மாணவர்களைப் பண்பட்ட மனிதர்கள் ஆக்குவோம்!ஆலோசனை

கல்வியின் முக்கிய நோக்கம் சுய சிந்தனையைத் தூண்டுவதாகும். ஆனால் இன்று நாடெங்கிலும் கல்வி நிறுவனங்கள் பள்ளிக்குழந்தைகளைப் பந்தயக் குதிரைகளாக்கி தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று வென்று கல்விச்சந்தையில் விலைபோகின்ற ஒரு பொருளாக மாற்றிவருகின்றன. இப்போக்கு எதிர்கால சமூகத்திற்கு உகந்தது அல்ல.

ஒவ்வொரு பெற்றோரும் தன் குழந்தை நாட்டிலேயே அதிக கட்டணம் வசூலிக்கும் (உலகத்தரமான!) பெரிய பள்ளியில் படித்து அதிக மதிப்பெண் பெற்று முதல்கட்ட போட்டியில் வென்று விடவேண்டும். அடுத்து நாடு தழுவிய நுழைவுத் தேர்விலும் வென்று மருத்துவக் கல்லூரியிலோ இந்தியத் தொழில்நுட்ப நிறுவனம் போன்ற உயர்கல்வி நிறுவனங்களிலோ இடம்பிடித்து இரண்டாம் கட்ட போட்டியிலும் வென்றுவிடவேண்டும்.

இத்தோடு போட்டி முடிந்ததா? என்றால் இல்லை. மீண்டும் மேற்படிப்புக்கான போட்டி தொடங்கிவிடும் அதற்கான நுழைவுத் தேர்வுக்கு அண்டை மாநிலங்களில் உள்ள கோச்சிங் மையங்களில் சில ஆயிரங்களைச் செலவழித்து மூன்றாம் நிலைப்போட்டிக்கு விரட்டப்படுவார்கள்.

பல போட்டிகளிலும் வெற்றி பெற்று வேலைக்குச் சென்றால் அங்கும் தொழில் போட்டி தொடங்கிவிடும். இப்படி மிகச்சிறந்த மனிதர்களை உருவாக்க வேண்டிய கல்வித்துறை மிகச்சிறந்த போட்டியாளர்களை உருவாக்கி சமுதாயத்தைப் போட்டி மைதானமாக்கிவிடுகிறது.

மாணவனாக இருக்கும்போது போட்டிபோட்டே பழக்கப்பட்டவன் மனிதனாக வாழும்போதும் வாழ்க்கைப் பயணத்தில் போட்டி யாளனாகவே மூச்சிரைக்க ஓடிக்கொண்டிருக்கிறான். இதற்காகவா ஆசைப்பட்டான் அவன். நாம் கல்வி என்ற பெயரில் போட்டியிட தயார்ப்படுத்திவிட்டதன் விளைவு வாழ்க்கையை வாழாமல் அனுபவிக்காமல் பெற்றோரை உறவுகளைத் தொலைத்து பணம் ஒன்றே குறியாக எந்த நாட்டிற்குச் சென்றேனும் பொருளை ஈட்டி மற்றவர்களை விட வசதியானவனாக செல்வச்செழிப்புள்ளவனாக வாழ்ந்துகாட்ட வேண்டும் என்ற வெறியை ஏற்படுத்திவிட்டிருக்
கிறது நம் கல்வி!

வகுப்பறையில் கற்கும் ஒவ்வொரு பாடமும் மாணவர்கள் பெரியவர்களாகும்போது அவர்களின் வாழ்க்கையை செம்மையாக நடத்துவதற்கு சிறிதளவாவது பயன்பட வேண்டும். அவனோடு வாழும் சக மனிதனுக்கு அவனால் இயன்ற உதவிகளைச் செய்திடவும் விட்டுக்கொடுத்து வாழவும் இக்கல்வி நிச்சயம் உதவப்போவது இல்லை. பிறகு ஏன் நாடு முழுவதும் இத்தனை கல்வி நிறுவனங்கள்? இதனை யோசித்த மிகச்சிலர் கல்வி நிறுவனங்களை நம்பாமல் தங்களின் குழந்தைகளின் விருப்பப்படி வளர விடுகின்றனர். வீட்டிலிருந்தபடி விருப்பம்போல்
கற்கும் திறந்தவெளிப் பள்ளிகளை நாடுகின்றனர்.

இதே நிலை நீடித்தால் மிகச்சிலராக இருக்கும் பெற்றோர்களின் எண்ணிக்கை பலவாக மாறும். இந்த நிலை மாறவேண்டுமென்றால் நம் மாணவர்களின் அடிப்படைத் திறன்களோடு அவர்களின் உயர்நிலைச் சிந்தனைத் திறனையும் வளர்க்கவேண்டும் என்பது காலத்தின் கட்டாயம். இது எப்படி சாத்தியமாகும் எனில் கல்வித்துறையில் கற்பித்தலில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் மனது வைத்தால் மட்டுமே நிறைவேறும்.

