குழந்தைகளிடம் அதிகாரம் செலுத்தாதீர்கள்!



ஆலோசனை

முந்தைய காலகட்டத்தை விட தற்போது உள்ள குழந்தைகள் பல மடங்கு அறிவு பெற்றவர்களாகவும், தொழில்நுட்பங்கள் அறிந்தவர்களாகவும் உள்ளார்கள். குழந்தைகளிடம் கணினி குறித்த அறிவு அதிகமாக உள்ளது.

அவர்களின் விளையாட்டுகள் எதார்த்தமாக இல்லாமல் கற்பனைகள் நிறைந்ததாகவும், அச்சுறுத்துவதாகவும் உள்ளன. எப்போதும் பிறரைத் துன்புறுத்தி மகிழ்வதாக உள்ளன. இதற்காக அவர்களை தண்டிப்பதோ , கண்டிப்பதோ நியாயமாகாது.

அதே சமயம் குழந்தைகளை தண்டிக்கவோ, கண்டிக்கவோ கூடாது. மனதளவில் துன்பப்படும்படி கூட பேசுவது குற்றமாகும் என தற்போதைய கட்டாய இலவசக் கல்வி உரிமைச் சட்டம் கூறுகின்றது.

கல்வியில் தண்டனை என்பது தேவையில்லாத ஒன்று என்றே கருதுகின்றேன். வள்ளென்று விழுவது கூட குழந்தைகளின் மனதை புண்படுத்தும் என்பது உண்மை. கோபப்பட்டு பேசுவது குழந்தைகளின் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தும். அப்புறம் குழந்தைகளுக்கு எப்படித் தான் பாடம் கற்றுத் தருவது?! 

இது ஆசிரியருக்கு மட்டும் அல்ல. பெற்றோர்களுக்கும் ஒரு சிக்கலே! முந்தைய காலத்தில் தவறு செய்தால், ஆசிரியரிடம் கூறி தோலை உரித்துவிடுவதாக பயமுறுத்துவார்கள். ஆனால், இன்று அப்படி கூறுவது சாத்தியமில்லாத ஒன்று. குழந்தைகளை கையாள்வது என்பது பெரும் சிக்கலாகவே உள்ளது. அடிக்காமல் திருத்துவது இயலாது என்பது பொது கருத்தாகவே இருக்கின்றது! 

உடல்ரீதியான தண்டனை எதிர்மறை விளைவையே தரும். அது லேசான பிரம்படியாக இருக்கலாம், இதனால் எந்த நன்மையும் குழந்தையிடம் ஏற்படப்போவதில்லை. ஏனெனில், அது குழந்தைகளின் மனதில் எதிர்மறை விளைவையே ஏற்படுத்தும். அதிகாரத்தை நிலைநிறுத்த பிறர் மேல் எந்த வித உடல்ரீதியான தாக்குதலை செய்வதும் சரி என்ற முடிவிற்கு குழந்தைகள் செல்லக்கூடும்.

ஒரு குடும்பத்தில் தாயோ அல்லது தந்தையோ, தம் குழந்தை செய்யும் சிறிய தவறுக்கு கூட அடித்து, தண்டித்து வளர்க்கின்றார் என வைத்துக் கொள்வோம். அந்த வீட்டில் அவர் இருக்கும்போது மயான அமைதி நிலவும். அதே வேளையில் அவர் சென்றதும், அக்குழந்தை தன்னுடன் பிறந்த பிற குழந்தையுடன் விளையாடும் போது கட்டாயம் சண்டையிட்டு துன்புறுத்தியே விளையாடும். இந்த பழக்கம் வெளியிலும் தொடரும்.

தான் சொல்வதைத் தான் கேட்க வேண்டும் என்ற அதிகார மையத்துடன் வளரும் குழந்தை ஏற்படுத்த போகும் ஜனநாயகத்தை யோசித்துப் பார்த்ததுண்டா? குழந்தைகளிடம் இருக்கும் சேட்டைகள், தவறு களை நீக்க பெற்றோரும் ஆசிரியர்களும் குழந்தைகளிடம் நற்பண்புகளை உருவாக்க வேண்டும். இது எப்படி சாத்தியம்? குழந்தைகளை அவர்களின் இயல்பான போக்கில் விட்டுவிட வேண்டும் என்று கல்வியாளர் ரூசோ  கூறுகின்றார்.

ஆம்! குழந்தைகள் முரட்டுத்தனமாக விளையாடுவதால் ஏற்படும், சிறுசிறு காயங்கள் குறித்து அச்சம்கொள்ளத் தேவை இல்லை. ரூசோ சொல்வது போல் அதன் இயல்பிலேயே அனுமதியுங்கள்.

சிறு காயங்கள் அவர்களுக்கு தகுந்த அனுபவத்தை ஏற்படுத்தும். அந்த அனுபவங்கள் குழந்தைகளுக்கு தன் தவறினால் ஏற்பட்ட விளைவுக்கான புரிதலை உண்டாக்கும். நீங்கள் அவர்களிடத்தில் குறையாத அன்பையும் பாசத்தையும் நேசத்தையும் மட்டும் காட்டுங்கள். குழந்தைகளிடம் அதிகாரம் செலுத்துவதை தவிர்த்திடுங்கள். அதுதான் உங்கள் குழந்தையின் குணத்தைச் சீரமைக்கும்.

- சரவணன் கருப்பையா