பெங்களூரு அழிகிறது...பின் தொடர்கிறது தமிழகம்!



அதிர்ச்சி ரிப்போர்ட்

கடும் வெயில், பேய் மழை, உறைய வைக்கும் குளிர் என கடந்த சில ஆண்டுகளாகவே இயற்கையோடு பெரும் போராட்டத்தைச் சந்தித்துக் கொண்டிருக்கிறோம். அதீதமான இந்த பருவ மாற்றங்கள் புதிய புதிய நோய்களையும், எண்ணற்ற உயிரிழப்புகளையும் ஏற்படுத்துகிற அளவு உக்கிரம் அடைந்திருப்பது முன் எப்போதும் நாம் காணாதது.

கடந்த டிசம்பரில் சென்னை மற்றும் கடலூரைச் சூறையாடிய மழையை, ‘100 ஆண்டுகளில் இல்லாத மழை’ என்றார்கள். சமீபத்தில் முடிந்த அக்னி நட்சத்திரத்தில் ‘11 மணிக்கு மேல் வெளியில் செல்வதைத் தவிருங்கள்’ என்று வானிலை ஆய்வு மையமே எச்சரித்தது. நிலவரம் இப்படி கலவரமாக இருக்கும் நேரத்தில், ‘இன்னும் 5 ஆண்டுகளில் வாழத் தகுதியில்லாத நகரமாகப் போகிறது பெங்களூரு’ என்று அபாய மணி அடித்திருக்கிறது Indian Institute of Science.

பெங்களூருவை அழித்துக் கொண்டிருக்கும் காரணங்கள் என்று ஐ.ஐ.எஸ்.சி சொல்லும் காரணங்களைக் கொஞ்சம் உற்று கவனித்தால், அதே ஆபத்து சென்னைக்கும் தமிழகத்தின் மற்ற தலைநகரங்களுக்கும் இருப்பதை உணர முடியும். இது பக்கத்து வீட்டில் எரியும் தீ என்ற அவசர அறிவிப்பாக தமிழகத்துக்குமான எச்சரிக்கையாகவும் புரிந்துகொள்ளவும் முடியும்.

திப்பு சுல்தானின் வீழ்ச்சிக்குப் பிறகு, 17ம் நூற்றாண்டில் ஆங்கிலேய அரசால் நிர்மாணிக்கப்பட்ட நகரம் பெங்களூரு. இதமான சூழல் காரணமாக ஆங்கிலேயர்களுக்கு பிடித்த நகரமாகவும் இருந்தது. ரம்மியமான சூழல் காரணமாகவே கடந்த 20 ஆண்டுகளில் பொருளாதார ரீதியாக பெரும் முன்னேற்றத்தைச் சந்தித்த இந்த ஊர், இன்று அதன் காரணமாகவே அபாய கட்டத்தில் இருக்கிறது.

குறிப்பாக, 1990களின் தொடக்கத்தில்தான் பெங்களூரு பெருமளவில் மாறத் தொடங்கியது. கடந்த 25 ஆண்டுகளில் பெங்களூருவின் மக்கள் தொகை 150 சதவிகிதமாக அதிகரித்திருக்கிறது. அதாவது, 40 லட்சம் மக்களை மட்டுமே சமாளிக்கத்தக்க சிறிய நகரமான பெங்களூரு, இப்போது ஒரு கோடிக்கும் அதிகமான மக்களால் மூச்சுத் திணறுகிறது.

நீர் ஆதாரத்துக்காக இங்கு நதிகள் எதுவும் கிடையாது. 600க்கும் அதிக ஏரிகள்தான் இந்த நகரத்தைக் குளுமையாகவும் பசுமையாகவும் வைத்திருந்தன. இன்றோ பெரும்பாலான ஏரிகள் அழிக்கப்பட்டுவிட்டன. 100 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் காவிரியிலிருந்து ராட்சதக் குழாய்களின் மூலம் தண்ணீர் வந்து சேர்கிறது. காவிரி மொத்தமாக வறண்டால், பெங்களூரு பாலைவனமாகிவிடும் என்பது கவலைக்கு உரிய செய்தி.

