தென்னை நார் பூந்தொட்டி தயாரிப்பில் மாதம் ரூ.25,000 சம்பாதிக்கலாம்!சுயதொழில்

பூச்செடிகளையும், சிறிய ரக போன்சாய் மரங்களையும் வளர்ப்பதற்கு மண் தொட்டிகள், பிளாஸ்டிக் தொட்டிகளை பயன்படுத்தி வருகிறோம். அதில் புதுமையைப் புகுத்தியிருப்பதோடு வருவாய்க்கும் வழி செய்திருக்கிறார் கோவையில் ஈகோ கிரீன் யூனிட் என்ற பெயரில் விவசாய பண்ணை அமைத்து இத்தொழில் செய்துவரும் எஸ்.கே.பாபு. ‘‘தென்னை நாரினாலான பூந்தொட்டிகளை உருவாக்கி விற்பனை செய்வதில் மாதம் ஒரு நிலையான வருமானம் பார்க்கலாம்’’ என்று கூறும் பாபுவின் சுயதொழிலுக்கான ஆலோசனைகளைப் பார்ப்போம்…

உலகில் தேங்காய் உற்பத்தியில் சிறந்து விளங்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இந்தியாவில் தேங்காய் உற்பத்தியில் குறிப்பாக ஐந்து மாநிலங்கள் முன்னிலையில் உள்ளன. நமது தமிழகம் இந்தியாவில் இரண்டாவது இடத்தில் உள்ளது. இங்கு தயாரிக்கப்படும் தேங்காய் நார்க் கயிறு மற்றும் தேங்காய் நார் சார்ந்த பொருட்கள் உலகின் அனைத்துப் பகுதிகளுக்கும் விற்பனை செய்யபடுகின்றன. இந்தப் பொருட்களை உற்பத்தி செய்ய அரசு தேவையான பயிற்சியும், கடனுதவியும் மேலும் வழிகாட்டுதல்களையும் வழங்கிவருகிறது.

சிறப்பம்சங்கள்

* தமிழகத்தில் தேங்காய் அதிகமாக உற்பத்தி ஆவது.
* தேங்காய் அதிக விளைச்சலால் குறைவான விலையில் தேங்காய் நார் அதிக அளவில் கிடைப்பது.
* தேங்காய் நாரிலிருந்து பல்வேறு பொருட்கள் தயாரிக்கலாம்.
* கயிறு பெருமளவில் உற்பத்தி செய்யப்படுகிறது.
* இதற்கு அரசு பயிற்சியும் மானியத்துடன் கூடிய கடனும் வழங்குகிறது.
* அரசின் 40% மானியத்துடன் கடன் பெற்று தொழில் தொடங்கலாம்.
* நல்ல லாபம் தரக்கூடிய தொழில்.

திட்ட மதிப்பீடு: 10  லட்சம்+(1 லட்சம் நடைமுறை மூலதனம்)
அரசு மானியம்: 40% Coir Udyami Yojana Scheme
பயனாளியின் முதலீடு:  5% (Rs.50,000)
வங்கி வழங்கும் கடன்:  55% (5.5 லட்சம்)

கயிறு திரிக்கும் தொழில் அதிக தொழிலாளர்களைக் கொண்ட ஏற்றுமதி செய்யத்தக்க பாரம்பரியமிக்க  விவசாயம் சார்ந்த குடிசைத் தொழிலாகும். தேங்காய் நார் சார்ந்த தொழிலின் மூலமாகக் கிராமப்புறங்களில் உள்ளவர்களுக்குக் குறிப்பாகப் பெண்களுக்கு அதிக வேலை வாய்ப்பு கிடைக்கப்பெற்று வருகிறது. கயிறு திரிக்கும் தொழிலில் கேரளாவுக்கு அடுத்தபடியாக தமிழகம் உள்ளது. ஆனாலும் பழுப்பு நிற நார் உற்பத்தியில் நாட்டிலேயே  தமிழகம் முதல் இடத்தில் உள்ளது.

மத்திய அரசின் கயிறு வாரியம் (Coir Board) கயிறு தொழிலின் மேம்பாட்டிற்கு, ‘காயர் உத்யமி யோஜனா’ (Coir Udyami Yojana) என்ற கயிறு தொழில்முனைவோர் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

இத்திட்டத்தின் நோக்கம்

* கிராமப்புற தொழில்முனைவோரை உருவாக்குதல்.
* பெண்களுக்குக் கூடுதல் வேலைவாய்ப்பை ஏற்படுத்துதல்.
* தேங்காய் மட்டை கொண்டு வருமானத்தைத் பெருக்குதல்.
* நவீனத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதன் மூலம் தேங்காய் நார் தொழிலை நவீனப்படுத்துதல்.
* தேங்காய் நார் சார்ந்த பொருட்களின் உற்பத்தி மற்றும் செயல்முறை தொழில்நுட்பத்தை புதுப்பித்தல் மூலம் உற்பத்தித் திறன், தரம் போன்றவற்றை மேம்படுத்துவது.
* கிராமப்புற இளைஞர்களுக்கு பயிற்சி அளித்து தென்னை நார் சார்ந்த தொழிலில் ஈடுபடுத்துவது.

