குழந்தைப் பருவத்து இயல்பை இழக்கும் பிள்ளைகள்!
அலசல்
ஓர் எச்சரிக்கை ரிப்போர்ட்!
ஒருவரின் வாழ்க்கையில் அதிக மகிழ்ச்சியான காலம் எதுவென்றால் அது குழந்தைப் பருவம்தான். ஆனால், இன்றைய வாழ்க்கைமுறையில், படிக்க வேண்டும், வேலை தேட வேண்டும், பணம் சம்பாதிக்க வேண்டும் என இன்ன பிற தேவைகளுக்காக மனித வாழ்க்கை இயல்பாக இல்லாமல் இயந்திரத்தனமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
 இதில், இயல்பாகக் கற்றுக்கொள்ளவும், பேசவும், விளையாடவும் வேண்டிய குழந்தைகளுக்கு அரசியல், பொருளாதார நெருக்கடிகளில் சிக்கித் தவிக்கும் பெற்றோர்கள், ஆசிரியர்கள், இந்த சமூகம் மூலம் கொடுமைகள் இழைக்கப்படுகின்றன என்று ஆதங்கப்படுகின்றனர் சமூக ஆர்வலர்கள். அவர்களின் கருத்துகளில் வெளிப்படும் உண்மைகளை இனி பார்ப்போம்…
சமூக ஆர்வலர் ஷ்யாம் சுந்தர், குழந்தைநேயப் பள்ளி.நாம் எல்லோருமே குழந்தைப் பருவத்தைக் கடந்து வந்திருக்கிறோம். மற்றவர்கள் நம்மைப்பற்றி என்ன நினைப்பார்கள் என்பது பற்றிய கவலை சிறிதுமின்றி, குழந்தைப் பருவத்திற்கே உரிய இயல்பை ஒட்டிய துறுதுறுப்புடன் புதியவற்றை தேடி கற்பதிலும்,விருப்பமான வகையில் ஓடி ஆடி பாடி மகிழ்ந்து அப்பருவத்தைக் கடந்து வந்திருக்கின்றோம். ஆனால் இன்றைய குழந்தைகளில் பெரும்பாலானோர் அப்பருவத்தை முழுமையாக அனுபவிக்காமல் ஏதோ ப்ரோக்ராம் செய்து முடுக்கிவிடப்பட்ட இயந்திரங்களாகவே வளர்ந்துவருகிறார்கள்.
 வேலைக்குச் செல்லும் பெற்றோர்கள் தங்கள் அவசரத்தோடு குழந்தைகளையும் அவசர அவசரமாக கிளப்பி பள்ளிக்கு அனுப்பி வைப்பதில் தொடங்கி பள்ளி முடிந்து மாலை வீடு வந்ததும் டியூஷன் என முடிகிறது ஒவ்வொருநாளும்.
சனி ஞாயிறு கூட சிறப்பு வகுப்புகள் பயிற்சிகள் வேறு. யூ.கே.ஜி படிக்கும் என் உறவினர் குழந்தை அம்மாவிடம் “அம்மா சனி ஞாயிறுகூட நிம்மதியா விடமாட்டறீங்களே”என அழுதது. இரண்டுநாளும் பேட்மிண்டன் பயிற்சியாம். அதுவும் மதியம் இரண்டுமணிக்கு. இதற்கு மாதம் இரண்டாயிரம் கட்டணமாம்.
இன்று நகரம் கிராமம் என்ற வேறுபாடில்லாமல் குழந்தைகளின் மதிப்புமிக்க இயல்புத்தன்மையை முறிக்கும் வேலையை பெற்றோர்களே செய்துவருகின்றனர். அதிக மதிப்பெண் வாங்கவேண்டும் என்பதற்காகவும் நாம் விரும்பும் கலை, விளையாட்டு போன்றவற்றில் முதலிடம் பெறவேண்டும் என்பதற்காகவும் குழந்தைகளுக்கு நெருக்கடி கொடுத்துவருகிறோம். இதுவே குழந்தைகளை நெருக்கடிகளிலிருந்து தப்பிக்க பொய் சொல்லுதல், ஏமாற்றுதல், புறங்கூறுதல் போன்ற குணங்களைப் பெறுவதற்குக் காரணமாகின்றது.
