நீரிழிவு நோய்க்கு மாற்று மருத்துவம் சாத்தியமா?



செய்திக்குப் பின்னே...

சிறு வயதிலிருந்தே சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவன் திருப்பூரைச் சேர்ந்த பிளஸ்டூ மாணவன் சுபாஷ். தினசரி இன்சுலின் ஊசி போட்டுக் கொள்ளும் நிலையில் இருந்த சுபாஷை, அவனது பள்ளிக்கு மருத்துவம் பார்க்க வந்த அக்குபங்சர் மருத்துவர் ஒருவர், ‘ஊசியெல்லாம் வேண்டாம் அக்குபங்சரில் சரிசெய்துவிடலாம்’ என்று சொல்லியிருக்கிறார்.

அதை நம்பி அவனும் ஊசி போட்டுக் கொள்வதை நிறுத்தியிருக்கிறான். ஒரே வாரத்தில் அந்த மாணவன் இறந்துவிட்டான். அக்குபங்சரில் சரி செய்வதாகச் சொன்ன மருத்துவர் எஸ்கேப்! மகனைப் பறிகொடுத்த துக்கத்தில் தவித்துப் போய் நிற்கிறார்கள் சுபாஷின் பெற்றோர்.

இன்சுலின் போட்டுக் கொள்ளும் அளவுக்குத் தீவிரமாக இருந்த நீரிழிவை மாற்று மருத்துவத்தால் கட்டுப்படுத்திவிட முடியுமா?அதிர்ச்சியான இந்தத் தகவல்
அண்மையில் வாட்ஸப்பிலும் ஃபேஸ்புக்கிலும் வலம் வந்தது.

உடனே நீரிழிவு நோய் மருத்துவர் சீனிவாசராவைத் தொடர்பு கொண்டோம்.“முதலில் ஜுவனைல் டயாபடீஸ் என்று அழைக்கப்பட்டு வந்த இளவயது நீரிழிவு நோயை தற்போது ‘டைப் 1 டயாபடீஸ்’ என்று சொல்கிறோம். மிகப்பெரிய அச்சுறுத்தலாக சர்க்கரை நோய் மாறியுள்ள போதிலும் இதைப்பற்றிய விழிப்புணர்வு மக்களிடையே பெரிய அளவில் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

வயதான காலத்தில்தான் சர்க்கரை நோய் வரும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை பலருக்கு இருக்கிறது. உண்மை என்னவென்றால் வயது வித்தியாசமோ, பாலின வித்தியாசமோ இல்லாமல் அது  குழந்தைகளுக்கும் வரும் என்பதை நம்புவதற்கு சற்று கடினமாகத்தான் இருக்கும்.

ஆரோக்கியமாக இருக்கும் உங்கள் குழந்தை திடீரென்று உடல் மெலிய ஆரம்பித்திருக்கிறானா? அவனால் இயல்பான வேலைகளைச் செய்ய முடியாமல் அடிக்கடி சோர்ந்து போனாலோ, அடிக்கடி தண்ணீர் தாகம், அளவுக்கு அதிகமாக சிறுநீர் கழித்தல், அளவுக்கதிகமான பசி, நிறைய சாப்பிடுதல், மற்றும் பார்வை மங்குதல் போன்றவற்றால் பாதிக்கப்பட்டிருந்தால் மருத்துவரிடம் கூட்டிச் சென்று குழந்தைக்கு சர்க்கரை நோய் இருக்கிறதா என்பதை முதலில் சோதனை செய்து பார்த்துவிடுங்கள். பிறவியில் இருந்தே வரக்கூடிய சர்க்கரை நோய் இன்சுலின் சார்ந்த நோய் அல்லது டைப் 1 டயாபடீஸ் எனப்படும். நோய் தோன்றிய குறுகிய காலத்திலேயே தீவிரம் அடைந்துவிடும் என்பதால் ஆரம்ப கட்டத்திலேயே சிகிச்சையை ஆரம்பித்துவிடுவது நல்லது.

பெரியவர்களுக்கு வரும் சர்க்கரை நோய்க்கும் (டைப் 2) சிறுவர்களுக்கு வரும் சர்க்கரை நோய்க்கும் (டைப் 1) வித்தியாசம் உண்டு. கணையத்தில் உள்ள இன்சுலின் சுரக்கும் பாகங்கள் ஏதோவொரு காரணத்தால் அழிக்கப்படுவதால் உடலுக்குத் தேவையான இன்சுலினை உடலால் உற்பத்தி செய்து கொள்ள முடியாத நிலை குழந்தைகளிடத்தில் உருவாகிறது. குறிப்பாக 4 வயது முதல் 7 வயதுள்ள சிறுவர்-சிறுமியருக்கும், பருவ வயதில் உள்ளவர்
களுக்கும்  டைப் 1 டயாபடீஸ் வருகிறது.

