அரசு மருத்துவரின் ஓய்வு வயது 65 பின்னணியும் பிரச்னைகளும்
சர்ச்சை
அரசு மருத்துவர்களின் பணி ஓய்வு பெறும் வயதை 60 (சில மாநிலங்களில் 62)ல் இருந்து 65 வயதாக உயர்த்தியிருக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி. அரசு மருத்துவமனைகளில் நிலவும் மருத்துவர்கள் பற்றாக்குறையே ஓய்வு பெறும் வயதை அதிகரிப்பதற்கான காரணம் என்கிறார். மோடியின் இந்த அறிக்கை இருவிதமான கேள்விகளை நமக்கு எழுப்புகிறது. முதலாவது மருத்துவப் பற்றாக்குறை ஏற்படுவது ஏன்?
இந்தியா முழுவதிலுமுள்ள 412 மருத்துவக் கல்லூரிகளில் இருந்து படித்து வெளியே வரும் மருத்துவர்கள் என்ன ஆனார்கள்? இரண்டாவது, மருத்துவர்கள் பற்றாக்குறையைத் தீர்ப்பதற்கு பணியிலிருக்கும் மருத்து வர்களின் ஓய்வு பெறும் வயதை அதிகரிப்பதுதான் தீர்வா? தொழிலாளர்கள் என்ற அடிப்படையில் மருத்துவர்களின் ஓய்வு பெறும் வயதை அதிகரிப்பது அவர்களது உரிமை மறுப்புதானே? மோடியின் இந்த அறிவிப்பு அரசு மருத்துவர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பலைகளைக் கிளப்பியிருக்கிறது.
‘‘‘ஓய்வூதியம் கேட்காதே... சாகும் வரை வேலை செய்’ என்றார் வின்ஸ்டன் சர்ச்சில். தொழிலாளர்களின் உரிமைக்கு முற்றிலும் எதிரான இந்த கோட்பாட்டைத்தான் இப்போது மோடியும் கையில் எடுத்திருக்கிறார்’’ என்கிறார் மருத்துவரும் மருத்துவச் செயற்பாட்டாளருமான ரவீந்திரநாத்.
‘‘குறிப்பிட்ட வயதுக்குப் பிறகு பணி ஓய்வு பெறுவது மனிதனின் அடிப்படை உரிமைகளில் ஒன்று. ஓய்வு பெறும் வயதை அதிகரிப்பது என்பது அடிப்படை மனித உரிமைக்கு எதிரானது என்றே சொல்லலாம். பணிச்சுமையால் ஏற்படும் கூடுதல் மன அழுத்தத்தின் காரணமாக அரசு மருத்துவர்களின் ஆயுட்காலம் குறைந்து கொண்டிருக்கிறது.
இச்சூழலில் ஓய்வு பெறும் வயதை அதிகரிக்கும்போது, அவர்கள் மேலும் மன அழுத்தத்துக்கு ஆளாக வேண்டி வரும். இந்திய மருத்துவக் கழகம் மருத்துவப் பேராசிரி யர்களின் ஓய்வு பெறும் வயதை 65ல் இருந்து 70 வயதாக உயர்த்தியது. இப்போது அதை 75 வயதாக உயர்த்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பேராசிரியர்களின் ஓய்வு பெறும் வயதை அதிகரிப்பதால் தரம் குறைந்த மருத்துவத்தையும், மருத்துவக் கல்வியையும்தான் வழங்க முடியும். மருத்துவர்களும் மனிதர்கள்தான். அவர்களுக்கும் முதுமை காரணமாக மூட்டுவலி, பார்வைக்கோளாறுகள், மறதிப் பிரச்னைகள் ஏற்படும்.
இதன் காரணமாக அவர்களது பணியின் தரம் குறையும். மேலும் அவர்கள் மருத்துவத்தின் புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் தொழில்நுட்பங்கள் குறித்த அறிவை புதுப்பித்துக் கொண்டிருக்க மாட்டார்கள். இளம் மருத்துவர்களுக்கான வேலைவாய்ப்பு மற்றும் பணி உயர்வை இது பாதிக்கும்.
இந்தியாவில் உள்ள 412 மருத்துவக் கல்லூரிகளிலிருந்து ஆண்டுக்கு சராசரியாக 52 ஆயிரம் பேர் மருத்துவம் படித்து விட்டு வெளிவருகின்றனர். இவ்வளவு மருத்துவர்கள் வெளிவரும்போது அரசுக்கு மட்டும் ஏன் மருத்துவர்கள் தட்டுப் பாடு? அரசு மருத்துவப் பணிக்கு முன்வரத் தயங்குவதே இதற்குக் காரணம்.