தொழிலின் திட்ட மதிப்பு தொழிலுக்கான திட்ட மதிப்பு அதிக பட்சம் ரூ.10 லட்சம் வரை இருந்தால் காயர் உத்யமி யோஜனா திட்டத்தில் விண்ணபிக்கலாம். இந்தத் திட்டத்தில் நடைமுறை மூலதனத்தையும் (working capital) பெறலாம். இந்த நடைமுறை மூலதனம் தொழிலுக்கான திட்ட மதிப்பில் 25%-க்குள் இருக்க வேண்டும்.

அரசு மூலதன மானியம்காயர் உத்யமி யோஜனா திட்டத்தில் அரசு மூலம் வழங்கப்படும் மானியம் (Subsidy) தொழிலின் திட்ட மதிப்பில் 40% சதவீதம் ஆகும். அதிகபட்சமாக ரூ.4 லட்சம் வரை வழங்கப்படும். தொழிலின் திட்ட மதிப்பீட்டில் குறைந்தபட்சம் 5%  பயனாளிகள் முதலீடு செய்ய வேண்டும்.
வங்கிக் கடன்

பயனாளிகளுக்கு அதிகபட்சமாக தொழிலின் திட்ட மதிப்பீட்டில் 55%  வங்கிக் கடனாக வழங்கும்.
பயனாளியின் தகுதிகள்

* 18 வயதிற்கு மேல் இருக்க வேண்டும்.
* காயர் உத்யமி யோஜனா விண்ணபிக்க எந்தவித வருமான வரம்பும் கிடையாது.
* தென்னை நார் சம்பந்தமான
பொருட்கள் உற்பத்தி செய்பவர்களுக்கு மட்டும் காயர் உத்யமி யோஜனா திட்டம் பொருந்தும்.
* தனிநபர்கள், சந்தைப்படுத்துவதற்கான வாய்ப்புடன் கூடிய நிறுவனங்கள், சுய உதவிக் குழுக்கள், அரசு சார்பற்ற அமைப்புகள் காயர் உத்யமி யோஜனா திட்டத்தின் கீழ் உதவி பெறலாம்.

தென்னைப் பொருட்கள் தயாரிப்புக்கான கடன்:கட்டடம் மற்றும் இயந்திரங்களின் மதிப்பிற்கு மட்டும் தரப்படும்.
ஒரு சுழற்சி மூலதனக் கடன் பெறலாம். அது மொத்த திட்ட மதிப்பில் 25% மிகாமல் இருக்க வேண்டும். இந்த நடைமுறை மூலதனத்தை வங்கிகள் தொழில் ஆரம்ப காலங்களில் கொடுக்கலாம். இதற்கு எந்தவித மானியமும் கிடையாது. நடைமுறை மூலதனம் வங்கிகளின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டது.

நிலம், கட்டடம் பெற்று உள்ளவர்களுக்கு இயந்திர மதிப்பே திட்டத்தின் மதிப்பாக எடுத்துக்கொள்ளப்படும்.ஒரு குடும்பத்தில் ஒரு நபருக்கே இந்தத் திட்டம் செயல்படும்.இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவது கயிறு வாரியம். இதன் தலைமையகம் கொச்சியில் உள்ளது. மேலும் மாநிலங்களில் உள்ள கிளை நிலையங்களையும் அணுகலாம். மாவட்டத் தொழில் மையங்களும் இதற்கு உதவிகள் செய்யும்.

கடன் பெற பயனாளிகள் வங்கியில் சென்று கடன் பெறுவதற்கான அனுமதி பெற்று இருத்தல் அவசியம். பயனாளிகள் குறிப்பிடும் வங்கிகளுக்கு இந்த மானிய உதவி அளிக்கப்படும்.வங்கிகள் இந்த விண்ணப்பங்களைப் பெற்ற பின் 60 நாட்களுக்குள் வாரியத்திடம் இந்தத் திட்டத்தில் கடன் பெற தகுதியானவரா மற்றும் தகுதியற்ற நிலை ஏற்பட்டால் அதற்கான காரணத்துடன் பதில் அளிக்க வேண்டும்.

வங்கிகள் திட்ட மதிப்பில் 95% கடன் அளிக்க வேண்டும். பயனாளிகள் 5% கொண்டுவர வேண்டும். இதற்கான வட்டி வங்கிகளின்
திட்டங்களுக்கு உட்பட்டது. திரும்ப செலுத்தும் காலம் 7 ஆண்டுகள் வரை இருக்கலாம். இந்த கடன் முழுவதும் மத்திய அரசின் கிரெடிட் கேரண்டி டிரஸ்ட் ஃபண்ட் திட்டத்தில் வருவதால் வங்கிகள் எந்தவித சொத்துப் பிணையம் தனிநபர் உத்திரவாதம் கேட்கக்கூடாது.

