ஆஸ்திரேலியா! வேலையும் செய்யலாம்... பாடமும் படிக்கலாம்!



வெளிநாட்டுக் கல்வி

வெளிநாட்டுக் கல்வி எல்லோருக்கும் சாத்தியம்


இந்தியாவில் பல்வேறு பாடத்திட்டங்களில் சிறந்த கல்வியை வழங்கும் பல்கலைக்கழகங்கள் இருந்தாலும், இதை விடவும் மேம்பட்ட தொழில்நுட்பம், பாடத்திட்டங்கள், ஆராய்ச்சிப் படிப்புகளை வழங்கும் பல்கலைக்கழகங்கள் வெளிநாடுகளில் உள்ளன என்பதை மறுப்பதற்கில்லை. அதன் காரணமாகவே பெரும்பாலான மாணவர்கள் வெளிநாடுகளில் சென்று படிக்க ஆசைப்படுகிறார்கள்.

வெளிநாடு சென்று படிக்க விரும்பும் மாணவர்களுக்கு வழிகாட்டும் விதமாக நாம் இதுவரை அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், அயர்லாந்து, போலந்து போன்ற நாடுகளில் உள்ள ஆய்வுப் படிப்புகள், ஆராய்ச்சி படிப்புகள், தொழில்நுட்பப் படிப்புகளை வழங்கும் பல்கலைக்கழகங்கள் பற்றி யெல்லாம் பார்த்துவந்தோம். இதன் தொடர்ச்சியாக அடுத்து ஆஸ்திரேலியாவைப் பற்றி இனி பார்ப்போம்.

ஆஸ்திரேலியாவைப் பொறுத்தவரை உயர்கல்வி பயில்வதற்கான சிறந்த இடம். காரணம், பல நாடுகளில் அந்தந்த நாடுகளில் உள்ள தாய்மொழியே அதிகமாக பயன்படுத்தப்படும். ஆனால், இங்கு ஆங்கில மொழி பெரிய அளவில் பயன்பாட்டில் இருக்கிறது. ஆஸ்திரேலியாவைத் தேர்வு செய்து சென்று படிக்க மாணவர்களுக்கு ஆறு முக்கியமான அம்சங்களைச் சொல்லலாம்.

அதில் முதலாவதாகச் சொல்வதென்றால், பெரும்பாலான நாடுகளில் சிறந்த பல்கலைக்கழகங்கள், கல்வி நிறுவனங்கள் இருக்கின்றன. ஆனால், உள்கட்டமைப்பு உள்ளிட்ட எல்லா விதத்திலும்  சிறந்த முழுமையாக வளர்ச்சி அடையவில்லை என்றுதான் சொல்லவேண்டும். ஆஸ்திரேலியப் பல்கலைக்கழகங்கள் பாடத்திட்டங்கள் முதல் உள்கட்டமைப்பு வரை வளர்ச்சியடைந்துள்ளன. சர்வதேச அளவில் US, UK பல்கலைக்கழகங்களுக்கு அடுத்ததாக ஆஸ்திரேலிய பல்கலைக்கழகங்கள் உள்ளன.

இரண்டாவது சிறப்பம்சம் என்னவென்றால், இங்கு வழங்கப்படும் கல்வி உலகத்தரம் வாய்ந்ததாக உள்ளது. பாடத்திட்டங்கள் முதல் ஆராய்ச்சிகள் வரை ஒவ்வொரு விஷயத்தையும் நவீனப்படுத்திக்கொண்டே இருப்பார்கள். உதாரணமாக, ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு மருத்துவப் படிப்பில் ஒரு மாற்றம் வருமென்றால் அதற்கான அனைத்துச் செயல்பாடுகளிலும் முன்பாகவே விடுவார்கள். மூன்றாவதாக, இங்கு தங்கி படிப்பதற்கு ஆகும் செலவு குறைவு. மேலும், பல்வேறு உதவித்தொகைகள் வழங்கப்படுகின்றன. மாணவர்கள் பகுதிநேர வேலை பார்க்கவும் அனுமதிக்கப்படுகிறார்கள்.

நான்காவதாக உள்ள சிறப்பம்சம், இங்கு இல்லாத பாடத்திட்டங்களே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். உதாரணமாக, பெயின்டிங், ஆங்கிலமொழி இலக்கணம், மருத்துவம், எஞ்சினியரிங் என  எதை விரும்பினாலும் அதற்கான பாடத்திட்டங்கள் இங்கு வழங்கப்படுகின்றன.ஐந்தாவது சிறப்பம்சம், தொழில்நுட்பம்.

