+1 மாணவர் சேர்க்கை அவசரம் காட்டும் தனியார் பள்ளிகள்!



சர்ச்சை

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என அரசு அறிவித்ததுதான் தாமதம், தனியார் பள்ளிகள் பதினொண்ணாம் வகுப்பு சேர்க்கையை ஆரம்பித்துவிட்டன. இதில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். இதுகுறித்து கல்வியாளர் மற்றும் சமூக செயற்பாட்டாளர்களிடம் கருத்துகளைக் கேட்டோம். இனி அவர்கள் தரும் பதில்களைப் பார்ப்போம்….

சு.மூர்த்திஒருங்கிணைப்பாளர், கல்வி மேம்பாட்டுக் கூட்டமைப்பு

பத்தாம் வகுப்பு மற்றும் +1 வகுப்புக்கு நடத்தப்படாமல் இருந்த ஒரு சில பாடங்களுக்கான பொதுத் தேர்வு ரத்து என்று ஜூன் 9 அன்று தமிழக அரசால் அறிவிக்கப்பட்டது. காலாண்டு அரையாண்டுத் தேர்வு மதிப்பெண்கள் 80 விழுக்காடு மற்றும் வருகைப்பதிவுக்கான மதிப்பெண்கள் 20 விழுக்காடு எனக் கணக்கிட்டு மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் எனவும் 35 மதிப்பெண்களைவிட குறைவாகப் பெற்ற மாணவர்களுக்கும் தேர்ச்சி வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

வழக்கமாக 10 மற்றும் +1 வகுப்புக்கு காலாண்டு அரையாண்டுத் தேர்வுகளைப் பல தனியார் பள்ளிகள் நடத்துவதில்லை. இதனால், அரசு அறிவிப்பு வந்த பிறகு பொதுத் தேர்வு மதிப்பெண் கணக்கீட்டிற்காக காலாண்டு, அரையாண்டுத் தேர்வுகளை எழுதவைத்து விடைத்தாள் திருத்தி மதிப்பெண் கணக்கீடு செய்யும் வேலையை பல தனியார் பள்ளிகள் தற்போது அவசர அவசரமாக செய்துள்ளன.

கொரோனோ ஊரடங்கினால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளைக் கவனத்தில் கொண்டு தனியார் பள்ளி நிர்வாகங்கள் பெற்றோர்களிடம் நிலுவைக் கட்டணத்தையோ அல்லது அடுத்த ஆண்டுக்கான கல்விக் கட்டணத்தையோ வசூலிக்கக் கூடாது என்று தமிழக அரசு அறிவித்திருந்தது.

இதைக் கண்டுகொள்ளாமல் தனியார் பள்ளி நிர்வாகங்கள் தொடர்ந்து இணையவழிக் கல்வி என்ற பெயரில் கட்டணக் கொள்ளையில் ஈடுபட்டு வருவது குறித்து அரசுக்குப் பெற்றோர்கள் மூலம் பல புகார்கள் அளிக்கப்பட்டன. இதை கவனத்தில் கொண்டு ஜூன் 8-ல் தமிழ்நாடு மெட்ரிகுலேஷன் பள்ளிகளின் இயக்குநர், தனியார் பள்ளி நிர்வாகங்கள் இணையவழி மூலம் பாடம் நடத்த கல்விக்  கட்டணம் செலுத்த பெற்றோர்களை வற்புறுத்தக்கூடாது என்று அறிவித்துள்ளார்.

இது மட்டுமில்லாமல், தனியார் பள்ளிகளில் +1 வகுப்பு சேர்க்கை என்ற பெயரிலும் கட்டணம் வசூலிப்பு நடந்து வருகிறது. +1 வகுப்பு சேர்க்கை குறித்து கல்வித்துறை இதுவரை எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. அரசுப் பள்ளிகளில், தனியார் பள்ளிகளில் +1 சேர்க்கை நடத்த தமிழ்நாடு அரசு அறிவிப்பு எதுவும் செய்யாத நிலையில் தனியார் பள்ளிகளில் மட்டும் மாணவர் சேர்க்கை நடத்துவதால் அரசுப் பள்ளியில் சேர விரும்பும் மாணவர்களும் தனியார் பள்ளியில் சேர மறைமுகத் தூண்டுதல் உருவாகியுள்ளது.

தமிழக அரசு உயர்கல்விச் சேர்க்கையில் பின்பற்றக்கூடிய இடஒதுக்கீட்டு முறையை +1 வகுப்பு சேர்க்கையிலும் தனியார் பள்ளிகள் பின்பற்றவேண்டும் என்று தமிழக அரசு வெளியிட்ட ஆணையையும் பல தனியார் பள்ளிகள் பின்பற்றுவதில்லை.

