தலைமுடியின் விலை உயிர்?!



பரிதாபம்

முடி கொட்டுவது என்பது இன்று எல்லா இடங்களிலும், எல்லோரிடத்திலும் பார்க்கும் சாதாரண பிரச்னையாகிவிட்டது. இதில் சிறியவர்கள், பெரியவர்கள், ஆண்கள், பெண்கள் என்று எந்தப் பாகுபாடும் இல்லை.முடி உதிர்வதை சிலர் இயல்பாக எடுத்துக் கொண்டாலும், பலர் பெரும் கவலைக்கு உள்ளாகி விடுகிறார்கள்.

அதன் எதிரொலியாகத்தான் முடி வளர்ச்சி பற்றிய பல எண்ணெய் விளம்பரங்கள் அதிகமாக வருவதைப் பார்க்க முடிகிறது. அதிலும் வழுக்கை விழுந்த ஆண்களைக் குறிவைக்கும் ஹேர் டிரான்ஸ்ப்ளான்டேஷன் என்ற சிகிச்சை அளிக்கும் நிலையங்களின் விளம்பரங்கள் நிறைய வருகின்றன.

இதுபோன்ற விளம்பரத்தைப் பார்த்து சிகிச்சை எடுத்துக்கொண்ட சந்தோஷ்குமார் என்ற
22 வயது இளைஞர் தன்னுடைய உயிரையே இழந்திருக்கிறார்.

வேலூர் மாவட்டம் ஆரணியைச் சேர்ந்த மருத்துவ கல்லூரி மாணவரான சந்தோஷ்குமார், வழுக்கைத்தலை தன் அழகைக் குறைப்பதாக நினைத்து சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு பார்லருக்கு சிகிச்சைக்காகச் சென்றிருக்கிறார். அங்கு ஹேர் டிரான்ஸ்ப்ளான்டேஷன் சிகிச்சை அவருக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. சிகிச்சை முடிந்தவுடன் சந்தோஷ்குமாருக்கு காய்ச்சலுடன் நடுக்கமும் ஏற்பட்டிருக்கிறது.

‘ஓவர் டோஸ் வேண்டாம் என்றேன். கேட்காமல் அந்த டாக்டர் அதிகம் கொடுத்துவிட்டார்’ என அவர்களுக்குள் பேசிக் கொண்டார்கள் என்று சந்தோஷ்குமாரின் தாயாரான ஜோசபின் கூறியிருக்கிறார். ‘‘காய்ச்சல் வந்தவுடன் டிரிப்ஸ் போட்டார்கள். என் மகன் திடீரென வாந்தி எடுத்தான். ‘இதற்கு மேல் சிகிச்சை என்றால் ஒவ்வொரு மணி நேரத்துக்கும், 10 ஆயிரம் ரூபாய் செலவாகும். வேறு மருத்துவமனையில் பார்த்துக் கொள்ளுங்கள்’ என்று கூறி காரில் ஏற்றி அனுப்பி விட்டனர்.

எனவே, ஆரணிக்கு அழைத்துச் சென்றுவிட்டோம். அதைத் தொடர்ந்து என் மகனுக்கு அடிக்கடி வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. இடுப்புக்கு கீழ் மரத்துவிட்டது என்றும் கூறினான். மறுநாள் காலை வேலூர் சி.எம்.சி. மருத்து வமனைக்குக் கொண்டு போகும் வழியிலேயே அவனுக்கு சுயநினைவு போனது. உடலின் நிறம் நீலமாக மாறியது. மூச்சும் விட முடியவில்லை.  வேலூர் சி.எம்.சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிறிதுநேரத்திலேயே நாங்கள் தவமிருந்து  பெற்ற எங்கள் மகன் எங்களைத் தவிக்க விட்டுப் போய்விட்டான்’’ என்று கண்ணீருடன் கூறியிருக்கிறார் அந்தத் தாய்.

