ஏன் டாக்டர் ஏன்?
ஆபரேஷன் அலட்சியம்
சென்னை தண்டையார்பேட்டையைச் சேர்ந்த சரோஜா எனும் 60 வயதுப் பெண்மணியின் வயிற்றில் 18 ஆண்டுகளாக இருந்த கத்திரிக்கோல் ஸ்டான்லி மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மூலம் சமீபத்தில் அகற்றப்பட்டிருக்கிறது.
18 ஆண்டுகளுக்கு முன்னால் இவருக்கு குடல்வால் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட போது தவறுதலாக வைக்கப்பட்ட கத்திரிக்கோல் இத்தனை காலமும் அவர் வயிற்றிலேயே இருந்திருக்கிறது.
உடல்பிரச்னைகளைத் தீர்ப்பதற்காக அறுவை சிகிச்சை செய்து கொள்கிறோம். அந்த அறுவை சிகிச்சையில் நடைபெறும் இது போன்ற தவறுகளால் உடல் பிரச்னைகள் உருவெடுக்கின்றன.
அறுவை சிகிச்சையின்போது வயிற்றுக்குள் உபகரணங்களை வைத்துத் தைத்து விடும் சம்பவங்களை நாம் நீண்ட காலமாகவே செய்தித்தாள்களில் படித்து வருகிறோம். மருத்துவத் தொழில்நுட்பம் வளர்ந்து விட்டிருக்கும் இக்காலத்திலும் இது தொடர்கதையாவது ஏன்? மருத்துவர்களின் அலட்சியப்போக்குதான் இதற்குக் காரணமா? பொது அறுவை சிகிச்சை நிபுணர் மோகனிடம் கேட்டோம்...
‘‘அறுவை சிகிச்சைக்கான உபகரணங்கள், பஞ்சுகள் மற்றும் Gauze piecesஐ வயிற்றுக்குள் வைத்துத் தைத்து விடுவதை எந்த விதத்திலும் நியாயப்படுத்த முடியாது. இருந்தாலும், இது போன்ற சம்பவங்கள் அரிதாகத்தான் நடக்கின்றன. அதோடு, எந்த மருத்துவரும் வேண்டுமென்றே இது போன்ற தவறுகளைச் செய்வதில்லை என்பதுதான் உண்மை. எந்த ஒரு துறையிலும் தவறுகள் நடப்பது தவிர்க்க இயலாதது.
இதற்கு மருத்துவத்துறையும் விதிவிலக்கானதல்ல. எந்த மருத்துவரும் அறுவை சிகிச்சை மேற்கொள்ளும்போது அலட்சியத்துடன் செயல்பட மாட்டார். அப்படி செயல்பட்டால் அவர் மருத்துவரே அல்ல.
எந்த அறுவை சிகிச்சையாக இருந்தாலும் தைப்பதற்கு முன்பு Physical verification மற்றும் PIG count verification கட்டாயம் செய்யப்படும். Physical verification என்பது அறுவை சிகிச்சை மேற்கொண்ட பகுதி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஏதேனும் உபகரணங்கள், பஞ்சுகள் மற்றும் Gauze pieces இருக்கிறதா என்று சோதிப்பது.
அறுவை சிகிச்சைக்கென கொண்டுவரப்படும் Pad, Instruments, Gauze pieces ஆகியவற்றின் சுருக்கம்தான் PIG. அறுவை சிகிச்சைக்கான குறிப்பேட்டில் PIG எண்ணிக்கை குறிக்கப்பட்டிருக்கும். அறுவை சிகிச்சை முடிந்த பிறகு, PIG count செய்யப்படும். கொண்டு வரப்பட்ட எண்ணிக்கையிலிருந்து ஏதேனும் ஒன்று குறைந்தாலும் நோயாளியின் வயிற்றில் இருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்டு சோதனை செய்யப்படும்.
