உயிரி தொழில்நுட்பத்துக்கு வளமான எதிர்காலம்!



அலசல்

மனிதன் செயல்பட இதயம் எவ்வளவு இன்றியமையாததோ அதுபோலவே உலக அளவில் உயிரி தொழில்நுட்பவியல் துறையின் பயன்பாடு என்பது மனித குலத்திற்கு இன்றுவரையும் இன்றியமையாததாகவே உள்ளது. மருத்துவம், தொழில்துறை, விவசாயம், உணவு, எரிபொருள் என்பன போன்ற பல்வேறு துறைகளின் அச்சாணியாக இயங்கும் உயிரி தொழில்நுட்பத் துறையானது  சர்வதேச அளவில் அசுர வளர்ச்சியடைந்து வருகிறது. உணவு, தொழில், மருத்துவம் என ஒட்டுமொத்த மனித சமூகத்தின் அடிப்படை ஆதார சக்தியை பயோ டெக்னாலஜி துறை வரையறுப்பதால் இத்தொழில்நுட்ப யுகத்தில் இத்துறையின் முக்கியத்துவம் நாளுக்குநாள் பெருகிவருகிறது.

சமீபத்திய காலங்களில் உலகமெங்கும் நிறுவப்பட்ட பயோ டெக்னாலஜி துறை சார்ந்த தொழில்முனைவுகள், அசாத்திய கண்டுபிடிப்புகள் நவீன உலகை வியப்படையச் செய்வதுடன் தேசத்தின் பொருளாதாரத்தையும் வளமடையச் செய்துவருகிறது.இதுபோன்ற காரணங்களாலும் மனித குலத்தின் அத்தியாவசியத்தின் பொருட்டும் வளர்ந்த நாடுகள் தேசிய அளவில் இத்துறையில் ஆய்வுகள் மேற்கொள்ள பல பில்லியன் டாலர்கள் முதலீடு செய்துவருகின்றன.

உலக அளவில் வேகமாக வளர்ந்துவரும் துறை எனவும், மனித உயிரையும், இயற்கையையும் அடிப்படையாக வைத்து செயல்படுவதால் இந்த டிஜிட்டல் யுகத்திேலயே ‘துல்லியமான நம்பிக்கை பேணும் தொழில்நுட்பம்’ எனவும் இத்துறையை உலக அறிவியலாளர்கள் கொண்டாடிவருகின்றனர்.

பீட்சாவும், பர்கரும் ஃபேவரிட்டாக உண்ணும் இன்றைய வாழ்க்கைச் சூழலில் அதிகரித்து வரும் நோய்களை முன்கூட்டியே களைவதற்காகத் தடுப்பூசிகள், மருந்துகளை அதிக அளவில் உற்பத்தி செய்து சுமார் 40 பில்லியன் டாலர்களை சந்தைப்படுத்தியிருக்கிறது அமெரிக்க அரசு.

மேலும் இதுபோன்ற ஆரோக்கியம் சார்ந்த செயல்பாடுகளால் 100 மில்லியன் மக்கள் பயனடைந்துள்ளனர் என்கிறது சமீபத்திய ஆய்வு ஒன்று. அது மட்டுமில்லாமல் விவசாய-உயிரி தொழில்நுட்பமும் மற்றும் தொழில் துறை உற்பத்தித் துறைகளாலும் மனிதகுல வாழ்க்கையில் மேன்மை கண்டிருக்கிறது.

உலக அளவில் இப்படி பல்வேறு சிறப்புகளைப் பெற்ற பயோடெக்னாலஜி துறையானது வளர்ந்து வரும் நாடான இந்திய நாட்டிலும் அசுரத்தனமாக வளர்ந்து வருவது மட்டுமல்லாது தொழில்துறை முதலீட்டாளர்களையும் ஈர்த்து வருகிறது.

இந்த மாதிரியான செயல்பாடுகளால் வருங்காலத்தில் அதிக அளவில் வேலைவாய்ப்பை உருவாக்கும் துறையாக பயோடெக்னாலஜி துறை இருக்குமென ஆய்வாளர்களால் கணிக்கப்பட்டுள்ளது.

