வன்முறை வலையில் விழும் மாணவ சமூகம்!சர்ச்சை

காலையில் செய்தித்தாளைப் பார்த்தாலே அடிதடி, சண்டை, மோதல், மண்டை உடைப்பு, அரிவாள் வெட்டு, கத்திக் குத்து, தற்கொலை, கொலை, பாலியல் வன்முறை போன்ற சமூக அவலங்கள் நமக்கு அன்றாட நிகழ்வுகளாகிவிட்டன. நாட்டின் வருங்காலத் தூண்களான மாணவர்களைப் பண்படுத்தும் அறிவுக்கூடங்களான பள்ளிகளையும் கல்லூரிகளையும் கூட இந்த அவலங்கள் ஆட்கொண்டுவிட்டன என்பதுதான் வேதனை. இன்றைய இந்த அசாதாரணமான சூழலுக்கு  என்ன காரணம் என கல்வி மேம்பாட்டுக் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் சு.மூர்த்தியிடம் பேசினோம். அவர் நம்மிடம் ஒருசில விஷயங்களைப் பகிர்ந்துகொண்டார்.

‘‘ஆசிரியர் -  மாணவர் உறவும் சக மாணவர்களுக்கிடையிலான உறவும் நாளுக்கு நாள் சிதைந்து வருகின்றது. கல்லூரி மாணவர்களை ஒரு கும்பல் பேருந்தில் ஏறி அரிவாளால் வெட்டியது; பள்ளி மாணவர் குழுவினர் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டது; பள்ளி மாணவர்கள் சிலர் சேர்ந்து ஆசிரியரைத் தாக்கியது, பொறியியல் கல்லூரி மாணவர்கள் கல்லூரி முதல்வரைக் கத்தியால் குத்தியது; ஒன்பதாம் வகுப்பு மாணவன் பெண் ஆசிரியரைக் கத்தியால் குத்தியது; காதலிக்க மறுத்த கல்லூரி மாணவியைக் கல்லூரி மாணவன் விறகுக் கட்டையால் அடித்துக் கொன்றது; காதலர் நாளில் எட்டாம் வகுப்பு மாணவிக்கு ஆசிரியரே ரோஜாப் பூ கொடுத்தது போன்ற அவல நிகழ்வுகள் நம்மைப் பதறவைக்கின்றன.’’ என்கிறார் மூர்த்தி.

இந்த அவலங்களைச் சட்டங்களால் மட்டுமே சரிசெய்ய முடியாது என்று கூறும் இவர், ‘‘ஒழுக்கத்தின் விளைநிலங்கள் என்று நம்பப்படும் கல்வி நிறுவனங்களும் இந்த அவலங்களுக்கும் சீரழிவுகளுக்கும் விதிவிலக்காக இருக்கவில்லை. நமது கல்விச் சூழலில் அதிகரித்து வரும் ஆசிரியர் - மாணவர் உறவு மற்றும் நடத்தைக் கோளாறு சார்ந்த சிக்கல்களைக் களைவதென்பது கல்வித்துறை மூலமாகச் சில அரசாணைகளை வெளியிட்டு ஒழுங்குப்படுத்துவது சுலபமான காரியமில்லை.

சில ஒழுக்கக் கட்டுப்பாடுகளையும் நடத்தை விதிமுறைகளையும் கல்வி நிறுவனங்களில் நடைமுறைப்படுத்துவதன் மூலமும் உடனடியாக விரும்பத்தகுந்த மாற்றங்கள் நடக்கவும் போவதில்லை. காரணம், இந்த சிக்கல்களின் வேர்கள் ஆழமானவை; நுட்பமானவை; வெளிப்படையாகத் தெரியாதவை; சமூகச் சிக்கல்களோடு பின்னிப் பிணைந்தவை. எனவே, களைகள் வளர்கின்ற  சூழலை ஒழிக்காமல் களைகளைக் களைவதென்பது சாத்தியமற்ற செயலாகும்’’ என்கிறார் மூர்த்தி.

‘‘முதற்படியாக நாம் வாழும் சமூகத்தின் புறச்சூழல் எதார்த்தங்களை ஆய்வுக்கு எடுத்துக்கொள்வோம். பள்ளி, கல்லூரி போன்ற நிறுவனங்களுக்கு வெளியில் நிலவுகின்ற, கற்றுக்கொடுக்கப்படுகின்ற, பழக்கப்படுத்தப்படுகின்ற  பழக்கங்களும் வழக்கங்களும் வாழ்வியலிலும் பள்ளிக் கல்லூரிக்கு உள்ளேயும் எதிரொலிக்கின்றன.

அதில் முக்கிய இடத்தை இன்றைய திரைப்படங்கள் பிடிக்கின்றன என்று சொன்னால் மறுப்பதற்கில்லை.
ஒரு பள்ளி மாணவனைப் பார்த்து  சக மாணவி கண்ணடிப்பது போன்ற ஒரு மலையாளத் திரைப்படப் பாடல் காட்சியை ஒரே வாரத்தில் ஐந்து லட்சத்திற்கும் அதிகமானோர் யு-டியூப்பில் பார்த்து ரசித்துள்ளதே ஊடகங்களின் பரபரப்பான செய்தியாக இன்றைக்கு உள்ளது. இது ஒரு பொழுதுபோக்கு விஷயம்தானே என்ற எண்ணம் எல்லோருடைய பொதுப்புத்தியிலும் தோன்றும். 

