கொழுப்புக்கு வரி போடுங்க சார்!



இது புதுசு!

‘கொழுப்பு மிகுந்த உணவுகளைத் தவிருங்கள்’ என்று மருத்துவர்கள் சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். ஊடகங்களிலும் அயராமல் எழுதிக்கொண்டே இருக்கிறோம். நமக்கும் அது புரிந்தாலும் சுவையின் மயக்கத்தால் மறந்துவிடுகிறோம்.

அதன்  பிறகு, பருமன் முதல் ரத்தக் கொதிப்பு வரை பல நோய்களால் அவதிப்படுகிறோம். இதைத் தடுக்க கேரள அரசு அதிரடி முடிவு எடுத்திருக்கிறது. மக்களின் உடல்நலத்துக்குத் தீங்கு விளைவிக்கும் சிகரெட், மதுபானங்களுக்குக் கூடுதல் வரி விதிப்பதுபோல கொழுப்புச்சத்து மிகுந்த உணவுகளுக்கும் வரிவிதிக்க முடிவு செய்திருக்கிறது!

இது பயனுள்ள நடவடிக்கை!
‘‘பீட்சா, பர்கர், சாண்ட்விச், பாஸ்தா போன்ற கொழுப்பு உணவுகளுக்கு இனி 14.5 சதவிகிதம் அதிக வரி வசூலிக்கப்படும். மற்ற ஃபாஸ்ட் புட் உணவுகளுக்கும் இந்த புதிய வரி பொருந்தும்’’ என்று கேரள நிதிஅமைச்சர் தாமஸ் ஐசக் அறிவித்திருக்கிறார். சமீபத்தில் தாக்கல் செய்த பட்ஜெட்டில் இந்த புதிய வரி அறிவிக்கப்பட்டுள்ளது. சேவை வரி, மதிப்புக் கூட்டு வரியைப் போல இதற்கு கொழுப்பு வரி (Fat tax) என்று பெயர்.

கேரள அரசின் இந்த ‘கொழுப்பு வரி’ விதிப்புக்கு காரணம் இல்லாமல் இல்லை. இந்திய அளவில் கடந்த 2010ம் ஆண்டு எடுக்கப்பட்ட ஆய்வு ஒன்றில் கேரள பள்ளிக்குழந்தைகளிடமே அதிக பருமன் இருப்பதாகத் தெரிய வந்தது. அதன் எதிரொலியாகவே இந்த வரிவிதிப்பு அமலுக்கு வந்ததாக கூறப்படுகிறது. கொழுப்பு உணவுகளுக்கான வரி விதிப்பு டென்மார்க், ஹங்கேரி  நாடுகளில் ஏற்கெனவே நடைமுறையில் உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

கேரள அரசின் சமீபத்திய அதிரடி முடிவான, கொழுப்பு உணவு (Junk Food) மீதான 14.5% கொழுப்புவரியை உற்சாகத்துடன் வரவேற்கின்றனர் தமிழ்நாட்டின் சுகாதார அதிகாரிகள். ‘‘அதிகரித்துவரும் வாழ்வியல் நோய்களை இந்த நடவடிக்கை கண்டிப்பாக கட்டுப்படுத்தும்’’ என்கிறார் தமிழ்நாடு பொது மற்றும் தடுப்பு மருந்துத்துறையின் இயக்குனரான டாக்டர் கே.குழந்தைசாமி.

இது பயனுள்ள நடவடிக்கை என்று சொல்லும் மருத்துவர், ‘‘இந்த வரிவிதிப்பு நடவடிக்கை எந்த அளவுக்கு வேலை செய்யப் போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். உலக சுகாதார அமைப்பின் ஆய்வில், புகையிலைப் பொருட்களின் மீதான வரி விதிப்பு உலக அளவில் கணிசமான அதன் பயன்பாட்டை குறைத்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

அந்த வகையில், 3 வகையான அணுகுமுறையை கடைபிடிப்பதன் மூலம் கொழுப்பு உணவுகளின் பயன்பாட்டை வெற்றிகரமாக கட்டுப்படுத்த முடியும். கொழுப்பு உணவுகளை உண்பதால் உண்டாகும் ஆரோக்கிய கேடுகள், சரிவிகித உணவு, உயரத்துக்கு ஏற்ற எடை மற்றும் உடற்பயிற்சிகள் பற்றிய விழிப்புணர்வை பள்ளிகளிலேயே கற்றுத்தர வேண்டும். 2வது அணுகுமுறையாக பருமன், நீரிழிவு மற்றும் இதயநோய் போன்ற வாழ்வியல் நோய்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரடி சேவை செய்வது, 3வது அணுகுமுறையாக சட்டப்படி நடவடிக்கை எடுப்பது. 

