கொரோனா காலத்திலும் அடங்காத ஆன்லைன் மோசடிகள்!



எச்சரிக்கை

சென்னை கொரட்டூரை சேர்ந்தவர் பிரேம் ஆனந்த். கப்பற்படையில் மூத்த பொறியாளராக கவுரவமான உத்தியோகம். தனது வீட்டிலிருந்த மரக்கட்டில் ஒன்றை ரூ.10,000-க்கு விற்பனை செய்ய ஆன்லைனில் விளம்பரம் செய்திருந்தார். ‘கட்டிலை பார்க்கலாமா?’ என செல்போனில் ஆனந்திடம் அனுமதி பெற்று அவரது வீட்டுக்கு வந்த நபர், பின்னர் ‘‘நானும் ராணுவத்தில் நல்ல பொறுப்பில் உள்ளேன்.

கட்டில் பிடித்துள்ளது’’ எனக் கூறியுள்ளார். அதையடுத்து ஆனந்திடம் அந்த நபர் (எக்ஸ் என வைத்துக்கொள்வோம்), ‘‘ராணுவத்தில் எங்களுக்கு அளிக்கப்படும் பேமென்ட் வவுச்சர் இது. வங்கி காசோலை போல இருக்கும் இதில் உள்ள கியூ ஆர் கோடை உங்க செல்போன்ல ஸ்கேன் செய்து, ரொக்கத்தை குறிப்பிட்டால், உங்க வங்கிக் கணக்கில் அந்த ரொக்கம் வரவு வைக்கப்படும்’’ என்று கூறியிருக்கிறார்.

பேச்சு பாவனையும் ஆனந்துக்கு அவர் மீது உறுதியான நம்பிக்கை ஏற்படுத்தியிருந்ததால், எக்ஸ் அளித்த வவுச்சரில் இருந்த கியூ.ஆர்.கோடை தனது செல்போனில் ஸ்கேன் செய்தார். அடுத்து ரொக்கம் பதிவு செய்யும் வேளையில், சார் முதலில் ரூ.5 பதிவு பண்ணுங்க. பரிவர்த்தனை சரியா இருக்கான்னு செக் பண்ணிக்கலாம் என்றார் எக்ஸ். அதன்படி ரூ.5 பதிவு செய்த சில நொடிகளில், ‘‘உங்க வங்கிக் கணக்கில் 5 ரூபாய் வரவு வைக்கப்பட்டது’’, என ஆனந்தின் செல்போன் மெசேஜ் தகவல் தெரிவித்தது.

அப்போது அந்த நபர், ‘‘ஒரு வவுச்சர்ல ஒரு முறை தான் ஸ்கேன் செய்ய முடியும். அந்த வவுச்சர கொடுங்க. இப்போ இதுல அதே மாதிரி ஸ்கேன் செய்து, மீதமுள்ள ரூ.9,995 பதிவு பண்ணுங்க’’ என்றார். அப்படியே செய்த ஆனந்துக்கு, ‘உங்க வங்கிக் கணக்கிலிருந்து 9,995 ரூபாய் எடுக்கப்பட்டது’, என மெசேஜ் வந்தது. திடுக்கிட்ட (வடிவேலு பிச்சை வாங்க வேண்டும் அளவில் நடிப்பு) எக்ஸ், ‘‘எங்கயோ தவறு நடந்திருக்கு. சரி அந்த வவுச்சர கொடுங்க. இன்னொரு வவுச்சர் டிரை செய்ங்க. பணம் எங்க போயிடப்போகுது. அப்படியே போனாலும், ரெண்டே நிமிஷம். ஓடிப்போய் ஏடிஎம்ல இருந்து கொண்டாந்துர்றேன்’’ எனக் கூறியிருக்கிறார்.

எல்லா வவுச்சர்களையும் திரும்ப பெற்றுக்கொண்ட எக்ஸ், ஆனந்த் யோசிக்கவும் நேரம் அளிக்காமல், ‘‘5 நிமிடம் பொறுங்க... ஏடிஎம்லர்ந்து பணத்தோடயும், கட்டிலை கொண்டு போக கையோட வாடகை வண்டியும் கூட்டிக்கிட்டு வர்றேன்’’, என சிட்டாக பறந்துவிட்டார். இப்படியாக ஒட்டுமொத்தமாக ரூ.50,000 இழந்த ஆனந்த் ஆன்லைனில் சைபர் க்ரைமில் புகார் செய்துள்ளார்.

