அன்று: கைத்தறி குடோன் பணியாளர் இன்று: சக்ஸஸ் கல்வி நிறுவனங்களின் உரிமையாளர்



வெற்றிக்கதை

யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் எனும் நல்வாக்கை, பொருளாதார வசதியற்ற நூற்றுக்கணக்கான சிறுவர்களுக்கு கல்வி கற்பித்து வெற்றி சாதனையாளர்களாக்கியுள்ளார் கோயமுத்தூரை சேர்ந்த சுரேஷ் தர்ஷன். சுயம்புவாக உருவாகி கல்வியில் கரை காண அவர் பட்ட கஷ்டங்களே அவரை இந்த முயற்சியில் சாதனையாளராக்கியுள்ளது என்றால் மிகையாகாது. சாதனை சிகரத்தில் சாதுர்ய பயணம் மேற்கொண்டு வரும் சுரேஷ் தர்ஷன் தன்னுடைய வெற்றிக்கதையை இங்கே நம்மோடு பகிர்ந்துகொள்கிறார்…

‘‘கோயமுத்தூரின் ஒரு பகுதியில் அடர்ந்த காடு சார்ந்த மலை அடிவாரத்தில் பசுமை போர்வையாக விரிந்துகிடக்கும் சின்ன தடாகம் என்னும் கிராமத்தில் பிறந்தேன். வறுமையிலும் தொடக்க கல்வி தொடங்கி இன்று என் பெயருக்கு பின்னால் முடிவில்லாமல் நீளும் பட்டங்களை பெறுவதற்காக கல்வி கடலில் நான் நீந்தி கரை சேர்ந்தது தனிக்கதை. அப்போது தான் தீர்மானித்தேன்.

கல்வி தந்தைகள் வியாபார விருட்சமாக கருதும் கல்வி, ஏழை மக்களுக்கு எட்டாக்கனி எனும் நிலையை மாற்றுவதற்காகவே இவன் பிறந்தான் என கோயமுத்தூர் என்னை திரும்பிப்பார்க்க வைப்பது என சபதம் எடுத்துக்கொண்டு, அந்த மைல்கல்லை இதோ இன்று எட்டியுள்ளேன்.
இது எனது சபதத்தின் முடிவல்ல… தொடக்கம். அரைத்த மாவையே அரைக்கும் கல்வி முறைக்கு மாற்றுத் தீர்வாக சக்ஸஸ் அறக்கட்டளையைத் தொடங்கி சாதனை படிக்கட்டுகளில் எனது சபதத்தின் பயணம் வேகமெடுத்துள்ளது’’ என்று உத்வேகத்தோடு தன் இளம்பருவத்தை நினைவுகூர்ந்தார்.

‘‘குடும்ப வருமானத்தையும் பொருட்படுத்தாமல், மற்ற பிள்ளைகளை போலவே தன் மகனும் ஆங்கில கல்வி பயில வேண்டும் என்று எண்ணி சிறிய அளவிலான கான்வென்ட்டில் பெற்றோர் என்னை சேர்த்தனர். என்ன.. அங்கு 2ம் வகுப்புக்கு மேல் படிக்கவைக்க  வசதி இல்லை. இதே நிலைமையில்தான் 12வது வரை படித்தேன்.

அதற்குள் நான் மாறிய பள்ளிகளின் எண்ணிக்கை ஏழு. புரிதல் என்றால் என்ன என ஆசிரியர்களால் கற்பிக்கப்பட வேண்டும். அதுவும் ஒரே பள்ளியில் பள்ளி இறுதி வரை படித்திருந்தால், அந்த புரிதல் மிகவும் சிறப்பாகவும், மாணவனை சிந்தனையாளனாகவும் செதுக்கும். எனக்கு அப்படி வாய்க்கவில்லை. இருந்தும் படிக்கவேண்டும் என விடாப்பிடியாக படித்தேன். சராசரி மதிப்பெண்களுடன் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றேன்.

குடும்ப சூழலால் கோவையின் சோமனூர் பகுதியில் சொந்தக்காரரின் கைதறி குடோனில் தறி ஓட்டினேன். சில மாதங்களில் மனம் வெறுத்து, வேலையை உதறி, 11ம் வகுப்பு சேர்ந்தேன். 12ம் வகுப்பிலும் சராசரி மதிப்பெண் தான் பெற முடிந்தது. படிச்சது போதும் என்றது என் சூழ்நிலை.. சரி என தனியார் பேருந்தில் நடத்துநராக சேர பயிற்சி பெற்றுக்கொண்டிருந்தேன். அதுவும் சில காலம் தான். ‘சரியில்ல சுரேஷு, படிக்கோணும், அப்பத்தான் நாலு பேரு மதிப்பான்’ அப்படீன்னு உள்மனசு சொல்ல ஆரபித்தது. என்ன ஆனாலும் சரின்னு வேலைய திரும்பவும் விட்டுட்டு ஒரு வழியா பி.காம்., படித்து முடித்தேன்.

