வெற்றிக்கான ரகசியங்கள் உங்களிடமே உள்ளன!



தன்னம்பிக்கை

வாழ்க்கைக்குத் தேவையான அத்தனை வழிகாட்டலும் திருக்குறளில் உண்டு. அதனால்தான் திருக்குறளை உலகப் பொதுமறை என்றார்கள். ‘தீதும் நன்றும் பிறர் தரவாரா’ என்பது புறநானூற்றுப் புலவன் கணியன் பூங்குன்றனார் வாக்கு. அதாவது நன்மையும் தீமையும் பிறரால் ஏற்படுவதைவிட நம்மிடம் உள்ள எண்ணங்களின் பிரதிபலிப்பாகவே அமையும் என்பதுதான் அதன் பொருள். ஆகவே, பெரும்பாலான பிரச்னைகள் தங்களிடமிருந்துதான் தொடங்குகின்றன என்பதை இளைஞர்கள் புரிந்துகொள்ள வேண்டும். வரப்போகும் நன்மைகளும் தீமைகளும் அவர்கள் விதைத்த விதையிலிருந்து தொடங்குபவைதான்.

இளைஞர்கள் தங்களைத் தாங்களே சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும். வளர்த்துக்கொள்ள வேண்டிய நல்ல பழக்கங்களையும், விட்டொழிக்க வேண்டிய கெட்ட பழக்கங்களையும் எடைபோட வேண்டும். மாணவர்கள் என்கிற பருவத்திலிருந்து, அலுவலகத்தில் பணிபுரியப்போகும்  ஒரு முக்கிய அலுவலர் என்கிற புதிய பரிமாணத்தை நோக்கிச் செல்லும்போது ‘இத்தனை நாள் இருந்த தவத்திற்கு கிடைத்த வரம் ‘வேலை’ என்ற புரிதல் வேண்டும்.
இன்றைய இளைஞர்கள் படிப்பு முடித்தவுடன், ஒவ்வொருவரும் ஒவ்வொரு  திட்டம் வைத்திருக்கின்றனர்.

அதில் புதிதாக வேலைக்குச் சேருபவர்கள் பலர். மேற்கொண்டு புதிய படிப்பைத் தொடர இருப்போர் பலர். படித்துக்கொண்டே வேலைக்குச் செல்ல நினைப்போர் பலர். படிப்பைத் தொடர விரும்புபவரைவிட, பெரும்பாலான இளைஞர்கள் தாங்கள் கொண்ட இலக்கு மற்றும் குறிக்கோளின் காரணமாகவோ, குடும்பத்தின் சூழல் காரணமாகவோ வேலைக்குப் போகத் தீர்மானித்திருப்பார்கள்.

கல்லூரிப் படிப்பை முடித்தவுடன் ஒரு புதிய பாதையில் ஒரு புதிய பயணம் தொடங்கியிருப்பார்கள். பெரும்பாலானோருக்கு ‘கேம்பஸ் ப்ளேஸ்மென்ட்’ எனப்படும் வேலை முறையில் சில முன்னணி நிறுவனங்கள் கல்லூரிக்கே வந்து வேலை வாய்ப்பை வழங்கியிருப்பார்கள். சிலருக்கு சொந்த ஊரிலேயே வேலை கிடைத்திருக்கும். சிலருக்கு வெளி ஊர்களில் வெளி மாநிலங்களில் வெளிநாடுகளில் கூட வேலை கிடைத்திருக்கும். சிலருக்குப் படித்த படிப்புக்கு ஏற்ற மாதிரி வேலையும் கிடைத்திருக்கும்.

சம்பந்தமே இல்லாமல் படித்ததற்கும் வேலைக்கும் தொடர்பே இன்றி சிலருக்கு வேலை அமைந்திருக்கும். இப்படி ஒவ்வொரு இளைஞர்களின் வாழ்க்கையும் ஒவ்வொரு திசையில் பயணிக்க ஆரம்பிக்கும்போது நம்மை நாமே கட்டமைத்துக்கொள்ள வேண்டியது அவசியம்.

கல்லூரியிலிருந்து அலுவலகப் பணியில் நுழைகிற நல்ல நேரத்தில் நீங்கள் பல விஷயங்களுக்கு உங்களை மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும். அப்படி நீங்கள் நான்கு விஷயங்களில் உங்களை மாற்றம் செய்துகொண்டால் வாழ்க்கைப் பயணம் வளமாகும்.

1. இளைஞர்கள் தங்களுடைய பலம் என்ன? அதை எப்போது பயன்படுத்த வேண்டும்? அந்தப் பலத்தை யாரிடம் காட்ட வேண்டும்? அதற்கான நேரம் இதுதானா? என்பதைச் சரியாகத் தெரிந்துகொள்ள வேண்டும். பலம் என்பது நம்முடைய படிப்பு மற்றும் தனித்திறமைகள்தான்.

