மூளை யோசிக்கும் கண்கள் அலைபாயும்!உடல்மொழி-34

நடை உடை பாவனை


நடைமொழி

Women are women…how can they ignore their bodies, their looks, and above all, their dresses
- Girdhar Joshi

மனிதர்கள் எதையும் ஊடுருவலாய்ப் பார்த்து, கண்களைசிமிட்டிக்கொள்ளாததால்தான் கண்களுக்கு பல பிரச்னைகள் உண்டாகிறது. கண் சிமிட்டாமல் நீண்ட நேரம் இருக்கும்போது, கண்கள் அயர்ச்சி அடைந்து, நீரை வழியச்செய்கிறது. அது உடல் வெளிப்படுத்தும் மௌனமொழி. ஒரு நிமிடத்தில் ஏழு முதல் ஒன்பது முறை கண்களை இமைத்துக்கொள்பவர்கள்தான் ஆரோக்கியமானவர்களாக இருக்கிறார்கள்.

மன அழுத்தம் அதிகரித்த நிலையிலும், பேச்சில் பொய் கலக்கும்போதும், ஒரு மெல்லிய படபடப்பு உடலில் ஏற்படுவதால் கண் இமைகள் அதிகமாக சிமிட்டிக்கொள்ளப்படும். இந்தக் கண் சிமிட்டல்கள் பார்வையை மறைக்கும் முயற்சியாக உணர்வற்ற நிலையில் மூளையால் நிகழ்த்தப்படுகிறது. அப்படிப்பட்ட நிகழ்வில் பலவித பார்வைகள் வெளிப்படுகின்றன.

அதிகாரப் பார்வை

அதிகாரத்தில் இருப்பவர்களும், அதிகார தோரணையுள்ளவர்களும் பெரும்பாலும் தலையைப் பின்நோக்கி சாய்த்து கீழ்ப் பார்வை பார்ப்பார்கள். அது அவர்களின்முக்கியத்துவத்தை வெளிப்படுத்துவதற்காகவும், தங்கள் முக்கியத்துவம் உணரப்படவில்லை என்பதை சுட்டிக்காட்டுவதற்கும் அப்படி அதிகாரப் பார்வையை வீசுவார்கள். இது ஒரு தோரணையான பாவனை. மேல்நாட்டு கலாசாரம், குறிப்பாக பிரிட்டிஷ்காரர்களிடமிருந்து தோன்றி வந்தது. இது எந்தவிதமான சொல்லும் பேசாமல் எதிராளியை வெறும் பார்வையாலேயே தாழ்வு மனப்பான்மைக்கு இட்டுச்செல்லும் யுக்தி.

தங்களது மேலான நிலையை நிலைநாட்டிக் கொள்வதற்கும், அதிகாரத்தை பிரயோகிப்பதற்கும் இது அதிகார வர்கத்தால் போதிக்கப்பட்டு வரும் செயல். இப்படியான அதிகாரப் பார்வை பார்ப்பவர்கள் முன் எதிரிலிருப்பவர் சற்று அசைந்து நகர்ந்து உட்கார்ந்தால் போதும், அதிகாரப் பார்வை பார்ப்பவர் நிலைதடுமாறிவிடுவார். காரணம், அவர் Freeze ஆன பொசிஷனிலிருந்து பார்க்கிறார். அப்போது எதிரில் இருப்பவர் அசைந்தால் அவர் பார்வை நிலையை மாற்றிக்கொள்ள வேண்டும். எனவே,  தடுமாறிப்போய் தனது பார்வையை மாற்றிக்கொண்டே தீர வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்படுவார்.

அலைபாயும் பார்வை

மனிதர்களில் சிலர் எப்போதும் தலையை அசைக்காமல் பார்வையை மட்டும் இடது வலதுமாக அசைத்துப் பார்த்தபடி இருப்பார்கள். முன்பின் அறியாதவர்கள் அவர்களைப் பார்க்கும்போது, வந்தவர் எதையோ தேடுவது போலவும், பரிசோதிப்பது போலவும் (போலீஸ்காரர்கள் போல்) தோன்றும். சில நேரங்களில் அது உண்மையாக இருந்தாலும், ஒரு புது இடத்தை பார்வையிடும்போது ஒவ்வொரு மனிதர்களுக்கும் அவர்கள் மூளை அந்தப் பகுதியின் பூகோளத்தை உள்வாங்கி, அந்த இடத்திலிருந்து வெளியேறும் வழியைத்தான் முதலில் பார்க்கும்.