சுகாதாரம், விவசாயம், தொழில்நுட்பம் போன்ற முக்கிய துறைகளில் இந்தியா முன்னேறி வருகின்ற இவ்வேளையில் உயிரி தொழில்நுட்பத்தின் வளர்ச்சியை இலக்காக கொண்டு எடுக்கப்பட்ட புள்ளிவிவரத்தில் சர்வதேச அளவில் இந்தியா  12வது இடத்தையும், ஆசிய அளவில் மூன்றாவது இடத்தையும் பெற்றிருப்பதும் இத்துறையில் மிகப்பெரிய அளவில் வேலைவாய்ப்பு உருவாகும் என்பதை உறுதிசெய்கிறது. உலகிலேயே இரண்டாவது பெரிய சந்தையைக் கொண்டிருக்கும் இந்தியாதான் ஹெபடைடிஸ் பி எனும் தடுப்பூசி உற்பத்தியில் முதன்மை இடத்தில் உள்ளது.

அறிவியல் கண்டுபிடிப்புகள், தொழில்கள், தொழில்நுட்பப் புரட்சிகள் என இயற்கைக்கு நேர் எதிரான  செயல்பாடுகளில் மனித சமூகம் ஈடுபட்டிருக்கும் இக்காலகட்டத்தில் புவி வெப்பமயமாதல், பனிமலைகள் உருகுவது என இயற்கையைப் பாதிக்கும் நிகழ்வுகளும் அரங்கேறுகின்றன.

ஆகையால் இதுபோன்ற இயற்கை சீற்றங்களிலிருந்து புவியை மீட்டெடுப்பதையும் மற்றும்  சுற்றுச்சூழலைப் பேணிப் பாதுகாப்பதையும் முக்கிய அம்சமாக கொண்டு பல்வேறு முயற்சிகளை ஐ.நா அமைப்பு எடுத்துவருகிறது.

வனங்களைக் காத்தல், இயற்கை வளங்களை பேணுதல், அழியும் தறுவாயில் உள்ள இனங்களை காத்தல், சுற்றுச்சூழல் மாசுபாட்டை குறைத்தல், தொழிற்சாலைக் கழிவுகளை சரியான முறையில் வெளியேற்றுதல் ஆகியவற்றை சாத்தியமாக்கும் பொருட்டு  எதிர்காலத்தில் உயிரி தொழில்நுட்பவியல் துறையைச் சார்ந்த சூழலியில் துறையைப் பிரதானமான துறையாக கொண்டு பல்வேறு வேலைவாய்ப்புகள் உருவாகும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

உணவும், ஆரோக்கியமும் மனிதனின் வாழ்க்கையை தீர்மானிக்கையில்,  விவசாயம் மற்றும் மருத்துவப் பொருட்களின் உற்பத் தியைப் பெருக்கும் தொழில்நிறுவனங்களும் உலக அளவில் அதிக எண்ணிக்கையில் பரவ தொடங்கியுள்ளன.

உதாரணமாக விவசாய உரங்கள் உற்பத்தி, மரபணு மாற்றப்பட்ட காய்கள், பூச்சிக் கொல்லிகள், பயோ பிளாஸ்டிக், பயோ டீசல், இயற்கை எரிவாயுக்கள் மற்றும் ஆர்கானிக் விவசாய உபகரணங்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் என உயிரி தொழில்நுட்பம் சார்ந்த தொழில் நிறுவனங்கள் உலகமெங்கும் நிறுவப்படுவதால் தொழில் துறையிலும் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும் நிலைமை உள்ளது. மேலும் மருந்துகள், தடுப்பூசிகள் உற்பத்தி என மருத்துவத் துறையிலும் வேலைவாய்ப்புகள் பிரகாசமாக உள்ளது. மற்றும் பயோ இன்ஃபர்மேட்டிக்ஸ் போன்ற உயிரி தகவலியல் துறையும் வேகமாக வளர்ந்து வருகிறது.

மொத்தத்தில் பயோடெக்னாலஜி துறையில் மற்ற நாடுகளைவிடவும் வேகமாக வளரும் திண்ணம் இந்தியாவிடம் உள்ளது. அதனால்தான் பயோடெக்னாலஜி துறையின் முக்கியத்துவத்தை உணர்ந்து இந்திய அரசே அதை கையிலெடுத்து இந்தியாவை உயிரி தொழில்நுட்பத்தின் அரணாக மாற்ற பல்வேறு நடவடிக்கைகளை செய்துகொண்டு வருகிறது. ஆகவே, தற்போது உயிரி தொழில்நுட்பத்தை தேர்ந்தெடுத்த மாணவர்களுக்கு வளமான எதிர்காலம் காத்திருக்கிறது என்பது மறுப்பதற்கில்லை.

- வெங்கட்