2. நம்முடைய பலவீனங்கள் எவை? அவை நம்முடைய பழக்கங்களா? அவை நம்முடைய செயல்பாடுகளா? என்பதை உணர வேண்டும். சில நேரங்
களில் நமது நல்ல எண்ணங்கள் கூட பலவீனமாக மாற வாய்ப்புண்டு.

3. நமக்காகக் காத்திருக்கும் பொன்னான வாய்ப்புகள் எவை? அவற்றை எப்படி நாம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். அந்த வாய்ப்பு படிப்பு அல்லது நாம் செய்யும் வேலை, தொழில், கலைத்துறை சம்பந்தமாக இருக்கலாம்.

4.நமக்கு கிடைக்கும் வாய்ப்புகளை அடைய நாம் கடக்க வேண்டிய தடைகள் எவை? அந்தத் தடைகளைக் கடப்பதற்கான வழிகளை திட்டமிட வேண்டும்.  

இந்த நான்கு விஷயங்களையும் புரிந்துகொண்டு செயல்பட்டால் வாழ்க்கைப் பயணத்தின் பாதை தெரிந்துவிடும்.

கலாசார மாற்றங்கள்

புது இடம், புது மனிதர்கள் என்ற பதற்றத்தைத் தவிருங்கள். வேலை செய்யும் இடத்தில் பலவித மாநிலத்திலிருந்தும், பல நாட்டிலிருந்தும் வேலை செய்
பவர்கள் இருக்கலாம். மொழியும், பழக்கவழக்கமும், கலாசாரமும் வேறாக இருக்கலாம். அனைத்தையும் கடந்து பிறரை மதிக்கக் கற்றுக்கொள்ளுங்கள்.
இனம், மதம், மொழி, சொந்த ஊரின் அடிப்படையில் அவர்கள் அப்படித்தான் இருப்பார்கள் என நீங்களே தீர்மானிக்காதீர்கள். உங்கள் வீட்டு விசேஷங்கள், உங்கள் ஊர் விழாக்கள், பண்டிகைகள் என அவர்களையும் அதில் கலந்துகொள்ளச் செய்யுங்கள்.

காலம் பொன் போன்றதுகல்லூரி விடுமுறை நாட்களிலும், தற்போதுள்ள கொரோனா விடுமுறை காலங்களிலும் நேரத்தை உங்கள் இஷ்டம்போல் செலவழித்திருப்பீர்கள். திடீரென்று அலுவலக நேரத்திற்கு ஏற்றாற் போல் உடனடியாக மாறவேண்டிய சூழல் ஏற்படலாம். அதிகாலை நேரப் பணிகளாகவோ, அல்லது இரவுநேரப் பணிகளாகவோ இயற்கைக்கு மாறான நேரங்களில் அமைகிற உங்கள் பணி முதலில் கடினமாக இருக்கும். பிறகு மாற்றிக்கொள்ளப்பழகுங்கள்.

படிக்கும் காலத்தில் நீண்ட நாள் விடுமுறைகளெல்லாம் விட்டிருப்பார்கள். அடிக்கடி எது எதற்கோ திடீர் திடீரென்று ஒரு நாள் விடுமுறை கூட கிடைத்திருக்கும். ஆனால், அலுவலகத்தில் எல்லா நாட்களும் வேலை செய்யும் நிலை வரலாம். அதற்கேற்ப உங்களை தயார்ப்படுத்திக்கொள்ள வேண்டும்.

படிக்கிற காலத்தில் நினைத்த நேரத்தில் எழுந்திருப்பீர்கள். நினைத்த நேரத்தில் தூங்குவீர்கள். ஒவ்வொரு வேலையையும் குறிப்பிட்ட நேரத்திற்கு முடித்திருக்கமாட்டீர்கள். உங்களுக்கு உதவி செய்வதற்கு நண்பர்கள் இருந்திருப்பார்கள். ஆனால், வேலை செய்கிற இடத்தில் காலத்தை நிர்வகிப்பது
முக்கியம். ஒரு வேலையை நாளைக்கு பார்த்துக்கொள்ளலாம் என்ற பேச்சுக்கே இங்கு இடமில்லை.

கல்லூரியில் மாணவர் என்ற நிலையில்தான் உங்கள் வாழ்க்கை இருந்திருக்கும். வேடிக்கை செய்வது, விளையாட்டாக பேசுவது, மரியாதை இல்லாமல் நடந்துகொள்வது, இந்த இடத்தில் இந்தத் தருணத்தில் இப்படித்தான் நடந்துகொள்வது என்பதே தெரியாமல் வளர்ந்திருப்பீர்கள்.

ஆனால், அலுவலக வாழ்க்கை தொடங்கிய முதல் நாளே நாம் வகிக்கும் பொறுப்புகளுக்கு ஏற்றாற்போல் உங்களுடைய நடை, உடை, பாவனை, பேச்சு அனைத்தும் மாறவேண்டிய கட்டாயம் இருக்கும். பெண்களிடம் எப்படி நடந்துகொள்வது, அனுபவமிக்கவர்களிடம் எப்படி நடந்துகொள்வது என மாற்றங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

செய்யும் வேலையை ரசித்து செய்யுங்கள்!

