அல்ட்ரா சவுண்ட் அற்புதங்கள்!
கல்லாதது உடலளவு!
மருத்துவமனையே போகாமல் பிறப்பிலிருந்து இறப்பு வரை சிலரால் நல்ல வாழ்க்கை மற்றும் உணவுமுறையை பின்பற்றி ஆரோக்கியமாக இருந்து விட முடியும். ஆனால், நார்மல் ஆட்கள் எப்போது மருத்துவமனை போவார்கள்? கர்ப்பமாக இருக்கும் போது. பெறப் போவது ஒன்றோ இரண்டோ, அது நன்றாக குறையில்லாமல் வளர்கிறதா என்ற அக்கறை எல்லா பெண்களுக்கும் இருக்கும். அது பற்றியே இப்போது!
200 வருடங்களுக்கு முன் (‘இந்த டாக்டர் ஏன் எதுக்கெடுத்தாலும் `அந்தக் காலத்துல’ என ஆரம்பிக்கிறாரு? சொல்ல வேண்டியதை சட்டு புட்டுன்னு சொல்லிட்டு போக வேண்டியதுதான’ என யோசிக்கக் கூடாது. வரலாறு ரொம்ப முக்கியம்!) தாமஸ் யங் என்பவர் ஒலி-ஒளியோடு கூத்தடித்ததில் அல்ட்ரா சவுண்டை கண்டார். டாப்ளர் எனும் விஞ்ஞானியும் மேடம் கியுரியும் (கதிரியக்க புகழ்) இந்த கான்செப்டை இன்னும் ஆராய்ந்தார்கள்.
கியூரியின் மாணவர் லாங்கிவன் அல்ட்ரா சவுண்டை வைத்து கடல் ஆழத்தை அல்லது கடலில் இருக்கும் நீர்மூழ்கிக் கப்பலை கண்டுபிடிக்கலாம் என சொன்னார். அதாவது, நம்மால் கேட்க முடியாத சவுண்டு அலைகளை அனுப்பினால் அது எதன் மீதாவது மோதி விட்டு திரும்பும். அது திரும்புவதை வைத்து கணிப்பதுதான் அல்ட்ராசவுண்ட் மேட்டரின் விதி.
பல சப்மரைன்களை எதிரி நாடுகள் கண்டுபிடித்து அதை குண்டு போட்டு வெடிக்க வைத்த பாவம் (!) இவரை மட்டுமே சேரும். லுட்விக் என்பவர் இதை வைத்து பித்தப்பை கல்லை கண்டுபிடித்தார். இயன் டொனால்டு என்ற கோபக்கார மகளிர் மருத்துவர், அவர் நண்பரோடு சேர்ந்து முதல் மெடிக்கல் அல்ட்ரா சவுண்ட் மெஷினை கண்டுபிடித்தார்.
ஈசிஜி போல வெறும் கோடு கோடாக வந்த இமேஜ்களை ஒப்பிட்டு, நிறைய கர்ப்பக் கால பிரச்னைகளை கண்டுபிடித்தார். மருத்துவத்தின் ஒரு மிகப்பெரிய டயக்னாஸ்டிக் கருவியை இவரால் நாம் பெற்றோம். பின்னர் ஒவ்வொரு நோயாக மற்றவர்கள் கண்டுபிடிக்க, இன்றைய அல்ட்ராசவுண்ட் தொழில்நுட்பம் மிக முக்கியமான ஒன்றாக பேறுகாலத்தில் விளங்குகிறது. சரி கதைக்கு வருவோம்.
கரு உருவான முதல் பத்து வாரங்களில் ஸ்கேன் செய்தால், கை அல்லது கால் இல்லாதது, முகத்தில் பெரிய குறைபாடு என்பது போன்ற இன்னும் சில மொத்த (gross) குறைபாடுகளை கண்டுபிடிக்கலாம். AV-commune எனும் ஒரு வகையான இதயக் கோளாறை அறியலாம். மற்றபடி இந்த ஸ்கேன் குழந்தை வளர்ச்சி நன்றாக இருக்கிறதா, இதயம் நன்றாக துடிக்கிறதா என்பதைப் பற்றி அறியவே செய்யப்படுகிறது.
