அறிவியல் உலகம்
பொது அறிவு
செவ்வாய்க் கோளுக்குச் செல்லவிருக்கும் அரபு நாட்டு விண்கலம்!
முதல்முறையாக அரபு விண்கலம் ஒன்று செவ்வாய்க் கோளுக்குப் பயணம் மேற்கொள்ளத் தயாராகிவருகிறது. இன்னும் சில வாரங்களில் இந்த விண்கலம் விண்ணில் ஏவப்படவுள்ளது. மேலும் ஜப்பானிய ராக்கெட் மூலம் செலுத்தப்படவுள்ள இந்த விண்கலம் மூன்று விதமான உணர்வி களைக் கொண்டுள்ளது.
இந்தக் கோளின் தூசு மற்றும் ஓசோனை அளவிடுவதற்கான உயர்-தெளிவு மல்டிபேண்ட் கேமராவும் இதில் அடங்கும். இரண்டாவதாக வளிமண்டலத்தின் கீழ்ப் பகுதியை ஆராய்வதற்கான இன்ஃபிராரெட் ஸ்பெக்ட்ரோமீட்டர் என்னும் கருவியும் இதில் பொருத்தப்பட்டுள்ளது. இதில் இருக்கும் மூன்றாவது உணர்வி ஆக்ஸிஜன் மற்றும் ஹைட்ரஜனைஅளவிடுவதற்கான அல்ட்ராவைலெட் ஸ்பெக்ட்ரோமீட்டர் ஆகும்.
செவ்வாயில் மேற்கொள்ளப்பட்ட பல ஆய்வுகள் மண்ணியல் தரவுகளை அளித்துள்ளன. ஆனால் இந்த அரபு விண்கலம் செவ்வாயின் காலநிலை குறித்த தரவுகளை மிகவும் துல்லியமாக அளிக்கும் என லண்டனைச் சேர்ந்த அறிவியல் அருங்காட்சியகக் குழுவின் இயக்குநர் லேன் பிளாட்ச்போர்ட் குறிப்பிட்டுள்ளார்.
செவ்வாய்க் கிரகத்தைச் சென்றடைய 493 மில்லியன் கிலோமீட்டர் பயணம் மேற்கொள்ள வேண்டும். எனவே ஏழு மாதங்கள் பயணித்த பிறகே செவ்வாய்க் கோளைச் சுற்றிவருவதற்காக திட்டமிடப்பட்ட வட்டப் பாதையை இந்த விண்கலம் சென்றடையும். செவ்வாய்க் கோளுக்குச் சென்றடைந்தவுடன் காலநிலை மாற்றம் மற்றும் செவ்வாயின் சுற்றுச்சூழல் குறித்த தரவுகளை இந்த விண்கலம் அனுப்பத் தொடங்கிவிடும்.
பிறகு 687 நாட்களுக்கு செவ்வாய் குறித்த தரவுகளை இது புவிக்கு அனுப்பிக்கொண்டேயிருக்கும். செவ்வாய்க் கோளை ஒரு முறை சுற்றிவர 55 மணிநேரம் ஆகும். ‘நாமேட் அமல்’ என இந்த அரபு விண்கலத்திற்குப் பெயர் வைக்கப்பட்டுள்ளது. ‘நாமேட் அமல்’ என்பதன் பொருள் நம்பிக்கை. ஜப்பானிய தீவு ஒன்றிலிருந்து இந்த விண்கலம் விண்ணில் செலுத்தப்படவுள்ளது.
கொலரோடோவில் உதிரி பாகங்களை ஒன்றிணைத்து இந்த விண்கலம் தயாரிக்கப்பட்டது. பிறகு அது ஜப்பானுக்கு அனுப்பப்பட்டது. ஆனால், கொரோனா வைரஸ் அச்சத்தில் பாதுகாப்பு கருதி பொறியியலாளர்கள் தங்களைத் தனிமைப்படுத்திக்கொண்டனர். இந்நிலையில் செவ்வாய்க் கோளுக்கு விண்கலம் ஏவப்படும் நாள் தாமதிக்கப்படுமோ என்ற அச்சம் நிலவுகிறது.
முதன் முதலில் ஆங்கிலக் கால்வாயை நீந்திக் கடந்தவர்!