பசுமை நகரம் என்றழைக்கப்பட்ட பெங்களூரு தன்னுடைய பசுமை வளத்தை இப்போது 78 சதவிகிதம் இழந்திருக்கிறது. கிட்டத்தட்ட 79 சதவிகித ஏரிகள், ‘கிணத்தைக் காணோம்’ என்ற வடிவேல் காமெடி போல மாயமாகிவிட்டன. ‘பைத்தியக்காரத்தனமான, அறிவற்ற வளர்ச்சியால் இன்னும் 5 ஆண்டுகளில் வாழத்தகுதியில்லாத நகரமாக பெங்களூரு மாறப் போகிறது’ என்று கூறியிருக்கிறார் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸ் சூழலியல் பேராசிரியரான டி.வி. ராமச்சந்திரா.

 பெங்களூரு எதிர்கொண்டிருக்கும் இந்தப் பிரச்னை பற்றி இயற்கை பேரிடர் மேலாண்மை ஆலோசகரான சங்கர் கிருஷ்ணமூர்த்தியிடம் பேசினோம்…‘‘புவி வெப்பமயமாதல் என்ற குளோபல் வார்மிங் பிரச்னையில் முதலில் பாதிக்கப்பட்டிருக்கும் முக்கிய நகரம் பெங்களூருவாகத்தான் இருக்கும்.

பெங்களூருவின் இயற்கை வளங்கள் பெருமளவு அழிக்கப்பட்டுவிட்டது ஒருபுறம், மறுபுறம் தொழிற்சாலைகள், இன்னொரு பக்கம் அதிக வாகனங்களின் எண்ணிக்கை என எல்லாம் சேர்ந்து இன்று அளவு கடந்த வெப்பத்தை இங்கு ஏற்படுத்திவிட்டது.

முக்கியப் பிரச்னையாக இங்கு நிலத்தடி நீரே இல்லை. எத்தனை அடி போர் போட்டாலும் தண்ணீர் கிடைக்காது என்ற நிலையைப் பார்க்க முடிகிறது. தகவல் தொழில்நுட்பத்துறையின் நிலையில்லாத வேலை காரணமாக தற்கொலைகளும் அதிகரித்து வருகிறது. இதுபோல் வாழ்வாதாரமே பாதிக்கப்படும்போது வாழத் தகுதியில்லாத நகரமாகத்தானே பெங்களூரு மாறும்?

பெங்களூருவில் இருக்கும் வாகனங்களின் எண்ணிக்கை இன்று 60 லட்சத்தைத் தொட்டுவிட்டது. இது சென்னையைக் காட்டிலும் மிகவும் அதிகம். பெங்களூரு ஒரு மலை நகரம். அதிகரிக்கும் மக்கள் தொகைக்கும், தொழிற்சாலைகளுக்கும், வாகனங்களுக்கும் ஏற்ற வகையில் விரிவுபடுத்துவதற்கு ஏற்ற நிலப்பரப்பு கொண்ட நகரமும் இல்லை. இதுவும் பெரிய சிக்கல்.

வாகன நெரிசலை சமாளிப்பதற்காக மேம்பாலங்கள் ஏற்படுத்தப்பட்டு, ஆயிரக்கணக்கான மரங்கள் வெட்டி சாய்க்கப்பட்டுவிட்டன. மெட்ரோ ரயில் திட்டம் இந்த சுற்றுச்சூழல் சீரழிவை இன்னும் அதிகப்படுத்திவிட்டது. பொருளாதாரத்தில் ஏற்றம் கண்டு, ஐ.டி. துறை செழித்ததால் லட்சக்கணக்கானோர் இங்கு குடி புகுந்தார்கள். அவர்களின் குடியிருப்பு, வாகன வசதிகளுக்காக இயற்கை இன்னும் இன்னும் அழிக்கப்பட்டுவிட்டது. இனி அழிவதற்கு ஒன்றுமே பெங்களூருவில் இல்லை என்ற நிலைக்கு வந்தாகிவிட்டது.

பெங்களூருவை காப்பாற்ற அதிவேகமான மற்றும் உறுதியான முடிவுகள் தேவை. தேவைப்பட்டால் நீதிமன்றத்தின் உதவியோடு அரசாங்கம் உறுதியான நிலைப்பாட்டோடு செயல்பட வேண்டும். இயற்கை வளங்களைப் பாதுகாப்பது, வாகனப் பெருக்கங்களைக் கட்டுப்படுத்துவது போன்ற வேலைகளைப் போர்க்கால நடவடிக்கையாகக் கையில் எடுக்க வேண்டும்’’ என்கிறார் சங்கர் கிருஷ்ணமூர்த்தி.

