ரயில்வேயில் 90,000 பணி வாய்ப்புகள்!



வாய்ப்புகள்

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனம் இந்திய ரயில்வே துறை. நாடு முழுவதும் பரந்த சேவையாற்றும் இந்த நிறுவனத்தில், வேலைவாய்ப்பைப் பெறுவது இளைஞர்களின் விருப்பங்களில் ஒன்றாக உள்ளது. அவர்களின் ஆவலைப் பூர்த்தி செய்யும் வகையில் ஆண்டுதோறும் பல ஆயிரம் பணியிடங்களை ரயில்வே துறை நிரப்பிவருகிறது.

ரயில்வே துறையில் பொறியியல் மற்றும் அலுவலகப் பணிகளுக்கு ஒரு லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பை வழங்குவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது ரயில்வே பணியாளர் தேர்வாணையம். இந்தத் தேர்வுக்கான வயது வரம்பையும் தளர்த்தி உள்ளது மத்திய அரசு. பத்தாம் வகுப்பு முடித்திருந்தாலே இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

ரயில்வே ரெக்ரூட்மென்ட் போர்டு இந்தியாவில் அதிக அளவில் வேலை வாய்ப்பு வழங்கும் மிகப்பெரிய அமைப்பாக உள்ளது. இந்நிறுவனம் 2018-ம் ஆண்டில் இரண்டரை லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பை வழங்கத் திட்டமிட்டிருக்கிறது. சமீபத்தில் வெளியிடப்பட்ட அறிவிப்பில், தொழில்நுட்பம் மற்றும் உதவி ரயில் பைலட் பணிக்கு 17,849 பேர், பல்வேறு தொழில்நுட்பப் பணிக்கு 9,170 பேர் உள்பட மொத்தம் 27,019 பேர், குரூப் டி பணிகளுக்கு 62,907 பேரைத் தேர்வு செய்வதற்கான அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது.

கல்வித்தகுதி: தொழில்நுட்பம் மற்றும் உதவி ரயில் பைலட் பணிக்கு பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு, ஐடிஐ, டிப்ளோமா, எஞ்சினியரிங், இயற்பியல், கணிதப் பட்டதாரிகள் www.ompl.co.in என்ற ஆன்லைன் வழியே விண்ணப்பிக்க வேண்டும். வயதுவரம்பு: மத்திய அரசின் புதிய அறிவிப்பின்படி, 30 வயது வரை உள்ள பொதுப்பிரிவினரும், இதர பிற்படுத்தப் பட்ட பிரிவினருக்கு 33 வயது வரை உள்ளவர்களும், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி இனத்தவர்கள் 35 வயது வரை உள்ளவர்களும் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: பொதுப்பிரிவு மற்றும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவைச் சார்ந்தவர்களுக்கு ரூ. 500, இதர பிரிவினர் ரூ. 250ம் விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும். விண்ணப்பிக்கக் கடைசி நாள் 5.3.2018.

தேர்வு முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு, மருத்துவச் சோதனை போன்றவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படு வார்கள். ரயில்வே (Railway Loco pilots) உதவி ஓட்டுநராகப் பணிக்கு அமர்த்தப்படுவார்கள். இந்தியா முழுவதும் பணி செய்ய வாய்ப்பு கிடைக்கும். மாதச் சம்பளமாக, 19,900 ரூபாயும், இதர படிகளும் வழங்கப்படும்.

குரூப் டி மற்றும் குரூப் சி முதல் நிலை மற்றும் இரண்டாம் நிலைக்கு 62,907 பேரைத் தேர்வு செய்ய உள்ளது. இதில், சென்னையை மையமாகக் கொண்டு செயல்படும் தெற்கு ரயில்வேக்கு மட்டும் 2,979 பேரைத் தேர்வு செய்ய உள்ளது. கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது ஐடிஐ சான்றிதழ் அல்லது தேசிய பயிற்சித் திட்டத்தின் கீழ் சான்றிதழ் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயதுவரம்பு: பொதுப்பிரிவினருக்கு வயதுவரம்பு 33 எனவும், இதரப் பிற்படுத்தப்பட்டோர் பிரிவுக்கு 36 ஆகவும், எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கு 38 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
விண்ணப்பக் கட்டணம்: பொதுப்பிரிவினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவைச் சார்ந்தவர்கள் ரூ.500, தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினத்தவர்கள், மாற்றுத்
திறனாளிகள் ரூ. 250 விண்ணப்பக்கட்டணமாக செலுத்த வேண்டும். எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தேர்வு நடைபெறும். சரியான விடையைத் தேர்ந்தெடுக்கும் வகையில் அப்ஜக்ட்டிவ் முறையில்தான் இருக்கும். நெகட்டிவ் மதிப்பெண் உண்டு. பத்தாம் வகுப்பு வரையிலான பாடத்திட்டத்தில் இருந்தே கேள்விகள் கேட்கப்படும்.

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு அலுவலக உதவியாளர், பாதை பராமரிப்பாளர், கேட் கீப்பர் போன்ற பணிகள் வழங்கப்படும். இவர்களுக்கு, மாதச்சம்பளமாக 18,000 ரூபாயும், இதர சலுகைகளும் வழங்கப்படும்.இதற்கான விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பத்துடன், சான்றிதழ், ஏற்கெனவே பணியாற்றிய அனுபவச் சான்றிதழ் போன்றவற்றையும் இணைத்து அனுப்ப வேண்டும். சான்றிதழ் நகல்களை கையொப்பம் இட்டு அனுப்ப வேண்டும். விண்ணப்பிக்க கடைசி நாள் 12.3.2018.
மேலும் விவரங்களை அறிய www.sr.indianrailways.gov.in என்ற இணையதள முகவரியைப் பார்க்கவும்.