நல்ல விஷயம் 4



வளாகம்

அறியவேண்டிய மனிதர்: சாந்தி ஸ்வரூப் பட்நாகர்

இந்திய இயற்பியல் விஞ்ஞானியான சாந்தி ஸ்வரூப் பட்நாகர் பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் பஞ்சாப் மாகாணத்தில் (தற்போது பாகிஸ்தான்) பேரா என்னும் இடத்தில் 1894ம் ஆண்டு பிப்ரவரி 21ம் தேதி பிறந்தார். சிறுவயதிலேயே எலக்ட்ரானிக் பொருட்களின் மீது அதீத ஆர்வம் கொண்ட இவர் தனது பள்ளிக் கல்வியை செகந்தராபாத்தில் கற்றார்.

பின்னர் லாகூர் ஃபோர்மன் கிறிஸ்தவக் கல்லூரியில் 1916-ல் இயற்பியல் துறையில் இளங்கலைப் பட்டமும் வேதியியலில் 1919-ல் முதுகலைப் பட்டமும் பெற்றார். பிறகு லண்டன் பல்கலைக்கழகக் கல்லூரியில் டி.எஸ்சி. ஆய்வியல் பட்டம் பெற்றார்.
மீண்டும் இவர் 1921-ல் தாயகம் திரும்பி காசியில் உள்ள பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் வேதியியல் பேராசிரியராக பணியில் சேர்ந்தார்.

மூன்றாண்டுகளுக்குப் பிறகு லாகூரில் உள்ள பஞ்சாப் பல்கலைக்கழகத்தின் வேதியியல் ஆய்வகத் துறை இயக்குநராக நியமிக்கப்பட்டார். கூழ்மங்கள் (Colloids), பால்மங்கள் (Emulsions), தொழிலக வேதியியல் (Industrial Chemistry), காந்த வேதியியல் தொடர்பான ஆராய்ச்சிகளில் ஈடுபட்டார். 1928-ம் ஆண்டு கே.என்.மாத்தூருடன் இணைந்து காந்தப் பண்புகளை அளவிடும் கருவியைக் கண்டறிந்தார் (Magnetic Interference Balance).

இவரது முழு முயற்சியால் பிரிட்டனில் உள்ளது போன்று அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி வாரியம் இந்தியாவில் உருவாக்கப்பட்டது. அதன் முதல் இயக்குநராக நியமிக்கப்பட்ட இவர், இந்திய அரசால் உருவாக்கப்பட்ட பல்கலைக்கழக மானியக்குழுவின் முதல் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்திய அறிவியல் தொழிலக ஆய்வகங்களின் தந்தை என அழைக்கப்படும் இவரின், பெட்ரோலிய கழிவுகளைப் பயன்படு பொருளாக மாற்றுவதற்கான வழிமுறைகள் சர்வதேச அளவில் மிகுந்த வரவேற்பு பெற்றன. இவரது செயல்பாடுகளை கவுரவிக்கும் பொருட்டு 1954ம் ஆண்டு இந்திய அரசு இவருக்கு பத்ம பூஷண் விருதளித்து பெருமைப்படுத்தியுள்ளது.
மேலும் இவரைப்பற்றி அறிய https://en.wikipedia.org/wiki/Shanti_Swaroop_Bhatnagar

வாசிக்கவேண்டிய வலைத்தளம்: http://www.inidhu.com/இயற்கை-வேளாண்மை

குழந்தைகளுக்கு பெயர் வைப்பது முதல் உயர்கல்விக்கு பாடம் நடத்துவது வரை பல்வேறு செயல்களுக்கும் வலைத்தளங்கள் வரப்பிரசாதங்களாக உள்ளன. வாழ்க்கைக்குத் தேவையான தகவல்களைத் தந்து உதவும் களஞ்சியமாக வலைத்தளங்கள் பெரிதும் பயன்பட்டு வருகின்றன.

அந்த வகையில் இந்த வலைத்தளத்திலும் சுயமுன்னேற்றம், உடல்நலம், உணவு, பயணம், சுற்றுச்சூழல், ஆன்மிகம், இலக்கியம் போன்ற தலைப்புகளில் பயனுள்ள பல கட்டுரைகளைக் காணமுடிகிறது. இதில் இயற்கை வேளாண்மை பகுதியில் இயற்கை வேளாண்மையின் கூறுகள், நிலத்தை தயார் செய்தல், பயிர் சுழற்சி முறை, கலப்புப் பயிர் பயிரிடுதல் போன்றவையும், இலக்கியப் பகுதியில் சிறுவர் கதை, கவிதை உள்ளிட்டவையும் சுவாரஸ்யமானவை.

