மத்திய பட்ஜெட்டிலும் புறக்கணிக்கப்படுகிறதா கல்வி?



சர்ச்சை

ஒரு நாட்டின் பொருளாதாரம், கலை, நாகரிகம் பண்பாடு போன்ற அனைத்து சமூக வளர்ச்சிக்கும் ஒட்டுமொத்த அடிப்படையாய் அமைவது கல்வியே. கல்வி அளிப்பதில் வெற்றி பெற்ற நாடுகளே மிக முன்னேறிய நாடுகளாக விளங்குவதைக் கண்கூடாகக் காண்கிறோம். சுதந்திரம் பெற்று 70 ஆண்டுகளாகியும் அனைவருக்கும் கல்வியளிப்பதில் ஏன் இந்தியா தோற்றுப்போய் இருக்கிறது என எண்ணிப்பார்க்கக் கடமைப்பட்டுள்ளோம்.

கட்டாயக்கல்வி உரிமைச்சட்டங்கள் அவ்வப்போது இயற்றப்பட்டு, அனைத்துக் குழந்தைகளையும் ஓரளவு பள்ளிக்கு வரவழைத்துவிட்டோம் என்று பெருமை கொண்டாலும் இவர்களுக்கு அளிக்கப்படுகிற கல்வியின் தரம் கேள்விக்குரியதாக ஆக்கப்பட்டுள்ளது என்பதை இந்திய நாடாளுமன்றத்தில் நமது மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பகிரங்கமாக ஒத்துக்கொண்டுள்ளார் என்பது வருந்தத்தக்கது.

2019 நாடாளுமன்றத் தேர்தலையும் இதற்குமுன் நடைபெறவிருக்கிற 14 மாநிலச் சட்டமன்றத் தேர்தல்களையும் மனதில் நிறுத்தி தயாரிக்கப்பட்ட வரவு, செலவுத் திட்டமாக (பட்ஜெட்) விமர்சிக்கப்படுகிற 2018 பட்ஜெட்டில் கல்விக்காக ஒதுக்கப்பட்ட நிதியும் திட்டங்களும் பெருத்த ஏமாற்றம் அளிப்பதாக உள்ளன என்பதே நிதர்சனமான உண்மை. ஏன் இவ்வாறு கூறுகிறேன் என்பதற்குப் பல  ஆதாரங்களைக் கூறமுடியும்.

143வது இடத்தில் இந்தியாநாட்டின் சமூக மாற்றத்திற்கும் முன்னேற்றத்திற்கும் அடிப்படையாக அமையும் கல்விக்கு நாட்டின் உற்பத்தியில் 6 விழுக்காடு ஒதுக்க வேண்டும் என்பது 1964-66 கோத்தாரி கல்விக்குழுவின் ஆணித்தரமான பரிந்துரை. ஆனால், நாட்டை ஆளுகிற பாரதிய ஜனதா ஆட்சி தனது ஐந்தாவது பட்ஜெட்டை 2018 மார்ச்சில் தாக்கல் செய்தபோது 3.48% மட்டும்தான் கல்விக்கான நிதியாக ஒதுக்கியுள்ளது என்பதைக் கூர்ந்து கவனிக்க வேண்டும். மேலும் 2017 வரவு, செலவு திட்டத்தில் ஒதுக்கப்பட்ட 3.69% கூட இவ்வாண்டு குறைக்கப்பட்டுள்ளது வருந்தத்தக்கதாகும்.

2017-18ம் ஆண்டில் 79,685 கோடி கல்விக்காக ஒதுக்கப்பட்டு பின்னர் இத்தொகை 81,868 கோடியாக உயர்த்தப்பட்டது. ஆனால், 2018-19க்கு உயர்கல்விக்கு 35010 கோடியும் பள்ளிக்கல்விக்கு 50,000 கோடியுமாக மொத்தம் 85,010 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. 4,000 கோடிக்கும் குறைவாகவே சென்ற ஆண்டைவிட தற்போது நிதி கூட்டப்பட்டுள்ளது.

ஆனால் 2016 -2017, 2017-2018 ஆம் ஆண்டு உயர்த்தியதைவிட சுமார் 4000 கோடி ரூபாய் குறைவாக உயர்த்தப்பட்டுள்ளது. இவ்வாறு ஒப்பிட்டுப் பார்க்கும்போது உயர்த்தப்படுகிற தொகை கல்விக்குப் பாதியாகக் குறைந்துவிட்டதைக் காணலாம்.

64-66 கல்விக்குழு பரிந்துரையான 6% ஒதுக்கீட்டை 85 - 86 புதிய கல்விக்கொள்கை ஆதரித்தும்கூட, பிரதமர் மோடி அரசும் இசைந்த கருத்து என்பது சொல்லியும்கூட 70 ஆண்டுகளுக்குப் பிறகும் குறைந்தது 6% கூட கல்விக்கு ஒதுக்கவில்லை என்பது இவ்வரசு கல்விக்காக எவ்வளவு அக்கறை கொடுத்திருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள வைக்கிறது.