சிலருக்கு தாம் படித்த வேலைக்கு ஏற்றாற்போல் வேலை கிடைக்காமல் இருக்கலாம் அல்லது குடும்பச் சூழ்நிலை காரணமாகக் கூட நீங்கள் வேலையை ஏற்றிருக்கலாம். ஆனால், நம் வாழ்க்கை இதுதான். இங்கேதான் நம் பயணம் தொடங்குகிறது என்று தீர்மானித்தவுடன் அந்த வேலையைப் பிடித்த மாதிரி மாற்றிக்கொள்ளுங்கள். இந்த வேலையை இப்போதைக்கு செய்வோம். வேறு வேலை கிடைக்காமலா போய்விடும் என்ற நினைப்போடு நீங்கள் வேலை செய்கிற நிறுவனத்திற்கு துரோகம் செய்யாதீர்கள். கொஞ்ச நாட்களில் அதுவே பழகி பிடித்தாகிவிடும்.

சவாலே சமாளி!

செய்த வேலையையே செய்யாமல், புதிதான சவால்களை சந்திக்கக்கூடிய வேலைகளை தைரியமாக எடுத்துக்கொள்ளுங்கள். ஒருவேளை அந்த வேலையை முடிக்கக்கூடிய தகுதியோ, திறமையோ உங்களுக்கு இல்லையென்றால் தைரியமாகச் சொல்லுங்கள். மற்றவர்களின் துணையோடும், மற்றவர்களின் அறிவுரையோடும் செய்ய தொடங்குங்கள்.

ஆள்பாதி ஆடை பாதி

அவரவருக்குப் பொருத்தமான ஆடைகளைப் பொருத்தமான முறையில் அணிந்தால் கண்டிப்பாக  எல்லோரையும் கவரலாம். அதாவது, கந்தையான ஆடையாக இருந்தாலும் அதை துவைத்து, அயர்ன் செய்து அணிந்தால் அழகாகவே இருக்கும். நிறத்திற்கும், தோற்றத்திற்கும், உயரத்திற்கும் பருமனுக்கும் மற்றும் பருவத்திற்கும் தகுந்தபடி ஆடைகளை அணிந்தால் கண்டிப்பாக நாம் அழகாக மட்டுமல்ல கவனிக்கத்தக்கவர்களாகவும் தெரிவோம்.

உங்கள் நிறுவனத்தோடு வளருங்கள்

பெரும்பாலான இளைஞர்கள் ஒரு வேலையில் சேர்ந்தவுடன், தன்னை உயர்த்தவில்லை, உயரிய அந்தஸ்தும் கிடைக்கவில்லை என்று நினைப்பார்கள். தன்னுடன் படித்த மாணவர்களையோ, உறவினர்களையோ சந்திக்கும்போது, அவர்கள் தன்னை விட பெரிய பதவியிலோ, சம்பளமோ வாங்கிக்கொண்டிருந்தால் ஒருவித தாழ்வு மனப்பான்மை கொண்டு ஏங்குவார்கள். உடன் வேறு வேலை தேட ஆரம்பித்துவிடுகிறார்கள். ஒரு நிறுவனத்தை விட்டு மறு நிறுவனம் தாவுவார்கள். அங்கேயும் திருப்தி இல்லையென்றால் மீண்டும் ஒரு இடத்துக்கு மாறுவார்கள். கடைசியில் எதிலும் திருப்தியடையாமல் கஷ்டத்தில் தவிப்பார்கள்.

நாம் சேர்ந்த நிறுவனத்தில் சம்பளம் குறைவாக இருந்தாலும், வேலையில் திருப்தி இருந்தால், உயர்வதற்கான வாய்ப்பு இருந்தாலும், சிறிய நிறுவனமாக இருந்தால் அதன் கூடவே வளருங்கள். உயர்பதவி கிடைக்க மேலும் படிக்க வேண்டுமென்றால் படியுங்கள்.

தொழில் சார்ந்த தகவல்களை அறிய இணையதளத்தை நாடுங்கள். மேலும், புதிதான கண்டுபிடிப்புகளுக்கு முயற்சி செய்யுங்கள். அதற்கான அடையாளமும், அங்கீகாரமும் , பொருளாதார வளர்ச்சியும் கட்டாயம் கிடைக்கும் நம்புங்கள்.

மொத்தத்தில் வெற்றி பெறுவது எளிதானதுதான். நாம் என்ன செய்கிறோம் என்பதை அறிந்து செய்வதும், செய்வதை விரும்பிச் செய்வதும், அதை நம்பிக்கையோடு செய்வதும்தான் வெற்றிக்கான ரகசியங்கள்.

கிஷோர் ஸ்ரீநிவாசன் மனிதவள மேம்பாட்டு அலுவலர்