ஆஸ்திரேலிய பல்கலைக்கழகங்கள் தொழில்நுட்பம் சார்ந்த கல்வியில் தலைசிறந்து விளங்குகின்றன. உதாரணமாகச் சொல்வதென்றால், யுனிவர்சிட்டி ஆஃப் சிட்னியில் லேசர் டெக்னாலஜி ஒன்று உள்ளது. இதன் மூலம் நம் தலைமுடி அளவில் மெல்லியதாக உள்ள எந்தப் பொருளாக இருந்தாலும் அதில் துளையிடவேண்டும் என்றாலும் முடியும். இதையெல்லாம் இங்கிருந்தால் நம் மாணவர்கள் தெரிந்துகொள்ளவும் முடியாது… பயன்படுத்திக்கொள்ளவும் முடியாது. சர்வதேச நாடுகளில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு வரும் மாணவர்கள் மேம்பட்ட தொழில்நுட்பங்களைக் கற்றுக்கொள்ள முடியும்.

ஆறாவது சிறப்பம்சம் பார்ட் டைம் ஜாப் என்று சொல்லப்படும் பகுதிநேர வேலை செய்து சம்பாதிக்க முடியும். மாணவர்கள் ஒரு வாரத்துக்கு குறைந்தது 20 மணிநேரம் பகுதிநேரமாக ஏதாவது ஒரு நிறுவனத்தில் வேலை செய்யலாம். விடுமுறை நாட்களில் என்றால் 40 மணி நேரம் வேலை செய்யலாம். அதிலும் குறிப்பாகக் கல்வி சார்ந்த வேலையாக இருந்தால் அதை ஊக்குவிக்கும் விதமாக அவர்களின் கல்வித்திட்டம் உள்ளது.
ஆஸ்திரேலியா 23 மில்லியன்தான் மக்கள்தொகையை வைத்துக்கொண்டுள்ளது.

ஆனால், உயர்கல்வியில் மூன்றாவது சிறந்த நாடாக உள்ளது. ஆஸ்திரேலியாவில் 1100 கல்வி மையங்களில் 22,000 பாடத்திட்டங்கள் வழங்கப்படுகின்றன. உலக அளவில் சிறந்தவையாக உள்ள 100-ல் 8 பல்கலைக்கழகங்கள் ஆஸ்திரேலியாவில் உள்ளன. உலக அளவில் பல்கலைக்கழகத் தரப் பட்டியல்படி(University System Ranking) 9வது இடத்தில் உள்ளது. ஜெர்மனி, நியூஸிலாந்து, ஜப்பான்தான் தொழில்நுட்ப ரீதியாக முன்னிலையில் இருந்தாலும் பல்கலைக்கழகத் தரத்தில் ஆஸ்திரேலியா 9வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இங்கு ஒரு வருடத்துக்கு 200 மில்லியன் டாலர் கல்வி உதவித்தொகைக்காக செலவிடுகிறார்கள். அதேபோல் சர்வதேச அளவில் 50 சிறந்த பாடத்திட்டங்களில் 30 இங்கு வழங்கப்படும் பாடத்திட்டங்களாகும். இங்குப் படித்துவிட்டு சென்ற மாணவர்கள் உலகம் முழுவதுமாக 25 மில்லியன் மாணவர்கள் உள்ளனர். அதேபோல் இங்கு படித்துவிட்டு ஆய்வு செய்து நோபல் பரிசு பெற்றவர்கள் 15 பேர்.

இதையெல்லாம் விட ஆஸ்திரேலியாவுக்கு மகுடம் சூட்டுவது, உலகம் முழுவதும் இவர்களின் கண்டுபிடிப்புகள் தவிர்க்கமுடியாதவையாக உள்ளன. அவற்றில் குறிப்பிடத்தக்கவை பென்சிலின், அல்ட்ரா சவுண்டு, வைஃபை, விமானத்தில் பயன்படும் பிளாக் பாக்ஸ், செர்விக்கிள் கேன்சர் வேக்சின் போன்றவையாகும்.

 உலகம் முழுவதிலும் ஒரு பில்லியன் மக்கள் தினந்தோறும் ஆஸ்திரேலியாவின் கண்டுபிடிப்புகளில் உருவானவற்றைப் பயன்படுத்துகிறார்கள். இவ்வளவு சிறப்புகளைத் தன்னகத்தே கொண்ட ஆஸ்திரேலியாவின் பல்கலைக்கழகங்களையும் அங்கு வழங்கப்படும் பாடத்திட்டங்களையும் அடுத்த இதழில் விரிவாகப் பார்ப்போம்.