எஞ்சினியரிங் படிப்பில் ஆர்வம் குறைந்துவிட்டதா?சர்ச்சை

தமிழக அரசின்கீழ் செயல்பட்டுவரும் கல்வி நிறுவனமான  அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைவுபெற்று 535 எஞ்சினியரிங் கல்லூரிகள் செயல்பட்டுவருகின்றன. அத்தனை கல்லூரிகளுக்குமான முதல் செமஸ்டர் தேர்வு முடிவுகளை அண்ணா பல்கலைக்கழகம் தன் அதிகாரப்பூர்வ தளத்தில் சமீபத்தில் வெளியிட்டது. மொத்தம் உள்ள 535 கல்லூரிகளில் 43 கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்களில் ஒருவர்கூட முதல் பருவத் தேர்வில் தேர்ச்சியடையவில்லை என்ற அவலத்தைச் சுட்டிக்காட்டியுள்ளது அண்ணா பல்கலைக்கழகத் தேர்வுமுடிவுகள்.

இம்முடிவுகளின் விளைவால் தமிழகத்தின் எஞ்சினியரிங் கல்லூரிகள் வழங்கும் பொறியியல் பட்டப்படிப்பின் தரம் மற்றும் எதிர்காலம் கேள்விக்குறியாகியிருக்கிறது. மாணவர்களின் எதிர்காலம் குறித்த ஐயமும் பொதுமக்கள் மத்தியில் பரவத் தொடங்கியுள்ளது. பெற்றோர்கள் மற்றும் கல்வியாளர்கள் மத்தியில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ள இத்தகைய சூழலில் இம்முடிவுகளின் காரணங்களைக் குறித்தும், மாணவர்கள் எதிர்காலம் மற்றும் இதிலிருந்து மீள்வதற்குத் தேவையான மாற்றங்கள் குறித்தும் கல்வியாளர் ஜெயபிரகாஷ் காந்தி என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்… 

‘‘தமிழகத்தில் மொத்தம் 535 எஞ்சினியரிங் கல்லூரிகள் செயல்பட்டுவருகின்றன. அண்ணா யுனிவர்சிட்டியுடன் இணைந்து செயல்படும் அனைத்து கல்லூரிகளுக்குமான முதல் பருவத் தேர்வு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. அதில் 43 கல்லூரிகளில் ஒரு மாணவர் கூட தேர்ச்சியாகவில்லை என்றும் மற்றும் 141 கல்லூரி மாணவர்கள் ஒற்றை இலக்கத்தில் மதிப்பெண்களைப் பெற்றுள்ளனர் எனவும் அம்முடிவுகள் தெரிவிக்கின்றன.

மாணவர்களின் தேர்ச்சி விகிதமும், கல்லூரிகளின் தரமும் கேள்விக்குள்ளாகும் இத்தகைய சூழலானது நமக்குக் கற்றுத்தரும் முக்கியமான பாடம் முதலில் தமிழகத்தில் இத்தனை எஞ்சினியரிங் கல்லூரிகள் அவசியம்தானா? என்பதே. தரமான ஆசிரியர்களைப் பணியில் அமர்த்தாமலும், பொறியியல் கல்விக்கு அத்தியாவசியமான உயர்ரக ஆய்வகங்களையும் சிறந்த உட்கட்டமைப்பு வசதியை ஏற்படுத்தாமலும் மற்றும்  முறையான பொறியியல் கல்வியறிவை மாணவர்களுக்கு வழங்காமலும் வெறும் தனியார் வணிகத்தை மட்டும் நோக்கமாகக் கொண்டு செயல்படும் இத்தனை கல்லூரிகள் நமக்கு அவசியம் தானா என்பதைப் பெற்றோர்களும், மக்களும் முதலில் புரிந்துகொள்ள வேண்டும்.’’ என்கிறார்.

எதுபோன்ற குறைபாடுகள், பின்னடைவுகள் பொறியியல் கல்லூரிகளினால் சரிசெய்யப்பட வேண்டும் என்பதையும் சுட்டிக்காட்டிய ஜெயப்பிரகாஷ் காந்தி, ‘‘மேற்சொன்ன பொறியியலின் அத்தியாவசியங்களை ஒன்றைக்கூட முழுமையாகச் செய்யாமல் வெறுமனே கல்வி நிறுவனம் ஆரம்பித்து மாணவர் சேர்க்கையை நடத்தி, எஸ்.சி. கோட்டா மாணவர்களை கவுன்சிலிங்கில் சேர்த்தால் கவுன்சிலிங் கட்டணமான 42 ஆயிரத்தை அரசு தரும் என்பதற்காக அவர்களை மேனேஜ்மென்டில் சேர்த்து 75 ஆயிரம் முதல் பணம் வசூலிப்பது  என்பது போன்று எஞ்சினியரிங் கல்வித் துறையே இங்கு தனியார் மயமானது தான் பொறியியல் கல்வியின் தரம் கேள்விக்குள்ளாக முதன்மையான காரணமாகும்.