100 சதவிகித காரணம் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. நோய்க்கிருமிகளை எதிர்த்து போராடக்கூடிய பாதுகாப்பு அணுக்கள் நம் உடலில் இருக்கின்றன. சுற்றுச்சூழல் காரணிகள், பரம்பரைத்தன்மை போன்றவற்றின் எதிர்மறையான தாக்கத்தால் நமது உடலில் இருக்கும் கணையச் சுரப்பியில் பீட்டா செல்களை, இந்த பாதுகாப்பு அணுக்கள் எதிரியாக நினைத்து அழித்துவிடுவதால் உடலில் இன்சுலின் சுரக்கும் பாகங்கள் இல்லாமல் போகும் நிலையே டைப் 1 வகை சர்க்கரை நோய்க்கு காரணமாகிறது.

இதை ஆட்டோ இம்யூன் டிசீஸ் (Auto Immune disease) என்று சொல்வார்கள். இவர்கள் இன்சுலின் மருந்தை ஊசியாகப் போட்டுக் கொண்டால் மட்டுமே அன்றாட வாழ்க்கையை வாழ முடியும் என்ற நிலை உருவாகும். இன்சுலினை கொடுத்தாலன்றி ரத்தச் சர்க்கரை அளவு குறையாது.

பெரியவர்களுக்கு வரும் சர்க்கரை நோய் அப்படியில்லை. இன்சுலின் சுரக்கும். போதுமானதாக இருக்காது அல்லது சரியாக செயல்படாது. இவர்கள் குறையை நிவர்த்தி செய்ய ஊசியோ மாத்திரையோ எடுத்துக் கொண்டால் போதுமானது. சிறுவர்களுக்கு ஊசி போட்டுத்தான் ஆகவேண்டும். மாத்திரை பலன் தராது.

மேலும், அவர்களுக்கு குடும்பத்தாரின் தொடர்ச்சியான அக்கறை தேவைப்படுகிறது. பெற்றோர் பாதிக்கப்பட்ட குழந்தையின் ரத்த சர்க்கரை அளவை தொடர்ந்து கண்காணித்து வருவதும் அவசியம். குறையவோ கூடவோ செய்யும் ரத்த சர்க்கரை அளவுக்கு ஏற்ப இன்சுலின் மருந்தின் அளவு மாறும். இவர்கள் ஊசி போட்டுக் கொள்வதை நிறுத்தினால், மிக விரைவிலேயே உடல் உறுப்புகளில் மிகப்பெரிய சிக்கல்களை ஏற்படுத்திவிடும்.

இப்படி அபாய நிலையில் இருக்கும் டைப் 1 நீரிழிவு நோயுள்ள குழந்தைகளுக்கு ஊசி போடுவதை நிறுத்தச் செய்வது மிகவும் ஆபத்தானது. ஏற்கனவே எடுத்து வரும் சிகிச்சையை நிறுத்தாமல் மாற்று மருத்துவ முறைகளை தொடர்வதுதான் நல்லது. முறையான உடற்பயிற்சி, உணவுக்கட்டுப்பாடு, இடைவிடாத சிகிச்சையை கடைப்பிடிக்கும் போது மற்றவர்களைப் போலவே சாதாரண வாழ்க்கையை இவர்களும் வாழலாம்” என நம்பிக்கையூட்டுகிறார் மருத்துவர் சீனிவாசராவ்.

“உடல், மனம், ஆன்மா ஆகிய மூன்றையும் நேர்நிலைக்குக் கொண்டுவந்து ஆரோக்கியத்தைத் தரக்கூடிய மருத்துவ முறையாக அக்குபங்சர் விளங்குகிறது. ‘அக்குபங்சர்’ என்பது லத்தீன் மொழியில் அகுஸ் (ஊசி), பங்சர் (குத்துதல்) என்ற இரு வார்த்தைகளைச் சேர்த்து உருவான சொல்.

