டியர் டாக்டர்
சமீபத்திய வெள்ள அபாயத்தில் இருந்தே இன்னும் மீளாத போது, சுவைத்து மகிழும் வெல்லத்திலுமா அபாயம்? ஏழை எளியவர்களின் எளிய உணவே பிரெட், பன் தானே... இதிலும் கெமிக்கல் என்கிற விவரமும் தலையைச் சுற்ற வைக்கிறது. வனஸ்பதியிலும் விஷம் என்றால் எதைத்தான் உண்பது? எதைத்தான் நம்புவது? - சுகந்தி நாராயணன், வியாசர் நகர்., மணிமாலா, திண்டுக்கல்., டி.சேகர், அரவக்குறிச்சி மற்றும் பி.எலிசபெத், காரைக்குடி.
‘இந்த 10 மருந்துகள் இல்லை என்றால் நீங்கள் இன்று இல்லை’ என்ற டாக்டர் ஹரிஹரனின் ஆச்சரியத் தொடர் மானிட உயிரைக் காத்துவரும் பென்சிலின் உள்ளிட்ட 10 மருந்துகளின் மகத்துவத்தை மூக்கின் மீது விரல் வைத்து ஆச்சரியப்படும்படி விளக்கியிருந்தது! - இரா.வளையாபதி, தோட்டக்குறிச்சி.
சப்பாத்திக்கள்ளி செய்திகள் மிகவும் பயனுள்ளது. மாரடைப்பு, பக்கவாதம் வராமல் தடுக்கும் பழங்கள் பற்றிய செய்தியும், கூந்தல் பற்றிய தகவல்களும் மிக மிக அருமை! - இல.வள்ளிமயில், திருநகர்.
கர்ப்பகால நீரிழிவு பற்றிய தகவல்கள் என் போன்ற இளம் கர்ப்பிணிகளுக்கு விழிப்புணர்வு ஊட்டுவதாக இருந்தது. - ஆர்.சுகந்தி, கோவை.
டாக்டர் லஷ்மி பிரசாந்த் கூறிய பிறகே, படுக்கையை நனைக்கும் குழந்தையை திட்டக்கூடாது என்பதைத் தெரிந்து கொண்டேன். இந்தப் பழக்கத்தின் பின்னால் இவ்வளவு விஷயங்கள் இருப்பதையும் கூறி, பெற்றோருக்கான அறிவுரைகளையும் கூறியிருப்பது சூப்பர்! - என்.கிருஷ்ணவேணி, எடப்பாடி, சேலம்.
‘முதல் முறை விழுதல் முதுமையின் தொடக்கம்’ - மருத்துவர் நடராஜன் கூறிய அறிவுரை பெரியவர்கள் உள்ள வீட்டில் கட்டாயம் கடைபிடிக்க வேண்டிய ஒன்று! - பி.சேதுமாதவன், ஒட்டன்சத்திரம்.
‘மாத்திரைகள்: ஏன்? எதற்கு? எப்படி?’ பகுதியில் மாத்திரைகளை சாப்பிடும் முறைகள் பற்றிய அனைத்து அறிவுரைகளும் அப்படியே எடுத்து பத்திரப்படுத்திக் கொள்ள வேண்டியவை. பல வருட சந்தேகங்களுக்கு எல்லாம் பதில் கிடைத்துவிட்டதில் திருப்தி! - எஸ்.வெங்கடேசன், கொடிமங்கலம், மதுரை.
|