அதுதான் அலைபாயும் பார்வை. இது மரபு ரீதியாக குரங்குகளிடமிருந்து தொடர்ந்து வருவது. அதேபோல் சலிப்பாகப் பேசும் எதிராளியிடமிருந்து எப்படி தப்பிப்பது என்று மூளை யோசிக்கும்போதும் கண்கள் இங்குமங்கும் அலைபாயும். நான் உன் பேச்சைக் கவனிக்கவில்லை என்பதன் குறியீடுதான் அலைபாயும் கண்கள்.

மனிதர்களின் பார்வைகள் பதியும் இடங்களை வைத்து சமூகப் பார்வை, அந்தரங்கப் பார்வை, சக்திவாய்ந்த பார்வை என்று மூன்று வகைகளாகப் பிரித்திருக்கிறார்கள். பார்வைப் பிரயோகங்களை வைத்து, ஆளுமையையும், உறவுகளையும் பயனளிக்கக்கூடிய முறைகளில் மேம்படுத்திக்கொள்ள முடியும்.

சமூகப் பார்வை

ஒரு நபருடன் பேசும்போது மனிதர்கள் அவரை எங்கு பார்ப்பார்கள்? முகம். சரி, முகத்தில் எங்கே என்றால், கண்கள் என்பார்கள். ஆனால், சமூக சந்திப்புகளில் கண்களுக்கும் வாய்க்கும் இடைப்பட்ட பகுதிதான் (மூக்கு பகுதி) 90% பேர் பார்ப்பதாக ஆய்வுகள் சொல்கின்றன. அதேநேரம் அந்தப் பகுதியைப் பார்த்தாலும் கவனம் அங்கு இருப்பதில்லை. இப்படியான பார்வை ஒரு சமூக பார்வையாகவே ஏற்றுக்கொள்ளப்படுகிறது. எதிரிலிருப்பவரும் நம்மை அந்தப் பகுதியிலேயே பார்ப்பதால், ஒருவருக்கு ஒருவர் ‘இவர் ரொம்ப நல்லவர், அபாயமில்லாதவர், பயப்படத் தேவையில்லை' என்ற எண்ணம் எழுந்துவிடுகிறது. உறவு சுமூகமாகச் செல்கிறது.

அந்தரங்கப் பார்வை

இந்தப் பார்வையை மனிதர்கள் எல்லோரும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். இதை இரண்டு விதமாகப் பிரிக்கலாம். ஒன்று அந்தரங்மாகப் பார்ப்பது, மற்றொன்று அந்தரங்கத்தைப் பார்ப்பது. பத்தடி இடைவெளி தூரத்தில் இருக்கும் இருவர் ஒருவரைப் பார்க்கும்போது, தூரத்திலிருந்து வரும்போதே எதிராளியின் முகத்தைப் பார்த்த மறுவிநாடி பார்வையை சரித்து உடலின் கீழ்ப்பகுதியைப் பார்த்து அவர் எந்த பாலினத்தைச் சார்ந்தவர் என்பதை (உடையை மீறி) அறியும் ஆர்வத்துடனேயே பார்க்கிறார்கள்.

அதாவது, எதிராளியின் கழுத்திற்கும் மார்பிற்குமான இடைப்பட்ட பகுதியிலேயே கண்கள் நிற்கும். ஆண்களும், பெண்களும் தங்களுக்குள்ளான இயற்கையான ஆர்வ மிகுதியால் இப்படிப் பார்த்துக்கொள்கிறார்கள். இதைத்தான் அந்தரங்கப் பார்வை என்கிறார்கள். இந்த அந்தரங்கப் பார்வை சில விநாடிகள் மட்டுமே நீடித்திருக்கும்.

பெண்களின் பார்வை அலைவரிசை அகலமானதால் யாரும் கண்டறிய முடியாதபடி ஒரு ஆணை தலையிலிருந்து கால்வரை எளிதாக அளந்துவிட முடி
கிறது. ஆனால், ஆண்களின் பார்வை குறுகிய நிலையில் (point of focus) இருப்பதால் பெண்ணின் உடலைப் பார்ப்பதையும், கண்கள் அலைபாய்வதையும் பெண்கள் எளிதில் கண்டறிந்துவிடுகிறார்கள். இதன் காரணமாகத்தான் (நெருக்கமான சந்தர்ப்பங்களில் கூட) ஆண்கள் பார்வையை மேயவிட்டதற்காக குற்றம் சாட்டப்படுகிறார்கள். பெண்களை விட ஆண்களின் பார்வை மோசம் என்பதில்லை, ஆணின் பார்வை குறுகியதாக இருப்பதால் எளிதில் அகப்பட்டுக் கொள்கிறார்கள். இரண்டு ஆண்களுக்கு இடையிலான சந்திப்புகளில் அந்தரங்கப் பார்வையால் எந்தவிதமான தொல்லைகளும் வருவதே இல்லை.