ஊசியால் குத்துவதன் மூலமாக, உடலில் இருக்கக்கூடிய உயிர் ஆற்றல் பாதைகளில் ஏற்பட்ட அடைப்புகளைச் சரிசெய்வதுதான் அக்குபங்சரின் அடிப்படை. உச்சி முதல் உள்ளங்கால் வரை அக்குபங்சர் ஊசியை செலுத்தி உள்ளுறுப்புகளுக்கு ஆற்றல் வழங்குகிறோம்’’ - அக்குபங்சர் மருத்துவ முறையின் அடிப்படையுடன் பேச ஆரம்பிக்கிறார் அக்குபங்சர் மருத்துவர் டி.என்.பரிமளச்செல்வி மோகன்குமார்.

``அவரவர் உடலில் உள்ள வர்ம இடங்களின் புள்ளிகளுக்கு ஏற்றவாறு சிகிச்சை அளிக்கப்படுவதாலும், பக்கவிளைவுகளற்ற முறை என்பதாலும் பெரியவர்கள், சிறுவர்கள் என்ற வயது வித்தியாசம் இந்த சிகிச்சை முறைக்கு இல்லை. குறிப்பாக, அக்குபங்சர் சிகிச்சை எடுத்துக் கொள்ள வரும் நீரிழிவு நோயாளிகளுக்கு, அவர்கள் ஏற்கனவே எடுத்துக் கொள்ளும் அலோபதி மருந்துகளை நிறுத்தச் சொல்லி அறிவுறுத்துவதில்லை.

நீரிழிவு நோயைப் பொறுத்தவரை இன்சுலின் ஊசி போட்டுக் கொள்பவர்கள் மற்றும் மாத்திரைகள் எடுத்துக்கொள்ளும் நோயாளிகள் இருக்கிறார்கள். படிப்படியாக ஊசி போடும் நிலையில் இருப்பவர்களை மாத்திரைக்கு மாற வைப்போம்.

தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு, மாத்திரைகளின் அளவையும் படிப்படியாக குறைத்து மருந்தில்லா நிலைக்குக் கொண்டு வருவோம். இவ்வாறு படிப்படியாகத்தான் மருந்துகளை குறைப்போமே தவிர, கண்டிப்பாக அலோபதி மருந்துகளை நிறுத்தச் சொல்லி அறிவுறுத்த மாட்டோம்.

பொதுவாக எந்தவொரு சிகிச்சை முறையைப் பின்பற்றினாலும் நீரிழிவு நோயாளிகள் உணவுக் கட்டுப்பாட்டில் இருந்தால்தான் நோயை குணப்படுத்த முடியும். செரிமானக் கோளாறு மூல காரணமாவதால் உணவை நன்கு உமிழ்நீரில் கரையும் வரை மென்று உண்பதை வலியுறுத்துகிறோம்.

தொடர்ந்து அக்குபங்சர் சிகிச்சையை எடுத்து வரும் நீரிழிவு நோயாளிகள் பக்கவிளைவுகளான மலச்சிக்கல், நரம்புமண்டல பாதிப்பு, பார்வை பாதிப்பு போன்றவற்றிலிருந்து எளிதில் விடுபடலாம்’’ என மாற்று மருத்துவத்துக்கு மாறுகிறவர்களுக்கான ஆலோசனைகளையும் முன் வைக்கிறார் பரிமளச்செல்வி.

டைப் 1 நீரிழிவில் குறையவோ கூடவோ செய்யும் ரத்த சர்க்கரை அளவுக்கு ஏற்ப இன்சுலின் மருந்தின் அளவு மாறும். ஊசி போட்டுக் கொள்வதை  நிறுத்தினால், விரைவிலேயே மிகப்பெரிய சிக்கல்களை ஏற்படுத்திவிடும்.

என்ன ஆகும்?
இன்சுலினைச் சார்ந்துள்ள டைப் 1 நீரிழிவு நோயாளிகள் ஓாிரு நாட்கள் இன்சுலின் ஊசி  போட்டுக் கொள்ளவில்லை என்றால் ரத்தசர்க்கரை அளவு எகிறிவிடும். தொடர்ந்து  ஒரு வாரம் வரை போட்டுக் கொள்ள முடியாத சூழ்நிலையில் கோமா நிலைக்குச் சென்றுவிடுவர். மரணம் சம்பவிக்கும் என்று உறுதியாகச் சொல்ல  முடியாவிட்டாலும் ஆபத்தான நிலையை அடையக்கூடும்.

அக்குபங்சர் சிகிச்சை எடுத்துக் கொள்ள வரும் நீரிழிவு நோயாளிகளுக்கு, அவர்கள் ஏற்கனவே எடுத்துக் கொள்ளும் அலோபதி மருந்துகளை நிறுத்தச் சொல்லி அறிவுறுத்துவதில்லை.

- இந்துமதி