அட்லாண்டிக் கடலில் பிரிட்டனின் தெற்கு பகுதியையும், பிரான்சின் வடக்குப் பகுதியையும் பிரிப்பதுதான் ஆங்கிலக்கால்வாய். இதன் அதிகபட்ச நீளம் 560 கி.மீ. அதிகபட்ச அகலம் 240 கி.மீ. அதிகபட்ச ஆழம் 571 அடி. உலகில் பல்வேறு நாடுகளின் வீரர்கள் இதனை நீந்திக் கடந்துள்ளனர். இக்கால்வாயை நீந்திக்கடந்த முதல் இந்தியர் மிஹிர் சென். மேற்கு வங்கத்தை சேர்ந்த இவர் 1958ம் ஆண்டு 14 மணி மற்றும் 45 நிமிட நேரத்தில் நீந்திக் கடந்தார். 1966ம் ஆண்டு ஐந்து கண்டங்களிலுள்ள வெவ்வேறு கால்வாய்களை நீந்திக் கடந்து சாதனை படைத்தார்.
ஆங்கிலக் கால்வாயை முதன் முதலில் நீந்திக் கடந்தவர் கேப்டன் மேத்யூ வெப் என்பவர்தான். 1848ம் ஆண்டு ஜனவரி 19-ம் தேதி பிறந்த மேத்யூ வெப், 1873ல் ‘எமரால்டு’என்ற நீராவிக் கப்பலின் கேப்டனாகப் பணியாற்றினார். அப்போது ஆங்கிலக் கால்வாயைக் கடக்கும் ஜே.பி.ஜான்சனின் முயற்சி தோல்வியடைந்தது பற்றி படித்தார். அதன்பின்னர் தானும் அந்த முயற்சியில் இறங்க வேண்டும் என்று தீவிர பயிற்சிசெய்தார்.
1875-ம் ஆண்டு ஆகஸ்ட் 12-ம் தேதி, அவர் கால்வாயை நீந்தி கடக்க முயன்றார். ஆனால், கடுமையாக காற்று வீசியதாலும், அலைகள் கடும் சீற்றத்துடன் இருந்ததாலும் அவர் தனது முயற்சியை கைவிட்டார். பின்னர் இவ்வளவு பெரிய கால்வாயை எந்த செயற்கை கருவிகளின் உதவியும் இன்றி, கேப்டன் மேத்யூ வெப் நீந்திக் கடக்கும் முயற்சியில் இறங்கி 24-ம் தேதி தனது இலக்கை எட்டினார். டோவரில் இருந்து கலாயிஸ் வரையிலான சுமார் 64 மைல் தூரத்தை 21 மணி 45 நிமிடங்களில் கடந்தார். மறுநாள் அதாவது ஆகஸ்ட் 25-ம் தேதி தனது வெற்றிப் பயணத்தை முடித்த அவர், ஆங்கில கால்வாயை கடந்த முதல் மனிதர் என்ற சாதனையைப் பதிவு செய்தார்.
விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பிய ஸ்பேஸ் எக்ஸ்!
உலகின் முன்னணி தனியார் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ், நாசாவுடன் இணைந்து சமீபத்தில் இரண்டு விண்வெளி வீரர்களை விண்வெளிக்கு அனுப்பியது. இரண்டு விண்வெளி வீரர்களும் பாதுகாப்பாக சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை அடைந்தனர்.
ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஃபால்கன் 9 ராக்கெட் மூலம் நாசாவை சேர்ந்த பாப் பென்கன் மற்றும் டக் ஹர்லி ஆகிய இருவரும் இந்தப் பயணத்தை மேற்கொண்டனர். அமெரிக்காவில் ஃப்ளோரிடாவில் இருக்கும் கென்னடி ஸ்பேஸ் செண்டர் காம்ப்ளக்ஸ் 39 ஏ-ல் இருந்து இந்த ராக்கெட் ஏவப்பட்டது. திட்டமிட்டபடி வெற்றிகரமாக அமைந்த இப்பயணத்தின் மூலம், முதன்முதலில் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பிய தனியார் நிறுவனம் என்ற சாதனையைப் படைத்துள்ளது ஸ்பேஸ் எக்ஸ்.
பூமியிலிருந்து கிளம்பிய இந்த ராக்கெட், சுமார் 19 மணிநேர பயணத்திற்குப் பின் வெற்றிகரமாக சர்வதேச விண்வெளி ஆய்வுமையத்தைச் சென்றடைந்தது. ஆய்வு மையத்தை அடைந்த இரண்டு வீரர்களையும், கிறிஸ் காசிடி, அனடோலி இவானிஷின் மற்றும் இவான் வாக்னர் ஆகிய விண்வெளிவீரர்கள் வரவேற்றனர். வெற்றிகரமாக அமைந்த இந்த முதல் பயணத்தை அடுத்து தொடர்ந்து மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் பணிகளைத் தீவிரப்படுத்த திட்டமிட்டுள்ளது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம்.
|