பரிட்சை நேரத்துப் பதற்றம் வேண்டாம் மாணவர்களே!



பொதுத்தோ்வு டிப்ஸ்

மாணவர்களுக்குத் தேர்வு சமயத்தில் மன அழுத்தம் வருவதற்கு உடல் மற்றும் மன ரீதியிலான சில காரணங்கள் உண்டு. உதாரணமாக, உடல் ரீதியாகத் தவறான உணவுப்பழக்கம், உடற்பயிற்சியைக் கைவிடுதல், மிகக் குறைவான தூக்கம் போன்ற காரணங்களைக் குறிப்பிடலாம். மனரீதியாகப் பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் அணுகுமுறை, மாணவர்களின் சில தவறான மனநிலை மூலம் மனஅழுத்தம் வரலாம்.

இதுகுறித்து விளக்குகிறார் குழந்தைகள் மனநல மருத்துவர் வெங்கடேஸ்வரன்... பெற்றோர்கள் தேர்வு சமயத்தில் முடிவு ரீதியிலான சில இலக்குகளை (உதாரணமாக, இவ்வளவு மதிப்பெண், இந்தக் கல்லூரி, இந்தப் படிப்புதான்) மாணவர்களிடம் சொல்லி அழுத்தம் தருவதால் மனஅழுத்தம் உண்டாகும். ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் மாணவர்களின் நம்பிக்கையைக் குறைக்கும் வகையில் பேசுவதால் மனஅழுத்தம் வரலாம்.

மாணவர்கள் தேர்வு முடிவு பற்றியோ, இல்லை தனது கனவுகள் பற்றியோ (அதை அடையமுடியுமோ முடியாதோ என்ற சந்தேகம்) அதிகமாக சிந்தித்து கவலைப்படுவதினால் மனஅழுத்தம் உண்டாகிறது. மற்றவர்களைப் பார்த்து அச்சம் கொள்ளுதல், (என் நண்பனைவிட நான் குறைவாகப் படித்திருக்கிறேன்), மன அழுத்தத்திற்கு ஒரு முக்கியமான காரணமாகும்.

மனஅழுத்தம் மற்றும் அதனால் ஏற்படும் பாதிப்புகளைத் தடுக்க என்ன செய்யலாம்? பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் குறிப்பாக மாணவர்கள் தரமான வாழ்க்கைமுறை மற்றும் மனநிலையைக் கடைப்பிடித்தால் நிச்சயம் இப்படிப்பட்ட பாதிப்புகளைத் தடுக்கமுடியும்.

உடல்ரீதியாக, தேர்வுக்கு முன்புவரை உள்ள காலங்களில் அளவான தூக்கம் (6-8 மணி நேரம்), ஆரோக்கியமான உணவுப் பழக்கம் (எண்ணெய் மற்றும் பலகார உணவுப் பொருட்களைத் தவிர்த்தல், பழம் மற்றும் காய்கறிகளைச் சேர்த்தல்), நன்றாக நீர் அருந்துதல் (ஓரு நாளைக்கு 3 - 4 லிட்டர்), தேர்வுக் காலங்களிலும் உடற்பயிற்சியை முற்றிலும் கைவிடாமல் இருத்தல், போன்ற வழக்கத்தைப் பின்பற்றினால் மனஅழுத்தத்தைத் தவிர்ப்பதோடு கவனமும் சிதறாமல் இருக்கும்.

மனரீதியில் மாணவர்கள் தங்களை எப்படித் தயார்படுத்திக்கொள்ளலாம்? முறையாக திட்டமிடுதல் மற்றும் அதைச்செயல்படுத்துதல் அவசியமானது. தேர்வுக்கு முன் ஒரு மாதமாக இருந்தாலும், ஒருநாளாக இருந்தாலும் முறையாகத் திட்டமிடுதல் மற்றும் கால அட்டவணை போடுதல் அவசியமானது.

இதற்கு ஆசிரியர்களின் உதவியும் கிடைக்க வேண்டும். ஹை எய்ல்ட் மற்றும் லோ எய்ல்ட் பாடங்கள் மற்றும் கேள்விகள் எவை என ஆசிரியர்கள் அறிவுரையின்படி திட்டமிட்டு படித்தால் மனச்சோர்வு, நம்பிக்கையின்மை போன்றவற்றைத் தவிர்க்கலாம். சிலர் தேர்வு சமயத்தில் நம்பிக்கையை இழந்து படிப்பதையே கைவிட்டுவிடுவார்கள். தேர்வு சமயத்தில் இதுபோன்ற மனக்குழப்பங்கள் மிகவும் சாதாரணம். அதனால் எவ்வளவு குறுகிய காலமாக இருந்தாலும் அதைத் திட்டமிட்டு அணுகினால் நல்ல பலனைப் பெறலாம்.

 திட்டமிட்ட பிறகு அந்த நாளின் இலக்கைச் செயல்படுத்துவதிலும் சில முறைகள் உண்டு. ஒரு நாளைக்கு எவ்வளவு நேரம் படிக்க வேண்டும் என்பதில் பொதுவான கருத்து கூற இயலாது. ஆனால், எப்படிப் படிக்க வேண்டும் என்பதற்குச் சில வழிகள் உண்டு. உதாரணமாக, 45 நிமிடத்திலிருந்து ஒரு மணி நேரத்திற்கு மேல் தொடர்ந்து படிக்காமல், சிறிது நேரம் இடைவெளி எடுத்து படித்தால் கவனம் நன்றாக இருக்கும்.