உதாரணமாக... பள்ளி, கல்லூரிகளுக்கு அருகில் குட்கா, பான்பராக், சிகரெட் போன்ற புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடை செய்து வருகிறோம். அதைப்போலவே கொழுப்பு உணவுகள் விற்பனையையும் கண்காணிப்பு நடவடிக்கைகள் மூலம் தடை செய்யலாம். இம்மூன்றுவிதமான அணுகுமுறையை நம் தமிழ்நாட்டில் ஏற்கனவே நடைமுறைப்படுத்தி வருகிறோம்.

வாழ்வியல் நோய்கள் அதிகரித்துவரும் இன்றைய சூழ்நிலையில், கேரள அரசு சரியான திசையை நோக்கி தன் கவனத்தை எடுத்துச் சென்றுள்ளது. இது ஒரு சோதனை முயற்சியாக இருந்தாலும், சிறப்பானதும், நேரடியான அணுகுமுறையாக இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.

நகரத்தில் உள்ள எந்தவொரு வணிக வளாகத்துக்குள் நுழைந்தாலும் மக்கள் எல்லோரும் எப்படி இந்த குப்பை உணவு களுக்கு அடிமையாகி இருக்கிறார்கள் என்பதை கண்கூடாக பார்க்கிறோம். இதுபோன்ற அரசாங்க நடவடிக்கைகளால், எதிர்காலத்தில் மக்களை நம்முடைய பாரம்பரிய உணவுகளை நோக்கித் திருப்ப முடியும் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது” என்கிறார் டாக்டர் கே.குழந்தைசாமி.

நம் உணவிலும் கொழுப்பு உண்டு!
இதற்கு  முற்றிலும்  மாறுபடுகிறார் உணவியல் ஆலோசகரான டாக்டர் தாரிணி கிருஷ்ணன்...“மேற்கத்திய உணவுகளின் மீதான ‘கொழுப்பு வரி’ மட்டும் எந்த பயனையும் தராது. நம்மூரில் கிடைக்கக்கூடிய, எண்ணெயில் பொரிக்கப்பட்ட உணவுகளான சமோசா, பஜ்ஜி, பக்கோடா, நெய் ரோஸ்ட், இனிப்பு வகைகள் மற்றும் பாவ் பாஜி போன்ற சாட் அயிட்டங்கள் மேற்கத்திய ஜங்க் ஃபுட்டுக்கு ஈடாக கெடுதல் விளைவிப்பவை.

இவற்றில் அளவுக்கு அதிகமான கொழுப்புச் சத்து இருக்கிறது. மேலும், காசு விஷயத்தில் சிக்கனத்தை கடைபிடிப்பவர்கள் வேண்டுமானால் குறைத்துக் கொள்வார்களே தவிர, எந்த வருவாய் பிரிவினராக இருந்தாலும் உணவு விஷயத்தில் ஒரே மாதிரியாகத்தான் இருக்கிறார்கள்.

வரியைப்பற்றி கவலைப்படாமல் தங்கள் விருப்பத்துக்கு ஏற்றவாறு உணவை சாப்பிடுபவர்கள்தான் அதிகம். அவர்களை இந்த வரிவிதிப்பு எந்தவிதத்திலும் கட்டுப்படுத்தாது” என்கிறார் டாக்டர் தாரிணி கிருஷ்ணன். வாழ்வியல் நோய்கள் அதிகரித்துவரும் இன்றைய சூழ்நிலையில், கேரள அரசு சரியான திசையை நோக்கி தன் கவனத்தை எடுத்துச் சென்றுள்ளது.

- இந்துமதி
படம்: ஆர்.கோபால்