கேட்டல் குறைபாடு சார்ந்த பட்டப் படிப்புகளும் பட்டயப் படிப்புகளும்!வழிகாட்டல்

பேசுதல், கேட்டல் உள்ளிட்ட செய்தித்தொடர்பு குறைபாடுகளை நீக்க உதவும் பயிற்சிகளைத் தரும் 17 விதமான சிறப்புப் படிப்புகளை
‘All India Institute of Speech and Hearing’ என்ற கல்வி நிறுவனம் வழங்கி வருகிறது. இந்நிறுவனம் சுகாதாரம் மற்றும் உடல்நல அமைச்சகத்தின்கீழ் 1966 முதல் இயங்கிவருகிறது.

இந்நிறுவனம் தகவல் தொடர்புக் குறைபாடு உள்ளவர்களுக்கு மருத்துவம் செய்யத் தேவையான பயிற்சிகளைத் தரும் படிப்புகளைத் தருவதுடன், அக்குறைபாடு உள்ளவர்களுக்கு மருத்துவம் செய்தல், பொதுமக்களுக்கு இவை தொடர்பான விழிப்புணர்வைத் தருதல், இத்துறைத் தொடர்பான ஆய்வு நடத்துதல் போன்ற பணிகளை மேற்கொள்கிறது. ஆசிய கண்டத்தின் மிகச்சிறந்த இந்நிறுவனம் மானசகங்கோத்ரி (Manasagangothri) என்ற இடத்தில் மைசூர் பல்கலைக்கழகத்தின்கீழ் இயங்கிவருகிறது.

பட்டயப் படிப்புகள்

ஓர் ஆண்டு படிப்பான Diploma in Hearing Aid and Ear Mould Technology (DHA DET) என்ற பட்டயப் படிப்பிற்கு +2-ல் இயற்பியல் பாடத்துடன் கூடிய படிப்பு அல்லது எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரிக்கல் பாடத்தில் டிப்ளமோ அல்லது எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரிக்கலில் ஐடிஐ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

டென்டல் டெக்னீஷியன் படிப்பு முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம். இப்படிப்புகளில் பொதுப்பிரிவினர் குறைந்தது 50%, எஸ்.சி/எஸ்.டி பிரிவினர் குறைந்தது 45% மதிப்பெண் எடுத்திருக்க வேண்டும். விண்ணப்பிக்க வயது 24-க்குள் இருக்க வேண்டும். இப்படிப்பில் சேர்பவர்களுக்கு 10 மாதங்களுக்கு, மாதம் ரூ. 250 ஊக்கத்தொகை வழங்கப்படும். இப்படிப்பிற்குப் பொதுப்பிரிவினருக்கு 13 இடங்களும், எஸ்.சி.-க்கு 3 இடங்களும், எஸ்.டி-க்கு 2 இடங்களும், ஓ.பி.சி. பிரிவினருக்கு 7 இடங்களும் என மொத்தம் 25 இடங்கள் உள்ளன. இப்படிப்பிற்கான கல்வித்தகுதியில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

ஓர் ஆண்டு பட்டயப் படிப்பான Diploma in Early Childhood Special Education (Hearing Impairment-DECSE (HI)) என்ற படிப்பிற்கு +2-ல் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். பொதுப்பிரிவினர் குறைந்தது 50%, எஸ்.சி./எஸ்.டி. பிரிவினர் 45% மதிப்பெண் எடுத்திருக்க வேண்டும். விண்ணப்பிக்க குறைந்தது 17 வயது நிரம்பியிருக்க வேண்டும். இப்படிப்பிற்கு பொதுப்பிரிவினருக்கு 13 இடங்களும், எஸ்.சி.-க்கு 3 இடங்களும், எஸ்.டி-க்கு 2 இடங்களும், ஓ.பி.சி-க்கு 7 இடங்களும் என மொத்தம் 25 இடங்கள் உண்டு. இப்படிப்பிற்கான கல்வித்தகுதியில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

பட்டப் படிப்புகள்

நான்கு ஆண்டுகளைக்கொண்ட (6 செமஸ்டர் + ஒரு வருட இண்டர்ன்ஷிப்) Bachelor of Audiology and Speech and Language Pathology (BASLP) என்ற
பட்டப்படிப்பிற்கு +2-ல் தேர்ச்சி பெற்றவர்கள், பொதுப்பிரிவினர் குறைந்தது 50%, எஸ்.சி./எஸ்.டி. பிரிவினர் 45% மதிப்பெண் பெற்றிருப்பின் விண்ணப்பிக்கலாம். இப்படிப்பிற்கு மைசூரில் உள்ள கல்வி மையத்தில் 62 இடங்களும், ஜபல்பூர் மையத்தில் 10 இடங்களும் உள்ளன.

