சுகர் ஸ்மார்ட்



1. நம் வயிறு... நம் நீரிழிவு!

அறிவதன் மூலம் நாம் நம்பிக்கையை பெறுகிறோம் - நீரிழிவோடு நலமாக வாழும் நம்பிக்கையை!

நீரிழிவால் ஏற்படும் பிரச்னைகளையும் குழப்பங்களையும் பட்டியலிட்டு அடக்கிவிட முடியாது என்பது உண்மையே. ஜீரணம் சார்ந்த பிரச்னைகள் கூட நீரிழிவு காரணமாக ஏற்படக்கூடும். இவற்றில் முக்கியமானது Gastroparesis.  வயிற்றில் உள்ள உணவுப்பொருட்களை வெளியேற்றி, காலியாக வைத்துக்கொள்ள அதிக நேரம் எடுக்கும் பிரச்னைதான் இது.

‘டிலேட் கேஸ்ட்ரிக் எம்டியுங்’ என்றும் இதைக் குறிப்பிடுவதுண்டு. இது ஒருவிதமான நரம்புப் பாதிப்பே. இதனால், வயிற்றிலுள்ள தசைகளும், குடலும் இயல்பாக வேலை செய்ய இயலாமல் போய், உணவுப்பொருட்களின் இயக்கம் தடைபடுகிறது. அல்லது தாமதமாகிறது. இந்த நரம்புப் பாதிப்புக்குக் காரணம் என்ன?

நீண்ட கால உயர் ரத்த சர்க்கரைதான்!கட்டுப்படுத்த முடியாத நீரிழிவை நீண்ட காலமாகக் கொண்டுள்ளவர்களை தாக்கக் கூடிய அரிதான பிரச்னை இது. இப்பிரச்னையும் மேலும் பல பிரச்னைகளுக்கு வித்திடும் என்பதில் கவனம் தேவை. ரத்த சர்க்கரை கட்டுப்பாடற்ற நிலையில் கேஸ்ட்ரோபெரேசிஸ் ஏற்படுகிறது எனப் பார்த்தோம்.

கேஸ்ட்ரோபெரேசிஸ் ஏற்பட்டால் என்ன ஆகும்? ரத்த சர்க்கரை இன்னும் எகிரும். வயிற்றில் இருக்கிற உணவு தாமதமாகி, பின்னர் ஒருவழியாக சிறுகுடலுக்குள் சென்று உறிஞ்சப்படும்போது, ரத்த சர்க்கரை அளவு அதிகரித்து விடும். உணவு வயிற்றிலேயே நீண்ட நேரம் தங்கியிருப்பதால், அதிகப்படியான பாக்டீரியா வளர்ச்சி நிகழும். அல்லது உணவுப்பொருள் கடினத்துண்டுகளாக மாறி, வாந்தி, குமட்டுதல் மற்றும் வயிற்றுக் கோளாறுகளையும் ஏற்படுத்தும்.

கேஸ்ட்ரோபெரேசிஸ் ஏன்?
குறிப்பிடத்தக்க காரணங்கள் இதுவரை அறியப்பட வில்லை என்றாலும், கேஸ்ட்ரோபெரேசிஸ் பிரச்னை ஆண்களை விட பெண்களுக்கே அதிக அளவில் ஏற்படுகிறது. மருத்துவ சோதனைகள் வாயிலாகக் கூட, இப்பிரச்னைக்கான மூல காரணத்தை அறிய முடிவதில்லை. டைப் 1 நீரிழிவாளர்களுக்கு அதிகம் ஏற்படும் இப்பிரச்னை, டைப் 2 காரர்களையும் விட்டு வைப்பதில்லை.இப்பிரச்னையின் அறிகுறிகள்

* நெஞ்செரிச்சல்
* கடுமையான மலச்சிக்கல் (Obstipation)
* உணவு ஜீரணம் ஆகாமல் குமட்டல் மற்றும் வாந்தி... இதன் காரணமாக உடலில் நீர்ச்சத்து குறைதல்
* முழுக்க சாப்பிடுவதற்குள்ளாகவே வயிறு நிரம்பிய உணர்வு
* பசியின்மை
* எடை குறைதல்
* வயிற்று உப்புசம்
* தாறுமாறான ரத்த சர்க்கரை அளவு
* வயிற்றில் உள்ள உணவும் அமிலமும் தொண்டையில் மேலேறுதல் (Gastroesophageal reflux)
* வயிற்றுச்சுவர் தசையிழுப்பு.