ஆசிரியர் என்பவர் கல்வியைக் கற்பிப்பவர் என்பது பழைய கோட்பாடு. தொழில்நுட்பம் நாளுக்கு நாள் வளர்ந்து வரும் இன்றைய சூழலில் ஆசிரியர் என்பவர் மாணவர்களுக்கு கற்பதற்கான சூழலையும் வசதி வாய்ப்புகளையும் உருவாக்கித்தருபவர் மட்டுமே. கணக்கு ஆசிரியர் என்பவர் மாணவர்களின் சிந்தனையை கணிதமயமாக்குபவராக மாறவேண்டும். இப்படி ஒவ்வொருவரும் செயல்பட்டால் மாணவர்களின் சுய சிந்தனையும் வளரும் அவர்களிடம் உயர்நிலைச் சிந்தனைத்திறனும் தானாக வளரும்.

இதற்கான முயற்சியில் தமிழ்நாட்டுக் கல்வித்துறையும் ஈடுபட்டுள்ளது வரவேற்கத் தகுந்த அம்சமாகும். பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் ஆசிரியர்களுக்கு நட்த்தப்பட்ட பயிற்சியில் மாணவர்களின் உயர்நிலைச்சிந்தனைத்திறனை மேம்படுத்துவது எப்படி என்பதே மையப்பொருளாக அமைந்தது.

இந்த உயர்நிலைச்சிந்தனைத்திறன் பற்றி நாம் விரிவாக தெரிந்துகொள்வது அவசியம். சிந்தனைகளைக் கல்வியாளர்கள். அடிப்படைச் சிந்தனை, உயர்நிலைச்சிந்தனை என இரு வகைப்படுத்துகின்றனர். அடிப்படைச் சிந்தனை அனைவருக்கும் உண்டு.

உயர்நிலைச்சிந்தனையை ஒரே நாளில் வளர்த்துவிட முடியாது. தொடர் பயிற்சியாலும் விடா முயற்சியாலும் மட்டுமே மேம்படுத்த இயலும். அதற்கு மாணவர்களின் சுய சிந்தனையைத் தூண்டும் வினாக்களை வகுப்பில் கேட்டுக் கேட்டு அவர்களின் சிந்தனையை உயர்நிலைக்குக் கொண்டு செல்லலாம்.

வினாக்கள் கேட்கும்போது நாம் கவனிக்க வேண்டிய ஆறு அம்சங்கள் உள்ளன. அவை 1.நினைவுகூர்தல், 2.புரிந்துகொள்ளுதல், 3.பயன்படுத்துதல், 4.பகுத்து ஆராய்தல், 5.மதிப்பிடுதல்,6.படைத்தல் என்பனவாகும். இதனை ஆய்ந்து வெளிப்படுத்தியவர் அமெரிக்கக் கல்வி உளவியலாளரான பெஞ்சமின் புளூம் என்பவராவார்.

மேற்கண்ட ஆறு கூறுகளை உள்ளடக்கிய வினாக்களை எப்படிக் கேட்கலாம் என்பதற்கு நம் ஆசிரியர்களைத் தயார்படுத்தவே இந்தப் பயிற்சி.ஒரு மனிதனுக்கு வாழ்வில் ஏற்படும் சிக்கல்களைத் தீர்க்க மேற்கண்ட ஆறு கூறுகளும் அவசியமாகின்றன. இது மாணவர்களுக்கும் பொருந்தும்.

கற்கும் கல்வி பள்ளிக்கு வெளியில் எப்படி பயன்படுகிறது என்பதைப் பொருத்தே அக்கல்வியின் உன்னத நிலை மதிப்பிடப்படுகிறது. வாழ்வோடு இணைந்த கல்வியே சமூகத்திற்கும்,கல்வி நிறுவனங்களுக்குமான இடைவெளியைக் குறைக்கும்.

அப்படிப்பட்ட கல்வியே நம் நாட்டுக்குத் தேவை. பொருளீட்ட மட்டுமே வழிவகுக்கும் பன்னாட்டு நிறுவனங்களுக்குத் தேவையான பணியாளர்களை வார்த்தெடுக்கும் கல்விக்கு விடை கொடுப்போம். சுய சிந்தனையை வளர்க்கும் உயர்நிலைச் சிந்தனைத்திறனை மேம்படுத்தும் கல்விமுறையை வரவேற்போம். மாணவர்களைப் பந்தயக் குதிரைகளாக்காமல் பண்பட்ட மனிதர்களாக்குவோம்.

இரத்தின புகழேந்தி