செய்தித் தொகுப்பு



கேம்பஸ் நியூஸ்

நீட் தேர்வு தகவல்கள் தமிழில் வருமா?

பிளஸ் 2 முடிக்கும் மாணவர்கள்,
எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளில் சேர, தேசிய அளவிலான, நீட் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.
வரும் கல்வி ஆண்டுக்கான, நீட் தேர்வு, மே, 6ல் நடக்கும் என, மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை, ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில், சி.பி.எஸ்.இ., வெளியிட்டுள்ளது. தேர்வில், ஆங்கிலம், ஹிந்தியுடன், ஒன்பது மாநில மொழிகளில் எழுத, சலுகை அளிக்கப்பட்டுள்ளது. இதில், தமிழ் மொழியில் எழுதவும், சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு முதல், தமிழகத்தில், அறிவியல் பிரிவில் பிளஸ் 2 படிக்கும், இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள், நீட் தேர்வை எழுத வாய்ப்புள்ளது. தமிழக பாடத்திட்டத்தில் படிக்கும் பெரும்பாலான மாணவர்கள், தமிழ் வழியில் படிக்கின்றனர். இந்த மாணவர்கள் மற்றும் அவர்களுக்கு வழிகாட்டும் பெற்றோருக்கு, எளிதில் புரியும் வகையில், நீட் தேர்வு தகவல் குறிப்பேட்டை, தமிழில் வெளியிட வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள்!

இந்த ஆண்டு பிளஸ்-2 தேர்வில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 6 ஆயிரத்து 903 பள்ளிகளில் இருந்து 8 லட்சத்து 66 ஆயிரத்து 934 மாணவ-மாணவிகள் எழுதுகிறார்கள். இவர்களில் 4 லட்சத்து 3 ஆயிரத்து 176 பேர் மாணவர்கள். 4 லட்சத்து 63 ஆயிரத்து 758 பேர் மாணவிகள். மேலும் தனித்தேர்வர்கள் 40 ஆயிரத்து 682 பேர் எழுதுகின்றனர். சுயநிதி பள்ளிகளில் இருந்து 2 லட்சத்து 12 ஆயிரத்து 439 பேர் எழுதுகின்றனர்.

அதேபோல் இந்த ஆண்டு முதன் முறையாக பிளஸ்-1 தேர்வு அரசு பொதுத்தேர்வாக நடத்தப்படுகிறது. இந்தத் தேர்வை 8 லட்சத்து 61 ஆயிரத்து 913 பேர் எழுதுகிறார்கள். எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை 9 லட்சத்து 64 ஆயிரத்து 441 பேர் எழுதுகின்றனர். அவர்களில் 4 லட்சத்து 83 ஆயிரத்து 80 பேர் மாணவர்கள். 4 லட்சத்து 81 ஆயிரத்து 361 பேர் மாணவிகள்.

தேர்வில் மாணவர்கள் காப்பி அடித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அவர்கள் அடுத்து வரும் 6 தேர்வுகளை எழுத முடியாது. ஆள் மாறாட்டம் செய்தால் போலீசில் அவர்கள் ஒப்படைக்கப்படுவார்கள். தேர்வுக்கூடத்துக்கு ஷூ, சாக்ஸ், காலணி, பெல்ட் அணிந்து வரக்கூடாது. செல்போன் உள்ளிட்ட மின்சாதனங்கள் கொண்டுவரக்கூடாது என்பது போன்ற கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

அரசுப் பள்ளிகளில் வைஃபை வசதி!

மாணவர்களின் நலனுக்காக, சென்னை, காஞ்சிபுரம், கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் 312 இடங்களில் இலவச வைஃபை வசதி செய்துதரப்படும். நாட்டிலேயே முதல்முறையாக தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் வைஃபை வசதி செய்து தரப்பட உள்ளது. மாணவர்களுக்கான விபத்து காப்பீடு திட்டம் அடுத்த மாதம் முதல் நடைமுறைப்படுத்தப்படும். இந்தத் திட்டத்தின் மூலம் விபத்துக்கு ரூ.1 லட்சம், பெரிய காயங்களுக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீட்டுத் தொகை 48 மணி நேரத்தில் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கம் நற் கருத்துகளைப் போதிக்கும் வகையில், 16 ஆயிரம் பள்ளிகளில் ஆசிரியர்களுக்கு கவுன்சலிங் ஏற்பாடு செய்யப்படும். அதேபோல, தேர்வு நேரங்களில் மாணவர்களுக்கு ஏற்படும் தற்கொலை எண்ணங்களை மாற்றும் வகையில், தனியார் தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து கவுன்சலிங்குக்கு ஏற்பாடு செய்யப்படும். 10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு கேள்விகள் குறைக்கப்பட்டு, தேர்வு நேரம் இரண்டரை மணி நேரமாக குறைக்கப்பட்டுள்ளது.

2,336 கல்லூரி பேராசிரியர்கள் தேர்வு செய்ய முடிவு!

விரைவில் கல்லூரி பேராசிரியர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என உயர்கல்வித் துறை செயலர் சுனில்பாலிவால் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘பொறியியல், பாலிடெக்னிக் கல்லுாரிகளில், முதல்வர் பணியிடங்களை சமீபத்தில் நிரப்பியுள்ளோம். அரசு கலைக் கல்லுாரிகளை பொறுத்தவரை, பேராசிரியர்கள் சிலர், கோர்ட்டை அணுகியுள்ளதால், பணிகள் தேங்கியுள்ளன; சிக்கல் தீர்க்கப்பட்டு, முதல்வர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்.

கடந்த இரு ஆண்டுகளில், 370 பேராசிரியர்கள் பணி ஓய்வுபெற்று சென்றுள்ளனர்; 1,966 பணியிடங்கள் காலியாகவுள்ளன. இவ்விரண்டையும் சேர்த்து, 2,336 இடங்களுக்கான தகவலை, டி.ஆர்.பி., வசம் ஒப்படைக்க உள்ளோம். இதற்கான அறிவிப்பு, மார்ச் இறுதிக்குள் வெளியிடப்பட்டு, தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்’ எனத் தெரிவித்துள்ளார்.