சுனாமியில் சுழன்று...அன்பிலே கரைந்து...



நைட்டிங்கேல்களின் கதை

‘‘சுனாமி எத்தனையோ ேபரின் வாழ்க்கையை புரட்டிப் போட்டுள்ளது. சாதி, மதம் ஆகியவற்றை வேரோடு இழுத்துக் கொண்டு போனது. ஏழை, பணக்காரன் ஏற்றத்தாழ்வுகளையும் சமன் செய்தது. அந்த சுனாமிதான் மனிதர்களை இன்னும் அதிகமாக நேசிக்க கற்றுத் தந்தது’’ என கண்கள் பனிக்கிறார் மாலதி.

நர்சிங் துறையில் 25 ஆண்டுகால அனுபவம் ெகாண்டவர். எளிய மக்கள் மத்தியில் அர்பணிப்புடன் பணியாற்றி, சேலம் மாநகராட்சியின் சிறந்த செவிலியர் விருது பெற்றவர். தொழுநோயாளர்கள், காசநோயாளர்கள் மத்தியில் பணியாற்றி பாராட்டுப் பெற்றவர்.

சுனாமி பாதித்த பகுதிகளிலும் பணியாற்றி ஆயிரக்கணக்கானோர் மறுவாழ்வு பெற மகத்தான சேவை புரிந்துள்ளார். சேலம் அழகாபுரம் நகர சுகாதாரச் செவிலியராக தனது பணியைத் தொடங்கி பலரும் எளிதில் அணுகும் பெண்ணாக வலம் வருகிறார் மாலதி.

சேலம் அழகாபுரம் பகுதியில் நகர சுகாதார அலுவலராக பணியாற்றிய காலத்தில் மாலதி பெரும்பாலும் பிரசவம் பார்க்கும் பணியிலேயே இருப்பார். குழந்தைகளை கணவர் கவனித்துக் கொள்ள இவர் எப்போதும் மருத்துவப் பணியில் பிசி.

இப்போது சேலம் சூரமங்கலம் தாய், சேய் நல விடுதியில் பகுதி சுகாதாரச் செவிலியராக பணியாற்றி வருகிறார். நர்சிங் பணியின் போது சிகிச்சைக்காக வருபவர்களுக்கு கவுன்சிலிங் கொடுப்பதற்காகவே எம்.ஏ. ேசாசியாலஜி படித்துள்ளார்.

‘‘எனக்கு இன்னும் நினைவில் இருக்கிறது. 6 வயதில் கிராமத்தில் பாட்டி வீட்டுக்குச் சென்றிருந்தேன். அங்கு தாழ்த்தப்பட்டவர்களாக நடத்தப்படும் மக்கள் எங்களது தோட்டத்தில் வேலை பார்த்தனர். அப்போது நான் தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்தேன்.

அவர்கள் மீது என் பாவாடை பட்டு விட்டது என்பதற்காக என்ைன பாட்டி பிரம்பால் அடித்து விட்டார். பின்னர் என்னை குளிக்க வைத்து வேறு உடை போட்டு வீட்டுக்குள் அனுமதித்தார். அந்தச் சம்பவம் என்னை மிகவும் பாதித்தது. அதன் பின்னர் பாட்டியிடம் பேசவே பிடிக்கவில்லை. யாரை காரணம் காட்டி பாட்டி அடித்தாரோ அந்த மக்கள் மீது எனக்கு நேசம் பிறந்தது.

எனக்கு சொந்த ஊர் சென்னை. தந்தை பக்தவச்சலம் ரயில்வே கான்ட்ராக்டராக இருந்தார். அம்மா அம்சா குடும்ப நிர்வாகி. 4 பெண்கள், ஒரு ஆண் என 5 குழந்தைகளில் நான் நான்காவது குழந்தை. அந்த காலகட்டத்தில் பெரும்பாலும் வீட்டு பிரவசம்தான் நடக்கும். நாங்கள் வசித்த பகுதியில் சுப்புலட்சுமி என்று ஒரு நர்ஸ் இருந்தார்.

எனக்கு அவர்தான் ரோல் மாடல். பல நேரங்களில் அவர் பிரசவத்துக்கு செல்லும் போது, என் அம்மாவையும் அழைத்துச் செல்லுவார். சுப்புலட்சுமி அம்மாவுக்கு அவ்வளவு மரியாதை. அவரைக் கடவுளைப் போல எல்லோரும் கொண்டாடினார். அவர்தான் நர்ஸ் பணியின் புனிதத்தை எனக்குள் விதைத்தவர்’’ என்று பெருமிதப்படுகிறார் மாலதி.