ஏனென்றால், ஒப்பந்த அடிப்படையிலான பணி நியமனம், குறைவான சம்பளம், பணி நிரந்தரமின்மை மற்றும் 2004ம் ஆண்டுக்குப் பிறகு இணைந்த மருத்துவர்களுக்கு பென்ஷன் கிடையாது என்பது போன்ற அரசின் மோசமான திட்டங்களால்தான் அரசுப் பணிக்கு வருவதற்கு பலரும் தயங்குகின்றனர். படித்து முடித்ததும் வெளிநாடுகளுக்கும் கார்பரேட் மருத்துவமனைகளுக்கும் சென்று விடுகின்றனர்.
அரசு மருத்துவராக ஆண்டு முழுவதும் பணிபுரிந்தாலும் கிடைக்கும் ஊதியத்தை வெளிநாடுகளில் மாத ஊதியமாகவே பெற்று விட முடியும். தமிழ்நாடு அரசு மருத்துவர்களுக்கு அதிகபட்ச ஊதியமே ரூபாய் 40 ஆயிரம்தான்.
மத்திய அரசு மருத்துவர்களுக்கு தொடக்கத்திலேயே 60 ஆயிரம் வழங்கப்படுகிறது. உதாரணத்துக்கு அரசு மருத்துவமனையில் 40 ஆயிரம் சம்பளம் பெறும் இதய அறுவை சிகிச்சை நிபுணர் கார்பரேட் மருத்துவமனைக்குச் சென்றார் எனில், 2 லட்சம் சம்பாதிப்பார். அப்போது எதைத் தேர்ந்தெடுப்பார்?
குலாம் நபி ஆசாத் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தபோது கிராமப்புறங்களில் பணியாற்றும் அரசு மருத்துவர்களுக்கு 50 சதவிகித ஊதியம் அதிகரிக்கப்படும் என்றும், முதுகலை மருத்துவக் கல்வியின் நுழைவுத்தேர்வில் கூடுதல் மதிப்பெண் மற்றும் தனி இட ஒதுக்கீடு வழங்கப்படும் எனவும் அறிவித்தார்.
ஆனால், அது இன்னமும் அறிவிப்பாக மட்டுமே இருக்கிறது. ஊதியமும் குறைவு, விருப்ப ஓய்வும் கிடையாது என்கிற இந்த அவல நிலை இருக்கும்போது மருத்துவப் பற்றாக்குறை இருக்கத்தான் செய்யும். இதனைக் களைய அரசுதான் தனது திட்டங்களை மாற்றிக் கொள்ள வேண்டுமே தவிர ஓய்வு பெறும் வயதை அதிகரிப்பது எந்த விதத்தில் நியாயம்?
தமிழ்நாட்டை முன்மாதிரியாகக் கொண்டு நாடு முழுவதுமுள்ள அனைத்து மாவட்டங்களிலும் அரசே மருத்துவக் கல்லூரிகளை ஆரம்பிக்க வேண்டும். பொருளாதார ரீதியாக பின் தங்கிய மாநிலங்களுக்கு மத்திய அரசு நிதி உதவி செய்து மருத்துவக் கல்லூரிகள் தொடங்க உதவ வேண்டும். இந்தியாவில் 7 எய்ம்ஸ் மருத்துவக்கல்வி நிலையங்கள் இருக்கின்றன.
அதே போல நாடு முழுவதும் எல்லா மாநிலங்களிலும் எய்ம்ஸ் போன்ற தரமான மருத்துவக் கல்வி நிறுவனங்களை ஆரம்பிக்க வேண்டும். இதன் மூலம் நாம் நிறைய மருத்துவர்களை உருவாக்க முடியும். சீனா, பிலிப்பைன்ஸ், ரஷ்யா, உக்ரைன், நேபாளம் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் மருத்துவம் படிப்பதை இந்திய மருத்துவக் கழகம் அங்கீகரிக்கிறது.
அந்நாடுகளில் படித்து விட்டு இந்தியாவில் மருத்துவராகப் பணியாற்ற வருகிறவர்களுக்கு தகுதித்தேர்வு நடத்தப்படுகிறது. அத்தேர்வில் இளநிலை படித்தவர்களுக்கு முதுநிலை படிப்புக்கான கேள்விகள் கேட்கப்படுகின்றன. இந்த கடினமான தேர்வு முறையால் 20 சதவிகிதம் பேர்தான் தேர்ச்சி பெறுகிறார்கள்.
