ஊரடங்கைப் பயனுள்ளதாக்குவோம்..! மாணவர்களுக்குச் சில ஆலோசனைகள்!ஆலோசனை

சர்வதேச அளவில் இன்றைய சமூகச்சூழலில் மனிதமூளை, கொரோனா என்ற நுண்கிருமியால் காயப்பட்–்டுக் கிடக்கிறது. உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில், நம் நாட்டில் நிலவும் விழிப்புணர்வும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும், மருத்துவக் கண்காணிப்பும் சிகிச்சையும், பெரும்பான்மையான பொதுமக்களின் ஒத்துழைப்பும் பாராட்டுதற்குரியன.

முடங்கிக் கிடக்கும் நிகழ்காலம் குறித்த மன உளைச்சலும், அச்சுறுத்தும் எதிர்காலம் குறித்த மிகுகவலையும் பொதுமக்களிடம் தெள்ளெனத் தெரிகிறது. எந்தவித வேறுபாடுகளுமின்றி எல்லாத் தரப்பினரையும் உடலளவில் மட்டுமல்ல, மனத்தளவிலும் பாதிப்பிற்குள்ளாக்கியிருக்கிறது கோவிட் 19 நோய்த்தொற்று. அதுவும் குறிப்பாகக் குழந்தைகளின் மனநிலை குறித்து நாம் கவனத்தில்கொள்ள வேண்டியவை ஏராளம் இருக்கின்றன.

இந்த நேரத்தில் சமூகப் பரவலைத் தடுக்க போடப்பட்டுள்ள ஊரடங்கு காலத்தைப் பயனுள்ளதாக எவ்வாறு கழிக்கலாம் என பல்வேறு வகையிலும் மாணவச் செல்வங்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள், பொதுமக்கள் என அனைவருக்கும் தைரியம் கொடுத்து பல்வேறு நற்செயல்களில் ஈடுபட்டு வரும் ஆசிரியை தென்றலிடம் பேசினோம்…

‘‘கட்டற்ற சுதந்திரத்துடன் பறந்து திரிந்த பறவைகள் இன்று கூண்டிலடைக்கப்பட்டுள்ளன. நண்பர்களுடன் ஓடியாடி விளையாட முடியவில்லை. எங்கும் வெளியில் செல்ல முடியவில்லை. அவர்கள் மனதிற்குள்ளும் சிக்கல்களும் போராட்டங்களும் இருக்கலாம். அவர்களின் உலகம் அலாதியானது. நாம் ஓரளவிற்கேனும் புரிந்துகொள்ள வேண்டும்.

இந்த நீண்ட விடுமுறை, குடும்பத்துடன் கழிக்கும் பொழுதுகள் ரம்மியமானவை என்று ரசிக்கக் கற்றுக்கொள்ள ஒரு வாய்ப்பாக அமைந்திருக்கிறது வீடடங்கிக் கிடக்கும் இந்தப் பொழுது. பரபரப்பாக ஓடி, ஒரு இயந்திரமாக வாழ்ந்தவர்களை மறுபடியும் மனிதர்களாக்கியிருக்கிறது.  மகிழ்ச்சியாகப் பேசி, மற்றவர்களையும் மகிழ்ச்சிப்படுத்தி, அன்பை வெளிப் படுத்தும் இனிய சூழல் வாய்த்திருக்கிறது. கணவன் மனைவி இருவரும் அமைதியாக அமர்ந்து மனம்விட்டுப் பேசவும். அவர்களுக்கிடையேயான மறக்க முடியாத மகிழ்ச்சித் தருணங் களை நினைவுபடுத்திக் கொள்ளவும்  பொன்னான நேரம் இது.

குழந்தைகளோடு பேசவும், அவர்கள் பேசுவதைக் காது கொடுத்துக் கேட்கவும், அவர்களோடு விளையாடவும் நேரத்தைச் செலவழிக்கவும் முடிகிறது. வீட்டிலுள்ள முதியவர்களிடம் கூடுதல் பரிவும் கவனமும் கொள்ளவும் அவர்கள் சொல்லும் கதைகளைக் கேட்டு ரசிக்கவும் முடிகிறது. நூல்கள் வாசிக்கும் பழக்கமுடையவர்கள் தானும் படித்து, படித்ததைக் குடும்பத்தினருடன் பகிர்ந்தும் மகிழலாம்.

