10ஆம் வகுப்பு மதிப்பெண் கணக்கீட்டில் குழப்பம்!



சர்ச்சை

நடப்புக் கல்வியாண்டில் பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வு மற்றும் பதினோராம் வகுப்பில் விடுபட்ட பாடங்களான வேதியியல், கணக்குப் பதிவியல், புவியியல் (புதிய பாடத்திட்டம்) வேதியியல், கணக்குப் பதிவியல், புவியியல் மற்றும் தொழிற்கல்வி கணக்குப் பதிவியல் (பழைய பாடத்திட்டம்) ஆகியவற்றிற்கான தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக அரசு அறிவித்தது அனைவரும் அறிந்ததுதான்.

மாணவர்களுக்கான மதிப்பெண் கணக்கீடு காலாண்டு மற்றும் அரையாண்டுத் தேர்வுகளில் அந்தந்த மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் 80% மதிப்பெண்களும், மாணவர்களின் வருகைப் பதிவின் அடிப்படையில் 20% மதிப்பெண்களும் வழங்கப் படும் எனத் தமிழ்நாடு அரசுப் பள்ளிக் கல்வித்துறை தெரிவித்தது. இந்த நடைமுறை பல்வேறு குளறுபடி குழப்பங்களுக்கு வழிவகுக்கும் எனத் தெரியவருகிறது. இதுகுறித்து பேராசிரியர் பி.இரத்தினசபாபதியிடம் பேசினோம்.

‘‘கொரோனா வைரஸ் தொற்றின் கொடிய பிடியில் உலகமே உருக்குலைந்துபோயுள்ளது. எஸ்.எஸ்.எல்.சி-க்கு இப்போது பொதுத்தேர்வு தேவையில்லை என்று கல்வியாளர்கள் பலரும் கருத்து அறிவுறுத்தியபோதும் விடாப்பிடியாக தேர்வை நடத்தியே தீருவோம் என்றது தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை. தேர்வு நாட்களை மாற்றி மாற்றி அறிவித்தது. இறுதியில் தேர்வே இல்லை என்று அறிவித்தது.

இத்தனை குழப்பங்களுக்கு இடையில் தேர்வை நடத்தாத நிலையில் ஓராண்டு காலம் பள்ளியிறுதி வகுப்பில் படித்த மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவதில் சிக்கல் மற்றும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது’’ என்றவர் எப்படிப்பட்ட குழப்பம் என்பதையும் விளக்கினார்.

‘‘காலாண்டு, அரையாண்டுத் தேர்வுகள் கல்வியியல் நடைமுறையின் அடிப்படையில் தேர்ச்சித் தேர்வுகளே அல்ல என்பதைக் கல்வியியலில் அடிப்படை அறிவு கொண்டோர் அறிவர். அவை மாணவர் தங்கள் கற்றல் குறைகளை அறிவதற்கும் கற்பித்த ஆசிரியர் தங்கள் கற்பித்தல் குறைபாடுகளைத் தெரிவிப்பதற்குமான ‘குறையறி தேர்வு’களாகும் (Diagnostic Tests). இவற்றைத் தேர்ச்சித் தேர்வாகக் (Achievement Test) கொள்வது கணிப்பீட்டுக்கு (It is against assessment) முரணானது.

மாணவர்கள் எதிர்கொள்ளவிருந்த 10ஆம் வகுப்பு பொதுத்தேர்விற்கான பாடநூல்கள் அனைத்தும் கடந்த ஆண்டுதான் (2019-20) புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட பாடநூல்கள். அவை அனைத்தும் பாடநூல் குழுவிலிருந்த வல்லுநர்களின் வல்லமையினை வெளிக்காட்ட எழுதப்பட்டனவேயன்றி,  மாணவரின் கற்றல் தேவையினை அடிப்படையாகக் கருதி எழுதப்பட்டவையல்ல என்னும் கருத்து பரவலாக நிலவுகிறது.

பாடப்பொருள்களின் கடினம், பாடநோக்கங்களில் புதுமை என்றெல்லாம் பேசப்பட்டு அந்தப் பாடநூல்களைக் கற்பிப்பதற்காக ஆசிரியர்
களுக்கு ஆற்றுப்படுத்தும் பயிற்சிகள் (Orientation Courses) நடத்தப்பட்டன. பயிற்சிகளின் பயனும் விளைவும் ஒருபுறமிருக்க மாணவர்கள் நிலையில் பாட வகுப்புகள் பல பாழாகின.

ஆற்றுப்படுத்தும் பயிற்சிகளின் விளைவுகளைக் கண்டறிவதற்கான ஆய்வுகள் எவற்றையும் மாநிலக் கல்வி ஆராய்ச்சி நிறுவனம் மேற்கொண்டதாகத் தெரியவில்லை. லட்சங்களோ, கோடிகளோ வழக்கம்போல் விரயம்தான்.ஆற்றுப்படுத்தும் பயிற்சிக்குப் பின்னர் ஆசிரியர்கள் அள்ளித்தரப் போகிறார்கள் என்ற மாணவர்களின் ஏக்கத்திற்கு கிடைத்த பலன் ஏமாற்றம்தான். அந்த ஏமாற்றத்தில் மாணவர்கள் எதிர்கொண்ட தேர்வுதான் காலாண்டுத் தேர்வு. இதனைத் தேர்ச்சிக்கு உரிய அளவீடு எனக் கொள்வது எந்த வகையிலும் நியாயம் இல்லை.

