எஞ்சினியரிங் படிக்க வேதியியல் வேண்டாமா?



சர்ச்சை

பேராசிரியர் ப.வே.நவநீதகிருஷ்ணன்


பொறியியல் படிப்பில் சேர்வதற்கு தற்போது கணிதம், இயற்பியல், வேதியியல் ஆகிய பாடங்கள் கட்டாயம் என்கின்ற நடைமுறை உள்ளது. அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் வரும் கல்வியாண்டு முதல் இந்த நடைமுறையில் மாற்றங்களை அமல்படுத்தியுள்ளது. அதன்படி பொறியியல் படிக்க விரும்பும் மாணவர்கள் கணிதம் மற்றும் இயற்பியல் பாடங்களைக் கட்டாயம் படித்தால் போதுமானது. இதன்மூலம் வேதியியல்பாடம் கட்டாயம் இல்லை.

மேலும் மாணவர்கள் 12-ம் வகுப்பில் கணிதம், இயற்பியல் பாடங்களுடன் கணினி அறிவியல், உயிர் அறிவியல் பாடங்களை படித்திருந்தாலும் பொறியியல் படிப்பில் சேர முடியும். மேலும் இந்த புதிய நடைமுறை இந்த கல்வி ஆண்டே, அதாவது இந்த ஆண்டு பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடிவுக்கு பிறகு நடைபெறும் பொறியியல் மாணவர் சேர்க்கையில் நடைமுறைக்கு வர உள்ளது.

தமிழ் நாட்டில் 2020-21ஆம் ஆண்டு 11ஆம் வகுப்பில் சேரவிருக்கும் மாணவர்களுக்கு, மொழிகள் தவிர்த்த மற்ற நான்கு பாடங்களுக்குப் பதிலாக மூன்று பாடங்கள் எடுக்கும் வாய்ப்புத் தரப்பட்டிருக்கிறது. மாணவர்களின் பாடச்சுமையைக் குறைப்பதற்காக இந்த மாற்றம் செய்யப்பட்டதாகத் தெரிகிறது. பழைய முறைப்படி நான்கு பாடங்களையும் எடுக்கலாம்.

1986ஆம் ஆண்டிலேயே இதைப்போன்ற ஒரு முயற்சி நடந்தது. 1986-88-ல் படித்த மாணவர்களுக்கு, அதுவரை இருந்த கணிதம்(M), இயற்பியல்(P), வேதியியல்(C), உயிரியல்(B) பாடத்தொகுப்புக்குப் பதிலாக, கணிதம், இயற்பியல், வேதியியல் மற்றும் புள்ளியியல், இயற்பியல், வேதியியல், தாவரவியல் மற்றும் விலங்கியல் என்ற இரு தொகுப்புகள் வழங்கப்பட்டன. இதனால், மருத்துவம், பொறியியல் இரண்டுக்கும் தயாராகவிருந்த மாணவர்கள் பாதிக்கப்பட்டனர். குறிப்பாக, மருத்துவம் கிடைக்காதவர்கள், விரும்பினாலும் பொறியியல் சேர முடியாது. இக்காரணத்தால் அடுத்த ஆண்டே பழைய முறை கொண்டுவரப்பட்டது.

இதுவரை நம் மாணவர்களிடையே சிபிஎஸ்இ, தமிழ்நாடு என்ற இரு பிரிவுகள் மட்டுமே பிரதானமாகத் தெரிந்தன. இனி, ‘தமிழ்நாட்’டுக்கு உள்ளேயே, 3-பாடத் தொகுப்பு, 4-பாடத் தொகுப்பு என்ற பாகுபாடும் தோன்றிவிடும்.

தேசியக் கல்விக் கொள்கை (NEP)யின் விருப்ப அடிப்படை மதிப்பு முறை (CBCS) யின்படி, பாடத்தேர்விலும், துறைத்தேர்விலும், துறைகளுக்கிடையே பயணித்தலிலும் மாணவர்களுக்குச் சுதந்திரம் வழங்கப்பட வேண்டும். ஆனால், இத்திட்டத்தால் உயர்கல்வி வாய்ப்புகளே குறைந்து விடுவதால் மற்ற நன்மைகள் விளைவதும் அரிதாகிவிடும்.

‘தேர்ச்சி’ பெற, எடுத்த 3 அல்லது 4 பாடங்கள் அத்தனையிலும் தேர்ந்தாக வேண்டுமாம். நான்கு பாடத் தொகுப்பை எடுத்தவர்கள் ஒரு பாடத்தில் தவறிவிட்டால், அவர்கள் விரும்பினால், 3-பாடத் தொகுப்பில் தேறியதாக ஏன் அறிவிக்கக் கூடாது?

திறமையில் நம்பிக்கை உள்ளவர்கள் பழைய 4-பாடத் தொகுப்புகளில் தேர்வு செய்துகொள்வது நல்லது. ‘நாலாவது’ பாடம் உயர்கல்விக்குப் பயனற்றது என்பது தவறு. வணிகவியல், பொருளாதாரம் ஆகியவற்றிற்கு ஒரு நிலைக்குப் பிறகு கணிதம் கட்டாயம் தேவை. உயிரியல் சார்ந்த பாடப்பிரிவுகள் பலவற்றிற்குக் கணிதப்பகுதியான புள்ளியியல் இன்றியமையாதது.

கல்வியாளர்களும் ஆலோசகர்களும் புதிய 3-பாடத் தொகுப்புகளைவிட பழைய 4-பாடத் தொகுப்புகளில் ஒன்றைத் தம் தேவைக்கு ஏற்பத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுமாறு மாணவர்களுக்கு அறிவுறுத்துவது நல்லது.