கல்வி அடைவுத்திறன் தேர்வுகள் எதற்காக?



அலசல்

இரத்தின புகழேந்தி

மத்திய மாநில அரசுகள் கல்விக்காக ஒதுக்கும் நிதியின் அளவு சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக அனைவருக்கும் கல்வி இயக்கம் மற்றும் தேசிய இடைநிலைக்கல்வித் திட்டம் போன்ற திட்டங்கள் மூலம் பல கோடி ரூபாயை கல்விக்காக செலவு செய்யும் அரசு அந்த நிதியினால் விளையும் பயனை அறிந்துகொள்ள விரும்புவது இயல்பான ஒரு நடைமுறை ஆகும்.

அதற்கென பல தர மதிப்பீட்டுக் கருவிகளைப் பயன்படுத்துகின்றனர். அவற்றுள் ஒன்றுதான்  அடைவுத்திறன் தேர்வு. இத்தேர்வு இரு நிலைகளில் நடைபெறுகிறது.

1. தேசிய அடைவுத்திறன் தேர்வு (NAS) எனப்படும் (National Achievement survey)
2. (SLAS) State Level Achievement Survey எனப்படும் மாநில அடைவுத்திறன் தேர்வு. இத்தேர்வினை (SSA) அனைவருக்கும் கல்வி இயக்கம் முன்னின்று நடத்துகிறது. 2012 ஆம் ஆண்டிலிருந்து இத்தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. இந்த ஆண்டுக்கான மாநில அடைவுத்திறன் தேர்வு நடைபெற்று முடிவு வெளிவர உள்ள நிலையில் மிகுந்த எதிர்பார்ப்பை இத்தேர்வு ஏற்படுத்தியுள்ளது. இத்தேர்வு முடிவுகளின் அடிப்படையிலேயே அடுத்த ஆண்டுக்கான கல்வித்திட்டங்களும் பயிற்சிகளும் வடிவமைக்கப்படும்.

முன்பு இத்தேர்வுகளைக் குறித்த தகவல்கள் அவ்வளவாகக் கண்டுகொள்ளப்படாமல் இருந்தது. இப்போது இத்தேர்வுகளுக்குத் தேசிய முக்கியத்துவம் கிடைத்துள்ளது. உலக அளவில் மாணவர்களை மதிப்பிடுவதற்கான  பல தேர்வு முறைகள் உள்ளன. அவற்றுள் குறிப்பிடத்தகுந்தவை Programme for International Student Assessment (PISA), Progress in International Reading Literacy Study (PIRLS), Trends in International Mathematics and Science Studies (TIMSS). இந்தத் தேர்வுகளுக்கு இணையாகச் செவ்வியல் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி நம் நாட்டு அடைவுத்திறன் தேர்வுகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் மாணவர்கள் கற்றுக்கொண்ட திறன்களைச் சோதித்து அறியும் பொருட்டு நடைபெறும் தேர்வுகள்தான் இவை. இத்தேர்வில் மூன்று, ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்கள் பங்குபெறுகின்றனர். மொழிப்பாடம் கணக்கு மற்றும் அறிவியல் ஆகிய பாடங்
களில் மாணவர்களின் பல்வேறு நிலைகளில் கற்றல் அடைவுத் திறன்களைச் சோதிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட வினாக்
களைக் கொண்ட வினாத்தாள் வழங்கப்படும்.

ஒவ்வொரு மாவட்டத்திலும் இத்தேர்வு நடைபெற்றாலும் அனைத்துப் பள்ளிகளிலும் நடைபெறுவதில்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாகப் பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டு நடத்தப்படுகிறது.இத்தேர்வு பள்ளியில் நடைபெறும் வழக்கமான தேர்வுகளிலிருந்து மாறுபட்டது.

போட்டித் தேர்வுகளுக்கு வழங்கப்படுவது போல் பல விடைகளிலிருந்து ஒரு விடையைத் தேர்வு செய்யும் முறையில் (அப்ஜக்டிவ் டைப்) வினாக்கள் அமைந்திருக்கும். இதன் மூலம் மாணவர்கள் ஒவ்வொரு பாடத்திலும் உள்ள பல திறன்களையும் எவ்வாறு கற்றுள்ளனர், எந்தத் திறன்களில் பின்தங்கியுள்ளனர் என்பதை எளிதாக மதிப்பிடும் வகையில் வினாத்தாள் வடிவமைக்கப் பட்டிருக்கும். மேலும் மாணவர்கள் கற்ற திறன்களை சூழலுக்கு ஏற்ப பயன்படுத்தும் வகையிலும் வினாக்கள் இடம்பெற்றிருக்கும்.

மொழிப்பாடங்களில் கேட்டல் திறன், சொற்களஞ்சியத் திறன், படித்தல் திறன் ஆகியவை மதிப்பிடப்படுகின்றன. கணக்குப் பாடத்தில் அடிப்படைத் திறன்கள் விவரங்களைக் கையாளும் திறன் போன்ற திறன்கள் சோதிக்கப்படுகின்றன.இத்தேர்வை பள்ளி ஆசிரியர்கள் நடத்து வதில்லை. வட்டார வளமையத்தில் பணியாற்றும் ஆசிரியர் பயிற்றுநர்கள் நடத்துவர்.

வேறு ஊராட்சி ஒன்றியத்தில் பணியாற்றும் பயிற்றுநர்களைக் கொண்டு நடத்தப்படும். தேர்வு முடிவுகள் மாவட்ட வாரியாக ஆராய்ந்து ஒப்பிட்டு மாநிலத்திற்கு அனுப்பப்படும். இதன்மூலம் கல்வியில் மாணவர்களின் திறன்கள் ஒப்பிடப்படுகின்றன. ஆண் பெண் ஒப்பீடு, நகரங்களுக்கும் கிராமங்களுக்குமான ஒப்பீடு, மாணவர்களின் சமூக நிலைகளுக்கேற்ப ஒப்பீடு எனப் பலவகை ஒப்பீடுகள் அளவிடப்படுகின்றன.

இந்தத் தேர்வு கல்விக்கான எதிர்காலத் திட்டங்களை வடிவமைக்கவும் உதவுகின்றன. எந்தப் பாடத்தில் எந்தத் திறனில் மாணவர்கள் பின்தங்கியுள்ளனர் என அறிந்து கொள்வதன் மூலம் ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் பயிற்சியில் குறிப்பிட்ட திறன்களை வலுவூட்ட வேண்டும் எனக் கல்வித்துறை திட்டமிடுவதற்கும் இது உதவுகிறது. மேலும் தேர்வு முடிவுகள் பல்வேறு கல்வி ஆய்வுகளுக்குப் பயன்படுகின்றன.

கல்வியில் காணப்படும் பாலியல் பாகுபாடுகளைக் களையவும், கல்வியில் தாக்கத்தை ஏற்படுத்தும் சமூகக்காரணிகளைக் கண்டறிந்து அவற்றிற்கு உரிய தீர்வுகளை வழங்கவும் இத்தேர்வுகள் கல்வியாளர்களுக்குத் துணைபுரிகின்றன.ஒவ்வொரு ஆண்டும் கல்வியில் ஏற்படும் மாற்றங்களைத் தீர்மானிக்கும் முக்கிய கருவியாக இத்தகைய தேர்வுகள் அமைகின்றன. மாவட்ட அளவிலான ஒப்பீடு மாநிலக் கல்வி வளர்ச்சிக்கும் மாநிலங்களுக்கிடையிலான ஒப்பீடு தேசியக் கல்வி வளர்ச்சிக்கும் பேருதவிபுரிகின்றன.