என்ன வித்தியாசம்?
கேஸ்ட்ரோபெரேசிஸ் பிரச்னையை வழக்கமான ஜீரணக் கோளாறாகவே பலரும் எண்ணுவதுண்டு. உடல் சோதனை, மருத்துவ வரலாறு, ரத்தப் பரிசோதனைகள், இரைப்பை குடல்பாதை (GI Tract) அடைப்பு அறியும் சோதனை, வயிற்றில் ஒன்றுமில்லாமல் ஆக்கிச் செய்யப்படும் சோதனை போன்றவற்றில் அவசியம் ஆனவற்றைச் செய்வதன் மூலமே, மருத்துவர்களால் இப்பிரச்னையை உறுதிப்படுத்த முடியும்.

எப்படிக் குணப்படுத்துவது?
* ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துதல்மருத்துவரின் அறிவுறுத்தலின் படி ரத்த சர்க்கரை அளவைக் கட்டுக்குள் கொண்டு வருவதே நீரிழிவு சார்ந்த கேஸ்ட்ரோபெரேசிஸ் பிரச்னையை சரிசெய்ய முதல் வழி.

சிலருக்கு இன்சுலின் அளவை அதிகப்படுத்தும் தேவை ஏற்படும். உணவுக்கு முன் என்பதற்குப் பதிலாக உணவுக்குப் பின் இன்சுலின் எடுக்க நேரிடலாம். ஒவ்வொருவரின் நிலைமைக்கேற்ப மருத்துவர் இதற்கான தனிப்பட்ட ஆலோசனைகளையும் வழங்குவார்.

* மருந்துகள்
கேஸ்ட்ரோபெரேசிஸ் பிரச்னையை சரிசெய்ய பலவித மருந்துகளும் உள்ளன. வெவ்வேறு மருந்துகள் அல்லது கலப்பு மருந்துகளை அளித்து, இதற்கான சிறந்த சிகிச்சையை அளிக்க மருத்துவர்
முயற்சிப்பார்.

* உணவுப்பழக்கத்தில் மாற்றம் செய்தல்கேஸ்ட்ரோபெரேசிஸ் பிரச்னையை கட்டுப்படுத்த மருத்துவரும் டயட்டீஷியனும் உணவுப்பழக்கத்தில் சில மாற்றங்களைப் பரிந்துரைப்பார்கள். உதாரணமாக...
* பிரச்னை சரியாகும் வரை திரவ உணவை அதிகப்படுத்துவது...
* அதிக கொழுப்பு மற்றும் அதிக நார்ச்சத்து உணவுகளைத் தவிர்ப்பது...
* அதிக உணவை ஒரே நேரத்தில் சாப்பிடுவதற்குப் பதிலாக, கொஞ்சம் கொஞ்சமாக அதிக முறை எடுத்துக் கொள்வது...

* அடுத்த கட்ட சிகிச்சைகள்

மேற்கண்ட எந்த முறையும் வயிற்றுக்குக் கை கொடுக்காத பட்சத்தில் அறுவை சிகிச்சை அல்லது ஃபீடிங் ட்யூப் முறை தேவைப்படலாம். வயிற்றுப்பகுதியிலுள்ள சருமம் வழியாக சிறுகுடலுக்குள் ஒரு உணவுக்குழாய் பொருத்தப்படும்.

இதன் மூலம் வயிற்றின் உதவியை நாடாமலே, ஊட்டச்சத்துகளையும் மருந்துகளையும் நேரடியாக சிறுகுடலுக்குள் செலுத்தப்படும். இவை விரைவாக செரிமானம் செய்யப்பட்டு ரத்த ஓட்டத்தில் கலக்கும். இந்த அளவு கடைசி கட்ட சிகிச்சைக்குள் செல்லாமல் இருக்க வரும் முன் காத்தலே எளிய வழி. அதற்கு முதல் படியாக ரத்த சர்க்கரை அளவைக் குறைக்க வேண்டும்.

மயக்குதே மாம்பழம்!

மாம்பழ சீசனில் இமாம் பசந்த், மல்கோவா, அல்போன்சா என்று பார்த்தாலே நாவில் நீர் ஊறச் செய்யும் பழ வகைகள் வலம் வருகின்றன. மார்க்கெட்டில் மட்டுமா? வீட்டிலும் கண்ணில் பட்டு ‘எடுத்துக்கோ, கடிச்சுக்கோ’ என்கின்றன. என்னதான் செய்வது இந்த நீரிழிவோடு?
நீரிழிவு கட்டுப்பாடில் இருக்கும் போது, சீசனில் ஓரிரு ஸ்லைஸ் மாங்கனியை சுவைப்பதில் தவறில்லை.

