வாழ்த்தி வரவேற்போம்!



வாசகர் கடிதம்

சமகால பிரச்னைகளின் வீரியம் உணர்ந்து துறை சார்ந்த நிபுணர்களிடம் விவாதித்து தீர்வை நோக்கி நகரும் சர்ச்சை பகுதி கட்டுரைகள் எப்போதும் முத்திரைப் பதிக்கும் ரகம். அவ்வகையில் மாணவர்களை அலைக்கழிக்கும் இணையவழிக் கல்வி, மருத்துவக் கல்வியில் சமூகநீதி காக்கப்படுமா? போன்ற கட்டுரைகள், பிரச்னைகளின் தீவிரத்தையும் உடனடியாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளையும் விளக்குவது அற்புதம்.  
- கே.ராஜன், நாகர்கோவில்.

எந்த செயலுக்கும் பலனை எதிர்பார்க்கும் சமூக மக்களின் மத்தியில் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் மாற்றுத்
திறனாளிகளுக்கு தேர்வு எழுதி உதவிவரும் புஷ்பா பிரியாவின் செயலை வாழ்த்தி வரவேற்போம். அவரின் தன்னலமற்ற சேவை மற்றும் மாற்றுச் சிந்தனை பல மாற்றுத்திறனாளிகள் வாழ்வுக்கு வழிகாட்டுவதாக உள்ளது போற்றுதலுக்குரியது.
- இரா.வடிவேலன், மானாமதுரை.

கல்வி-வேலை வழிகாட்டி இதழில் ‘வெற்றியாளராக மாற்றுச் சிந்தனைகளை மலரச் செய்யுங்கள்!’ என்ற பேராசிரியர் முனைவர் அ.முகமது அப்துல்காதர் எழுதியுள்ள கட்டுரை அருமை. பள்ளிப் பருவத்தில் நடக்கவே முடியாமல் இருந்த யாஸ்மின் அந்தப் பிரச்னையைக் கடந்து தானும் வாழ்வில் வெற்றி நடை போட்டு தன்னைப் போன்ற பெண்கள் பலரையும் வீரநடை போட வைத்துள்ளது சிறப்பு. தன்னம்பிக்கையின் பெட்டகமாக உள்ளது புதிதாய் பிறப்போம் சரித்திரம் படைப்போம் தொடர்.
- எம்.ஜெஸ்ஸி, வேளாங்கண்ணி.

கொரோனா வைரஸ் பிரச்னைக்கே தீர்வு கிடைக்காத நிலையில் வட இந்தியாவில் பெரிய பாதிப்பை உண்டாக்கிய வெட்டிக்கிளிகளின் படையெடுப்பு விவசாயிகள் மத்தியில் பீதியை உண்டாக்கியது. ஆனால், வெட்டுக்கிளிகள் பிரச்னையைக் கண்டு அஞ்ச வேண்டாம் என்ற நம்பிக்கையை தந்தது அண்ணா பல்கலையின் பேராசிரியர் செந்தில்குமாரின் டிரோன் மூலம் வெட்டுக்கிளிகளை வெட்டியெறியும் திட்டம்.
- கா.வெண்ணிலா, ஈரோடு.