ஏழைக் குழந்தைகள், வசதியுள்ள குழந்தைகள் என்ற சமூக ஏற்றத்தாழ்வுகள் கல்வி வாய்ப்புகளைப் பெறுவதிலும் அனுமதிக்கக் கூடாது. இந்த நோக்கத்தில்தான் பள்ளிகளுக்கான விதிமுறைகள் உருவாக்கப்படுகின்றன. அரசு அறிவிப்புகள் வெளியிடப்படுகின்றன. ஆனால், எல்லாமே காகித வடிவில் மட்டும் உள்ளன. நிர்வாகச் சீர்கேட்டினாலும் கல்வித்துறை அலுவலர்கள் கடமை தவறுவதாலும் அதிகாரமற்ற, ஏழைக் குழந்தைகளே அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இதுவும் ஒரு பெரிய சமூகக் குற்றமே. இதைத் தடுப்பதில் தமிழகக் கல்வித்துறை தீவிர அக்கறை காட்டவேண்டும். தவறு செய்யும் பள்ளிகள் மீது சட்டப்படியான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்.

ஐவி.நாகராஜன், சமூக செயற்பாட்டாளர்.

பொதுவாக தங்கள் குழந்தைகளுக்கு சிறந்ததோர் எதிர்காலம் காத்திருக்கிறது என்ற நம்பிக்கையுடன்தான் பெற்றோர்கள் தாங்கள் பாடுபட்ட பணத்தையெல்லாம் படிப்புக்காக வாரி இறைக்கின்றனர். அவர்களின் ஒரே குறிக்கோள், ஆசை எல்லாமே, கஷ்டம் தங்களோடு போகட்டும் குழந்தைகளாவது நன்றாக வாழட்டும் என்பதுதான். இதனால் எவ்வளவு கஷ்டம் இருந்தாலும் நல்ல பள்ளியாக பார்த்து பிள்ளைகளை சேர்க்கின்றனர்.

ஆனால் இந்த எதிர்பார்ப்புகள் இனியாவது நிறைவேறுமா என்ற மனநிலையை பெற்றோர் மத்தியில் உருவாக்கிவிட்டது கொரனா நோய்த் தொற்று.
ஊரடங்கில் பள்ளிகள் மூடப்பட்ட பிறகு, லீவு விட்டாச்சு என்ற குதூகலம் குழந்தைகளுக்கு இருந்தது. ஆனால், நாட்கள் செல்ல செல்ல வீடே அவர்களுக்கு சிறைவாசம் ஆகிவிட்டது. கல்லூரி மாணவர்கள் பலர் ஊரடங்கில் பெற்றோரின் வருவாய் குறைந்து கஷ்டப்படும் நிலையை பார்த்து தங்கள் எதிர்காலம் என்னாகுமோ என்று அச்சப்பட தொடங்கியிருக்கின்றனர்.

அந்த அளவுக்கு துறைதோறும் பாதிப்பை உருவாக்கிய கொரனா கல்வித் துறையையும் விட்டுவைக்கவில்லை. ஊரடங்கில் சில தளர்வுகள் வந்தபோதும், பள்ளி கல்லூரிகள், கல்விநிறுவனங்கள் திறப்பது பற்றி அரசு தரப்பில் எந்த முடிவும் செய்யவில்லை. காரணம் கொரனா சமூக பரவல் நிலையை எட்டி உள்ளதால் முடிவு எடுக்க அரசு திணறி வருகின்றது. எனவே, கல்வித்துறை நிறைய பாதிப்புகளை சந்தித்துள்ளது. மூடப்பட்டுள்ள பள்ளி, கல்லூரிகள் ஜூலை-ஆகஸ்ட் மாதங்கள் திறக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

இதன் மூலம் பள்ளி, கல்லூரி வேலைநாட்களில் ஏற்பட்டுள்ள பாதிப்பும் கற்றல், கற்பித்தலில் ஏற்படும் தேக்கமும், அதனால் தேர்வுகளில் ஏற்படும் பாதிப்பும் கண் முன்னே நிழலாடுகின்றன. இத்தகைய சூழலில் பள்ளி இறுதி வகுப்பை முடித்து கல்லூரியில் அடியெடுத்து வைக்கும் நடுத்தர மற்றும் அடித்தட்டு மக்களின் பிள்ளைகளின் ஆசையில் மண் விழுந்துள்ளது. நல்லவேளை அரசியல் கட்சிகளின் போராட்டங்களால் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வை ரத்து செய்து அனைவரும் தேர்ச்சி பெற்றுள்ளதாக அறிவித்துள்ளது மக்கள் மத்தியில் வரவேற்பு பெற்றுள்ளது.

