அடடே...ஆங்கிலம் இவ்வளவு ஈஸியா..!வாங்கண்ணா...வணக்கங்கண்ணா!

ஏதோ ஆழ்ந்த சிந்தனையோடு லேப்டாப்பை பார்த்துக்கொண்டிருந்த ரகுவை நோக்கி வந்த ரவி, “‘குட்மார்னிங்’ என்ற காலை வணக்கத்தை எப்பங்க சார் சொல்லணும்? ஒவ்வொருத்தர் ஒவ்வொரு மாதிரி சொல்றாங்க. காலைப் பொழுதில் மட்டும் தான் சொல்லணுமா..? இல்ல… ஒரு நாளில் எப்ப முதன் முறையா பார்க்கிறோமோ, அப்ப சொல்லணுமா?” என்றபடியே அருகில் நின்றான்.

“வணக்கத்தில, ‘காலை வணக்கம்’, ‘அர்த்த ராத்திரி வணக்கம்’ என்றெல்லாம் எதுவும் கிடையாது ரவி. அர்த்தமில்லாம இந்த வாட்ஸாப் குரூப் ஆளுங்க தட்டி விட்றாங்க. அதாவது, ரவி… ஏன் குட்மார்னிங் சொல்லணும்னு தெரிஞ்சுகிட்டா இந்த மாதிரி குழப்பமே வராது. உதாரணத்துக்கு, இப்ப மணி காலை பதினொன்று. என்னை நீ சந்திக்கும் போது, ‘இன்றைய காலைப் பொழுது நன்றாக அமையட்டும்’ என்ற பொருளில் I wish you to have a very good morning என்றே சொல்ல வேண்டும். அவ்வளவு நீளமான வாக்கியத்தை சொல்வதற்குப் பதிலாக, சுருக்கமாக குட்மார்னிங் என்ற வார்த்தையோடு நிறுத்திவிடுகிறோம்.

பொதுவாகவே காலைப்பொழுது என்பது பகல் 12 மணியோடு முடிவடைகிறது. எனவே, என் காலைப் பொழுது உண்மையிலேயே நன்றாக இருக்க வேண்டுமென நீ விரும்பினால் பகல் 12 மணிக்குள்தான் ‘குட்மார்னிங்’ சொல்லமுடியும். சுமார் 2 மணிக்குப் பிறகு வந்து நீ எப்படி எனக்கு குட்மார்னிங் வாழ்த்த முடியும். என் பகல் பொழுதுதான் பன்னிரண்டு மணியோடு முடிந்துவிட்டதே!” என்றார் ரகு.

உடனே ரவி, “அப்படின்னா மதியம் சுமார் ஒரு மணிக்குப் பார்த்தால் ‘குட் ஆஃப்டர்நுான்’(Good Afternoon) என்றுதான் சொல்ல வேண்டும் அல்லவா” என்றான். “அதிலென்ன சந்தேகம்” என்ற ரகு, “அது மட்டு மல்ல… காலைல பார்த்தவுடனே குட்மார்னிங் சொல்கிறோம். பேசி முடித்து விடைபெறும்போது ‘குட் டே  (Good day) or ஹேவ குட்டே (Have a good day) எனச் சொல்ல வேண்டும்.” “அப்படின்னா மதியநேரத்தில் விடைபெறும்போது என்ன சொல்வதாம்?” என்று கேட்டபடியே வந்தமர்ந்தாள் ப்ரவீணா. “ ‘ஹேவ நைஸீவ்னிங்’ (Have a nice evening) எனலாம்.

மாலைப்பொழுதில் விடை பெறும்போது ‘குட் நைட்’ எனலாம்”. என்றார் ரகு. “இந்த வாட்ஸாப் வந்தாலும் வந்திச்சு… காலை வணக்கம், இரவு வணக்கம், என்று போட்டு பாடாய்ப் படுத்தறாங்க சார். அதற்குப் பதிலாய் நற்காலை, இனிய பொழுது, இனிய மாலை அமையட்டும் என்று அனுப்பினால் நன்றாய் இருக்கும். இல்லைங்களா சார்” என்றான் ரவி. “Time up. Back to seat” என்றபடியே எழுந்தார் ரகு.

ஆங்கில வார்த்தை சந்தேகங்களுக்கு தொடர்புகொள்ள englishsundar19@gmail.com

சேலம் ப.சுந்தர்ராஜ்