மாவட்ட சுகாதார தூதுவரான அரசுப் பள்ளி மாணவி!



சாதனை

நகரமயமாக்கலில் கிராமங்கள் எல்லாம் கான்கிரீட் கட்டடங்களாக மாறிவருகின்ற நிலையிலும் இந்தியாவில் உள்ள கிராமப்புற மக்கள் இன்றைக்கும் பொதுவெளி மற்றும் புதர் மறைவுகளில் இயற்கை உபாதைகளைக் கழிப்பது வழக்கமான ஒன்றாகவே இருந்துவருகிறது.

நகரங்களில் கழிவுநீரும், கிராமங்களில் இதுபோன்ற நிகழ்வுகளும் சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி வருகின்றன. இந்தச் சீர்கேட்டை மாற்றியமைக்க இந்திய அளவில் முடியாவிட்டாலும் தன் கிராமத்தை மட்டுமாவது மாற்றிவிட முனைந்திருக்கிறார் ஒரு மாணவி.

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகேயுள்ள சேது நாராயணபுரத்தைச் சேர்ந்த அரசுப் பள்ளி மாணவி ரமாதேவி தன் வீட்டில் தனிநபர் கழிவறையைக் கட்டவைத்ததோடு அந்தக் கிராமத்தில் பாதிக்கும் மேற்பட்ட வீடுகளில் கழிவறைகளைக் கட்டவைத்து சாதனை படைத்திருக்கிறார். அவரது சேவையைப் பாராட்டி மாவட்ட ஆட்சியர் அ.சிவஞானம் மாவட்ட‘சுகாதார தூதுவர்’என நியமித்ததோடு விருது வழங்கி கவுரவித்துள்ளார்.

எப்படி திடீரென்று இப்படி ஓர் எண்ணம் வந்ததென்று மாணவி ரமாதேவியிடம் கேட்டபோது, ‘‘நான் வத்திராயிருப்பிலுள்ள நாடார் மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறேன். எனக்கு ஒரு தங்கையும், தம்பியும் உள்ளனர். அவர்களும் என்னோடு அதே பள்ளியில் படித்துவருகின்றனர். கடந்த ஆண்டு 9-ம் வகுப்பு படிக்கும்போது ஒருநாள் எங்கள் வகுப்பில் உள்ளவர்களில் யார் யார் வீடுகளிலெல்லாம் கழிப்பறை உள்ளது என அறிவியல் ஆசிரியை சுமதி கேட்டபோது, நான் தலைகுனிந்திருந்தேன்.

எனக்கு அது அவமானமாகப்பட்டது.  இனிமேல் எதற்கும் தலைகுனியக்கூடாது என அன்று மனதுக்குள் சின்னதாக ஒரு சபதம் எடுத்துக்கொண்டேன். பல்வேறு நோய்கள் வருவதற்கு நம் மக்களிடம் சுகாதாரம் குறித்த போதுமான விழிப்புணர்வு இல்லாததே காரணம் என்பதும் மனதில் ஓடிக்கொண்டிருந்தது..

பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்ததும் வகுப்பறையில் நடந்ததை எனது பெற்றோர்களிடம் கூறி கழிப்பறை கட்டுவது குறித்துப் பேசினேன். அவர்களோ நாம் கூலித்தொழிலாளர்கள், பணத்திற்கு என்ன செய்வது எனச் சொல்லி வருத்தப்பட்டனர்.

ஆனால், அரசாங்கம் பண உதவி செய்கிறது என்றும் பொதுவெளியில் சிறுநீர் மற்றும் மலம் கழிப்பதால் என்னென்ன சுகாதாரச் சீர்கேடுகள்  ஏற்படுகிறது என்பது குறித்தும் விளக்கிச் சொல்லி எப்பாடுபட்டாவது தனிநபர் கழிப்பறை கட்டுவதற்குச் சம்மதிக்க வைத்தேன்.