ஆனந்த் ஏமாந்த அதே தினத்தில் கியூ.ஆர்.கோடு மோசடியாக ரூ.8 லட்சத்தை பலரும் பறி கொடுத்து ஏமாந்துள்ளனர் என்பதுதான் இதில் வேதனையான விஷயம்.இந்த கியூ.ஆர்.கோடு, ஓடிபி போன்ற தொழில்நுணுக்க மோசடிகள் குறித்து சைபர் க்ரைம் குற்றங்களை தடுப்பது குறித்து போலீசுக்கு உலகளவில் 45 நாடுகளிலுள்ள அரசு மற்றும் தனியார் அமைப்புகளுக்கு பயிற்சி மற்றும் கவுன்சலிங் வழங்கி வருபவரும் கோவையிலுள்ள ப்ராம்ட் இன்ஃபோடெக் (Prompt infotech) நிறுவனருமான சங்கர்ராஜ் சுப்பிரமணியன் நம்மிடம் பகிர்ந்த தகவல்களை உங்களுக்கு எடுத்துரைத்து, சைபர் க்ரைம் குற்றவாளிகளிடம் மோசம் போகாதீங்க என்பதை சமூக விழிப்புணர்வாக கொண்டு செல்வதே இந்த கட்டுரையின் நோக்கம்.
இனி சங்கர்ராஜ் சுப்பிரமணியன் கூறுவதை கேட்போம்…

‘‘ஒரு சிறிய வெள்ளை சதுரத்தில் பலவித வடிவங்களில் குட்டி, குட்டியாக கருப்பு சதுரங்கள். இது தான் கியூ.ஆர்.கோடு. இமேஜ். பார்க்க ஒரே மாதிரி இருந்தாலும், கியூ.ஆர்.கோடு ஒவ்வொன்றும் வேறாகும். தகவல் தொழில்நுட்பம் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ் வளர்ச்சியின் ஒரு கட்டத்தில், ஆட்டோமொபைல் தொழிலில், இறுதி வடிவம் பெறவுள்ள ஒரு பொருள், தொழிற்சாலையின் வெவ்வேறு பிரிவுகளில் எந்த கட்டத்தில் உள்ளது என எளிதில் கண்டறிய, ‘பார் கோடு’ தொழில்நுட்பம் அறிமுகமானது. (வெள்ளி செவ்வகத்தில் கருப்பு பட்டைகள்).

 புத்தகம், உணவு பாக்கெட், அழகு பொருட்கள் மேலட்டை என சந்தையில் பார் கோடு பிரபலமானது. எனினும், எழுத்து அல்லது எண் என 20 எண்ணிக்கைக்கு மிகாமல் இருக்க வேண்டும். அதனால் பல முக்கிய தகவல்களை பார் கோடில் பதிவேற்ற முடியவில்லை. இதனிடையே அடுத்த கட்ட தொழில்நுட்ப வளர்ச்சியாக அறிமுகமானதுதான் கியூ.ஆர்.கோடு. இதில் 7,089 எண்ணிக்கையில் விவரம் பதிவு செய்ய முடியும் என்பதால், மார்க்கெட்டில் கியூ.ஆர்.கோடு பிரபலமானது.

எந்த தொழில்நுட்பத்தால் கியூ.ஆர்.கோடு பலனளித்ததோ, அதே தொழில்நுட்பத்தை நுணுக்கமாக பயன்படுத்தி, ஒரிஜினலுக்கு பதில் டூப்ளிகேட் கியூ.ஆர்.கோடை ஸ்கேன் செய்யவைத்து வாடிக்கையாளர்களை தந்திரமாக ஏமாற்றி அவர்களது வங்கிக் கணக்கை பதம் பார்க்கும் கும்பலும் அதிகரித்தது.

