அடடே... ஆங்கிலம் இவ்வளவு ஈஸியா..!மொழி

Trouble the Trouble Till the Trouble Troubles

டிபன் பாக்ஸில் கொண்டு வந்த சப்பாத்தியை ரகு சாப்பிட்டுக்கொண்டிருந்தபோது, “ஒரு படத்துல ஹீரோவை ஜெயில்ல போட்ருவாங்க சார். அப்ப அவரு சொல்றாருங்க சார் ஒரு டயலாக். அதாவது, Don’t trouble the trouble. If you trouble the trouble, the trouble will trouble you and I am not a trouble but a truth. அப்படின்னு அவரு சொல்ற வசனத்தைக் கேட்டு புரியாமலயே பயங்கரமா கை தட்டினேன் சார். 

ஆனா இப்ப நீங்க சொன்ன பிறகுதான் நல்லா புரியுதுங்க  சார். அதாவது, Trouble the trouble till the trouble troubles அப்படின்னா சங்கடமே சங்கடப் படுற அளவுக்கு நீ சங்கடத்துக்கு சங்கடம் குடுக்கணும்” என்றவாறே வந்தமர்ந்த ரவியைப் பார்த்து, “இப்ப என்ன சங்கடம் குடுக்கறதுக்கு நீ வந்திருக்கிற?” எனக் கேட்டார் ரகு.“வழக்கமான சந்தேகம்தான் சார். Each of the girls are successful. இதுல என்னங்க சார் தப்பு இருக்கு?” என்றான் ரவி.

ரவியைத் திரும்பிப் பார்த்த ரகு “are தப்பு. is தான் வரணும். ஏன்னா each என்பது singular (ஒருமை). அதற்கு பதிலா all the girls என்று வந்திருந்தால் are என்ற வினைச்சொல் சரியாக இருந்திருக்கும். உதாரணத்திற்கு Every one is good. Every student was writing the test. Either of them does not speak. Neither has attended the function. இந்த each, every, either, neither வார்த்தைகள் எல்லாம் ஒருமைதான். எனவே is, was, does, has போன்ற துணைவினைச் சொற்கள்தான் ஜோடி சேர (collocate) முடியுமே தவிர are, were, do, have போன்றவை கலகேட் ஆக வழியில்லை” என்றார்.

“Praveena is one of my best friend என்பதில் என்னங்க சார் தவறிருக்கிறது?” என்றபடியே வந்தமர்ந்தாள் அகிலா. “எங்கே.. அத அப்படியே தமிழ்ல சொல்லு” என்றார் ரகு. ‘‘என் மிகச்சிறந்த தோழிகளில் ப்ரவீணாவும் ஒருத்தி” என்றாள் அகிலா.“க்ரேட்… என் மிகச்சிறந்த ‘தோழிகளில்’ என்றுதானே சொன்னாய். அப்படின்னா friends என்றுதானே வரமுடியும். one of என்று வந்தாலே அடுத்து plural nounதான் வரமுடியும். He is one of my clients. She is one my relatives. Ramu is one of the officers. Got it?....’’ என்று சொல்லிவிட்டு கைகழுவச் சென்றார் ரகு.

சேலம் ப.சுந்தர்ராஜ்