கடலூர் அரசு மருத்துவமனையில் செவிலியர் பயிற்சியில் இருந்த போது நடந்த ஒரு சம்பவமே சிகிச்சைக்கு வரும் மக்களிடம் எந்தக் காரணத்துக்காகவும் பணம் வாங்கக் கூடாது என்ற உறுதியை மாலதிக்குள் ஏற்படுத்தி யுள்ளது. பிரசவத்துக்கு வந்த ஒரு பெண்ணிடம் செவிலியர் பணம் கேட்டுள்ளார். அந்தப் பெண்ணிடம் கொடுப்பதற்கு கையில் காசு எதுவும் இல்லை.

தன்னிடம் தாலி மட்டும்தான் உள்ளது என அதனை கழற்றிக் கொடுத்துள்ளார். மாலதி தன் கையில் இருந்த பணத்துடன் நர்சிங் பயிற்சியில் இருந்த மாணவிகளிடமும் பணத்தை ேசகரித்து அந்தப் பெண்ணுக்கு உதவியுள்ளார். நர்சிங் பணியில் சேர்ந்தால் எந்தக் காலத்திலும், எந்தப் பெண்ணிடமும், எதற்காகவும் லஞ்சம் கேட்கக் கூடாது என்று மனதில் உறுதி எடுத்துக் கொண்டார். இன்று வரை செயல்படுத்தியும் வருகிறார் மாலதி.

கடலூரில் பயிற்சியை முடித்த மாலதிக்கு மதுரையில் வேலை. சேலத்தில் இருந்து மதுரைக்கு ஓவியப் பயிற்சிக்காக சென்ற புகழேந்தி கவிதைகளும் எழுதுவார். தனது காதல் தோல்வியை ‘ஊமை நெஞ்சின் ஓசை’ என்ற கவிதையாக வடித்திருந்தார். தோழிகள் மூலம் அந்தக் கவிதையை படிக்கும் வாய்ப்பு மாலதிக்கு கிடைத்தது.

அந்தக் கவிதை இருவருக்கும் இடையில் ஒரு நட்புப் பாலத்தை அமைத்துக் கொடுத்தது. இருவரும் சந்திக்க விரும்பினர். அந்த நாள் வந்தது. பொது இடத்தில் இருவரும் நண்பர்களாக சந்தித்தனர். போலீஸ் அவர்களை காதலர்களா என்று அழைத்து விசாரித்துள்ளது. இருவரைப் பற்றியும் தெரிந்து கொண்ட பின்னர் போலீஸ் அவர்களை விட்டது.

அந்த சம்பவமும் கவிதையுமே ‘நாம் இருவரும் ஏன் வாழ்வில் இணையக் கூடாது’ என்ற எண்ணத்தை இருவருக்குள்ளும் விதைத்து அனுப்பியது. நண்பர்களாக சந்தித்தவர்கள் காதலர்களாகத் தொடர்ந்தனர். மாலதியின் வீட்டில் சாதிமறுப்பு திருமணத்துக்கு பலத்த எதிர்ப்பு. புகழேந்தி பெரியார் சிந்தனையாளர்.

சுயமரியாதைத் திருமணம் செய்து கொண்டனர். திருமணம் முடிந்து முதல் குழந்தை பிறந்த பின்னரே மாலதியின் பிறந்த வீட்டில் அங்கீகாரம் கிடைத்தது. மகன் கவி முகில், மகள் கவி ஓவியா என இரு குழந்தைகளையும் பராமரித்தபடி நர்ஸ் பணியிலும் அயராது உழைக்கிறார் மாலதி.

‘‘எளிய மக்களை மற்றவர்கள் ஒதுக்கிய அந்த சிறு வயது சம்பவம் என்னை மிகவும் பாதித்தது. நர்ஸ் பணிக்கு வந்த பின்னர் அந்த மக்கள் வசிக்கும் பகுதியில் பணிபுரியும் வாய்ப்பு கிடைத்தது. சிகிச்சைக்காக வருபவர்கள் தங்களது குடும்பப் பிரச்னை வரை பகிர்ந்து கொள்வார்கள். அவர்களுக்கு ஆலோசனை சொல்ல வேண்டும் என்ற ஆர்வத்தில் எம்.ஏ. சோசியாலஜியும் படித்தேன்.

