ராணுவத்தில் படைவீரர் பணிக்கு ஆள்சேர்ப்பு!



வாய்ப்பு

இந்தியாவின் பாதுகாப்பில் பெரும்பங்கு வகிக்கும் முப்படைகளில் இந்திய ராணுவமும் ஒன்று. நாட்டிற்குள் அமைதியாகவும் நிம்மதியாகவும் நாம் அனைவரும் பாதுகாப்பு உணர்வுடன் இன்று வாழ்ந்துவருகிறோம் என்றால் அதற்குக் காரணம் பாதுகாப்புப் படைகள்தான். இவ்வளவு பெருமைகளுக்குரிய இந்திய ராணுவத்தில் பணியாற்றுவதைக் கனவாகக் கொண்ட இளைஞர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு. ராணுவத்தின் சென்னை மண்டலத் தலைமை அலுவலகம், படைவீரர் பணிக்கான ஆள்சேர்ப்பு முகாமை நடத்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்த ஆள்சேர்ப்பு முகாமில் தமிழகத்தின் பெரம்பலூர், அரியலூர், திருச்சி, கரூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் புதுச்சேரி மாநிலத்தின் காரைக்கால் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் கலந்துகொள்ளலாம். ராணுவவீரர், டெக்னிக்கல், நர்சிங் உதவியாளர், பொதுப்பணி, கிளார்க், ஸ்டோர் கீப்பர், டிரேட்ஸ்மேன் போன்ற பிரிவுகளில் இவர்களுக்கு பணிவாய்ப்பு உள்ளது. விண்ணப்பதாரர் இந்தியக் குடியுரிமை பெற்றவராகவும், திருமணமாகாத ஆண் விண்ணப்பதாரராகவும் இருக்க வேண்டும். இதற்கான ஆள்சேர்ப்பு முகாம், பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் 10.4.2018 முதல் 23.4.2018 வரை நடைபெறும்.

படைவீரர் பணிக்கான ஆள்சேர்ப்பு முகாமில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்ப்போம்...
கல்வித்தகுதி: பிளஸ்-2 படிப்பில் அறிவியல் பாடம் படித்தவர்கள், ஐ.டி.ஐ. மற்றும் டிப்ளமோ எஞ்சினியரிங் படித்தவர்கள் ஆகியோருக்கு ஏராளமான பணியிடங்கள் உள்ளன. 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கும் குறிப்பிட்ட பிரிவில் பணியிடங்கள் உள்ளன. அந்தந்த பணிக்கான சரியான வயது வரம்பு, கல்வித்தகுதியை இணையதளத்தில் விரிவாகப் பார்க்கலாம். விண்ணப்பதாரர் குறிப்பிட்ட உடல் தகுதி பெற்றிருப்பது அவசியம். உடல்தகுதி மருத்துவப் பரிசோதனை மூலம் சோதிக்கப்படும்.

வயது வரம்பு: விண்ணப்பதாரர் 17½ வயது முதல் 23 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். சில பணிகளுக்கு 21 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்க வேண்டும். வயது வரம்பு 1.10.2018-ம் தேதியை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்படுகிறது.
தேர்வு செய்யும் முறை: சான்றிதழ் சரிபார்த்தல், உடல் அளவுத் தேர்வு, உடல்திறன் தேர்வு, மருத்துவப் பரிசோதனை ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் சேர்க்கப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் ஆன்லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 25.3.2018
மேலும் விரிவான விவரங்களைத் தெரிந்துகொள்ள www.joinindianarmy.nic.in என்ற இணையதள முகவரியைப் பார்க்கலாம்.