? சமூகத்துக்கு நன்மை செய்யப் போகிறானா? அல்லது குற்றச்செயல்கள் புரியும் சமூகக் கேடானவனாக உருவாகிறானா? இதை எல்லாம் முதல் ஆயிரம் நாட்களே தீர்மானிக்கிறது என்பதை விளக்கினார் யுனிசெஃப் அமைப்பின் தமிழ்நாடு மற்றும் கேரளா தலைமைப் பொறுப்பு அலுவலர் ஜாப் சக்காரியா.

‘‘கருவில் இருக்கும் 270 நாட்களுடன் பிறந்த முதல் 2 ஆண்டுகளில் ஒருவரின் ஆரோக்கியம், புத்திசாலித்தனம், உயரம், கல்வித்திறன், சம்பாத்தியம், மகிழ்ச்சியான மனநிலை என எல்லாமே தீர்மானிக்கப்பட்டுவிடுகிறது.

இதை பல்வேறு ஆதாரங்களுடன், 2013லேயே விவரித்திருந்தது பிரபல மருத்துவ இதழான The Lancet. உலக சுகாதார நிறுவனமும் இதைக் குறிப்பிட்டிருக்கிறது. அதனால், ஆரோக்கியமான, நல்ல குழந்தைகளை சமூகத்துக்குக் கொடுக்க ஆரம்பகட்டத்திலேயே நாம் முயற்சி செய்ய வேண்டும்.

கர்ப்ப காலத்திலும் குழந்தை பிறப்புக்குப் பிறகும் ஊட்டச்சத்துள்ள உணவைத் தாய்க்குக் கொடுப்பது, பரிசோதனைகள் செய்து கொள்வது, போதுமான ஓய்வு, சுகாதாரத்தை உறுதிப்படுத்துவது, குறைப்பிரசவத்தையும் எடை குறைவான குழந்தைப் பிறப்பையும் தடுப்பது, தாய்ப்பாலைத் தவிர்க்காமல் இருப்பது, குறிப்பாக குழந்தை பிறந்த ஒருமணி நேரத்திலேயே தாய்ப்பால் கொடுப்பது, குழந்தைக்குத் தகுந்த நேரத்தில் தடுப்பு ஊசிகள் என்று பல விஷயங்களை ஆரோக்கியம் சார்ந்து செய்ய வேண்டும்’’ என்பவர், குழந்தைகளின் நடத்தையை நல்லவிதமாக உருவாக்கவும் அந்த கட்டத்திலேயே முயற்சி செய்ய வேண்டும் என்கிறார்.

‘‘மஹாபாரதத்தில் கிருஷ்ணர் சக்கரவியூகம் என்ற போர் தந்திரம் பற்றி சொல்லிக் கொண்டிருக்கிறார். கர்ப்பிணியான அவரது தங்கையின் வயிற்றில் இருக்கும் அபிமன்யுவுக்கும் அது கேட்கிறது என்று படித்திருப்போம். இன்று கருவிலேயே குழந்தைக்குக் கேட்கும் திறனும், மற்ற விஷயங்களை உணரும் திறனும் உருவாகிவிடுகிறது என்று கூறுகிறது அறிவியல் உலகம்.

அதனால் கர்ப்பத்தின்போதும், குழந்தை பிறந்த பின்னும் நல்ல விஷயங்களை சொல்லிக் கொடுக்க வேண்டும். இதற்கு சமீபகால உதாரணம் ஒன்றும் சொல்லலாம். கடந்த டிசம்பர் மாதத்தில் ஃபேஸ்புக் நிறுவனரான மார்க் ஸூக்கர்பெர்க் தன்னுடைய முகநூல் பக்கத்தில் ஒரு படத்தைப் பதிவேற்றம் செய்திருந்தார். மனைவியின் மடியில் இருக்கும் ஒரு மாதமே ஆன குழந்தைக்கு அவர் புத்தகம் வாசித்துக் காட்டிக் கொண்டிருந்தார். அதுவும் பெரியவர்களாலேயே புரிந்துகொள்ளக் கஷ்டமான க்வாண்டம் பிசிக்ஸ்! அந்த அளவுக்கு 3 ஆண்டுகளிலேயே ஒரு குழந்தையின் அறிவையும் பண்பையும் நாம் தீர்மானித்துவிட முடியும்.

ஒரு மாணவன் மக்கு என்று வகுப்பறையைவிட்டு அனுப்பப்பட்டால், அது அந்த மாணவனின் தவறு மட்டுமே அல்ல. அவனை உருவாக்கிய பெற்றோர், ஆசிரியர், சமூகம், அரசாங்கம் என்று எல்லோருக்கும் பொறுப்பு உண்டு’’ என்கிறார் சக்காரியா.தற்செயலாக இந்தக் கட்டுரையை  அச்சில் ஏற்றுவது ராம்குமார் சென்னை அழைத்து வரப்பட்ட தினம் !ஒரு மாணவன் மக்கு என்று வகுப்பறையைவிட்டு அனுப்பப்பட்டால், அது அந்த மாணவனின் தவறு மட்டுமே அல்ல. அவனை உருவாக்கிய பெற்றோர், ஆசிரியர், சமூகம், அரசாங்கம் என்று எல்லோருக்கும் பொறுப்பு உண்டு!

- ஜி.ஸ்ரீவித்யா