மிதிவண்டி மோட்டார் சைக்கிள் ஆனது!புதுமை

அரசுப் பள்ளி மாணவனின் புது முயற்சி!


இன்றைய தலைமுறை மிகவும் சாதுர்யமானவர்களையும் அறிவாற்றல் மிக்கவர்களையும் கொண்டது என்றால் அது மிகையாகாது. இந்தக் கூற்றை உண்மையாக்கும் விதமாக உள்ளது ஒரு மாணவனின் அற்புதப் படைப்பும் அவனது அறிவுத்திறனும்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே அமைந்துள்ள கிராமம் தேங்கல்பாளையம். இங்கு நூறு ஆண்டுகளைக் கடந்த அரசு உதவிபெறும் காந்தி கல்விநிலையம் உயர்நிலைப் பள்ளி செயல்பட்டுவருகிறது. இப்பள்ளியில் சுமார் 300 மாணவர்கள் பயின்றுவருகின்றனர்.

இப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் இரா.அறிவழகன் என்ற மாணவன் சுமார் 5 கி.மீ தொலைவிலிருந்து பள்ளிக்கு வருகின்றான். ஆகவே, வெகு தொலைவு கடந்து பள்ளிக்கு வருவதைத் தவிர்க்க தன்னிடம் உள்ள பழைய மிதிவண்டியில் இருசக்கர வாகனத்தின் மோட்டாரை பொருத்தி மிதிவண்டியில் பல மாறுதல்களைச் செய்து அதனை ஒரு வாகனமாக மாற்றி யிருக்கிறான். அதில் அவனும் அவனது சகோதரனான ஜீவாவும் பள்ளிக்கு வருகின்றனர்.

இம்மாணவன் தனக்குள்ள அறிவியல் ஆர்வத்தினால் இது மட்டுமின்றி நிறைய அறிவியல் கண்டுபிடிப்புகளையும் உருவாக்கி பள்ளி அளவிலும், ஒன்றிய அளவிலும் பல பரிசுகளை வென்றுள்ளான் என்பது குறிப்பிடத்தக்கது. தனது மிதிவண்டி மோட்டார் சைக்கிள் குறித்து மாணவன் அறிவழகன் கூறுகையில், ‘‘நான் சிறுவயதிலிருந்து இப்பள்ளியில் பயின்றுவருகிறேன். நான் ஆறாம் வகுப்பு பயிலும்போது என் தந்தை இறந்துவிட்டார்.  என் தாய் தான் கூலி வேலை செய்து என்னையும் என் தம்பியையும் படிக்க வைக்கிறார்.

அதனால்  வீட்டில் எலக்ட்ரிக்கல் பொருட்கள் பழுதானால் அதனை முதலில் எவ்வாறு சரிசெய்வது என்று தெரிந்துகொண்டு நானே சரிசெய்வேன். பின்னர் பள்ளியில் வைக்கக்கூடிய அறிவியல் கண்காட்சியில் எனக்குத் தெரிந்த அறிவியல் சார்ந்த பொருட்களைச் செய்துவைப்பேன். எனது ஆசிரியர்கள் என்னைப் பாராட்டி நிறைய கண்டுபிடிப்புகள் செய்ய ஆலோசனைகள் வழங்கினார்கள்.

நீண்ட தூரம் வீட்டிலிருந்து பள்ளிக்கு நடந்து வருவதால் அது எனக்கு சிரமமாக இருந்தது. எனவே, எங்கள் வீட்டில் இருந்த சைக்கிளை வண்டியாக மாற்ற முயற்சி செய்தேன். அதற்காக பைக் பட்டறைக்குச் சென்று பழைய இருசக்கர மோட்டாரை 2,000 ரூபாய் கொடுத்து விலைக்கு வாங்கி இந்த மோட்டார் சைக்கிளை உருவாக்கினேன். இந்த மோட்டார் சைக்கிள் எடை குறைவாக இருப்பதால் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 80 முதல் 90 கிலோ மீட்டர் வரை செல்கிறது.

இந்த வண்டியை நான் உருவாக்க பள்ளி தலைமை ஆசிரியரும், ஆசிரியர்களும் உதவி செய்தார்கள். பள்ளி விடுமுறை நாட்களில் எங்கள் பகுதியில் உள்ள இருசக்கர வாகனங்களைப் பழுது நீக்கித் தருவேன். இதன் மூலம் கிடைக்கும் ரூபாயை என் அம்மாவின் வீட்டுச்செலவிற்கு தருவேன்’’ என்று கடகடவென சொல்லி முடித்தான்.

மாணவனின் திறமைகளைப்பற்றி பள்ளி தலைமை ஆசிரியர் இரா.சுப்ரமணியம் கூறுகையில், ‘‘எங்கள் பள்ளி கிராமப்புறத்தில் அமைந்துள்ளது. மாணவர்கள் நீண்ட தொலைவிலிருந்து வருகிறார்கள். பேருந்து வசதி கிடையாது. இங்கு கல்வி பயிலும் மாணவர்கள் மிக ஏழ்மையான குடும்பத்தைச் சார்ந்தவர்கள்தான். பத்தாம் வகுப்பு பயிலும் அறிவழகன் முதல் வகுப்பில் இருந்தே எங்கள் பள்ளியில்தான் படித்து வருகிறான்.

அவன் சிறுவயது முதலே அறிவியல் மற்றும் கண்டுபிடிப்புகளில் ஆர்வமாக  இருந்ததை கண்டறிந்து எங்கள் பள்ளி ஆசிரியர்கள் அவனை அனைத்து அறிவியல் கண்காட்சி மற்றும் போட்டிகளில் பங்குபெறச் செய்தனர். இதன் விளைவாக இவன் இன்று இந்த வாகனத்தை உருவாக்கியுள்ளான். இதுமட்டுமில்லாமல் இம்மாணவன் நன்றாக ஓவியம் வரையும் திறமையும் பெற்றவன்.

இவனைப் போன்ற மாணவர்களை அரசும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் ஊக்குவித்தால் அறிவியல் உலகிற்கு நிறைய கண்டுபிடிப்புகள் கிடைக்கும்’’ என்றார் தலைமை ஆசிரியர்.

வகுப்பு ஆசிரியர் சு.தங்கவேல் கூறுகையில், ‘‘மாணவன் அறிவழகன் மிகத் துடிப்பான மாணவன். ஏழ்மையான குடும்பத்தில் இருந்து வந்த அவனது குடும்பத்தில் யாரும் கல்வி கற்கவில்லை, சிறுவயதிலேயே தந்தையை இழந்த அவனை எங்கள் பள்ளி நிர்வாகமும் ஆசிரியர்களும் ஊக்கப்படுத்தி வருகின்றோம். படிப்பிலும் அவன் திறமையானவன்.

நான்காம் வகுப்பு முதல் தனது அறிவியல் கண்டுபிடிப்புகளை பள்ளியிலும் வெளியிலும் நடைபெறும் அறிவியல் கண்காட்சிகளில் காட்சிபடுத்துவான். அவனது தற்போதைய கண்டுபிடிப்பான இந்த மோட்டார் வாகனத்தை கண்டு நாங்கள் அனைவரும் வியந்தோம். மாணவன் அறிவழகனை மென்மேலும் ஊக்கப்படுத்த வேண்டும். எங்கள் பள்ளி மாணவனின் திறமைகளை நினைத்து நாங்கள் மிகவும் பெருமைப்படுகிறோம்’’ என்று மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

- தோ.திருத்துவராஜ்