அறுவை சிகிச்சைக்கான அறிக்கையில் PIG count verified என்று குறிக்கப்பட்டிருக்கும். உபகரணங்களை கணக்கிட்டு எண்ணிக்கை சரியாக இருக்கிறது என்று அதில் டிக் செய்ய வேண்டும். இப்படியான முறைதான் நீண்ட காலமாக நம்மிடம் இருக்கிறது. இது சரியான முறையும் கூட. இருந்தாலும் இதையும் மீறி சில தவறுகள் எதிர்பாராத விதமாக நடந்து விடுகின்றன.
பஞ்சு மற்றும் காஸ் பீஸ்கள் ரத்தத்தில் நனைந்து விட்டால் அது இருப்பதே தெரியாது. நான் முன்பு பணியாற்றிய மருத்துவமனையிலேயே ஒரு பெண் கருக்கலைப்புக்காக வந்திருந்தார். கரு உருவான ஆரம்ப நிலையிலேயே கலைக்க வேண்டும் என்றால் பிறப்புறுப்பு வழியாகவே கருக்கலைப்பு செய்து விட முடியும். அந்தக் கரு வளர்ந்த பிறகு வயிற்றில் அறுவை சிகிச்சை செய்துதான் வெளியெடுக்க முடியும்.
கர்ப்ப காலத்தில் கர்ப்பப்பைக்கு ரத்தம் அதிகம் பாயும் என்பதால் கருக்கலைப்பு செய்யும்போது ரத்தப்போக்கு அதிகமாக இருக்கும். ரத்தப்போக்கைக் கட்டுப்படுத்துவதற்காக வைத்த காஸ் பீஸ் ரத்தத்தில் நனைந்து விட்டதால், அதை எடுக்காமலேயே அறுவை சிகிச்சை செய்து விட்டனர். அறுவை சிகிச்சைக்குப் பிறகு இரண்டு நாட்கள் காய்ச்சல் இருப்பது இயல்பானது.
அதற்கும் மேல் காய்ச்சல் இருந்தால் கட்டாயம் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். அந்தப் பெண்ணுக்கு இரண்டு நாட்களுக்கும் மேல் காய்ச்சல் நீடித்த காரணத்தால் வயிற்றில் ஸ்கேன் செய்து பார்த்திருக்கின்றனர்.
காஸ் பீஸ் வயிற்றில் இருப்பது தெரிந்ததும் எங்களிடம் வந்து நியாயமான கோரிக்கை ஒன்றை வைத்தனர். மறுபடியும் அறுவை சிகிச்சை செய்து காஸ் பீஸை வெளியே எடுப்பதற்கு ஆகும் செலவை தவறு செய்த மருத்துவரே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றனர். அதுதான் நியாயமும் கூட. அவருக்கு அறுவை சிகிச்சை செய்து காஸ் பீஸை வெளியே எடுத்தனர்.
ஒரு மருத்துவர் இது போன்ற தவறை ஒரு முறை செய்து விட்டாலே அந்த மருத்துவர் மீது ஒரு முத்திரை குத்தப்பட்டு விடுகிறது. அவரிடம் அறுவை சிகிச்சை செய்து கொள்ளவே பயப்படும் சூழலை உருவாக்கி விடுகிறார்கள்.
ஒரு முறை தவறு செய்தவர் எல்லா முறையும் செய்வார் என்பது கிடையாது. அரசு மருத்துவமனைகளில் ஆட்கள் பற்றாக்குறை காரணமாக பணி நெருக்கடி, மருத்துவர்களின் உளவியலையே பாதிக்கிறது. இதன் காரணமாகவே நிறைய தவறுகள் நடைபெறுகின்றன.
உயிரைக் காக்க வேண்டிய பொறுப்புணர்வுடன் ஒரு மருத்துவர் செயல்பட வேண்டும். என்ன பிரச்னை என்றாலும் அறுவை சிகிச்சையின்போது கவனத்தை வேறு எங்கும் சிதறவிடாமல் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும். அமெரிக்க நாடுகளில் இது போன்ற பிரச்னைக்காக ரேடியோ ஃப்ரீக்வன்ஸி மற்றும் பார் கோடுகள் மூலம் பீப் ஒலி எழுப்பும்படியான தொழில்நுட்பத்தை அறுவை சிகிச்சை முடிந்ததும் கையாள்கின்றனர்.