கல்விக்காக நிதி ஒதுக்கும் 195 நாடுகளில் 143வது இடத்தில் இந்தியா உள்ளது என்பதும் சிறிய நாடுகளான மார்சல் தீவு, கியூபா, லெசோத்தா, பின்லாந்து ஆகியவை முறையே 14.6%. 12.9%. 13%, 6.8% ஒதுக்கும்போது இந்தியா மட்டும் ஏன் 4%-ஐக்கூட ஒதுக்க முடியவில்லை எனின் கல்வியளிப்பதில் நம் நாட்டில் அக்கறை இவ்வளவுதானா எனக் கேள்வி எழச்செய்கிறது.

கூடுதல் வரிச்சுமை2004-ம் ஆண்டிலிருந்து தனிநபர், சிறு மற்றும் குறு நிறுவனங்கள் பெரு நிறுவனங்களிடமிருந்து கல்வி வரியாக 3% வசூலிக்கப்பட்டுவருகிறது. 2% தொடக்கக் கல்விக்காகவும் 1% இடைநிலை மற்றும் உயர்நிலைக் கல்விக்காகவும் வசூலிக்கப்படும். இவ்வரித்தொகை இதுவரையிலும் முழுமையாகப் பயன்படுத்தப்படவில்லை. இந்த அவலமான சூழ்நிலையில் 2018-19 பட்ஜெட்டில் இவ்வரி 4% ஆக்கப்பட்டுள்ளது.

இதனால் அரசுக்குக் கல்வி வரி வருவாயில் 11,000 கோடி ரூபாய் கூடுதலாகக் கிடைக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. 3% வரி வசூலில் தொடக்கக்கல்வியின் அங்கமான அனைவருக்கும் தொடக்கக் கல்வித் திட்ட (SSA) மதிய உணவு (M.DM) திட்டங்களுக்கு 2% எஞ்சியுள்ள 1% நேரடி நிதி ஒதுக்கீட்டின் மூலம் உயர்கல்விக்கு ஒதுக்கப்படுகிறது.

அவ்வாறு ஒதுக்கப்பட்ட நிதி முழுமையாகச் செலவழிக்கப்படவில்லை என்பதை 9.5.2016 அன்று நாடாளுமன்றக் கேள்வி ஒன்றுக்குப் பதிலாக அன்றைய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி ஜுயின்  குரோளரி தெரிவித்துள்ளார்.வசூலிக்கும் வரி பயன்படவில்லைதொடக்கக்கல்வி வரியாக வசூலிக்கப்பட்ட தொகையில் 41% சர்வசிக்‌ஷ அபியான் திட்டத்துக்கும், 20% மதிய உணவுக்குமாக 61% மட்டுமே செலவழிக்கப்பட்டது.

வரி செலுத்துவோரின் 39% வரிப்பணம் செலவழிக்கப்படவில்லை; தரமான கல்வி அளிப்பதற்காக பொதுவான வரியுடன் இக்கல்வி வரி என்பது நிதிப்பற்றாக்குறை ஏற்படும்போது செலவழிக்கப்பட வேண்டும். ஆனால், அது நடைபெறவில்லை என அமைச்சர் அறிவித்த செய்தியின் அடிப்படையில் வசூலிக்கப்படும் 3% கல்வி வரியை செலவழிக்க இயலாதபோது ஏன் இவ்வரி 4% ஆக உயர்த்தப்பட்டது என்ற சந்தேகம் எழுகிறது.

கற்றல், கற்பித்தல், திறன் மேம்பாடு, அடிப்படைக் கட்டமைப்பு ஆராய்ச்சி மற்றும் கணினிப் படிப்பிற்காக இடைநிலை மற்றும் உயர்கல்விக்காகக் கல்வி வரியாக வசூலிக்கப்படும் 1% செலவழிக்கப்பட வேண்டும். ஆனால், இதுவும் நடைபெறவில்லை. பொதுத்தணிக்கை அறிக்கை (CAG), வருவாய் ஆண்டு 1997 முதல் 2017 வரை வரியாக வசூலிக்கப்பட்ட ரூ.7,885 கோடியில் ரூ.609 கோடி மட்டுமே இந்த நோக்கங்களுக்காகச் செலவிடப்பட்டுள்ளது.

அதாவது, 7.73 சதவீதம் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது என்றும் 2007 முதல் - 2017 வரை 10 ஆண்டுகளில் ரூ.8,3497 கோடி வசூலிக்கப்பட்டு இத்தொகையும் இந்நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படவில்லை எனவும் கூறுகிறது. மனிதவள மேம்பாட்டுத்துறை ராஷ்ட்ரிய உச்சதார் சிக்‌ஷ அபியான் (RUSA) மூலம் உயர்கல்வியை மேம்படுத்த ஒதுக்கப்பட்ட நிதியில் ¼ பங்ககைத்தான் பயன்படுத்தியுள்ளது.