பெங்களூருவில் கடந்த 38 ஆண்டுகளாக வசிக்கும் தாம்ஸன் ஸ்மித்திடம் இன்றைய பெங்களூருவின் நிலைமை பற்றி கேட்டோம்... ‘‘ஊட்டியில் இருக்கும் குளிர்சூழலும், அமைதியும் பெங்களூருவில் இருக்கும்.

ரம்மியமான சூழலாலேயே ‘நேச்சுரல் ஏர் கண்டிஷன் சிட்டி’ என்ற பெயர் பெங்களூருவுக்கு உண்டு. அப்படி குளிர்பிரதேசம் போல இருந்த ஊரில் இந்த வருடம் வெயிலின் அளவு 40 டிகிரியை தாண்டிவிட்டது.நகரத்துக்குள் காலி இடங்களே இல்லை என்கிற அளவு கட்டிடங்கள் உருவாகிவிட்டன. நிறைய கட்டிடங்கள் மக்கள் புழக்கம் இல்லாமலேயே இருக்கின்றன. குளங்கள், ஏரிகள் போன்றவை மட்டுமல்ல...

கல்லறைகள், சுடுகாடுகளைக் கூட சுத்தம் செய்து பிளாட் போட்டு விற்றதையும் அனுபவத்தில் பார்த்திருக்கிறேன். மூச்சுத்திணறும் மக்கள் தொகைக்கு ஏற்ற, கழிவுகள் வெளியேறுவதற்கான சாக்கடை வசதிகள் இல்லை. குடிநீர் என்பது டேங்கர் லாரிகளிலும், கேன் வாட்டர்களிலும் கிடைப்பதுதான். பெங்களூர் வளர்ச்சிக் கழகம், பெங்களூரு வளர்ச்சி ஆணையம் என்பதெல்லாம் பெயரளவிலேயே இருக்கிறது. நியாயமாக இந்த அழிவுக்கு அவர்கள்தான் பொறுப்பேற்க வேண்டும்.

பெங்களூருவின் உயிர் ஆதாரம் என்று சொல்லக் கூடிய ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலத்தை அரசாங்கம் மீண்டும் திரும்பப் பெற வேண்டும். நீர்நிலைகள், விளையாட்டு மைதானங்கள் போன்ற புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து இருப்பவர்களை வெளியேற்ற வேண்டும். இல்லாவிட்டால் இன்னும் கொஞ்ச நாளில் எல்லா மக்களும் வெளியேறுவதைத் தவிர வேறு வழியில்லை’’ என்கிறார்.

இது எங்கோ நடக்கிற பிரச்னை என்று நினைக்க வேண்டாம். சென்னை உட்பட தமிழகத்தின் பல பகுதிகளிலும் இதே அபாயம் இருக்கிறது என்கிறார் சுற்றுச்சூழல் ஆர்வலரான முகமது. ‘‘அல்சூர் ஏரியில் மீன்கள் செத்து மிதப்பது போன்ற படத்தைப் பார்த்திருப்பீர்கள். பெங்களூரு எப்படி இருக்கிறது என்பதற்கு அது ஒரு உதாரணம். தொழிற்சாலைகளின் கழிவுகள் மட்டுமில்லாமல் சுற்றியிருக்கும் கார்பரேட் நிறுவனங்களின் கழிவுகள், வீடுகளின் கழிவுகள் என்று எல்லாம் சேர்ந்துதான் இந்த அழிவை உண்டாக்கி இருக்கிறது.

இந்த கழிவுகள் நீர்நிலைகளின் ஊற்றுக்கண்ணையே பாதித்திருக்கிறது. கழிவுகள் நச்சுச்சகதிகளாக பூமிக்குக் கீழ் கிட்டத்தட்ட 2 கிலோ மீட்டர் ஆழத்துக்குப் படிந்திருக்கிறது. இந்த பாதிப்பு பெங்களூருவை சுற்றியிருக்கும் 45 கிலோமீட்டர் வரையிலும் பரவியிருக்கிறது. ஓசூரும் கிட்டத்தட்ட பாதிக்கப்பட்டிருக்கிறது.

இத்தனை பெரிய பிரச்னை வெளிச்சத்துக்கு வந்த பிறகும், இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸ் என்ற தொழில்நுட்ப ரீதியான அமைப்பு எடுத்த ஆய்வு வெளியாகியும் யாரும் கண்டுகொண்டதாகத் தெரியவில்லை. அரசியல் ரீதியாகவோ, அரசு ரீதியாகவோ இதை ஒரு எச்சரிக்கையாக இனியும் எடுத்துக்கொள்ளாவிட்டால் இதன் பின் விளைவுகள் இன்னும் மோசமாகவே இருக்கும்’’ என்கிறார்.