கர்ப்பத்தை மூன்றாக பிரித்தால், இரண்டாம் பருவத்தில், கருவின் வயது கரெக்டாக அம்மா சொன்ன தேதிக்கு இருக்கிறதா, ஒன்றுக்கு மேற்பட்ட சிசுக்கள் உருவாகியிருக்கிறதா, இதய பிரச்னை, நஞ்சு (பிளசென்டா என்பதை நஞ்சாக்கி விட்டார்கள். உண்மையில் தாயிடம் இருந்து சத்துகளை எடுத்து குழந்தைக்கு கொடுத்து வளர வைப்பதே இதன் வேலை. குழந்தை பிறந்த பின் இது உடையாமல் வெளி வர வேண்டும். முழுதாக வராவிட்டால், அம்மாவுக்கு அது நஞ்சாகி விடும். அதனால் நஞ்சு என அழைக்கிறார்களோ? டவுட்டு?) எங்கு இருக்கிறது, வளர்ச்சி குறைபாடுகள் இருக்கிறதா எனக் கண்டறிய ஸ்கேன் செய்வார்கள்.
இப்போது முக்கால்வாசி ரேடியாலஜிஸ்டுகள் கலர் டாப்ளர் எனும் ஸ்கேன் மெஷின் வைத்து தான் செய்கிறார்கள். கரு வளர்ச்சி மற்றும் கருவின் பிரச்னைகள் என்பதையும் தாண்டி யூடிரைன் ஆர்டரி எனும் குழாயை கொஞ்சம் உற்று நோக்கினாலே, ப்ரி எக்லாம்ப்சியா எனும் கர்ப்ப கால உயர் ரத்த அழுத்தம், குழந்தை வளர்ச்சி, வளர்ச்சி குறைபாடு, நஞ்சு பின்னால் ரத்தம் கசிதல் மற்றும் சில நஞ்சு குறைபாடுகளை காணலாம். இப்போது சில இடங்களில் கிடைக்கும் 3D/4D ஸ்கேன்கள் மூலம், கலரில் குழந்தையை 3Dயில் பார்க்கலாம். அந்த இமேஜை இப்படி சுற்றி, அப்படி சுற்றி முப்பரிணாமத்தில் பார்க்கலாம்.
இன்னும் சில இடங்களில் 4D வீடியோ கூட கிடைக்கிறது.``பையன் ஒதைக்கிறான், ஓடியாங்க, கை வச்சு பாருங்க’’ என்று மட்டுமே குழந்தையை உணர்ந்த நாம், இந்த டெக்னாலஜியில், பயல் உள்ளே என்ன செய்கிறான் என்பதை வீடியோவாக பார்க்க முடியும். விரல் சூப்புவான், கை காலை அசைப்பான், கண் திறந்து பார்ப்பான், நமக்கு லக் இருந்தால் அவன் பல்டி அடிப்பதைக் கூட காண முடியும்.
வருங்காலத்தில் ஸ்கேன் ரூம் என்பது, இருட்டாக, கம்ப்யூட்டர் ஸ்கிரீன் வெளிச்சத்தில், டாக்டர் முகம் மட்டுமே மங்கலாக தெரியும் நிலையில் இருக்காது. அதோடு, ``இங்க பாருங்க, இதான் தலை, இது முதுகு’’ என டாக்டர் காட்டும் படம், “என்னடா குழந்தை, ஒரு பெரிய பல்லிக்கு எக்ஸ்ரே எடுத்த மாதிரி இருக்கான்” என குழப்பம் வரும் அளவிற்கு இமேஜ் இருக்கும். அதே மாதிரி டாக்டர் ஒரு குச்சியில் (ப்ரோப்) கொழ கொழா ஜெல்லை வைத்து அங்கு தடவி, இங்கு அமுக்குவதெல்லாம் இருக்காது.
வருங்காலத்தில், உள்ளே போனால் ஒரு சோபா செட்டில் உட்கார வைத்து, வயிற்றில் துணி மாதிரி போர்த்துவார்கள். அந்த துணி தான் ஸ்கேன் மெஷின். முன்னால் பெரிய ஸ்கிரீன் டி.வி.யில் உங்கள் சிசு கிளியராக உங்களுக்கு தெரியும். டாக்டர், டாம் க்ருஸ் போல அந்த இமேஜை இப்படி அப்படி உருட்டி காண்பிப்பார்.