தொடக்கக்கல்வி புறக்கணிப்புமேலும் முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டிய தொடக்கக்கல்வி தொடர்ந்து புறக்கணிக்கப்படுகிறது. 2014  -15 ல் உயர்கல்விக்காக 34 சதவீதம் ஒதுக்கி 2017-18ல் இவ்விழுக்காடு 42சதவீதமாக உயர்ந்துள்ளது. ஆனால் தொடக்கக்கல்விக்கோ 66 சதவீதத்திலிருந்து 58 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது என்ற புள்ளிவிவரம் தொடர்ந்து இவ்வரசு தொடக்கக்கல்வியை எவ்வாறு புறக்கணித்து வருகிறது என அறியமுடியும்.

வரவேற்புக்குரிய திட்டங்கள்இந்நிலையில்தான் 2018 மத்திய பட்ஜெட் கல்விக்கென அறிவித்துள்ள சில திட்டங்கள் வரவேற்கத்தக்கவையே. அவை…

* 2022க்குள் கல்வி முறையையும், கல்விக் கட்டமைப்பையும் முற்றிலும் மாற்றியமைக்க அரசு திட்டமிட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

* மலைவாழ் பழங்குடியினர் 50 சதவீதத்துக்குக் கூடுதலாக வசிக்கும் ஒவ்வொரு பகுதியிலும் குறைந்தபட்சம் 20 ஆயிரம் பழங்குடியினர் வசிக்கும் பகுதிகளிலும் நவோதயா வித்யாலயா பள்ளிகளுக்கு இணையாக ‘ஏகலைவா’ உண்டு உறைவிடப் பள்ளிகள் நிறுவப்படும்.

* திட்டம் மற்றும் கட்டடக்கலைக்கென சிறப்பாக இயங்கும் இரு பள்ளிகள் நிறுவப்படும் மற்றும் ஐ.ஐ.டி. எனப்படும் இந்தியத் தொழில்நுட்பக் கழகம், என்.ஐ.டி எனப்படும் தேசியத் தொழில்நுட்பக் கழகம் ஆகியவற்றின் கீழ் திட்டம் மற்றும் கட்டக்கலைக்கென 18 பள்ளிகள் செயல்படும்.

* பிரதமர் ஃபெல்லோஷிப் திட்டத்தின் கீழ் சிறப்பாகத் தேர்ச்சி பெற்ற முதல் 1000 பி.டெக். பட்ட மாணவர்கள், ஐ.ஐ.டி மற்றும் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸ் மையத்தில் முனைவர் பட்டப் படிப்பைத் தொடர வாய்ப்பு வழங்கப்படும். இந்த மாணவருக்கு பெருந்தொகை சன்மானமாக வழங்கப்படும்.

* மூன்று பாராளுமன்றத் தொகுதிக்கொரு மருத்துவக் கல்லூரி என்ற வகையில் 24 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்படும். கற்பிக்கும் ஆசிரியர்களின் தரம் மேம்பட ஆசிரியர்கல்வி பி.எட்., நிறுவனங்களில் ஒருங்கிணைந்த ஆசிரியர் பட்டப்படிப்பு ஏற்படுத்தப்படும்.

* கரும்பலகையிலிருந்து கணினிப் பலகை நோக்கி என்ற அடிப்படையில் கற்பிக்கும் உத்தி பயணிக்கும். டிஜிட்டல் வகுப்புகள் தொடங்கப்படும்.அரசின் கடமை2014 பொதுத்தேர்தலின்போது இன்றைக்கு நாட்டையாளும் நடுவண் அரசு தன் தேர்தல் வாக்குறுதியில் ‘‘ஒவ்வொரு இந்தியக் குடிமகனுக்கும் தரமான கல்வியும் சுகாதாரமும் அளிப்பதன் மூலம் சக்தியுள்ளவனாக, குறிப்பாகப் பெண் குழந்தைகள் மேம்பாடு, திறன் மேம்பாடு நோக்கங்கொண்ட கல்வியாக அளிக்கப்படும்’’ என்று சொல்லியதை நினைவுகூரத்தக்க சமயம் இது.

கல்விக்காக மொத்த உற்பத்தியில் 6 சதவீதமாவது ஒதுக்கி, ஒதுக்கப்பட்ட நிதியை முழுமையாகப் பயன்படுத்தி அனைவருக்கும் தரமான கல்வி அதன்மூலம் நாட்டின் வளர்ச்சி என்ற இலக்கை எட்டிப்பிடிப்போம்.      

முனைவர் முருகையன் பக்கிரிசாமி