நியூஸ் கார்னர்
செய்தித் தொகுப்பு
1 முதல் 9ம் வகுப்பு வரை முப்பருவ பாடத்திட்டம் ரத்து!
தமிழகத்தில், கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையால், மார்ச் முதல் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் செயல்படவில்லை. ஒன்று முதல், 10ம் வகுப்பு வரை, ஆண்டு இறுதி தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு, அனைவருக்கும் தேர்ச்சி வழங்கப்பட்டுள்ளது. ஜூன் மாதம் நடைபெற வேண்டிய பள்ளிகள் திறப்பும், காலவரையின்றி தள்ளி வைக்கப்பட்டுள்ளது. தனியார் பள்ளிகள் மட்டும், ‘ஆன்லைன்’ வகுப்புகளை நடத்திவருகின்றன. இந்நிலையில், நடப்பு கல்வி ஆண்டில், பள்ளிகளை நடத்துவதற்கு போதிய நாட்கள் இல்லாததாலும், அனைத்து நாட்களும், மாணவர்களுக்கு வகுப்புகளை நடத்த முடியாத நிலை உள்ளதாலும், பாடங்களை குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்காக, பள்ளிக்கல்வி கமிஷனர் சிஜி தாமஸ் வைத்யன் தலைமையில், ஆய்வு குழு அமைக்கப்பட்டுள்ளது.அக்குழுவினர், முதல் கட்ட அறிக்கையை தாக்கல் செய்துள்ளனர். இரண்டாம் கட்ட அறிக்கையை, வெகு விரைவில் தாக்கல் செய்ய உள்ளனர். அதில், ஒன்று முதல், ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, முப்பருவ பாடம் மற்றும் தேர்வுகளை ரத்து செய்யும்படி, பரிந்துரைக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
அதாவது, காலாண்டு அல்லது முதல் பருவம், ஆகஸ்டில் முடியும் என்பதால், அப்போதுதான் பள்ளிகளை திறக்க வாய்ப்புள்ளது. எனவே, முதல்பருவ பாடங்களை தனியாக நடத்த முடியாது.எனவே, பருவத் தேர்வு மற்றும் அதற்கான பாட முறையை ரத்து செய்து விட்டு, பொதுவாக முக்கிய பாடங்கள் மற்றும் அடிப்படை தேவைக்கான கல்வியை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், பழைய முறைப்படி, இறுதியாண்டு தேர்வில், அனைத்து பாடங்களிலிருந்தும் கேள்விகளை இடம்பெறச் செய்யலாம் என ஆலோசிக்கப்பட்டுள்ளது.
ஏ.பி.ஜே. அப்துல் கலாம் விருது பெற விண்ணப்பிக்கலாம்!
ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தின விழாவின்போது விஞ்ஞான வளர்ச்சி, மனிதவியல் மற்றும் மாணவர்கள் நயன் ஆகிய துறைகளில் சிறந்து விளங்கும் தமிழ்நாட்டைச் சார்ந்தவர்களுக்கு டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் விருதானது மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களால் வழங்கப்பட்டுவருகிறது.ரூ.5 லட்சத்துக்கான காசோலையும், 8 கிராம் தங்கத்தினாலான ஒரு பதக்கம் மற்றும் பாராட்டு சான்றிதழும் இந்த விருதில் அடங்கும்.
இவ்விருதுக்கான விண்ணப்பத்தை விரிவான தன் விவரக் குறிப்புடன், உரிய விவரங்கள் மற்றும் அதற்குரிய ஆவணங்களுடன், ‘அரசு முதன்மைச் செயலாளர், உயர்கல்வித் துறை, தலைமைச் செயலகம், சென்னை - 600 009’ என்ற முகவரிக்கு 15.07.2020 -க்கு முன்பாக அனுப்பி வைக்கப்பட வேண்டும். விருது பெற தகுதி உள்ளவர்கள் இதற்கென தமிழக அரசால் நியமிக்கப்பட்ட தேர்வுக் குழுவால் தேர்வு செய்யப்படுவார்கள்.