இங்குக் குழந்தைகள் உலகம் பற்றிய நம் பார்வை மிகவும் முக்கியம்.
குட்டியின் ஒரு கவிதை:

 ‘‘அவளது வீட்டுப்பாட நோட்டை
நனைத்துவிட்டது மழை.
அழும் குழந்தையிடம்
மாவட்ட ஆட்சியரிடம் சொல்லி
விடுமுறை வாங்கித் தருவதாகவாக்களித்திருக்கிறது அது” என எழுதப்பட்டிருக்கும்’’ என்று கூறும் ஆசிரியை தென்றல் வீட்டில் இருக்கும் நேரத்தை மாணவர்கள் பயனுள்ளதாக்கிக்கொள்ள பெற்றோர்கள் வழிகாட்ட வேண்டும் என்கிறார்.

‘‘இப்போது மழையின் பரிந்துரையால் அல்ல, கொரோனாவின் ஊடுருவலால் குழந்தைகளுக்கு நீண்ட விடுமுறை அளிக்கப்பட்டிருக்கிறது.
வீட்டுப்பாடங்கள் இல்லை; டை, பெல்ட்டுடன் சீருடை அணிய வேண்டியதில்லை என்று மகிழ்ச்சியுடன் வீட்டிற்குள் வலம் வருகிறார்கள். சுவரில் கிறுக்கவும், தண்ணீரில் ஆடவும், மண்ணில் விளையாடவும் ஆசைப்படும் குழந்தைமையை அப்படியே விட்டுவிடுங்கள்.

முடிந்தால் பெற்றோர்களும் அவர்களோடு கண்ணாமூச்சி, புதையல் வேட்டை, தாயம், பல்லாங்குழி, சொட்டாங்கல், உடைந்த வளையல் துண்டுகளில் ஜூட்டிஸ், விடுகதைகள் போடுதல், விரலில் கிரிக்கெட் போன்ற விளையாட்டுகளில் இணைந்துகொள்ளுங்கள். எப்போதும் அதைத் தொடாதே, இதைச் செய்யாதே என்று மிரட்டிக்கொண்டிருத்தல் கூடாது. தாளைக் கிழிப்பதும், விளையாட்டுச் சாமான்களை உடைப்பதும், எதன் மீதாவது ஏறிக் குதிப்பதும், சத்தம் போடுவதும்  குழந்தையின் இயல்புகள். சமாளிக்கக் கற்றுக்கொள்ள வேண்டுமே தவிர, அடக்கி ஒடுக்கக்கூடாது. ஏனெனில் கவிஞர் அமுதபாரதி கூறியது போல், ‘இந்தக் காட்டில் எந்த மூங்கில் புல்லாங்குழல்?’ என்பது யாருக்கும் தெரியாது. இன்று பொம்மைக் காரை உடைக்கும் குழந்தை, நாளை பொறியாளர் ஆகலாம்.

அதேபோல  மாணவர்களும் விளையாட்டாகவே காலம் கடந்துவிடாமல் மடைமாற்றமாக, பல குரலில் பேசுதல், வீட்டு விலங்குகளை அன்புடன் பேணுதல், உள்ளூரின் பெருமைகளைக் கேட்டு தெரிந்துகொள்ளுதல், வட்டார மொழியாயினும் ஆங்கிலம் கலவாமல் தமிழ் பேசுதல், விலங்குகள், பறவைகள், தாவரங்கள் பேசுவது போல் நடித்தல், நல்ல பழக்கவழக்கங்களைப் பொறுமையாகக் கற்றுக் கொள்ளுதல், நகைச்சுவைத் துணுக்குகள் கூறுதல் என பயிற்சி செய்தால், நீங்கள் பன்முகத்திறன்கள் கொண்ட ஆளுமைகளாக வளர்ந்து மிளிர்வீர்கள்.

