கேள்வி கேளுங்கள்!



மது... மயக்கம் என்ன?

‘நான் குடிப்பதை நிறுத்த வேண்டுமா?’
எப்போதாவது இந்தக் கேள்வியை
உங்களை நீங்களே கேட்டிருக்கிறீர்களா?
‘நான் அளவாகத்தானே குடிக்கிறேன்!’
‘நான் எப்போதாவதுதானே குடிக்கிறேன்!’
- இப்படித்தான் இருக்கும் பலரது பதில்களும்!
ஆனால்...

யோசித்துப் பாருங்கள்... எப்படி எல்லாம் குடிக்கிறோம் என்று!
கடினமான வேலைநாளின் இறுதியில் பார் மூடுவதற்குள் ஒரு பியர் அல்லது கட்டிங்.
வார இறுதிநாட்களில் நண்பர்களோடு இஷ்டம் போல... அப்போது அளவு
என்பது அளவே அல்ல!

எதையேனும் கொண்டாட வேண்டும் என்றாலும் குடி... ஏதேனும் துக்கம் என்றாலும் சரக்கே மருந்து.‘நான் ஆரோக்கியமானவன்...’‘நான் உடற்பயிற்சி செய்கிறேன்...’
‘நான் நல்ல உணவு சாப்பிடுகிறேன்...’

குடிப்பதால் எனக்கு எந்தப் பிரச்னையும் இல்லை என்பதை நிரூபிப்பதற்காக இப்படி எத்தனை பதில்களை வேண்டுமானாலும், நம்மால் உருவாக்க முடியும். அது உண்மையாகி விடுமா? காலப்போக்கில் இவை நம்மை நாமே ஏமாற்றும் அர்த்தம் இழந்து போன சொற்கள் என்பது
மட்டுமே நிஜம்!இந்தக் கேள்விகளையும் கேட்டுத்தான் பாருங்களேன்...

என்னுடைய அறிவு - கூர்மையான
சிந்தனை பாதிக்கப்பட்டிருக்கிறதா?
நிம்மதியான தூக்கம் கிடைக்கிறதா?
நான் அருந்தும் மது இதயத்துக்கு நலம் தருமா?
அல்லது அது ஆயுளை அதிகரிக்கும் அபூர்வ திரவமா?

பாசிட்டிவ் ஆகக் கேட்டாலும், நெகடிவ் ஆகக் கேட்டாலும், வடிவேலுவிடம் பார்த்திபன் கேட்பது போல கேட்டாலும், ஒரே விதமான பதில்தான் கிடைக்கும். ‘இல்லை’ என்பதுதான் அது!நிற்க... அவ்வப்போது ஊடகங்களில் ஒயின் அருந்துவதால், அது குடிப்பதால், இது பருகுவதால் ஏற்படும் நன்மை என ஆராய்ச்சி முடிவுகளை எடுத்து உரைப்பதுண்டு.

அளவோடு அருந்தினால் இதய நோய்களையும் நீரிழிவையும் பித்தக்கற்களையும் கூட தடுக்க முடியும் என்று கூட சொல்லப்படுவதுண்டு. அது உண்மையானதாகவே இருக்கலாம். ஆனால், அந்த மதுவையா நாம் அருந்துகிறோம். இங்கு கிடைப்பது மது என்றால், அந்த மதுவே குலுங்கிக் குலுங்கிச் சிரிக்குமே!

அது மட்டுமல்ல... மிகத்தரமான மதுவாக இருந்தாலும் கூட, எந்த அளவு வரை அருந்துவது உடல்நலத்துக்கு உகந்தது என எந்த மருத்துவரும் எந்த விஞ்ஞானியும் இதுவரையிலும் வரையறுத்துத் தரவில்லை. அப்படித் தந்துவிடவும் முடியாது. மதுவின் விளைவுகள் ஒவ்வொரு மனிதனுக்கும் வேறுபடும் என்பதும் இதில் பிரச்னை. 

தூக்கம்

நிம்மதியான தூக்கத்துக்காகவே மது அருந்துபவதாக பலர் கூறுவதுண்டு. அருந்தியவுடன் தூங்கி விடுவதும் உண்டு. உண்மை என்ன? மது அருந்திய பிறகு ஏற்படுவது ஒருவித மயக்கம்தானே தவிர, அது தூக்கம் இல்லை. மதுவிலுள்ள எத்தில் ஆல்கஹால் மூளையின் நுண் நரம்புகளை சேதமடையச் செய்கிறது... மூளையை செயற்கையாக முடக்கி விடுகிறது. இதனால் தூக்கம் போன்ற உணர்வு ஏற்பட்டாலும், நள்ளிரவிலேயே அது கலைந்து தூக்கமின்மை ஏற்படும்.

அளவு

பொதுவாக மதுவாளர்கள் தாங்கள் அருந்தும் மதுவின் சரியான அளவை ஒருபோதும் கணக்கிடுவதில்லை. நினைவிலும் கொள்வதில்லை. இதை ஒரு சோதனையாகவே செய்து பார்க்கலாம். மதுப்பழக்கம் உடையவர்கள் தாங்கள் அருந்திய மதுவின் பாட்டில்களை மட்டும் மறவாமல் எடுத்து வந்து ஓரிடத்தில் சேகரித்து வையுங்கள்.