சென்னை மற்றும் தமிழகமும் இதே பிரச்னையை எதிர்கொண்டு வருகிறது என்பதற்கான ஆதாரங்களையும் முன்வைத்து எச்சரிக்கிறார் முகமது.‘‘பெங்களூருவின் பிரச்னை வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. இதே நிலை சென்னை உட்பட தமிழ்நாட்டிலும் பல இடங்களில் நீறுபூத்த நெருப்பாக இருக்கிறது.

ஈரோடு பெருந்துறையில் இருக்கும் சிப்காட்டினால் 15 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் சென்னிமலையிலும் ரசாயனத் தண்ணீர்தான் கிணற்றிலேயே ஊறுகிறது. வெள்ளோடு ஏரிக்கருகில் தோல் தொழிற்சாலைகள் இருக்கின்றன. அங்கும் இதே நிலைமைதான். இந்தத் தண்ணீரை சுத்திகரித்து முறையாக வெளியேற்றுவதும் இல்லை. ஈரோடு பகுதியில் இருக்கும் ஒரே பறவைகள் சரணாலயமான சித்தோடு ஏரியும் பாதிக்க ஆரம்பித்துவிட்டது.

சேலம் மேட்டூர் பகுதியில் இருக்கும் தொழிற்சாலையிலிருந்து வெளிவரும் ரசாயனப் புகை காரணமாக 4 கிலோமீட்டர் சுற்றளவில் எல்லோரும் வீடுகளை காலி செய்து வெளியேறிவிட்டார்கள்.

தொழிற்சாலைக் கழிவுகளை காவிரியிலும் கலக்கிறார்கள். பெங்களூரு ஏரியில் செத்துக் கிடக்கும் மீன்கள் பற்றி பேசுகிறோம். ஒரு மாதத்துக்கு முன்பு மேட்டூர் அணையில் தண்ணீர் ஓட்டம் இருக்கும் இடத்திலேயே மீன்கள் செத்து மிதந்தன.பெங்களூருவின் நிலைதான் சென்னையிலும் இருக்கிறது.

 அளவுக்கு அதிகமான மக்கள் தொகை, வாகனப்பெருக்கம், தொழிற்சாலைகள், இயற்கை வளங்கள் அழிக்கப்படுவது என்ற நிலைமை தொடர்ந்தால் சென்னையும் விரைவில் வாழத் தகுதியில்லாத நகரமாக மாறிவிடும். அதில் எந்த சந்தேகமும் இல்லை. ஏற்கெனவே, சென்னையின் எண்ணூர் இதற்கு முன் உதாரணமாக இருக்கிறது.

சென்னை மற்றும் தமிழ்நாட்டின் மற்ற நகரங்கள் பற்றி இதற்கான ஆய்வுகளும் இருக்கிறது. ஆனால், ஐ.ஐ.எஸ்சி. பெங்களூருவை பற்றி வெளியிட்டிருக்கும் ஆய்வு போல பரவலாக வெளியில் தெரியவில்லை. ஈரோடு, மேட்டூர், சென்னையை பற்றி 5 ஆண்டுகளுக்கு முன்பே ஓர் ஆய்வு எடுக்கப்பட்டிருக்கிறது.

அதுவும் மத்திய அரசின் நிறுவனம் ஒன்று ஆய்வு செய்திருக்கிறது. ஆனால், அது வெளியில் தெரியவில்லை. இன்று சென்னை, ஈரோடு, மேட்டூர் எப்படி இருக்கிறது என்று 2 ஆண்டுகளுக்கு முன்பு அதே ஆய்வின் அடிப்படையில் மீண்டும் ஆய்வு செய்ய முயற்சி நடந்தது. ஆய்வு செய்ய வந்த குழுவினர் தாக்கப்பட்டார்கள். அவர்களது வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. இதுபற்றிய செய்தி ஊடகங்களிலும் வெளியாகி இருக்கிறது.

சுற்றுச்சூழலின் இந்த அழிவால் சரும நோய்கள், சரும புற்றுநோய்கள், குறைப்பிரசவம், மலட்டுத்தன்மை, மனநிலை பாதிப்பு, பிறக்கிற குழந்தைகள் ஊனமாகப் பிறப்பது, சுவாசக்கோளாறு என்று பல பிரச்னைகள் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றன.