இடைவெளி என்றவுடன் ஒரு தவறான பழக்கம் என்ன வரும் என்றால், சிலர் மொபைல் மற்றும் தொலைக்காட்சியில் நேரத்தை செலவிடுவார்கள். அதனால் தீமைகளே அதிகம். தொடர்ந்து படிக்கும்போது கண்கள் மற்றும் மூளை சோர்வடையும். அதற்கு 5 அல்லது 10 நிமிடம் நடை பயிற்சி அல்லது இயற்கைச் சூழ்நிலையில் செல்லுதல் போன்ற வழக்கங்களை மேற்கொண்டால் கவனம் நன்றாக இருக்கும். படிக்கும் இடத்தைக்  கவனச்சிதறல்கள் ஏற்படாதவாறு அமைத்துக்கொள்ள வேண்டும்.

பொதுவாகப் புறக்கணிக்கப்படும் சில நல்ல முறைகளில் ரிவிஷனும் ஒன்று. இன்று நாம் படித்து நினைவில் கொள்வது நாளை பாதியாகக் குறையும் மற்றும் தேர்வு நேரத்தில் புதிதாகப் படிப்பதுபோல் இருக்கும். இதை “Memory Decay” எனச் சொல்வார்கள். இதைத் தவிர்க்க, இன்று படித்ததை நாளை திரும்பப் பார்த்தல் மற்றும் இந்த வாரம் படித்ததை வாரக்கடைசியில் திரும்பப் பார்த்தல், கடினமான சிலவற்றைச் சுவரில் ஒட்டி தினமும் அதைப் படித்தல் போன்ற வழிமுறைகளைப் பின்பற்றினால் தேர்வில் மறதி ஏற்படாது.

மாணவர்களின் மனநிலையில் சில மாற்றங்கள் தேவை. தேர்வு முடிவு மற்றும் தன் இலக்கு பற்றிய கவலைகளை ஒதுக்கிவைத்துவிட்டு அன்றைய செயல்பாட்டைப் பற்றி மட்டும் சிந்தித்தால் மனஅழுத்தம் பெரும்பாலும் குறையும்.

அதே சமயம் மற்றவர்கள் எவ்வளவு படித்திருக்கிறார்கள், என்ன படித்திருக்கிறார்கள் என்று கேட்டுக்கொண்டிருப்பதைத் தவிர்த்தல் நல்லது. ஏனெனில் ஒரு ஓட்டப்பந்தயத்தில் நமக்கு முன் ஓடுபவரையோ அல்லது நமது பின்னால் வருபவரையோ பார்த்துக்கொண்டே ஓடினால் நமது கவனம் சிதறும் வேகம் குறையும். தேர்வுக்குப் படிப்பதும் அதேபோன்றதுதான்.

அதேபோல மாணவர்களுக்கு நம்பிக்கை அளிப்பதில் பெற்றோர்களின் பங்கு மிக முக்கியமானது. அதிகமாக அறிவுரை கூறுதல், அவர்களை நகையாடுதல், தேவையில்லாமல் அச்சப்படுத்துதல், உறவினர்களிடம் மாணவர்களைப் பற்றிக் குறை கூறுதல், நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மூலம் அறிவுரை கூறுதல் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும். மாணவர்கள் சோர்வடையும்போது அவர்களின் நிறைகளைக் கூறிவிட்டு பின்பு, ‘கடமையை மட்டும் பற்றி யோசித்து செயல்பட்டால் போதும். தேர்வு முடிவுகள் என்ன ஆகுமோ என்று அஞ்சிக்கொண்டிருக்க வேண்டாம்’ என்று கூறுவது நன்று. ஆசிரியர்களும் இதே நிலைப்பாட்டை கடைப்பிடிக்க வேண்டும்.

பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களின் பெற்றோர்கள் அவர்களின் மனஅழுத்தம் பற்றி அறிந்திருக்க வேண்டும். இது சாதாரண மன அழுத்தம் மற்றும் மனச் சோர்விலிருந்து மாறுபட்டது. இதன் அறிகுறிகள், எப்போதும் சோர்வாக இருத்தல், கவனம் இன்மை, தூக்கம்
இன்மை, பசி இன்மை, பிடித்த விஷயங்களில்கூட நாட்டமில்லாமல் இருத்தல், தற்கொலை எண்ணம் போன்றவை இருந்தால், அதைக் கவனத்தில் கொண்டு மனநல மருத்துவரை அணுக வேண்டியது மிகவும் அவசியம்.தேர்வுக்கு முதல்நாள் சில தவறுகளைச் செய்யக்கூடாது.

4 - 5 மணி நேரமாவது உறக்கம் தேவை. தேர்வன்று காலை உணவு உண்ணாமல் செல்வதைத் தவிர்க்க வேண்டும். தேர்வின்போது மறதி ஏற்பட்டால் பதற்றப்படாமல், அடுத்த வினாவிற்கு விடை அளித்துவிட்டு இறுதியில் யோசித்தால், பதில் கிடைக்க வாய்ப்பு உண்டு. நம்மால் முடிந்தவரை முயற்சி செய்வோம், முடிவுகள் எதுவாயினும் சந்திப்போம் என்ற தெளிவான எண்ணத்தோடு தேர்வை எதிர்கொண்டால் வெற்றி நம்மைத் தேடி வரும்.