சங்கடங்களைக் கடந்து சேவை செய்யும் புதுயுக ஜான்சி ராணி!
சேவை
இன்றும் ஒருசிலர் பெண் குழந்தைகளுக்கு ஆசையாக ஜான்சிராணி என்று பெயர் வைப்பார்கள். ஏனென்றால் வீரத்தோடு போராடிட வேண்டும் என்ற ஆசையில்தான். அந்த பெயர் வைத்த காரணமோ என்னவோ தெரியவில்லை ஒவ்வொரு நாளைய வாழ்க்கை போராட்டத்தோடு மட்டுமில்லாமல் கொரோனா காலத்திலும் பல வெற்றிகரமான காரியங்களைச் செய்துவருகிறார் அரசுப் பள்ளி ஆய்வக உதவியாளர் ஜான்சி ராணி.
புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா ஊரடங்கு காலத்தில் சமூகத்தோடு களப்பணியாற்றிக்கொண்டிருக்கும் ஜான்சிராணி பற்றி நாம் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டும். வாழ்க்கைத்துணையை இழந்த நிலையில்... மருதந்தலை எனும் கிராமத்தின் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆய்வக உதவியாளராக பணியாற்றிக்கொண்டிருக்கும் ஜான்சிராணிக்கு மூன்று குழந்தைகள்... அவர்களில் மூத்த பெண் குழந்தைக்கு 30 வயது. மனநலம் இல்லாதவர்.
அதேபோல மூன்றாவது ஆண் குழந்தைக்கும் மனநலம் இல்லாமல் போன நிலையில் இரண்டாவது ஆண் குழந்தையை வைராக்கியத்தோடு நானோ டெக்னாலஜியில் முனைவர் பட்டம் வரை படிக்கவைத்துக் கொண்டிருக்கிறார். இது இவரது தனிப்பட்ட வாழ்க்கைப் போராட்டம். இதற்காக இவர் வீட்டிற்குள்ளேயே முடங்கியோ... கவலையிலோ மூழ்கிவிடவில்லை. மாறாக சங்கடங்களைக் கடந்து தனது குழந்தைகளை போலுள்ளவர்களைத் தேடித் தேடி பல்வேறு உதவிகளை செய்து சேவையாற்றுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்.
பார்வைத்திறனற்ற உடல் ஊனமுற்ற குழந்தைகளை சந்தித்து அவர்களுடன் உரையாடி வருவதும் எய்ட்ஸ் நோயினால் பாதிக்கப்படும் குழந்தைகள் தனிமைப்படுத்தப்படுவதை கண்டு அவர்களோடும் பழகி அவர்களை கல்வியின் பக்கம் உற்சாகப்படுத்திவருகிறார். இப்படி ஒவ்வொரு நாளும் தன்னை பல்வேறு சமூகம் சார்ந்த பணிகளில் பொருத்திக்கொண்டு உற்சாகமாக தனது வாழ்க்கையை நகர்த்திக்கொண்டிருக்கும்போது ஒரு புதுவிதமான சேவைப்பணி ஜான்சி ராணிக்கு காத்திருந்தது.
கடந்த பிப்ரவரி மாதத்தில் புதுக்கோட்டை பேருந்து நிலையம் அருகே ஒரு பார்வையற்ற கர்ப்பிணிப்பெண் சாவித்திரி (34) ஆதரவின்றி நின்றுகொண்டிருப்பதை அறிந்து தனது நண்பர்களின் துணையோடு அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார். தக்க ஆலோசனைகளோடும் உதவிகளையும் செய்து ஒரு தொண்டு நிறுவனத்தில் சேர்த்துவிட்டிருக்கிறார்.
பிப்ரவரி மாதம் கடந்த நிலையில் மார்ச் மாத இறுதியில் கொரோனா ஊரடங்கு தொடங்கியது. ஊரடங்கின்போது, காவல்துறை மக்களுக்கு வழிகாட்டும் பணிகளுக்கு அரசு ஊழியர்களும் தன்னார்வலர்களையும் அழைத்தது. அதன்படி ஒரு தன்னார்வலராக ஜான்சிராணி வங்கி களில் பொதுமக்களுக்கு கொரோனா விழிப்புணர்வு எச்சரிக்கையாளராகவும், காய்கறிச் சந்தையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு வழங்கியும் வந்ததோடு மட்டுமில்லாமல்...
ஒவ்வொரு நாளும் புதுக்கோட்டை நகரில் ஆதரவின்றி சாலைகளில் சுற்றித்திரிந்து கொண்டிருந்த மனநலம் சரியில்லாதவர்களுக்கு உணவுப்பொட்டலங்கள் வழங்கிடும் வேலைகளை தனது நண்பர்களோடு ஒருங்கிணைந்து ஓய்வின்றி சேவைப்பணிகளைத் தொடர்ந்து கொண்டிருக்கும்போதே இணையான இன்னுமொரு பணியினையும் மேற்கொண்டார்.
ஒருபுறம் ஊரடங்கு தொடங்கியிருந்த சூழலில் அரசு மருத்துவமனையில் சேர்த்திருந்த அந்த பார்வையற்ற பெண்ணிற்கு பிரசவ வலி ஏற்பட்டு குழந்தை பிறந்திருக்கிறது. பொதுமக்கள் அனைவரும் கொரோனா அச்சத்தில் வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடக்க, ஜான்சிராணியோ காவல்துறையின் உதவியினை பெற்று மருத்துவமனைக்குச் சென்று பார்வையற்ற பெண்ணிற்கும் அவரது குழந்தைக்கும் வேண்டிய உதவிகளை செய்துவந்துள்ளார்.
இப்படியாக குழந்தையினை இரண்டு மாதங்கள் முழுமையாக பாதுகாத்து பராமரித்து வந்துள்ளார். அதே சமயம் தனது நண்பர்களின் உதவியோடும் காவல்துறை உதவியோடும் பார்வையற்ற பெண்ணின் ஊர் திருப்பூர் மாவட்டம் இலுப்பநகரம் என்ற தகவலை உறுதி செய்துள்ளார். முறையான இ-பாஸ் அனுமதி பெற்று பார்வையற்ற பெண்ணின் உறவினர்களை தொடர்பு கொண்டு பார்வையற்ற பெண்ணையும் குழந்தையையும் அவரது கணவரோடு சேர்த்து வைத்துள்ளார்.
காணாமல் போன தங்கையைக் கண்ட மகிழ்ச்சியில் அண்ணன்களும், மனைவியை காணாமல் குழந்தையோடு கண்ட கணவனும் மகிழ்ச்சியினை தங்களது நன்றிகலந்த வார்த்தைகளால் வழங்கிக்கொண்டிருக்கிறார்கள்.இப்படி ஒரு ஜான்சி ராணி ஆதரவின்றி தவிக்கும் மக்களுக்காக புதுக்கோட்டையில் இன்னமும் கூட ஏதாவது ஒரு ஆதரவற்ற குடும்பத்துக்காக ஓடிக்கொண்டிருப்பதை பார்க்கலாம். அவருக்கு ஒரு ராயல் சல்யூட்.
- தோ.திருத்துவராஜ்.
|