இந்த மக்கள் மிகவும் அன்புடன் பழகக்கூடியவர்கள்... அவர்கள் வீட்டுப் பெண்ணாகவே என்னைக் கருதி ‘தாய்ப்பிள்ளை’ என்று அழைப்பார்கள். மருத்துவத்தோடு கவுன்சிலிங்கும் கொடுப்பதால் பல சிக்கலான பிரசவங்களைக் கூட என்னால் எளிதாக கையாள முடிந்தது. அவர்களது குழந்தைகள் என் வீட்டில் விளையாடும். அவர்கள் வீட்டில் நான் சாப்பிடுவேன்.

பின்தங்கிய மக்கள் வாழும் பகுதியில் தொடர்ந்து சிறப்பாக பணியாற்றியதற்காக சேலம் மாநகராட்சி சார்பில் சிறந்த செவிலியர் விருது கொடுத்தார்கள். அந்த காலகட்டத்தில் உலக சுகாதார நிறுவம் மற்றும் தொண்டு நிறுவனங்களின் சார்பில் தொழுநோய் மற்றும் காசநோய்க்கு சிகிச்சை அளிப்பதற்கு தமிழக அளவில் முதல் மாதிரி மையத்தை நான் பணியாற்றும் பகுதியில் கொடுத்தார்கள். அந்தப் பணியையும் சிறப்பாகவே செய்து முடித்து பாராட்டுப் பெற்றேன்.

சுனாமி வந்த மறுநாள் மீட்புப் பணிக்காக சேலத்தில் இருந்து நானும் இன்னொரு நர்சும் சென்றோம். அங்கு பார்த்த காட்சிகள் மனதை உலுக்கின. அதுவரை மனதில் இருந்த அத்தனை எண்ணங்களும் சிதைந்து புதைந்தன. அதன் பின் சாமி கும்பிடும் பழக்கத்தையே விட்டு விட்டேன். இரண்டு நாட்கள் எந்த அடிப்படை வசதியும் இல்லாமலே மருத்துவப் பணிகளை கவனித்தோம். மீண்டும் சுனாமி என்று எச்சரிக்கை விடப்பட்ட போது உயிரை கையில் பிடித்துக் கொண்டு ஓடினோம்.

கடலூர், நாகப்பட்டணம் பகுதிகளில் 15 நாட்கள் பணியாற்றிய அனுபவம் எனக்குள் மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்கியது. பொதுவாகவே சிகிச்சைக்காக வருபவர்களிடம் கோபப்பட மாட்டேன். வீட்டு நிலையை யோசிக்காமல் வேலையில் மட்டுமே கவனமாக இருப்பேன். அந்த சம்பவத்துக்குப் பின்னர் நான் வீட்டிலும் அன்பை மட்டுமே வெளிப்படுத்தத் தொடங்கினேன்.

அந்தக் கடல் புயலில் சாதி, மதம், ஏழ்மை எல்லாமே காணாமல் போனது. அசாதாரணமான சூழல்களில் எத்தனையோ உயிர்களை காப்பாற்ற முடிந்த போது, கஷ்டங்கள் எதுவும் கண் முன் நிற்பதில்லை. மனிதர்களை சாதியை காரணம் காட்டி ஒதுக்குவதை என்னால் ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது. அவர்களுக்காக அவர்கள் வசிக்கும் பகுதியில் சேவை செய்வதையே பெருமையாகக் கருதுகிறேன்’’ என்கிறார் மாலதி.

ஆண்டாண்டு காலமாக சாதியால் கட்டி எழுப்பப்பட்டிருக்கும் சுவர்களை, அடக்குமுறைகளை எதிர்பார்ப்புகளற்ற மருத்துவ சேவையாலும் உடைத்து சமன்படுத்த முடியும் என்பதற்கு மாலதியே சாட்சி!அந்தக் கடல் புயலில் சாதி, மதம், ஏழ்மை எல்லாமே காணாமல் போனது. அசாதாரணமான சூழல்களில் எத்தனையோ உயிர்களை காப்பாற்ற முடிந்த போது, கஷ்டங்கள் எதுவும் கண் முன் நிற்பதில்லை.

- எஸ்.ஸ்ரீதேவி
படங்கள்: சங்கர்.சி