சுற்றுச்சூழல் மாசால் நோய்வாய்ப்பட்டு இறந்தவர்கள் பற்றி இதுவரை கணக்குகள் எதுவும் எடுக்கப்படவில்லை. இதை ஆராய்ந்தால் இன்னும் பெரிய அதிர்ச்சியாக இருக்கும்.
நேர்மையாகச் சொன்னால் இனிமேல் எந்தப் பருவமும் கிடையாது. மழை பெய்தால் பயங்கரமாக இருக்கும்.

அதேபோல வெயிலடித்தாலும் இப்போது முடிந்த அக்னி நட்சத்திரம் போல பயங்கரமாகத்தான் இருக்கும். ஏற்கெனவே பூமியில் பலவிதமான தவளைகள், மண்புழுக்கள், பூச்சியினங்கள் அழிந்துவிட்டன என்கிறார்கள். மனித இனமும் அதுபோல் அழியாமல், வாழத் தகுதியில்லாத இடமாக பூமி மாறாமல் காப்பாற்ற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்’’ என்கிறார் முகமது. என்ன செய்யப் போகிறோம் ?

சுற்றுச்சூழலின் அழிவால் சரும நோய்கள், சரும புற்றுநோய்கள், குறைப்பிரசவம், மலட்டுத்தன்மை, மனநிலை  பாதிப்பு, பிறக்கிற குழந்தைகள் ஊனமாகப் பிறப்பது, சுவாசக்கோளாறு என்று பல பிரச்னைகள் ஏற்பட்டுக் கொண்டிருக்கி்றது.

நம்பிக்கை தரும் நடவடிக்கை!

கர்நாடக  மாநில அரசு பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு சமீபத்தில் தடை விதித்திருக்கிறது.  40 மைக்ரான் அடர்த்திக்கும் குறைவான கேரி பேக்குகள் மற்றும் பிளாஸ்டிக்  கப்புகளை மறுசுழற்சி செய்ய முடியாது. மிகவும் மெலிதாக, தடிமன் குறைவாக  இருக்கும் இந்த பிளாஸ்டிக்குகள்தான் சுற்றுச்சூழலை அதிகம் கெடுப்பவை  என்பதால் அரசு இவற்றை முற்றிலும் தடை செய்திருக்கிறது.

இதன் எதிரொலியாக பெங்களூரு  கடைகளிலும், பிளாஸ்டிக் பை தயாரிப்பு நிறுவனங்களிலும் மாநகராட்சி  அதிகாரிகள் தொடர்ந்து சோதனை நடத்தி வருகிறார்கள். பிளாஸ்டிக் பை,  பிளாஸ்டிக் கப் தயாரிக்கும் நிறுவனங்கள் விதியை மீறினால் ரூ.2 லட்சம்  அபராதம் விதிக்கப்படும் என்றும், அதே நிறுவனம் மீண்டும் தரக்குறைவான  பிளாஸ்டிக் தயாரிப்பது தெரிந்தால் ரூ.5 லட்சம் அபராதம் விதிக்கப்படும்  என்றும் எச்சரித்திருக்கிறார்கள். தரக்குறைவான பிளாஸ்டிக் பைகளைப்  பயன்படுத்தினால் பொதுமக்களுக்கும் ரூ.500 முதல் 1000 வரை அபராதம்  விதிக்கப்படும் என்றும் அறிவித்திருக்கிறார்கள்.

நகரத்துக்குள் காலி இடங்களே இல்லை  என்கிற அளவு கட்டிடங்கள் உருவாகிவிட்டன. குளங்கள், ஏரிகள் போன்றவை மட்டுமல்ல... கல்லறைகள், சுடுகாடுகளைக் கூட சுத்தம் செய்து பிளாட் போட்டு விற்றதையும் அனுபவத்தில் பார்த்திருக்கிறேன்.

பெங்களூருவின் நிலைதான் சென்னையிலும்  இருக்கிறது. அளவுக்கு அதிகமான மக்கள் தொகை, வாகனப்பெருக்கம், தொழிற்சாலைகள், இயற்கை வளங்கள் அழிக்கப்படுவது என்ற நிலைமை தொடர்ந்தால் சென்னையும் விரைவில் வாழத் தகுதியில்லாத நகரமாக மாறிவிடும். அதில் எந்த சந்தேகமும்  இல்லை.

- ஞானதேசிகன்