மருத்துவப் படிப்பில் ஓபிசி-க்கு 27% இடஒதுக்கீடு!
ஆண்டுதோறும் MBBS, MDMS என்ற இரண்டு பிரிவுகளில் நாடு முழுவதும் இருக்கக்கூடிய அனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும் MBBS பிரிவில் 15 சதவீதமும் MDMS என்கின்ற மருத்துவ மேற்படிப்பு பிரிவில் 50% சதவீதமும், மேலும் சிறப்பு படிப்பு எனும் MCHDM என்ற பிரிவுக்கு 100 சதவீத இடங்களையும் அகில இந்திய தொகுப்புக்கு அனைத்து மாநிலங்களும் அளிப்பது வழக்கமான ஒன்றாகும். இதில் சமீப காலமாக தமிழகத்தில் இதுகுறித்த சர்ச்சைகள் வெடித்தன. இதில் பிற்படுத்தப்பட்ட ஓபிசி பிரிவினருக்கு பல ஆண்டுகளாக அவர்களுக்கான இடங்கள் நிரப்பப்படவில்லை என தகவல் வெளியானது.
இவ்வாறு மத்திய தொகுப்புக்கு வழங்கப்படும் இடங்களில் பிற்பட்ட மற்றும் மிகவும் பிற்பட்ட வகுப்பினர் அடங்கிய இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்க உத்தரவிடக் கோரி தமிழகத்தின் பல கட்சிகளும் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தன. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகும்படி அறிவுறுத்தியது. அதன்படி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
இந்த நிலையில் உயர்நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது இதுகுறித்து பதிலளிக்க மத்திய அரசுக்கு உத்தரவிடப்பட்டது. இதனையடுத்து இன்று திடீர் திருப்பமாக மருத்துவப் படிப்பில் பிற்படுத்தப்பட்ட ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது.
தேசிய நல்லாசிரியர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்!
அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் மனிதவள மேம்பாட்டுத்துறை இயக்குநரிடமிருந்து கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதில், ‘2019 ஆம் ஆண்டிற்கான தேசிய நல்லாசிரியர் விருதிற்கு தகுதியுள்ள ஆசிரியர்களை நேரிடையாக 6.7.2020-க்குள் MHRD இணையதளத்தில் (https:/mhrd.gov.in மற்றும் http:/nationalawardstoteachers.mhrd.gov.in) பதிவு செய்ய தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய நல்லாசிரியர் விருதிற்கு அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் நேரிடையாக இணையதளத்தில் பதிவு செய்யவேண்டும். ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் விண்ணப்பிக்கக்கூடாது. 2019 ஆம் ஆண்டில் குறைந்தது 4 மாதங்கள் பணியாற்றி இருக்கவேண்டும். 2019 ஏப்ரல் 30 வரை பணிபுரிந்து இருக்கவேண்டும்.
அலுவலகங்களில் நிர்வாகப்பணி மேற்கொள்ளும் ஆசிரியர்கள் ண்ணப்பிக்கக்கூடாது. மனிதவள மேம்பாட்டுத் துறையின் இணையதளத்தில் குறிப்பிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி, ஆசிரியர்கள் 6.7.2020-க்குள் மேற்குறிப்பிட்ட இணையதளத்தில் மட்டுமே நேரடியாக விண்ணப்பிக்க வேண்டும்.
மேற்கண்ட விவரங்களை விரிவாக தங்கள் மாவட்ட நாளிதழ்களில் செய்தி வெளியிட்டு, குறிப்பாக தங்கள் ஆளுகைக்குட்பட்ட அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளுக்கு உடனடியாக சுற்றறிக்கை அனுப்பி தகவல் தெரிவித்து நடவடிக்கை மேற்கொள்ளவும் தெரிவிக்க வேண்டும். மேலும், இது சார்ந்து தங்கள் ஆளுகைக்கு உட்பட்ட அனைத்து சார்நிலை அலுவலர்களுக்கும் தகவல் தெரிவித்து நடவடிக்கை மேற்கொள்ளவும், அலுவலக விளம்பர பலகையில் விரிவாக விளம்பரம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளவும் அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
|