சட்டப்படியான திருமண வயதை அடையாத பள்ளிக் குழந்தைகள் கண்ணடிப்பது, காதலிப்பது, கட்டிப்பிடித்து ஆடுவது,
முத்தம் கொடுப்பது போன்ற திரைப்படக் காட்சிகளை எந்தச் சலனமும் இல்லாமல் பார்த்து ரசிக்கிறோம். இன்றைய அறிவியல் - தகவல் தொழில்நுட்ப யுகத்தில் ஊடகங்கள் மிகப்பெரிய செல்வாக்கு செலுத்தி வருகின்றன.

 குறிப்பாக பதின்ம மற்றும் இளம் பருவ  வயதுடைய ஆண் பெண் இருபாலரிடமும் சமூக வலைத்தளங்களும், திரைப்பட ஊடகமும் மிகப்பெரிய  செல்வாக்கு செலுத்தி வருகின்றன. அறிவையும் நடத்தையையும் பண்படுத்தும்  இடங்களாகக் காட்சிப்படுத்தப்படவேண்டிய கல்விச்சாலைகளை மது, காதல், மோதல் ஆகியவற்றின் பிறப்பிடங்களாகத் திரைப்படங்கள் உருமாற்றிக் காட்டுகின்றன.

ஒரு கல்லூரியை, பள்ளியை கதைக்களமாக வைத்து திரைப்படம் எடுப்பவர்கள் அறிவார்ந்த செய்திகளைச் சொல்வதற்குப் பதிலாக காதல் கற்பனைகளையே  சொல்லிவிட்டுப் போகிறார்கள். காதலை வாழ்க்கையின் ஒரு பகுதி என்பதை உணர்த்தாமல், காதலே வாழ்க்கை என்ற தவறான காதல் பற்றிய மிகைப்படுத்தல்களையே பெரும்பாலான திரைப்படங்கள் செய்கின்றன.  அறிஞர்களையும், சாதனையாளர்களையும் முன்மாதிரிகளாகக் காட்டி அறிவாற்றலையும் படைப்பாற்றலையும் வளர்க்கவேண்டிய பதின்மப் பருவக் குழந்தைகளுக்குத் தவறானவர்கள் கதாநாயகர்களாகக் காட்டப்படுகிறார்கள்.

சக மனிதர்களுக்குள் முரண்பாடுகள் ஏற்படுவது இயற்கையானது என்ற நேர்மறை எண்ணங்களை திரைப்படங்கள் கற்றுக் கொடுக்கத் தவறி வருகின்றன. தனது விருப்பத்திற்கு மாறாக நடப்பவர்களிடம் அதிதீவிர எதிர்ப்பையும் கோபத்தையும் வெறுப்பையும் வன்மத்தையும் காட்டுவதுதான் தன்மானமும் வீரமும் உள்ள மனிதனின் அடையாளமாகவும் கதாநாயகத் தன்மையாகவும் திரைப்படங்கள் அர்த்தப்படுத்துகின்றன.

எதிரியாகக் கருதப்படும் ஒரு நபர் சிறு தவறை செய்தால்கூட அதை மன்னிக்க முடியாத குற்றமாகக் கருதுவதையும் கதாநாயகன் கொலையே செய்தாலும் அதை வீரத்தின், தன்மானத்தின் அடையாளமாக கருதுவதையும் பெரும்பாலான திரைப்படங்களில் இடம்பெறும் வன்முறைக் காட்சி கள் நியாயப்படுத்துகின்றன.இப்படிப்பட்ட திரைப்படங்களைப் பார்ப்பதன் மூலமாக  நம்மை அறியாமலேயே நம் எண்ணங்களும் மன இயல்புகளும் மென்மைத் தன்மை இழந்து வன்முறைத் தன்மையுடையதாகவும் வக்கிரத் தன்மையுடையதாகவும் மாற்றமடைகின்றன.

திரைப்பட ஊடகங்கள் செய்து வருகின்ற இப்படிப்பட்ட உளவியல் தாக்குதல்களுக்குப் பலியாகும் மாணவச் சமூகம் திரைப்படங்கள்  சொல்வதையே பாடமாகக் கற்றுக் கொள்கிறது.கல்லூரிகளில்  அறநெறி இலக்கியம் போதிக்கும் தமிழாசிரியர்களை நகைச்சுவைக் கதாபாத்திரங்களாக மட்டுமே இவர்
களால்  காட்ட முடிந்தது. இதன் விளைவுகள் தான் மாணவர் சமூகம் அறநெறியற்ற  வன்முறைக் கூட்டமாக இன்று மாறியிருக்கிறது.
 
இன்றைக்கு நாம் வாழ்கின்ற குடும்பச் சூழல், வளர்கின்ற சமூகச் சூழல் ஆகியவற்றை விடவும் திரைப்படங்கள் இளைஞர்களின் சிந்தனைகளைக் கட்டமைப்பதில் பெரும்பங்கு வகிக்கின்றன. எதிர்காலச் சமூகம் பண்பாடுடைய ஆரோக்கியமான சமூகமாக உருவாவதில் திரைப்படப் படைப்பாளிகளின் பங்கு முதன்மையாக உள்ளதை வளரும் படைப்பாளிகளாவது உணர வேண்டும்’’ என்றார்.

- தோ.திருத்துவராஜ்