மருத்துவர்கள் பற்றாக்குறை இருக்கும் சூழலில் இவ்வளவு கடினமான தேர்வு முறையை ஏன் பின்பற்ற வேண்டும்? ஒரு புறம் வெளிநாடுகளில் தரமான மருத்துவக் கல்வி பயின்று வருபவர்களை இப்படியான கடினமான தேர்வு முறைகள் மூலம் கிடுக்கிப்பிடி போடும் மத்திய அரசு, இன்னொரு புறம் ‘கிராமப்புற டாக்டர்’ எனும் மூன்றரை ஆண்டு கால படிப்பின் மூலம் மருத்துவர்களை உருவாக்கி தரமில்லாத சேவையைக் கொடுக்கிறது. இது எவ்வளவு பெரிய முரண்பாடு?
நல்ல கல்வி நிறுவனங்களில் படிக்கிற திறமையான மருத்துவர்களெல்லாம் அமெரிக்கா போன்ற வெளிநாடுகளுக்கு சென்று விடுவதற்கு காரணம் குறைந்த ஊதியமே. அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா, வளைகுடா நாடுகளில் நிறைய இந்திய மருத்துவர்கள் பணி புரிகிறார்கள். அவர்கள் மீண்டும் இந்தியாவுக்குத் திரும்புகிற மாதிரியான நல்ல ஊதியத்துடன் கூடிய சூழலை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்’’ என்கிறார் ரவீந்திரநாத்.
குறிப்பிட்ட வயதுக்கு மேல் மருத்துவப் பணி மேற்கொள்ளும்போது மருத்துவர்களின் முதுமை காரணமாக தரமில்லாத மருத்துவத்தைத்தான் தர முடியும் என்கிற வாதம் சரியானதா? அதே நேரம், விருப்ப ஓய்வு இல்லாத சூழலில் 65 வயது வரை ஓய்வு பெறும் காலத்தை நீட்டிப்பதை எப்படிப் பார்க்கிறீர்கள்?
72 வயதிலும் தொடர்ந்து மருத்துவப் பணி மேற்கொண்டு வரும் இதயநோய் அறுவை சிகிச்சை நிபுணர் மதியிடம் கேட்டோம். ‘‘வயதானவர்களுக்கு மருத்துவத்தில் பல ஆண்டு கால அனுபவம் இருக்கும். புத்தகங்களின் வாயிலாக மருத்துவத்தைக் கற்றுக் கொண்டு வந்தாலும் அனுபவமே நிறைய கற்றுக் கொடுக்கும்.
இச்சூழலில் அனுபவம் மிக்க மருத்துவர்களை இளம் மருத்துவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அறுவைசிகிச்சையின்போது ஏதேனும் சிக்கல் ஏற்பட்டால் அதை அனுபவம் மிக்கவர்களால் உடனடியாக எதிர்கொள்ள முடியும்.
ஆக, எந்த வயதிலும் மருத்துவத்துறையில் இயங்கலாம். அதே நேரம் விருப்ப ஓய்வு இல்லாமல் 65 வயது வரை வேலை பார்த்தே ஆக வேண்டும் என்று கட்டாயப்படுத்துவது தவறானது. ஒருவர் எந்த வயதிலும் வேலை புரியலாம் அது அவரவர் விருப்பத்துக்குரியது’’ என்கிறார் மதி.
இந்தியாவில் உள்ள 412 மருத்துவக் கல்லூரிகளிலிருந்து ஆண்டுக்கு சராசரியாக 52 ஆயிரம் பேர் மருத்துவம் படித்து விட்டு வெளி வருகின்றனர். இவ்வளவு மருத்துவர்கள் வெளிவரும்போது அரசுக்கு மட்டும் ஏன்மருத்துவர்கள் தட்டுப்பாடு?
இந்தியாவில் 9,59,198 பதிவு செய்த மருத்துவர்கள் இருக்கிறார்கள். 2020ம் ஆண்டுக்குள் இந்த எண்ணிக் கையிலிருந்து 4 லட்சம் மருத்து வர்களை கூடுதலாக்க வேண்டும் என உலக சுகாதார நிறுவனம் (WHO) தெரிவித்திருக்கிறது.
குறைந்த பட்சமாக 1000 பேருக்கு ஒரு மருத்துவர் இருக்க வேண்டும் என WHO அறிவித்திருக்கிறது. ஆனால், இந்தியாவில் 1681 பேருக்கு ஒரு மருத்து வர்தான் இருக்கிறார். உலக சுகாதார நிறுவனத்தின் குறைந்தபட்ச அளவைக்கூட இந்தியாவால் பூர்த்தி செய்ய முடியவில்லை என்பதே உண்மை.
- கி.ச.திலீபன்
|