இப்படிப்பிற்கு மாணவர்கள், +1, +2 சி.பி.எஸ்.இ. அடிப்படையில் இயற்பியல், வேதியியல் இரண்டு கட்டாயப் பாடங்களிலும், உயிரியல் அல்லது கணிதம் ஏதேனும் ஒன்றிலும் நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டு தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வில் 50 வினாக்கள், 50 மணித்துளிகளில் எழுத வேண்டும்.
இத்தேர்வில் தேர்வு பெறுபவர்கள், மைசூர் பல்கலைக்கழகத்தில் AIISIA மற்றும் ஜபல்பூர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மருத்துவக் கல்லூரியில் சேரலாம்.

இரண்டு வருடங்களைக்கொண்ட Bachelor of Education - Special Education (Hearing Impairment)B.Ed, SPL Ed (HI) என்ற பட்டப்படிப்பிற்கு, மைசூர் பல்கலைக்கழகத்திலோ அல்லது ஏதேனும் ஒரு பல்கலைக்கழகத்திலோ, பட்டப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். பொதுப்பிரிவினர் குறைந்தது 50%, எஸ்.சி./எஸ்.டி. பிரிவினர் 45% எடுத்திருக்க வேண்டும். இப்படிப்பிற்கு விண்ணப்பிக்க 30 வயத்திற்குள் இருக்க வேண்டும். இப்படிப்பிற்கான கல்வித்தகுதி படிப்பில் எடுத்த மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இப்படிப்பிற்கு மாதம் ரூ. 400 ஊக்கத்தொகை வழங்கப்படும்.

நுழைவுத்தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடைபெறும் படிப்புகள்

1. M.Sc. Audiology
2. M.Sc. Speech Language Pathology
3. M.Ed., Spl Ed - Hearing Impairment
4. Ph.D. Audiology
5. Ph.D. Speech language Pathology
6. Ph.D. Speech Hearing ஆகிய படிப்புக் களுக்கு நுழைவுத்தேர்வு மூலம் மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள். மேலும் B.Ed Spl Ed (Hearing Impairment), Clinical linguistic, Forensic Science & Technology, Augmented and Alternate Communication, Neuro Audiology ஆகிய படிப்புகளுக்கும், Post Doctor Fellowship படிக்கவும் நுழைவுத்தேர்வின்றி நேரடியாக மதிப்பெண் அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கப்படுகிறார்கள்.

விண்ணப்பக் கட்டணம் மற்றும் விண்ணப்பிக்கும் முறை

*BASLP/படிப்பிற்குப் பொதுப்பிரிவினருக்கு ரூ.500, எஸ்.சி/எஸ்.டி/மாற்றுத்திறனாளி ரூ.325
*எம்.எஸ்சி., படிப்புகளுக்குப் பொதுப்பிரிவினருக்கு ரூ.500, எஸ்.சி/எஸ்.டி/மாற்றுத்திறனாளி ரூ.325
*பிஎச்.டி. படிப்பிற்குப் பொதுப்பிரிவினருக்கு ரூ.625, எஸ்.சி/எஸ்.டி/மாற்றுத்திறனாளி ரூ.425
*BEd Spl Ed படிப்பிற்குப் பொதுப்பிரிவினருக்கு ரூ.500, எஸ்.சி/எஸ்.டி/மாற்றுத்திறனாளி ரூ.325
*பட்டயப்படிப்புகளுக்கு பொதுப்பிரிவினருக்கு ரூ.250, எஸ்.சி/எஸ்.டி/மாற்றுத்திறனாளி ரூ.50
*முதுநிலைப் பட்டயப்படிப்பிற்கு பொதுப்பிரிவினருக்கு ரூ.500, எஸ்.சி/எஸ்.டி/மாற்றுத்திறனாளி ரூ.325
*போஸ்ட் டாக்டர் ஃபெல்லோஷிப் பொதுப்பிரிவினருக்கு ரூ.625, எஸ்.சி/எஸ்.டி/மாற்றுத்திறனாளி ரூ.425
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.aiishmysore.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் கிரெடிட்/டெபிட் கார்டுகள் மூலம் விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தி விண்ணப்பிக்கலாம்.

பொதுவாக ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தில் நுழைவுத்தேர்வுக்கான விண்ணப்பம் சமர்ப்பிக்க அறிவிப்பு வெளியிடப்படும். இப்போது உள்ள கொரோனா வைரஸ் பிரச்னையால் விரைவில் தேதி அறிவிக்கப்படும் என இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் முழு விவரங்கள் அறிய www.aiishmysore.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.