இறந்தது பயிற்சி மருத்துவர் என்பதால் விவகாரம் வெளிச்சத்துக்கு வந்து, சுகாதாரத்துறை நடவடிக்கையால் ஜூன் 2ம் தேதி மாலை அந்த மையத்துக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. இந்தப் பிரச்னை பற்றியும் ஹேர் டிரான்ஸ்ப்ளான்டேஷன் சிகிச்சை பற்றியும் பிளாஸ்டிக் சர்ஜனான கார்த்திக் ராமிடம் கேட்டோம்.

‘‘வைட்டமின் மாத்திரைகள், Minoxidil போன்ற சொல்யூஷன்கள், Derma roller, PRP therapy சிகிச்சைகள் எல்லாம் கைகொடுக்காத பட்சத்தில்தான் ஹேர் டிரான்ஸ்ப்ளான்டேஷன் செய்வார்கள். அதாவது, தலையில் சுத்தமாக முடி கொட்டிவிட்டது என்ற பட்சத்தில்தான் Hair transplantation செய்ய வேண்டும். இதில் இரண்டு வகைகள் உண்டு. Follicular Unit Transplantation (FUT) என்ற முறையில் பின்னந்தலையில் இருக்கும் தோல் பகுதியை எடுத்து முன் தலையில் வைப்பார்கள். இந்த FUTயை அறுவைசிகிச்சை தெரிந்த மருத்துவர் மட்டுமே செய்ய வேண்டும்.

இது தவிர, பின்னந்தலையில் இருக்கும் முடிகளை முடி இல்லாத இடத்தில் நடும் Follicular Unit Extraction (FUE) சிகிச்சையை சரும நல மருத்துவர்களோ மற்ற மருத்துவர்களோ செய்வார்கள். உயிரிழந்த சந்தோஷ்குமாருக்கு இரண்டாவது வகை சிகிச்சையான FUEதான்செய்திருப்பார்கள். டாக்டரே இல்லாத பலர் இதுபோன்ற சிகிச்சைகளை அளிக்கிறார்கள். அதனால், தகுதி வாய்ந்த பிளாஸ்டிக் சர்ஜனை தேர்ந்தெடுக்க வேண்டும்.

இதுபோன்ற சிகிச்சைகளை செய்ய ஒருவர் ஐந்தரை வருடங்கள் அடிப்படையான மருத்துவம் படித்திருக்க வேண்டும். அதன்பிறகு,
3 வருடங்கள் பொது அறுவை சிகிச்சை படிக்க வேண்டும். அடுத்த 3 ஆண்டுகள்தான் பிளாஸ்டிக் சர்ஜரி படிக்க முடியும். கிட்டத்தட்ட ஒரு தகுதிவாய்ந்த மருத்துவர் இதற்காக கற்றுக் கொள்வதிலேயே சராசரியாக 12 ஆண்டுகளைக் கடந்து வந்திருப்பார். இதன்மூலம் நிறைய அனுபவங்கள் அவருக்குக் கிடைத்திருக்கும். எதிர்பாராமல் ஒரு பிரச்னை ஏற்பட்டாலும் அந்த நிலையை சமாளிக்கத் தெரிந்திருக்கும்.

ஆனால், அறுவை சிகிச்சையின் செயல்முறையை மட்டுமே தெரிந்து வைத்திருக்கும் தொழில்நுட்பக் கலைஞர்களாலோ, படிக்காத மற்ற மருத்துவர்களாலோ பிரச்னை ஏற்படும் பட்சத்தில் நோயாளியைக் காப்பாற்ற முடியாமல் போய்விடும். இதுபோன்ற உயிரிழப்புகளுக்கு அடிப்படை காரணம் அதுதான்.தகுதிவாய்ந்த மருத்துவரைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதைப் போலவே அறுவை சிகிச்சை செய்யும் இடம் போதுமான வசதிகள் கொண்ட ஆபரேஷன் தியேட்டரா என்பதையும் பார்க்க வேண்டும்.