குழந்தைப் பருவத்தின் இயல்புத் தன்மையான சுதந்திரமாக ஆடுதல், பாடுதல், உடைத்தல், கிறுக்குதல் போன்றவையே படைப்பாற்றல் திறனை உருவாக்குவதாக கூறுகிறார்கள். அப்படிப்பட்ட இயல்புத்தன்மையை அனுபவிக்காத குழந்தைகள் முதியவர்களைப்போல தன்னை பிறரோடு ஒப்பிட்டு உயர்த்திக் காண்பித்துக்கொள்ள வாழ்நாள் முழுவதும் போராடுபவர்களாகவே வளர்கிறார்கள்.
பிற குழந்தைகளோடு ஒப்பிடுவதன் மூலம் மற்றவர் சிந்தனைகளையும் நம்பிக்கைககளையும் குழந்தைகள் மீது திணிக்கக்கூடாது. இயல்பாக விளையாடுவதை மறுக்கக் கூடாது. உறவுகளோடு சேரவிடாமல் தனிமைப்படுத்தி வீட்டின் செல்லப் பிராணிபோல் வளர்க்காமல் சகவயது குழந்தைகளோடு பழகி விளையாடவும் உறவுகளோடு தொடர்புகொள்ளவும் அனுமதிக்கவேண்டும். டாக்டர் த.முஹம்மது கிஸார், குழந்தைகள் நல மருத்துவர்.
பொதுவாக குழந்தைகள், தனக்குத் தேவையானதை தானே கற்றுக்கொள்ளும் திறமை பெற்றவர்கள். உதாரணமாக, பிறந்தவுடன் அழுதால்தான் நுரையீரல் வேலை செய்யும் என்பதற்காக, தானாகவே அழுகிறது. அதுபோல் சிரிக்க, தலை நிற்க, தவழ, உட்கார, நடக்க என அனைத்தையும் தானாகவே செய்கிறது. நாம் அதை முறைப்படுத்த மட்டுமே செய்கிறோம்.
அதுபோல் அதன் சக்திக்குட்பட்டு கல்வியைத் தானாகவே கற்றுக்கொள்ளும் திறமை உண்டு. ஆனால், இந்தக் காலத்துப் பெற்றோர்கள் கல்வியில் தன் குழந்தை உச்சத்தை அடைய வேண்டும் என்ற பேராசையில் அதன் சக்திக்கு மீறி கல்வியை வெறிகொண்டு திணிப்பதால், குழந்தைகள், தாங்கள் குழந்தைகள் என்ற தனித்துவ அடையாளத்தை இழந்து ரோபோக்கள்போல் ஆகிவிடுகின்றன.
முறையான சரியான விளையாட்டு பயிற்சிகள் இல்லாமல் எந்நேரமும் படிப்பிலேயே மூழ்கி இருப்பதால் அதன் விளைவாக மன அழுத்தத்தால் உடல் பருமன் ஏற்பட்டு தொற்றுநோய்கள் ஏற்படுகின்றன.
பெற்றோரின் அதிக எதிர்பார்ப்பை படிப்பில் நிறைவேற்ற முடியாமல் போகும்போது, ஒருவகையான மனச்சோர்வு. இதனால் படிப்பில் கவனம்கொள்ள முடியாமல் கற்றல் குறைபாடு ஏற்படுகிறது. இறுதியில் ஒரு மனநோயாளியாக அனைத்துக் குழந்தைப் பருவ மகிழ்சிகளையும் இழந்து எதிர்காலத்தில் சமூக விரோதச் செயலில் ஈடுபடும் அபாயமும் உள்ளது.
பெற்றோர்கள் தங்கள் குழந்தையின் திறமை அறிந்து, அதற்கேற்ப கல்வி கற்க அனுமதிக்க வேண்டும். நன்றாகப் படிக்கும் குழந்தையை ஒப்பிட்டு, தங்கள் குழந்தையை திட்டுவதை நிறுத்த வேண்டும். கல்வி கற்பதில் அதிக எதிர்பார்ப்பு, மற்ற குழந்தையுடன் ஒப்பிடுவதைத் தவிர்த்து, அதன் தகுதிக்கேற்ப கல்வி பயில அனுமதித்தால் எல்லா குழந்தைகளும் அவர்கள் விரும்பும் ஏதோ ஒரு துறையில் நிபுணத்துவம் பெற்றவர்களாக வருவார்கள்.டாக்டர் வெங்கடேஸ்வரன், குழந்தைகள் மனநல நிபுணர்.