இதுக்கு மேல தாக்குப்பிடிக்க முடியாது… வேலைக்கு போயே ஆகணும்கற நிலைமை. எனவே, வேக்குவம் கிளீனர் விக்கிற சேல்ஸ் ரெப்பா செலக்ட் ஆனேன். மாதம் ரூ.6,500 சம்பளம். பொருளாதார பிசாசுகிட்ட இருந்து குடும்பம் ஓரளவு மீள ஆரம்பிச்சது. எனவே, வங்கியில் தைரியமாக கல்விக்கடன் வாங்கி முதுநிலை பட்டம் முடித்தேன். அதுக்கு அப்புறம் எல்லாமே ஜெயம் தான். எம்.பி.ஏ.,, எம்.எஸ்.டபிள்யு (மனோதத்துவம்)., பிஜிடிஐபி, பிஜிடிஇடி., பிஜிடிஇசிசிஇ இப்படி கணக்கற்ற பட்டங்கள் என பேருக்கு பின் பட்டத்தின் வாலாக நீண்டது. அப்போது எனக்கு கிடைத்த அளவில்லாத ஆனந்தம் சொல்லி மாளாது. பிறகு சில மாதங்கள் காப்பீட்டு நிறுவனத்தில் வேலை, அதன் பின் பாரதியார் பல்கலையில் தற்காலிக விரிவுரையாளராகவும் இருந்தேன்’’ என்று மகிழ்ச்சி பொங்க கூறியவர் பள்ளி தொடங்கிய விதத்தை விவரித்தார்.

‘‘பாரதியார் பல்கலையில் விரிவுரையாளராக இருந்தபோது தெரிந்த ஒருவர் மூலம் சிங்கப்பூரில் நல்ல சம்பளத்துடன் வேலை கிடைத்தது. சுமார் ஒன்றரை வருடம் நன்றாகத்தான் சென்றது. அப்போதுதான் உள்மனது சைத்தான் மீண்டும் என்னை தூண்டியது. கஷ்டப்பட்டு படித்த நீ, உன்னைப் போல கஷ்டப்படும் பிள்ளைகளை கரை தேர்த்தக் கூடாதா? என உள்ளுக்குள் குரல் எழுப்பியது.

முன் அனுபவமுள்ள நண்பர் ஒருவரின் பங்களிப்புடன் சின்ன தடாகத்தில் பிரைமரி பள்ளி ஒன்றை தொடங்கினேன். இப்படித்தான் எனது சபதத்துக்கான நுழைவு வாயில் திறக்கப்பட்டது. அதன் பின்னர் சக்ஸஸ் ப்ளே ஸ்கூல் ஆரம்பிக்க, அதில் மழலையருக்கு மன மகிழ்ச்சி ஏற்படுத்தும் வித்தியாசமான கல்வியாமே என பலரும் பிள்ளைகளை சேர்த்தனர். அதையடுத்து பொன்னான மாலை நேரங்கள் வீண் போகக்கூடாது எனக் கருதி, சக்ஸஸ்  டியூஷன் சென்டர் ஆரம்பித்தேன். அதைத் தொடர்ந்து ஞாயிறுகளில் சக்ஸஸ் டுடோரியல் சென்டர் என விரிவாக்கம். அதோடு நிற்கவில்லை. டுடோரியல் சென்டர் கோவை ஜி.என். மில்ஸ், பொள்ளாச்சி மகாலிங்கபுரத்தில், திருப்பூர் குமார் நகர் என பரந்து விரிந்தது.

சக்ஸஸ் நிறுவனங்கள் தொடங்கிய முதலாண்டில் 200-க்கும் மேற்பட்ட குழந்தைகள், 70-க்கும் அதிகமானோர் மழலையர் பள்ளியிலும், 600-க்கும் அதிகமான மாணவர்கள் சக்ஸஸ் டுடோரியல் சென்டருக்கும் வந்து பயின்றனர். இன்று எண்ணிக்கை பல ஆயிரங்களைக் கடந்துள்ளது. காரணம், எங்களது கல்வி முறை. அனைத்து பள்ளிகளிலும் என்ன சொல்லி கொடுக்கிறார்களோ அதே சரக்கை மாறுபட்ட கோணத்தில், மாணவர்கள் எளிதில் புரிந்துகொண்டு சோர்வடையாமல் பயிலும் தனித்திறனுடன் நடத்திவருகிறேன்.