மேலும் எஞ்சினியரிங் கல்வித் துறை தொடர்ந்து தனியார் மயமாக்கப்படுவதின் விளைவால் கடந்த ஆண்டுகளில் பொறியியல் பட்டம் பெற்ற மாணவர்களில் 70%  பேர் பொறியியல் துறை சாராத வேலைகளையே செய்துவருகின்றனர் என்று சொல்லுகிறது சமீபத்திய ஆய்வு ஒன்று.
ஆகவே, மாணவர்களுக்கு உயர்ந்த தரத்தில் பொறியியல் கல்வியை வழங்கி அவர்களின் பொறியியல் அறிவை சீர்தூக்கிட பொறியியல் துறையானது தனியார் மயமாக்கப்படுவது முதலில் தடுக்கப்படவேண்டும்.

மேலும் இதற்கு முழுக்க முழுக்க தமிழகக் கல்வி நிறுவனங்கள் மட்டும் காரணம்  அல்ல மாணவர்களும் தான். அது எப்படி 43 கல்லூரிகளில் ஒரு மாணவன் கூட தேர்ச்சியடையவில்லை. இது  பொறியியல் துறை பற்றி மாணவர்களுக்குப் போதிய விழிப்புணர்வு இல்லாததையே காட்டுகிறது. மாணவர்கள் தாங்கள் பன்னிரண்டாம் வகுப்பில் படித்த புளூபிரின்ட் சிலபஸ் முறையிலேயே பொறியியல் தேர்வை எதிர்கொண்டுள்ளனர்.

புளூபிரின்ட் சிலபஸ்படி குறிப்பிட்ட பாடங்களை மட்டும் படித்து +2வில் தேர்ச்சியாகிவரும் மாணவர்களுக்குப் புத்தகத்தின் அனைத்துப் பக்கங்களையும் வாசித்துவிட்டுதான் பொறியியல் தேர்வை எதிர்கொள்ளவேண்டும் என்ற பொறியியல் கல்வியின் அடிப்படை புரியவேண்டும். சினிமாக்களில் வருவது போல ஜாலியாக அரட்டை அடிப்பது மட்டும் பொறியியல் படிப்பு இல்லை என்ற எதார்த்ததை உணர்ந்து மாணவர்கள் செயல்படவேண்டும்’’ என்கிறார்.

மேலும் அவர், ‘‘பொறியியல் துறையின் அவசியத்தையும்  எதிர்காலத்தில் அதன் முக்கியத்துவத்தைப் பற்றியும் +2 முடித்து பொறியியல் தேர்ந்தெடுக்க எண்ணம் இருக்கும் மாணவர்களுக்கு விழிப்புணர்வுக் கருத்தரங்கங்கள் ஏற்படுத்தவேண்டும். பொறியியலில் சேர்வதற்கான நுழைவு மதிப்பெண் விகிதத்தை அதிகரித்து பொறியியல் படிக்க விருப்பமுள்ள சரியான மாணவர்களை சேர்த்து, முறையான கல்வியை வழங்க வேண்டும்.

அதேபோல பெற்றோர்கள் சேர்த்துவிட்டார்கள் நானும் சேர்ந்தேன் என்றில்லாமல் மாணவர்கள் சுயமாகச் சிந்தித்து தாங்கள் கற்க விரும்பும் கல்வித் துறையைத் தாங்களே தேர்ந்தெடுத்தலே ஆகச்சிறந்தது. மனித சமூகத்தைக் கட்டமைப்பதே பொறியியல்தான் என்றிருக்கையில் பொறியியலின் மவுசு ஒருபோதும் குறையாது.

ஆகவே, அதற்கேற்றவாறு மனித சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும் பொறியாளனின் பொறுப்பை உணர்ந்து செயல்பட்டாலே பொறியியல் துறையில் உயர்ந்த இடத்திற்குச் செல்லலாம்’’ என்று பொறியியல் பட்டப்படிப்பின் தரம் உயர செய்யப்பட வேண்டிய
மாற்றங்களைத் தீர்க்கமாகப் பட்டியலிடுகிறார் ஜெயப்பிரகாஷ் காந்தி.

- வெங்கட்