அதோடு முந்தைய ஸ்கேனில் பார்த்த பேபிக்கும் இப்போதைக்கும் என்ன வித்தியாசம் எனக் கண்கூடாக பார்க்கலாம். அப்புறம் துணியை டாக்டரம்மாவிடம் கொடுத்து விட்டு கிளம்ப வேண்டியது தான். பின்னாடிக்கா இந்த வீடியோவை எல்லாம் மகனுக்கு போட்டுக் காண்பித்து, ``தம்பி, நீ இப்படித்தாண்டா என் வயித்துக்குள்ள வளந்த’’ என பூரிப்பு அடையலாம்.
அவன் யோசிப்பான், ``என் பொண்டாட்டி கர்ப்பமாவுற காலத்துல ஒரு வேளை குட்டிய வெளில காமிச்சு, திரும்ப உள்ள வைக்கிற டெக்னாலஜி வந்துருமோ’’ என பயத்துடன் ஓடலாம். இதைப் பற்றி யுடியூபில் பார்க்கலாம் https://www.youtube.com/watch?v=TTHtMqHyU4w.
இன்றைய நவீன தனிக்குடித்தனத்தில் எத்தனை விந்தைகள்? என்னுடன் வேலை பார்க்கும் லேடி டாக்டர், காலை முதலாக அவர் செல்போனில் ஏதோ வீடியோ பார்த்துக் கொண்டிருந்தார். ``என்ன உத்துப் பாக்குறீங்க மேம்’’ என கிட்டே போய் பார்த்தால், அவரின் ஐந்து வயது மகள் சோபாவில் விளையாடுவது ஸ்கிரீனில் தெரிந்தது.
``என்ன மேடம், பழைய வீடியோவா? இதையா காலைலேந்து பாக்குறீங்க?’’ ``இல்ல சார், அவளை வீட்ல தனியா விட்டுட்டு வந்துருக்கேன், இது லைவ் வெப்காம் ஸ்டிரீமிங் வீடியோ’’ என்றார்.ஒரே அதிர்ச்சியாகிப் போச்சுது.
வழக்கம் போல டவுட் - எங்கே போய் கொண்டிருக்கிறோம் நாம்? மேடம் போன்ற டயம் இல்லாதவர்களுக்கு, வருங்காலத்தில் அமேசானில் ஆர்டர் செய்து, வீட்டுக்கே ஒரு பெல்ட்டை வாங்கி விடலாம். அதை அவ்வப்போது போட்டுக்கொண்டால், உங்கள் செல்போனிலேயே பயல் என்ன செய்கிறான் என தெரிந்து விடும். சொல்ல முடியாது... நாளை உங்கள் டாக்டரிடம் இப்படியும் பேசலாம்:போனில் நீங்கள், ``குட் மார்னிங் டாக்டர்’’.
டாக்டர், ``சொல்லுமா எப்படி யிருக்கே? பையன் நல்லாருக்கானா?’’ ``பெரியவன் நல்லாருக்கான் டாக்டர். சின்னவன்தான் மூக்கு நோண்டுறான்’’. ``ஐயோ தப்பாச்சே, இப்ப என்ன வயசாவுது?’’
``எட்டு மாசம் டாக்டர்’’. ``எட்டு மாசத்துல மூக்கு நோண்டிங்? ஆச்சரியமா இருக்கே. சரி கூட்டிட்டு வா, ஊசிய காமிச்சு பயமுறுத்தலாம்’’. ``டாக்டர், அவன் வயித்துக்குள் இருக்கான். எட்டு மாசம். பெல்ட் போட்டு செல்போன்ல பாத்தேன். என்ன செய்யலாம் மேடம்?’’டாக்டர் கடுப்பாகிறார்...
வருங்காலத்தில் அமேசானில் ஆர்டர் செய்து, வீட்டுக்கே ஒரு பெல்ட் வாங்கி விடலாம். அதை அவ்வப்போது போட்டுக்கொண்டால், உங்கள் வயிற்றுக்குள் இருக்கும் பயல் என்ன செய்கிறான் என செல்போனிலேயே தெரிந்து விடும்!
(ஆச்சரியங்கள் காத்திருக்கின்றன!)
டாக்டர் வி.ஹரிஹரன்
|