இந்தியாவில் அதுபோன்ற முறை இல்லை. Physical verification மற்றும் PIG count verification செய்த பிறகு வலுவான சந்தேகம் எழும் நிலையில் C-Arm X-ray செய்து பார்க்கலாம்’’ என்கிறார் மோகன்.
மருத்துவத்துறையில் அலட்சியம் என்ற சொல்லுக்கே இடம் இருக்கக் கூடாது. ஏனென்றால் அலட்சியம் அல்லது தவறுதலாக உபகரணங்களையோ, பஞ்சையோ வைத்துத் தைத்து விடுவதால் பாதிப்புக்குள்ளாவது நோயாளிகள்தான். இப்படியாக பாதிக்கப்பட்ட ஒருவர் சட்டரீதியில் இப்பிரச்னையை எவ்வாறு அணுக வேண்டும்? என்று வழக்கறிஞர் ஸ்டாலின் குணசேகரனிடம் கேட்டோம்...
‘‘உரிமையியல் நீதிமன்றத்தில் பாதிக்கப்பட்டவர் சம்பந்தப்பட்ட மருத்துவர் அல்லது மருத்துவமனை மீது வழக்கு தொடர்ந்து நஷ்ட ஈடு கோரலாம். அதற்கு நஷ்ட ஈடு கேட்கும் தொகையில் 7.5 சதவிகிதத்தை ஸ்டாம்ப் ட்யூட்டியாக கட்ட வேண்டும்.
அதே நுகர்வோர் நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்து நஷ்ட ஈடு கோருவதற்கு ஸ்டாம்ப் ட்யூட்டி தேவையில்லை. அரசு மருத்துவமனையில் நடந்த அறுவை சிகிச்சையில் இது போன்ற தவறு நடந்ததென்றால் உயர்நீதிமன்றத்தில் நேரடி ரிட் மனு தாக்கல் செய்து நஷ்ட ஈடு கோரலாம்.
குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சிகிச்சையின் போது அலட்சியப் போக்கோடு நடந்து கொண்டமையால் உயிருக்கு ஆபத்தை விளைவித்திருக்கிறார் என்கிற அடிப்படையில் வழக்குத் தொடரலாம். இதன் மூலம் பாதிப்பை ஏற்படுத்திய மருத்துவருக்கு தக்க தண்டனை பெற்றுத் தர முடியும். ஏற்பட்ட பாதிப்புக்கு நஷ்ட ஈடு கேட்பதோடு சம்பந்தப்பட்ட மருத்துவரை தண்டிக்க வேண்டும் எனவும் வழக்குத் தொடர முடியும்.
பாதிக்கப்பட்டவர்கள் தயங்காமல் வழக்குத் தொடர்ந்தால்தான் அவர்களுக்கான நியாயமும், இழப்பீடும் கிடைக்கும். அதோடு இது போன்ற சம்பவங்கள் இனியும் நடைபெறாமல் இருக்க வேண்டிய எச்சரிக்கை உணர்வை ஏற்படுத்துவதாக இருக்கும்’’ என்கிறார் ஸ்டாலின் குணசேகரன்.
பாதிக்கப்பட்டவர்கள் தயங்காமல் வழக்குத் தொடர்ந்தால்தான் அவர்களுக்கான நியாயமும், இழப்பீடும் கிடைக்கும். இது போன்ற சம்பவங்கள் இனியும் நடைபெறாமல் இருக்க வேண்டிய எச்சரிக்கை உணர்வை ஏற்படுத்துவதாகவும் இருக்கும்.எந்த மருத்துவரும் அறுவை சிகிச்சை மேற்கொள்ளும்போது அலட்சியத்துடன் செயல்பட மாட்டார். அப்படி செயல்பட்டால் அவர் மருத்துவரே அல்ல.
- கி.ச.திலீபன்
|