அதற்காக ஜூஸ் ஆகவோ, மில்க்‌ஷேக் ஆகவோ பருக வேண்டும். முழுப்பழத்தையும் ‘எனக்கே எனக்கு’ என்று விழுங்குவது தவறு. அளவு முக்கியம். இல்லையெனில் ரத்த சர்க்கரை அளவு அழுது விடும்!

கட்டுப்பாடில்லா நிலையில் இருக்கும் நீரிழிவாளர்கள் மாம்பழங்களின் அழகை
ரசித்துவிட்டு அவ்விடம் விட்டு அகன்று விடுவதே அனைவருக்கும் நலம் பயக்கும்!மருத்துவரின் அறிவுறுத்தலின் படி ரத்த சர்க்கரை அளவைக் கட்டுக்குள் கொண்டுவருவதே நீரிழிவு சார்ந்த கேஸ்ட்ரோபெரேசிஸ் பிரச்னையை சரிசெய்ய முதல் வழி!

2. இன்சுலினா? மாத்திரையா?

இரண்டுமே நீரிழிவாளர்களுக்கு உதவும் என்றாலும், இன்சுலினுக்கும் மாத்திரைகளுக்கும் உள்ள வேறுபாடு, ரத்த சர்க்கரையைக் குறைக்கிற முறையில்தான் இருக்கிறது.

பெரும்பாலான மாத்திரைகள் ஏற்கனவே சிரமத்தில் இருக்கும் கணையத்தைக் கட்டாயப்படுத்தியே இன்சுலினை சுரக்க வைக்கின்றன. இதனால் காலப்போக்கில் கணையம் மெல்ல மெல்ல செயல் இழந்துவிடும்.

நீரிழிவு அறியப்பட்டவுடன் ஏராளமான மாத்திரைகளை எடுத்துக்கொள்ள வேண்டி வந்தால், வயிற்று எரிச்சல் (Gastritis) ஏற்படவும் கூடும். இன்சுலினோ நமது கணையத்தை மென்மையாகப் பாதுகாக்கிறது. இது மற்ற உறுப்புகளையும் பாசத்துடன் பாதுகாக்கும்.

நமது உடலில் உள்ள கணையம் இன்சுலினை சுரக்க முடியாத நிலையில்தான் நீரிழிவாளராக மாறுகிறோம். இந்த நிலையில் இன்னும் சில ஆண்டுகள் மாத்திரைகளுக்கு அது ஈடுகொடுத்து இயங்கக்கூடும்.

எனினும், திடீரென ஒரு நாள் இன்சுலினை சுரக்க முடியாது போய், பாழுங்கிணறு போலாகி விடும். மாத்திரைக்கு மாற்றாக இன்சுலினைப் பயன்படுத்தினால்..? கணையம் கடினமாக வேலை செய்வது குறையும். அதற்கு ஓய்வு கிடைக்கும். பாதிக்கப்பட்ட கணையம் மீண்டும் பழைய அளவில் இன்சுலினை சுரக்கவும் செய்யும்.

நீரிழிவு அறியப்பட்ட தொடக்க காலத்தில் குறைவாக சுரக்கும் இன்சுலின் காலம் கடக்க கடக்க நிலத்தடி நீர் மட்டம் குறைவது போல குறைந்துகொண்டே இருக்கும். இன்சுலின் அளவு ஆண்டுக்காண்டு குறைந்து கொண்டே செல்கையில், மாத்திரைகளின் அளவு கூடும்.

அப்படியும் இன்சுலின் பற்றாக்குறை அதிகமாகிக்கொண்டே செல்லும். ஆண்டுகள் பல கடந்தாலும், நீரிழிவுக்கு முதன்முதலாக அளிக்கப்பட்ட அதே மாத்திரைகளை  மாற்றமே செய்யாமல், மருத்துவரையும் பார்க்காமல், ரத்தப் பரிசோதனையும் செய்யாமல் பயன்படுத்துகிறவர்கள் பலர் இருக்கிறார்கள்.

பின் எப்போதாவது ஒரு கட்டாயத்தில் ரத்த சர்க்கரை அளவை அறிய நேர்ந்தால் அதிர்ச்சிதான் மிஞ்சும். ஆகவே, மாத்திரையோ, இன்சுலினோ, அவ்வப்போது ரத்தப் பரிசோதனையும் மருத்துவரின் ஆலோசனையும் அவசியம்!

ஸ்வீட் டேட்டா

தினமும் அல்லது அடிக்கடி பாட்டில் பானம் / கேன் பானம் அருந்துகிறவர்களுக்கு நீரிழிவு அபாயம் 20 சதவிகிதம் அதிகரிக்கிறது.

(கட்டுப்படுவோம்...கட்டுப்படுத்துவோம்!)

தாஸ்