மேலும், செய்தித்தாள் வாசிப்பு, சிறுவர் இதழ்கள் மற்றும் கதைப்புத்தகம் படித்தல், தனது வேலைகளைத் தானே செய்தல் ஆகியவற்றையும் பழக்கப்படுத்திக்கொள்ள வேண்டும்.’’ என்கிறார்.மேலும் தொடர்ந்த ஆசிரியை, ‘‘பெற்றோர்களுக்கு மட்டுமல்ல ஆசிரியர்களுக்கும் இன்றைய இளைய தலைமுறையை வழிநடத்துவதில் பங்குண்டு என்பதால், பள்ளிக்கூடம் என்று திறக்கும்? என்று முடிவு செய்ய முடியாத நிலையில், ஆசிரியர்-மாணவர் சந்திப்பிற்கு வழியற்ற நிலையில், குழந்தைகளை நெறிப்படுத்துவதும், அவர்களுக்குக் கற்பிப்பதும் எப்படி? ஆசிரியர்கள் எந்தச் சூழலிலும் தயங்கியும் தேங்கியும் நின்றுவிடக்கூடாது.

ஏதாவது செய்தாக வேண்டும். குறிப்பாக அரசுப் பள்ளி ஆசிரியர்கள், பாரதமாதாவின் கழுத்தில் நாளைக்குச் சூட்டுவதற்கான ரோஜாப் பதியன்களை வளர்ப்பவர்கள், இன்று சிந்திக்க வேண்டும். எல்லாக் குழந்தைகளும் தனது கருப்பையிலிருந்து தோன்றியது போல், அவர்களின் எதிர்காலம் குறித்துத் திட்டமிட வேண்டும். அவரவர் பள்ளிச் சூழலுக்கு ஏற்றவாறு குழந்தைகளிடம் கற்றலைக் கொண்டு செல்லத் திட்டமிட வேண்டும்.

நான் இவ்வாறெல்லாம் சிந்தித்தேன். விளைவு, மார்ச்சு மாத இறுதியில், \”தேவதைகள் கூட்டம்\” என்னும் வாட்ஸப் குழுவினை உருவாக்கினேன். 32 பள்ளிகளைச் சேர்ந்த 69 குழந்தைகளை ஒருங்கிணைத்து, நாளும் ஒரு செயல்பாடு அளித்து வருகிறேன். எல்.கே.ஜி. முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் விருப்பத்துடன் பங்களித்துவருகிறார்கள்.

ஓவியம் வரைதல், விடுகதைகள், புதிர்க்கணக்குகள், ஆங்கிலத்தில் புதிய சொற்கள் அறிதல், கூட்டுச் சொற்களைக் கண்டுபிடித்துப் பொருத்துதல், அகரமுதலி வரிசைப்படி சொற்களை அமைத்தல், பருப்புகள், தீக்குச்சிகள், இலைகள், காய்கறிக் கழிவுகள் போன்றவற்றைக் கொண்டு உருவங்கள் செய்தல், கவிதை எழுதுதல், பாடல் புனைதல், பாட்டுப்போட்டி, பேச்சுப் போட்டி, கதை சொல்லுதல் ஆகிய போட்டிகளை நடத்திவருகிறேன். குழந்தைகள் தங்கள் படைப்புகளைப் புகைப்படம் எடுத்தும், ஒலிச்செய்தியாக அனுப்பியும் தங்களின் திறன்களை வெளிப்படுத்திவருகிறார்கள். மகிழ்ச்சியுடன் செயல்வழி கற்றல் இங்கு நிகழ்கிறது.

ஊரடங்கு முடிந்து, விழா நடத்த அரசு அனுமதி அளித்த பிறகு ஒரு நாள் தேவதைகள் கூட்ட விழா நடத்தி, கலந்துகொண்ட அனைத்துக்
குழந்தைகளுக்கும் பரிசுகள் வழங்குவதாக அறிவித்திருக்கிறேன். பெற்றோர்களும் மகிழ்ச்சியுடன் ஆதரவு தெரிவித்து, ஊக்குவித்து, குழந்தைகள் பங்கேற்க ஊக்கமளித்து வருகின்றனர்.