இன்னொரு புறம் தனியார் கல்விநிறுவனங்கள் மறைமுகமாக தங்கள் வசூல் வேட்டையை துவக்கியுள்ளது பெற்றோர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. கல்வி என்பது சேவை அல்ல; அதுவும் ஒரு தொழில் என்று ஆக்கப்பட்டுவிட்டது. அந்த கல்விச்சாலைகளை நடத்த தனியாருக்கு நிறைய பணம் தேவைதான். வகுப்பறைகளை, மைதானத்தை பராமரிக்க பணம் தேவை, திறமையான ஆசிரியர்களுக்கு நிறைவான சம்பளம் தர பணம் தேவை. இதையெல்லாம் படிக்க வரும் மாணவர்கள் மூலமாகத்தான் வசூல் செய்து லாபம் பார்க்க வேண்டும். இதுதான் தனியார் பள்ளி, கல்லூரிகளின் நிலைமையாக உள்ளது.

இந்த கொரனா காலத்தில் மூச்சு விட முடியாமல் திணறும் பலவித தொழில்களை போல தனியார் பள்ளிகளும் சிரமப்படத்தான் செய்கின்றன. இந்நிலையில்,2020- 2021ஆம் கல்வியாண்டுக்கான கட்டணத்தை கட்டாயப்படுத்தி வசூலிக்கக்கூடாது என்று தமிழக அரசு கடந்த ஏப்ரல் 20ல் அரசாணை வெளியிட்டது. மேலும், 2019-2020 ஆம் ஆண்டுக்கான நிலுவை கட்டணத்தையும் கேட்கக்கூடாது என்றும் அதில் எச்சரித்திருந்தது.

இது தனியார் பள்ளிகளை எரிச்சலடைய வைத்தது. மின் வாரியம் நடத்தும் மின்கட்டண வசூலை அரசு நிறுத்திவைக்க உத்தரவிடுமா? அதுபோலத்தான் கல்விக் கட்டணமும். பள்ளிகளை அடுத்த கல்வியாண்டில் செயல்படுத்த பீஸ் வசூல் செய்யத்தானே வேண்டும்..? என்று கேட்கின்றனர்.

தங்களுக்கு எஸ்.எம்.எஸ். மூலம் தகவல் அனுப்பி பீஸ் கட்ட சொல்கிறார்கள் என்று பெற்றோர்கள் தரப்பிலிருந்து புகார்கள் வந்ததால் அரசு எச்சரிக்கை உத்தரவை வெளியிட்டது. இதனால் கல்வி கட்டணம் என்று இல்லாமல், இப்போது ஆன்லைன் வகுப்புகள் நடத்துகிறோம். இணைய வசதி, கம்ப்யூட்டர் பீஸ், ஆசிரியர் கட்டணம் என்று சில தனியார் பள்ளிகள் புதுவிதமான முறையில் கட்டணம் கேட்டு வற்புறுத்துகின்றனர்.

இன்னும் சில தனியார் பள்ளிகள் முதல் அட்மிஷன் என்ற வகையில் எல்.கே.ஜி, யு.கே.ஜி. என்று இரண்டு ஆண்டுக்குமான கட்டணம் மற்றும் நன்கொடை ஆகியற்றை சிங்கிள் பேமன்ட்டாக செலுத்த சொல்கின்றனர். அட்மிஷன் கிடைத்தது, இல்லாமல் போய்விடுமே என்ற அச்சத்தில் பெற்றோர்கள் கடன் வாங்கி கட்டணங்களைச் செலுத்திவருகின்றனர்.

இதற்கு நடுவே, கட்டணம் வசூலிப்பதை அரசு கண்டுகொள்ளாமல் இருக்கவும், ஜூலையில் பள்ளிகளை திறக்க ஆணை பெற்று தருவதாகவும் கூறி, தனியார் பள்ளிகளில் ஆளுங்கட்சியை சேர்ந்த கும்பல் வசூல் வேட்டையில் இறங்கி இருப்பதாக ஒரு தகவலும் உள்ளது.

கொரனா நோய்த் தொற்று மேலும் மேலும் அதிகரித்துக்கொண்டிருப்பதால் பிழைப்புக்கு வழி இல்லாமல் வேலை வாய்ப்புகளும் சிக்கலாக உள்ள நிலையில் பயந்து பயந்து வீட்டிலேயே முடங்கிக் கிடக்கும் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் என்னாகுமோ என்ற அச்சத்தில் புலம்பிக் கொண்டுள்ளனர். இதுகுறித்து அரசு கண்டுகொள்ளுமா? நடவடிக்கை எடுக்குமா? என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

தொகுப்பு: தோ.திருத்துவராஜ்