பின்னர் எனது பெற்றோரை அழைத்துக் கொண்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகம் சென்று விசாரித்தபோது, தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் தனிநபர் இல்லக் கழிப்பறை கட்ட ரூ.12 ஆயிரம் கொடுக்கப்படுவதைத் தெரிந்துகொண்டு அதற்கான வேலையில் இறங்கினோம். தற்போது எங்கள் வீட்டில் கழிப்பறை கட்டப்பட்டுள்ளது’’ என்று உற்சாகத்தோடு தெரிவித்தார் ரமாதேவி.

கிராம மக்களிடம் விழிப்புணர்வு ஏற்பட மேற்கொண்ட செயலை விவரித்தபோது, “எங்கள் வீட்டில் கட்டியது போலவே எங்கள் ஊரில் ஒவ்வொரு வீட்டிலும் கழிப்பறை கட்ட வைக்க வேண்டும் என்ற உறுதியோடு எனது சக மாணவிகளிடமும் இதுகுறித்துப் பேசினேன்.

அவர்கள் உதவியோடு கிராமத்தில் உள்ள பெரியவர்களிடமும் பேசியதால், தற்போது எங்கள் ஊரில் பாதிக்கும் மேற்பட்ட வீடுகளில் கழிப்பறைகளைக் கட்டியுள்ளனர். மற்றவர்கள் கட்டிக்கொண்டிருக்கின்றனர். இனிமேல், இயற்கை உபாதைகளைக் கழிக்க யாரும் புதர் மறைவுப் பகுதிக்குச் செல்லமாட்டார்கள்.

எங்கள் கிராமம் மட்டுமில்லாமல் மாவட்டம் முழுவதும் இதுகுறித்த விழிப்புணர்வு ஏற்பட பிரசாரம் செய்வேன். எங்கள் கிராமத்தில் தனிநபர் கழிப்பறை இல்லாத வீடுகளே இருக்கக்கூடாது, அதைச் செய்துகாட்டுவதே எனது லட்சியம்’’ எனத் தெளிவான குரலில் பேசி முடித்தார்.மாணவி ரமாதேவியின் தலைமை ஆசிரியர் இரா.முருகன் கூறுகையில், ‘‘மாவட்ட சுகாதாரத் தூதுவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது எங்கள் பள்ளி மாணவி என்பதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன்.

வகுப்பறைகளில் பாடம் நடத்தும்போது அதை ஒரு தகவலாக மட்டும் எடுத்துக்கொள்ளாமல் அதை உள்வாங்கி செயல்படுத்த முயலுவதே திறமையான மாணவர்களுக்கு அழகு. அந்தவகையில், எங்கள் பள்ளி அறிவியல் ஆசிரியை சுமதி, சுகாதார சீர்கேடு குறித்து பாடம் நடத்தும்போது தனிநபர் கழிப்பறை கட்டுவதற்கு அரசு பண உதவி செய்கிறது, நாம் அதைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதுபோன்ற தகவல்களைக் கூறியுள்ளார்.

இதை மனதில் ஆழமாகப் பதியவைத்துக்கொண்ட மாணவி ரமாதேவி அதை செயல்படுத்தி தன் வீட்டில் மட்டுமில்லாது கிராம மக்கள் அனைவருக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தி பெருமை சேர்த்துள்ளார். அவருக்கு மீண்டும் என்னுடைய வாழ்த்துகள்’’ என்றார். ஒரு மாவட்டத்துக்கு சுகாதார தூதுவராக ஓர் அரசுப் பள்ளி மாணவி நியமிக்கப்பட்டிருப்பது அம்மாவட்டத்திற்கே கவுரவம். அம்மாணவிக்கும் மாவட்ட ஆட்சியருக்கும் ஒரு கிரேட் சல்யூட்.

- தெ.சு.திலீபன்,
புகைப்படம்: நாகராஜன்