இன்று ஆசிரியர்கள் பலரும் தன்னார்வலர்களாகக் களமிறங்கி, கொரோனா நிவாரணப் பணிகளில் கைகோத்திருக்கிறார்கள். ஆசிரியர்கள் செக்குமாடுகளாகத் தேய்ந்த பாதையில் சுற்றிவந்த காலம் மலையேறிவிட்டது. தொடர்ந்து தம்மை மேம்படுத்திக் கொண்டும் முன்கூட்டியே திட்டமிட்ட தயாரிப்புகளோடும் மாணவர்களை அணுகுகிறார்கள். ஆன்லைன் வகுப்புகள் மூலம் கற்பிக்கிறார்கள்.

ஆனால், இன்னும் ஆறாம் வகுப்பில் சேர்க்கப்படாத, தொடக்கப்பள்ளிகளில் ஐந்தாம் வகுப்பை முடித்த குழந்தைகளுக்கு யார் கற்பிப்பது? என்னும் வினா எனக்குள் எழுந்தது. உடனே, ஜூன் மூன்றாம் தேதி, \”ஆறாம் வகுப்புப் பறவைகள்\” என்னும் வாட்ஸப் குழு ஒன்றை உருவாக்கினேன். நான்கு பள்ளிகளைச் சேர்ந்த 28 குழந்தைகளை இணைத்து, டெக்ஸ்ட் மற்றும் வாய்ஸ் மெசேஜ்கள் வாயிலாக, ஆறாம் வகுப்புப் பாடங்களைக் கற்பித்துவருகிறேன். நான் இடைநிலை ஆசிரியர் என்பதால், பாட நூல்கள் கைவசம் இல்லை.

பி.டி.எஃப் கோப்புகளாகத் தரவிறக்கம் செய்து, தமிழ், ஆங்கிலம், கணக்கு ஆகியவற்றில் தினம் ஒரு பாடம் மட்டுமே, அதுவும் சிறு அலகு மட்டும் கற்பிப்பதால், குழந்தைகள் பாடச்சுமையற்று, ஆர்வத்துடன் வகுப்பில் கலந்துகொண்டு, பதில் கூறியும், ஐயங்களைக் கேட்டுத் தெளிந்தும் பயனடைகிறார்கள். வீட்டுப் பாடமும் செய்து அனுப்புகிறார்கள்.

குழந்தைகளின் பிரச்னைகளை அறிந்து தாயினும் சாலப்பரிந்து தனியாளாகவோ குழுவாக இணைந்தோ ஆசிரி யர்கள் தீர்வு காண்கிறார்கள். உதவி செய்கிறார்கள். இவ்வாறாக, மாணவர்களின் நலனில் அக்கறை கொண்டுள்ள ஆசிரியர் சமூகம்தான் ஆன்லைன் வகுப்புகளை எளிமைப்படுத்த வேண்டும். மாற்று ஏற்பாடுகள் குறித்தும் பரிசீலிக்க வேண்டும். வானொலி, தொலைக்காட்சி ஒலி, ஒளிபரப்புகள் மூலம் கற்பிக்க, அரசுப் பள்ளிக் குழந்தைகள் அனைவரும் கற்க வாய்ப்புள்ளதை அரசிடம் பரிந்துரை செய்ய வேண்டும்.

கண்ணாடி வளையலைக் கையில் நுழைக்கும்போது வளையலும் உடையாமல், கையையும் கிழிக்காமல் அணியும் லாவகத்தைக் குழந்தைகளைக் கவனிப்பதிலும் செலுத்த வேண்டும். இயற்கை நாளும் நாளும் தன்னைப் புதுப்பித்துக்கொண்டேயிருப்பது போல், இந்த ஊரடங்கு காலத்திலும் நேரத்தை உபயோகமாகப் பயன்படுத்த, குழந்தைகள் உலகை அவர்களோடு சேர்ந்து பெற்றோர்களும் ஆசிரியர்களும் புதுப்பித்து மகிழ்வோம்’’ என்றார் ஆசிரியை தென்றல்.

- தோ.திருத்துவராஜ்