 இந்த மோசடி கும்பலை ‘கியூ.ஆர்.எல்.ஜேக்கிங்’ என்கின்றனர். அதாவது, ஒரிஜினல் கியூ.ஆர்.கோடு. போலவே, ஜேக்கர் வெளியிடும் கியூ.ஆர்.கோடை ஸ்கேன் செய்தால், உங்களது செல்போனிலோ அல்லது கம்ப்யூட்டரில் ஆன்லைனிலோ புதிதாக மற்றொரு இணையபக்கம் தோன்றி, அதில் உங்களது சுயவிவரங்களைக் கேட்கும். பிரபல நிறுவனம்தானே கேட்கிறது என நினைத்து நீங்களும் வங்கிக் கணக்கு, 4 டிஜிட் ரகசிய நம்பர் என எல்லா விவரத்தையும் கொடுப்பீர்கள். அவ்வளவுதான் அடுத்த ஒரு நொடியில் உங்கள் வங்கிக் கணக்கு திவாலாகும்.

அதிர்ச்சியில் என்ன பண்ணுவீங்க? அந்த நிறுவனத்துக்கு போன் போடுவீங்க. அவங்க என்ன சொல்வாங்க? ‘நாங்க விவரம் கேட்டோமா? நோ..நோ. எங்க கம்பெனி ஆளுங்கன்னு யாரு கேட்டாலும் வாய் தொறக்காதீங்கன்னு பிரின்ட் பண்ணியிருக்கோமே. அத கவனிக்கிறதில்லையா?’ அப்பிடீம்பாங்க. இது வேற ஒண்ணும் இல்ல சார். பிஷிங் ஆக்டிவிட்டி அப்பிடீன்னு ஒரு மெத்தட்ல, பல நிறுவனங்களோட ஒரிஜினலை போலவே இந்த ஜேக்கர்ங்க செஞ்சி ஏமாத்தறாங்க. நீங்க அதுக்கு பலிகடா ஆய்ட்டீங்க அப்படீம்பாங்க. போன பணத்துக்கு என்ன வழின்னு கேட்கறீங்களா? ஒரு வாட்டி ஏமாந்தது போதும், அடுத்த வாட்டி ஏமாறாதீங்கன்னுதான் சொல்ல முடியும்’’ என்றார் சங்கர்ராஜ்.

ஜாக்கிரதையா இருக்க என்ன செய்யணும்?

*கியூ.ஆர்.கோடு ஸ்கேன் செய்யும்போது, உன்னிப்பா கவனிங்க.
*விவரம் தெரியாத ‘சைட்’ல இருந்து கியூ.ஆர்.கோடு ஸ்கேன் பண்ணாதீங்க.
*கியூ.ஆர்.கோடு ஸ்கேன் பண்ணதும், ஒரு வெப்சைட் திரையில் தெரிந்தால் அதிலுள்ள விவரங்களை ஒரு வரி விடாமல் முழுவதும் படித்து பார்க்கவும்.
*கேமிங் சைட்ல கியூ.ஆர்.கோடு ஸ்கேன் பண்ணாதேன்னு பிள்ளைகளுக்கு சொல்லி வைங்க.
*குறிப்பா, ஆண்ட்ராய்டு செல்போன்ல செக்யூரிட்டி சாஃப்ட்வேர் டவுன்லோடு பண்ணி வெச்சிருந்தா, கியூ.ஆர்.கோடு கோல்மாலை கண்டிப்பா
தவிர்க்கலாம் அப்படீங்கறத தெரிஞ்சுக்குங்க.
*அதுபோல, கியூ.ஆர்.கோடு விவரத்துல ஸ்பெல்லிங் மிஸ்டேக் (அதாவது டொமேட்டோ என்பதற்கு பதிலாக டொமெட்டோ) இருந்தா, புண்ணியவான்களே அது டூப்ளிகேட் கியூ.ஆர்.கோடு என தெளிவா புரிஞ்சிகுங்க.
*கியூ.ஆர்.கோடு ஸ்கேன் பண்ணதும், திரையில புது வெப்சைட் தெரிஞ்சி அதுல உங்கள பத்துன விவரத்த கேட்டா........ சொல்லாதீங்க.

- தோ.திருத்துவராஜ்