நிம்ஹான்ஸ் (NIMHANS) என்ற அமைப்பு 2005-ல் நடத்திய கருத்துக்கணிப்பில் 12.5% குழந்தைகளுக்கு மனநல ரீதியான தொந்தரவுகள் இருக்கின்றன என கண்டறியப்பட்டது. இதற்கு பல காரணங்கள் உண்டு. அதில் ஒன்று அதிகப்படியான மன அழுத்தம். சிறு வயதிலேயே அதிகப்படியான வேலைப் பளு (படிப்பு சம்பந்தப்பட்ட), பெற்றோர்கள் சரியாக நேரம் ஒதுக்காதது போன்றவை இதன் முக்கிய காரணம்.
1980-கள் மற்றும் அதற்கு முன்பும் ஐந்து வயதிற்கு பிறகே குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவார்கள். ஆனால், இன்று 2-2½ வயதிலிருந்தே பள்ளிக்குச் செல்லும் சூழ்நிலை. முதல் ஓராண்டு விளையாட்டு கல்வியாக இருந்தாலும் (Play School) அதன் பிறகு கல்விச் சுமை அதிகரித்தவண்ணம் உள்ளது. வீட்டுப்பாடம், சிறப்பு பயிற்சி என சிறு வயதிலிருந்தே வேலைப் பளு மிக அதிகமாக உள்ளது. இதன் காரணமாக குழந்தைகளுக்கு விளையாட போதுமான நேரம் இருப்பதில்லை.
WEF (World Economic Forum) 2016-ம் ஆண்டு நடத்திய ஆய்வில் பின்லாந்து (Finland) கல்வியில் உலகளவில் முதல் இடம்பெற்றுள்ளது. அந்நாட்டில் 5-6 வயது வரை பள்ளி படிப்பு கிடையாது. பின்வரும் வகுப்புகளில் வீட்டுப்பாடத்திற்கு வாரம் 2-3 மணி நேரம் மட்டும் செலவிட்டால் போதும்.
பாடத்திட்டமும் படிப்பில் மட்டும் இல்லாமல் பிற கல்வி சார்ந்த, குழந்தைகளின் வளர்ச்சிக்கு உதவும் Personality, Analytical Skills, Problem Solving போன்ற பிரிவுகள் இருக்கின்றன. இதனால் மாணவர்களின் மன அழுத்தம் மிகக் குறைவாக உள்ளது. மேலும் அவர்கள் குழந்தைப் பருவத்தை இனிமையாக கழிக்கும் சூழல் உள்ளது.
இன்றைய பொருளாதார சூழலால் தாய் தந்தை இருவருமே வேலைக்குச் செல்லும் சூழல் ஏற்பட்டுள்ளது. அதனால் குடும்பத்துடனும், குழந்தைகளுடனும் செலவிடும் நேரம் குறைவாக உள்ளது. இதனால் குழந்தைப் பருவத்தில் இயல்பாக கிடைக்கவேண்டிய இனிய தருணங்களை இழக்க நேரிடுகிறது.
அதிலும் இப்போதெல்லாம் குழந்தைகளும் mobile phone, video games போன்றவற்றிற்கு அடிமையாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே, குழந்தைகள் தங்கள் குழந்தை அல்லது மாணவப் பருவத்தை இனிமையாக கழிப்பதற்கு, சிறப்பான வளர்ச்சிக்கும் சில மாற்றங்கள் தேவை.
1. நமது கல்வி முறையில் மாற்றம் இன்றியமையாதது 2. பெற்றோர்கள் குழந்தைகளுடன் அதிக நேரம் செலவிட வேண்டும். 3. குழந்தைகளுக்கு ஏற்படும் ஆபத்தைக் குறைக்க அரசு மற்றும் சமூகம் முன்வர வேண்டும். ஆதலால் பெற்றோர்களே சிந்தித்து செயல்படுங்கள், பிள்ளைகளின் விருப்பு வெறுப்புகளைப் புரிந்து வழிநடத்துங்கள்.
- தோ.திருத்துவராஜ்
|