படிக்கவேண்டிய புத்தகம்: வெற்றிச் சிந்தனை பழந்தண்டலம் அனந்தராமன்

சாதிக்கத் துடிக்கும் இளைஞர்களுக்காகவே பத்து பகுதிகளை உள்ளடக்கி உருவாக்கப்பட்டது இந்நூல் என்பது முதல் சிறப்பு. வாழ்க்கையில் சாதிப்பதற்கான வழிமுறைகளை வெற்றிக்கான விதிமுறைகளாகத் தொகுத்து,  வெற்றியின் மூலத்தை எளிய நடையில் பாமரனுக்கும் புரியும் வகையில் தெளிவான உரையாடலில் விளக்குகிறது இந்நூல்.

மிகச் சிறந்த உலக தத்துவ கருதுகோள்களை மேற்கோள்காட்டி அடுத்ததாக உலக சாதனையாளர்களின் வெற்றிச் சரித்திரங்களை அத்தியாயம் அத்தியாயமாகப் பட்டியலிட்டிருக்கிறார் நூலின் ஆசிரியர் பழந்தண்டலம் அனந்தராமன். படிக்கும் வாசகர்களின் எண்ணங்களையும் செயல்களையும் செம்மைப்படுத்தும் வகையில் இந்நூலை உருவாக்கியிருக்கிறார்.

மனித வாழ்வின் மேன்மைக்கான பண்புகளான எண்ணம், சொல், செயல் ஆகிய மூன்றையும் திறம்பட கையாண்டு வெற்றியை நோக்கிச் செல்வதற்கான உந்துதலைக் கொடுத்து சாமானியனையும் சாதனையாளனாக்கும்படி உள்ளது வெற்றிச் சிந்தனை எனும் இப்படைப்பு. (வெளியீடு: சென்னை புக்ஸ், 58, கிருஷ்ணா நகர் 6வது தெரு, மடிப்பாக்கம், சென்னை-600 091. விலை:40. தொடர்புக்கு: 9710253078)

பார்க்கவேண்டிய இடம்:பாலக்காடு கோட்டை

கேரளாவின் மேற்குத்தொடர்ச்சி மலைத் தொடர்களுக்கு ஊடாக அமைந்திருக்கும் பாலக்காடு, பரந்து விரிந்திருக்கும் பசுமைப் பரப்புகளுக்காகவே பெயர் பெற்றது. அத்தகைய இயற்கை வனப்பு மிக்க பாலக்காடு நகரத்தின் மத்திய பகுதியில் கருங்கல்லால் இக்கோட்டையானது கட்டப்பட்டுள்ளது. பாலக்காட்டுக் கோட்டை மிகப் பழைய காலத்திலேயே இருந்ததாகக் கருதப்பட்டாலும், இதன் பழைய வரலாறு பற்றி எதுவும் தெரியவரவில்லை.

பாலக்காடு அச்சன் எனும் இப்பகுதியின் உள்ளூர் ஆட்சியாளர் தொடக்கத்தில் கோழிக்கோட்டு அரசின் சிற்றரசராக இருந்தார். எனினும் 18 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்துக்கு முன்னரே இவர் சுதந்திரமாக இயங்கத் தொடங்கினார். 1757-ல் இப்பகுதிமீது கோழிக்கோட்டு அரசு ஆக்கிரமிப்பு நடத்த இருந்த நிலையில், இவர் உதவி கேட்டு ஹைதர் அலிக்குத் தூது அனுப்பினார். பாலக்காட்டைத் தன் வசம் எடுத்துக் கொள்வதற்காக இச்சந்தர்ப்பத்தை ஹைதர் அலி பயன்படுத்திக்கொண்டான்.

இக்கோட்டை 1766-ல் ஹைதர் அலியால் புனரமைக்கப்பட்டது. 1768 இல் முதன்முதலாக பிரித்தானியர் இதனை ஹைதர் அலியிடம் இருந்து கைப்பற்றினர். எனினும் சில மாதங்களில் ஹைதர் அதனை மீண்டும் கைப்பற்றிக் கொண்டான் ஆயினும், கர்னல் ஃபுல்லார்ட்டன் அதனை 1783ல் மீண்டும் தம்வசப்படுத்தினான். அடுத்த ஆண்டிலேயே இக்கோட்டை கைவிடப்படவே அதனை கோழிக்கோட்டுப் படைகள் கைப்பற்றிக் கொண்டன.

1790 ஆம் ஆண்டில் பிரித்தானியப் படைகள் அதனை இறுதியாகக் கைப்பற்றின. பின் இக்கோட்டை திருத்தம் செய்யப்பட்டு ஸ்ரீரங்கப்பட்டினத்துக்கு எதிரான படை நடவடிக்கைகளுக்கான ஒரு தளமாகப் பயன்படுத்தப்பட்டது.

19ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரை படைகள் நிலைபெற்றிருந்த இக்கோட்டையானது 1900களின் முற்பகுதியில் தாலுகா அலுவலகமாக மாற்றப்பட்டது. மேலும் இக்கோட்டையானது ஹைதர் அலியின் மகனான திப்பு சுல்தானின் பெயரைத் தழுவி திப்பு கோட்டை என்றும் அழைக்கப்படுவது உண்டு. மேலும் தகவல்கள் அறிய https://en.wikipedia.org/wiki/Palakkad_Fort