ஒரு மாதம் அல்லது 3 மாதம் அல்லது 6 மாதம் கழித்து அந்த சேகரிப்புக் கிடங்கைப் பார்த்தாலே போதும்... எந்த அளவு குடித்திருக்கிறீர்கள்? அதற்காக எவ்வளவு பணம் செலவிட்டிருக்கிறீர்கள்? இந்தப் புள்ளிவிவரம் எல்லாமே தெளிவாகக் கிடைத்து விடும். அப்போதுதான் ஒட்டுமொத்த உண்மையையும் உணர முடியும். ‘இவ்வளவா குடித்திருக்கிறோம்’ என்று துன்ப அதிர்ச்சிதான் மிஞ்சும்.

ஸ்மால், லார்ஜ், கட்டிங், குவார்ட்டர், குவார்ட்டர் கட்டிங், ஆஃப், ஃபுல் ஆகிய அளவுகளைத் தாண்டி யாரும் எண்ணுவதில்லை. நாள்தோறுமோ, அடிக்கடியோ, வாராவாரமோ குடிக்கிற அளவை மொத்தமாகக் கணக்கிடும்போதுதான் இந்த அளவு ஆல்கஹாலை நம் உடல் தாங்குமா என்ற கேள்வி பிறக்கும். இது நியாயமா என்றும் தோன்றும்.ஆகவே, குடிக்கிற நண்பர்கள் சிரமம் பார்க்காது அளவும் பாருங்கள்... இது அவசியம் உதவும் வீட்டுக்கும் நாட்டுக்கும் உடலுக்கும் மனதுக்கும்!   

நாளுக்கு நாள்...

1980களில் குடிப்பவர்களின் குறைந்தபட்ச வயது 26 ஆக இருந்தது. 2007ல் 17 ஆகக் குறைந்துவிட்டது. அசோசெம் வர்த்தகக் கூட்டமைப்பின் சமூக வளர்ச்சிப் பிரிவு செய்த ஆய்வில், 19-26 வயதுக்கு உட்பட்ட இளைஞர்களின் மத்தியில் குடிப்பழக்கம் 60 சதவிகிதம் அதிகரித்துள்ளது தெரிய வருகிறது. குறிப்பாக, கடந்த 10 ஆண்டுகளில் டீன் ஏஜ் குடிப்பழக்கம் 100 சதவிகிதம் அதிகரித்திருப்பதாகவும் இந்த ஆய்வு தெரிவிக்கிறது.

மது அருந்திய பிறகு ஏற்படுவது ஒருவிதமயக்கம்தானே தவிர, அது தூக்கம் இல்லை. தூக்கம் போன்ற உணர்வு ஏற்பட்டாலும்,நள்ளிரவிலேயே அது  கலைந்துதூக்கமின்மை ஏற்படும்.

அன்றே சொன்னார் போரே...
சுதந்திரத்துக்கு முன் - 1943ல் பொது ஆரோக்கியம் பற்றிய பரிந்துரைகள் அளிப்பதற்காக இந்தியாவில் அமைக்கப்பட்ட போரே கமிட்டி, 1946ல் அறிக்கை அளித்தது. அதில் பொது ஆரோக்கியத்தின் ஒரு பகுதியாகவே குடிப்பழக்கத்தின் விளைவுகளும் பார்க்கப்பட்டன. வறுமையாலும், வேலையின்மையாலும், பொழுதுபோக்கு வசதி இன்மையாலும் விரக்திக்குத் தள்ளப்பட்டு குடிப்பவர்களும் உண்டு...

சமூகப் பழக்கம் காரணமாகவும், கூட்டாகக் குடிக்கும் பழக்கத்தாலும் குடிப்பவர்கள் உண்டு என்கிறது போரே கமிட்டி அறிக்கை. இதைக் கட்டுப்படுத்த  பொருளாதார மேம்பாடு, கல்வி, ஆரோக்கியமான பொழுதுபோக்கு போன்றவற்றில் அரசு முதலீடு செய்ய வேண்டும், மது விற்பனையைக் கட்டுப்படுத்த கடுமையான சட்டங்களைக் கொண்டு வர வேண்டும், குடிநோயாளிகளின் சிகிச்சைக்கும் மறுவாழ்வுக்கும் உதவ வேண்டும் என்றும்
அறிவுறுத்துகிறது. குறிப்பாக வேலை நேரத்தில் விற்பனை செய்வது தடுக்கப்படவேண்டும் என்ற ஆலோசனையையும் முன் வைக்கிறது. பெங்களூரு நிம்ஹான்ஸ் மருத்துவமனையின் ஆய்வும் அதன் விரிவான பரிந்துரைகளும் இதே கண்ணோட்டத்தையே கடைப்பிடிக்கின்றன.

(தகவல்களைப் பருகுவோம்!)

டாக்டர் ஷாம்