அந்த அறுவை சிகிச்சை அரங்கத்தில் எல்லா அவசர கால சிகிச்சையையும் மேற்கொள்ளக்கூடிய சூழ்நிலை இருக்கிறதா என்பதையும் கவனிக்க வேண்டும். ஹேர் டிரான்ஸ்ப்ளான்டேஷன் என்பது எளிமையான ஓர் அறுவை சிகிச்சைதான். தகுதிவாய்ந்த இடத்திலோ, தகுதி பெற்றவர்களிடமோ செய்யாத பட்சத்தில்  பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புண்டு என்பதை இதிலிருந்து நாம் புரிந்துகொள்ளலாம். இந்த செய்தி ஒன்றுதான் வெளியில் வந்திருக்கிறது. வெளியில் தெரியாமல் இன்னும் இதுபோல் எத்தனையோ சம்பவங்கள் நடந்திருக்கலாம்’’ என்கிறார்.

மருத்துவ கவுன்சில் எடுத்துவரும் நடவடிக்கைகள் என்னென்ன?

தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் தலைவர் செந்தில்...‘‘Hair lacing, Hair weaving போன்ற சிகிச்சைகளை பியூட்டி பார்லரில் செய்துகொள்ளலாம். ஆனால், ஹேர் டிரான்ஸ்ப்ளான்டேஷனை பார்லரில் செய்யக் கூடாது. முகச்சுருக்கத்துக்கான Botox ஊசி, மச்சங்களை அகற்றுவது போன்ற சிகிச்சை
களையும் மருத்துவமனை அல்லாத இடங்களில் பொதுமக்கள் செய்துகொள்ளக் கூடாது.

இந்தப் பிரச்னையில் சம்பந்தப்பட்ட இரண்டு மருத்துவர்களிடமும் விசாரணை செய்துகொண்டிருக்கிறோம். மருத்துவமனை அல்லாத இடத்தில் பியூட்டி பார்லரில் சிகிச்சை கொடுப்பது தவறானது என்பதால் எங்களிடம் வந்திருக்கும் புகாரின் அடிப்படையில் அவர்களிடம் விசாரணை நடத்திக் கொண்டிருக்கிறோம்.

எத்தனை படித்தவர்களாக இருந்தாலும், என்னதான் விவரம் தெரிந்தவர்களாக இருந்தாலும் போலி விளம்பரங்களைப் பார்த்து ஏமாந்துவிடுகிறார்கள். அந்த அளவுக்கு கவர்ச்சிகரமான விளம்பரங்களை வெளியிடுகிறார்கள். இந்தப் பிரச்னையில் இவர் ஒரு மருத்துவராக இருந்தும் இதுபோல் தவறான இடத்தில் சென்று மாட்டிக் கொண்டு உயிரிழந்திருக்கிறார்.

மோசடியான மருத்துவ விளம்பரங்களைக் கட்டுப்படுத்த அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு சட்டரீதியான முயற்சிகளை மருத்துவ கவுன்சில் சார்பாக நாங்களும் செய்து கொண்டிருக்கிறோம். Magic Remedies and Advertising Act என்ற சட்டம் விளம்பரங்களைக் கட்டுப்படுத்துவதற்காகவே இருக்கிறது. இச்சட்டம் இன்னும் முறையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். இதற்கான நடவடிக்கைகளை உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டுத்துறையும் அரசாங்கமும் மேற்கொள்ள வேண்டும்...’’

ஹேர் டிரான்ஸ்ப்ளான்டேஷன் என்பது மிகவும் எளிமையானஅறுவை சிகிச்சைதான். தகுதிவாய்ந்த இடத்திலோ, தகுதி பெற்றவர்களிடமோ செய்யாத பட்சத்தில்தான்  பிரச்னைகள் ஏற்படக் கூடும்.

- ஞானதேசிகன்