முதலில் விண்ணப்பிக்கும் பயனாளிக்கே முன்னுரிமை அளிக்கப்படும். இதில் தொழில் முனைவோருக்கான பயிற்சி பெறுதல் அவசியம். இப்
பயிற்சியினைத் தொழில் ஆரம்பிக்கும் முன்போ அல்லது கடன் பெற்ற உடனேயோ பெற்றுக்கொள்ளலாம்.தென்னை நார் பூந்தொட்டிகள்தென்னை நாரினால் செய்யப்படுகின்ற பூந்தொட்டிகளுக்கு உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் மிகப்பெரிய வரவேற்பு உள்ளது.

காரணம், இன்று சுற்றுச்சூழலுக்கு உகந்த, மண்ணில் மக்கிப்போகின்ற உற்பத்திப் பொருட்களுக்கு மிகப்பெரிய சந்தை வாய்ப்பு உள்ளது. குறிப்பாக பாக்கு மட்டைத் தட்டுகள், வாழை நார் பொருட்கள், தென்னை நார் பொருட்கள் ஆகியவற்றிற்கு மிகப்பெரிய சந்தை காத்துக்கொண்டிருக்கிறது. இந்தச் சூழ்நிலையில் தென்னை நார் பூந்தொட்டிகள் தயாரிக்கும் தொழில் செய்ய இதுவே ஏற்ற தருணம்.

இயந்திரம்

பெண்களும் எளிதில் இயக்கக்கூடிய, உயர் தொழில்நுட்பத்துடன் ஆட்டோமேட்டிக் ஹைட்ராலிக்,1HP, சிங்கிள் பேஸ் மோட்டார் உள்ளடக்கிய இயந்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் ஒரு நாளைக்கு 500 தென்னை நார் பூந்தொட்டிகள் உற்பத்தி செய்ய முடியும்.

உற்பத்தி முறை

தென்னை மஞ்சி ஷீட் [தென்னை நார் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளில் கிடைக்கும்] கொண்டு லேடக்ஸ் எனும் திரவம் தெளித்துக்கொள்ள வேண்டும். பின்னர் இயந்திரத்தில் உள்ள வட்ட வடிவ அச்சுகளில் உள்ளே வைத்து தானியங்கி முறையில் இயக்கினால் 5 நிமிடங்களில் பூந்தொட்டி தயார் ஆகிவிடும்.

இந்தத் தொழில் ஆரம்பிக்க தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் முத்ரா திட்டத்தின் கீழ் கடனுதவி கிடைக்கும். கயிறு வாரியம், மத்திய அரசு மற்றும் காதி வாரியம், அந்தந்த மாவட்டத் தொழில் மையங்கள் ஆகியவை 25% முதல் 40% வரை மானியம் வழங்கத் தயாராக உள்ளது.
நாங்கள் வழங்குவதுசிறந்த பயிற்சி, தரமான மூலப்பொருட்கள், உயர் தொழில்நுட்ப இயந்திரம் மற்றும் உற்பத்திப் பொருட்களுக்குச் சந்தை வாய்ப்பு. இதில் ஒரு இயந்திரம் மூலம் மாதம் எல்லா செலவும் போக நிகர லாபமாக ரூ.25,000 வரை சம்பாதிக்கலாம்.

நார் பூந்தொட்டிகள் தயாரிப்பு

இயந்திரம் விலை -  ரூ.2,50,000
[2hp மோட்டார்.2500 வாட்ஸ் ஹீட்டர் காயில்ஸ், ஆட்டோமேட்டிக் 10 இஞ்ச் மற்றும் 12 இஞ்ச் டை]
10 இஞ்ச் வட்ட வடிவக் கூடை விலை     - ரூ.23.00
12 இஞ்ச் வட்ட வடிவக் கூடை  விலை - ரூ.29.00
மாத உற்பத்தி
10 இஞ்ச் வட்ட வடிவக் கூடை - 3000 (எண்ணிக்கை)
12 இஞ்ச் வட்ட வடிவக் கூடை - 3000 (எண்ணிக்கை)
அனைத்து செலவும் போக நிகர லாபம் - ரூ.25,000

பெண்களும் எளிதில் இயக்கும் வகையிலான தரமான பயிற்சியோடு இயந்திரங்களை வழங்கு வதோடு உற்பத்திப் பொருட்களை நாங்களே பெற்றுக்கொள்கிறோம். இது ஒரு சுற்றுப்புற சூழலுக்கு உகந்த தொழில் என்பது மட்டுமல்ல வரும் காலங்களில் அதிக வருமானத்தை தரக்கூடியதாகவும் இருக்கும்.

- தோ.திருத்துவராஜ்