இந்த நேரத்தில், சக்ஸஸ் அறக்கட்டளை பிறந்தது. அந்த தொண்டு நிறுவனம் மூலமாக அரசுப் பள்ளிகளில் படிக்கும் ஏழை மாணவர்களுக்கு நோட்டு, புத்தகங்கள் விநியோகம், அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் கல்லூரி என்.எஸ்.எஸ். மாணவர் துணையுடன் தூய்மை செய்தல் என தொண்டாற்றி வருகிறேன்.

முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்களின் நினைவு நாளில் மரக்கன்றுகளை பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பரசளித்து அதனை நட்டு வளர்த்திட ஊக்கமும் அளித்து வருகிறேன்.உள்ளூரில் உதவும் சில நல்ல உள்ளங்களின் துணையோடு இதுவரை இப்படி 7,500 மரக்கன்றுகளை விநியோகம் செய்துள்ளோம் பெரும் மன மகிழ்வோடு. இவை அனைத்தும் சாத்தியமானது எப்படி என்றால் கல்வியை நான் மிகவும் காதலித்ததாலும் காதலிப்பதாலும்தான். மேலும், மன அழுத்தம், சோர்வின்றி 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்கள் படிப்பதற்காக கலை பிரிவினருக்கு மட்டும் காந்திபுரத்தில் Achievers Education Academy என்ற கல்விநிறுவனத்தை நிறுவியுள்ளேன்.

இங்கு பயிலும் மாணவர்களுக்கு புத்தகத்தில் இருப்பதை மட்டும் கற்பிக்காமல், நல்லதொரு சமூக உணர்வுடனும், சமுதாயத்தில் எப்படி வாழ்ந்திட வேண்டுமென்ற புரிதலையும் கற்றுத் தந்திடுவதே எந்தன் கனவும் கடமையும் கூட. இன்றைய மாணவச் செல்வங்
களுக்கு கல்வியெனும் விதையை ஓயாமல் விதைத்துக்கொண்டே இருப்பேன். விருட்சமாக வளர்ந்து... நாளைய நம் சமுதாயத்திற்கு நல்லதொரு நிழல் தருவார்கள் எனும் நம்பிக்கையுடன்’’ என்கிறார் சுரேஷ் தர்ஷன் தன்னம்பிக்கை தளராமல்.

கல்வி தந்தைகள் வியாபார விருட்சமாக கருதும் கல்வி, ஏழை மக்களுக்கு எட்டாக்கனி எனும் நிலையை மாற்று
வதற்காகவே இவன் பிறந்தான் என கோயமுத்தூர் என்னை திரும்பிப்பார்க்க வைப்பது என சபதம் எடுத்துக்கொண்டு, அந்த மைல்கல்லை இதோ இன்று எட்டியுள்ளேன்.

*எங்கள் பள்ளியில் சேரும் தினத்தில் ஒவ்வொரு மாணவருக்கும் ஒரு மரக்கன்று பரிசளிக்கிறோம். அந்த மரக்கன்றை பிள்ளைகள் நன்றாக பராமரித்து வந்தால், ஆண்டு இறுதியில் அவர்களது கல்விக் கட்டணம் முழுவதையும் பெற்றோரிடம் திரும்ப செலுத்தி மகிழ்கிறோம்.

*எங்களது கல்வி நிறுவனங்களில் சேரும் பிள்ளைகளின் வீட்டில் மழைநீர் சேகரிப்புத் தொட்டி அமைத்திருந்தால், கல்விக் கட்டணம் 50 சதவீதம் மட்டுமே வசூலிக்கிறோம்.

*ஆயிரத்து ஐநூறுக்கும் மேற்பட்ட டுடோரியல் மாணவர்கள், ப்ளே ஸ்கூல் குழந்தைகள் மற்றும் அவர்களின் பெற்றோர் படைசூழ பிளாஸ்டிக் விழிப்புணர்வு பேரணி நடத்தினோம்.

*கொரோனாவை எதிர்க்கும் போராட்டத்தில் தங்களை தீவிரமாக அர்ப்பணித்துக்கொண்டுள்ள நம் துப்புரவு பணியாளர்களுக்கு தேவையான மளிகை பொருட்களை சக்ஸஸ் பள்ளியில் பயிலும் + பயின்ற பெற்றோர்களின் உதவியுடன் வழங்கி வருகிறோம்.

- தோ.திருத்துவராஜ்