சக்திவாய்ந்த பார்வை

எதிராளியுடன் பேசும்போது, அவருடைய கண்களுக்கு மேல், புருவமத்தியை ஊடுருவலாய்ப் பார்த்தால் போதும், எதிராளி எப்படிப் பேசுபவராக இருந்தாலும் சரி அமைதியாகிவிடுவார். இந்தப் பார்வைக்கு ஒரு சக்தி அலையை உண்டாக்கும் தன்மை இருப்பதாலேயே இதை சக்திவாய்ந்த பார்வை என்கிறார்கள்.

சக்திவாய்ந்த பார்வை சூழலையே மாற்றிவிடும். கண்ணுக்குத் தெரியாத ஒரு இறுக்கமும், அழுத்தமும் எழுவ தால் எதிராளி நிலை தடுமாறி பேச்சை நிறுத்தி, பார்வையை வேறு பக்கம் திருப்பிக்கொள்வார். பார்க்கப்படுவரின் பார்வை கண்களுக்குக்கீழ் இறங்காதவரை எதிராளிக்கு அழுத்தம் இருந்துகொண்டேயிருக்கும்.

-  தொடரும்

உடை வழி - முண்டும் நேரியதும்

முண்டு என்ற பெயரைக் கேட்டதுமே கேரள மாநிலம்தான் நினைவுக்கு வரும். முண்டும் நேரியதும் பெண்கள் அணியும் உடை. வெண்ணிறமான துணியில் அதன் ஓரங்களில் பொன் நிறத்தில் ஜரிகை இழையோடும் துணிதான் முண்டும் நேரியதும்.

வெண்ணிற சரிகைப் புடவை வேறு முண்டு வேறு. புடவை மொத்த உடலுக்குமாக அணிவது. முண்டு உடலின் கீழ்ப் பகுதியில் மட்டும் அணிந்துகொள்வது. நேரியதும் உடலின் மேல் பகுதியில் அணிவது. அணிவது என்று சொல்வதை விட, சுற்றிக்கொள்வது என்பதுதான் சரி.
முண்டும் நேரியதும் எப்போதும் இணைந்தே இருக்கும். இது கேரளத்தின் பாரம்பரிய உடை. கேரளப் பெண்களிடம் புடவை அறிமுகமாவதற்கு முன்பே முண்டும் நேரியதும் வந்திருந்தது.

முண்டும் நேரியதும் அணிவதில் ஒரு பாங்கு இருக்கிறது. உடலின் கீழ்ப் பகுதியில் முண்டு உடுத்திக்கொண்டு, நேரியதைத் தோள்களில் சுற்றி அதை கச்சைக்குள் டக்-இன் செய்து கொள்ளவேண்டும். இதுதான் பாரம்பரியமாக உடுத்தும் ஸ்டைல். ஆனால், நேரியதும் காலப்போக்கில் துப்பட்டா போல் அணிந்துகொள்ளும் வகையாக மாறியது.

முண்டும் நேரியதும் புத்த, ஜெயின இலக்கியங்களில் சுட்டிக்காட்டப்படும் ‘சட்டிகா‘ - ‘உத்திரியா‘வைப் போன்றே இருப்பதுதான் விசித்திரம். முண்டும் நேரியதும் கேரளத்திற்கு எப்போது எப்படி வந்தது என்பதற்குப் பல்வேறு கதைகள் உலவுகின்றன.

கேரளம் குறிப்பாக மலபார் கோஸ்ட், பல ஆண்டுகளாக மேற்கு ஆசியாவுடன் வர்த்தகத்தில் இருந்துவந்தது. இஸ்லாமுக்கு முன்பிருந்தே அரேபியாவுடன் மலபார் மக்கள் தொடர்பிலிருந்திருக்கிறார்கள். அதன் காரணமாக ரோமானிய உடைகளும், பாம்ரின்  உடைகளும், மேற்காசியாவின் அரேபிய உடைகளும் கேரளத்திற்கு வந்திருக்கக்கூடும் என்று சொல்கிறார்கள்.

முண்டும் நேரியதிலும் உள்ளது போல் தைக்கப்படாத துணியில் மெல்லிய ஜரிகை வகையை ‘பள்ளா‘ என மேற்கு ஆசியாவில் குறிப்பிடுவார்கள். இடைக்கால வரலாற்றில் இஸ்லாம் மதம் வரும் வரை, ‘பள்ளா' என்ற வார்த்தை இந்திய இலக்கியங்கள் எதிலும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதனால் முண்டும் நேரியதும் மேற்கு ஆசியாவிலிருந்து வந்த உடை வகையாக இருக்கலாம் என்றும் சொல்கிறார்கள். சிறிய மாகாணத்தின் உடையாக இருந்து முண்டும் நேரியதும் உலகம் முழுக்க பிரபலமானது ஒரு இனிய சுவாரஸ்யமான கதை.

- தொடரும்