காலாண்டுத் தேர்வினை எதிர்கொண்ட மாணவர்கள் அதன் அடிப்படையில் தங்கள் கற்றலை மாற்றவோ மேம்படுத்தவோ செய்வது வழக்கம். இது ஒரு பயிற்சிச் செயல்பாடேயன்றி தேர்ச்சித் தேர்வு ஆகாது.அரையாண்டுத் தேர்வும் மாணவருக்கு ஒரு வெள்ளோட்டத் தேர்வு. இரண்டிலும் கிடைத்த பட்டறிவால் மாணவர் தன் இறுதித் தேர்வினை எதிர்கொள்வதுதான் இயல்பான நடைமுறை.

கடந்த காலத்தில் பள்ளியிறுதிப் பொதுத்தேர்வில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களைவிட அவர்கள் காலாண்டு, அரையாண்டுத் தேர்வுகளின் மதிப்பெண்கள் குறைவாகத்தான் இருக்கும். இவ்வாறான நிலைக்கு இரண்டு காரணங்கள் அறியப்படுகின்றன. முதன்முதலில் கல்வித்துறைப் பொதுத்தேர்வு எழுதப் புகும் மாணவர்கள் காலாண்டு, அரையாண்டுத் தேர்வுகளை எதிர்கொள்ளும் மனத்திடம் வளராமை ஒரு காரணம்.

பொதுத்தேர்வில் மேலும் அதிக மதிப்பெண்கள்  பெறவேண்டும் என்ற அக்கறையில் ஆசிரியர்கள் தங்கள் பொறுப்பிலிருக்கும் காலாண்டு, அரையாண்டுத் தேர்வு களுக்குக் குறைந்த மதிப்பெண் வழங்குதல் பிறிதொரு காரணம். காரணம் எதுவாயினும் காலாண்டு, அரையாண்டுத் தேர்வுகளின் மதிப்பெண்களைத் தேர்ச்சிக்குரிய இறுதி மதிப்பெண்களாகக் கொள்வது பெரும் தவறு’’ என்றவர் தனியார் பள்ளிகள் இதை வைத்து எப்படி பணம் சம்பாதிக்கும் என்பதையும் விவரித்தார்.  

‘‘பொதுவாக மாணவர்கள் இறுதித் தேர்விற்குத்தான் முந்தைய இரு தேர்வுகளைக் காட்டிலும் முனைப்பாகப் படிப்பர். மனப்பாடமே தேர்விற்கு முதன்மை என்றிருக்கும்போது மாணவர்கள் அச்செயலில் முனைப்புக் காட்டுவது இறுதித் தேர்விற்குத்தான். மாணவர்களின் நிலை இவ்வாறிருக்க, காலாண்டு, அரையாண்டுத் தேர்வுகளின் மதிப்பெண்களைத் தேர்ச்சிக்கு உரியதாகக் கொள்வது முறையன்று.

மேலும், காலாண்டு அரையாண்டுத் தேர்வுகளில் மதிப்பெண்கள் கணக்கிடப்படும் என்ற அறிவிப்பு சுயநிதிப் பள்ளிகளின் பணவேட்டைக்குப் பாதை அமைத்துவிட்டதான செய்தியும் வெளிவரத் தொடங்கிவிட்டது.

அடுத்து, வருகைப் பதிவுக்கென 20 மதிப்பெண் வழங்குவதாகும். தேர்வு எழுத குறைந்த அளவு வரையறுக்கப்பட்டிருக்கும் நிலையில் மீண்டும் வருகைக்கென மதிப்பெண் வழங்குதல் தவறு.

தம் கற்றல் பாணிக்கு (learning style) உகந்த சூழலை உணராத மாணவர்கள் வரையறுத்த வருகைப் பதிவை நிறைவு செய்துவிட்டு தம் விருப்பிற்கு ஏற்ப பள்ளிக்கு வெளியே படிக்கும் போக்குடைய மாணவர்களும் உண்டு. வருகைக்கான மதிப்பெண் கணக்கீடு இத்தகைய மாணவர்களைப் பாதிப்பதாக அமைந்துவிடும். மேலும் காலாண்டுத் தேர்வு, அரையாண்டுத் தேர்வு விடைத்தாள்களை எத்தனை பள்ளிகளில் பாதுகாப்பாக வைத்திருப்பார்கள் என்பது தெரியாது.

அறியாமையைவிட பிடிவாதம் மிகவும் ஆபத்தானது (The only thing more dangerous than ignorance is arrogance) என்றார் அறிவியல் மேதை ஐன்ஸ்டீன். இப்பொன்மொழியை ஏற்று கல்வியாளர்கள், பட்டறிவுமிக்க ஆசிரியர்கள் ஆகியோரைக் கலந்து தேர்வுத் துறை பள்ளியிறுதித் தேர்வில் மதிப்பெண் வழங்குவது பற்றி முடிவெடுத்தால் தமிழகக் கல்வித்துறை தன் தடத்திலிருந்து பிறழாது இயங்கும்’’ என்றார் பேராசிரியர் இரத்தினசபாபதி.

- தோ.திருத்துவராஜ்