+2 பொருளியல் முழு மதிப்பெண் பெறும் வழிமுறைகள்
+2 தேர்வு டிப்ஸ்
கே.பாஸ்கரன் M.A., M.Phil., B.Ed.
+2 தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டுவிட்டன. மாணவர்கள் இப்போதிருந்து பாடங்களில் கவனம் செலுத்தினால்கூட கட்டாயம் வெற்றி பெறலாம். முன்பே பாடங்களைப் படித்து தேர்வுக்குத் தயாராக உள்ள மாணவர்கள் சென்டம் பெற முயற்சிக்கலாம்.
“பொருளியல் பாடத்தைப் பொறுத்தவரையில் நன்கு திட்டமிட்டு, எந்தெந்தப் பாடங்களைப் படித்தால் முழு மதிப்பெண் எளிமையாகப் பெறமுடியும் என யோசித்து படிக்க வேண்டும். ஒருமுறைக்கு இருமுறை படித்தவற்றை எழுதிப் பார்த்தால் நிச்சயம் சென்டம் வாங்கலாம்” என்கிறார் விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி பொருளியல் முதுகலை ஆசிரியர் K.பாஸ்கரன். அவர் தரும் டிப்ஸ்…
பல மாணவர்களின் எண்ணமும், நோக்கமும் ‘எளிமையாகப் படித்து வெற்றி பெறுவது எப்படி?’, ‘நிறைய மதிப்பெண்கள் பெறுவது எப்படி?’, ‘நாம் பொருளியல் பாடத்திலும் சென்டம் எடுக்க முடியுமா?’ என்றெல்லாம் மனதில் ஓடிக்கொண்டிருக்கும். இதனை எளிமையாகப் பெறுவதற்கும் குறிப்பிட்ட சில பாடங்களை மட்டும் படித்தாலே முழு மதிப்பெண் பெறுவதற்கும் நிறைய வாய்ப்புகள் உண்டு.
முதலில் வினா வரைவுத்தாள் பற்றி முழுமையாக அறிந்திருக்க வேண்டும். +2 பொருளியல் தேர்வில் பாடப்பகுதியின் பின்பகுதியில் உள்ள வினாக்கள் மட்டுமல்லாமல் கூடுதல் வினாக்களும் (3 மதிப்பெண் வினா, 10 மதிப்பெண் வினா) கேட்கப்படுகின்றன. இவற்றில் 10- மதிப்பெண் வினாவிற்கு சம்பந்தப்பட்ட வினாவினைத் தேர்வு செய்து அதில் வரக்கூடிய சிறிய தலைப்புகள் மட்டும் விடையளிக்கக்கூடிய வகையிலும் வினாக்கள் கேட்கப்படுவதோடு வேறு சில வினாக்களும் கேட்க வாய்ப்புண்டு. இந்த வினாத்தாள் வரைவின்படி ஒரு மதிப்பெண் வினாவிற்கு 12 பாடங்களிலிருந்தும் அனைத்து வினாக்களையும் படிக்க வேண்டும். பாடத்தின் உள்ளிருந்தும் சில வினாக்கள் கேட்கப்படும். இந்தப் பகுதியில் 50 வினாக்கள் கேட்கப்படும். அனைத்திற்கும் விடையளிக்க வேண்டும் (கூடுதல் வினாக்கள் வினாத் தொகுப்பில் இருந்தும் வரும்).
மூன்று மதிப்பெண் வினாக்களைப் பொறுத்தமட்டில் 15 வினாக்கள் கேட்கப்படும். அதில் 10 வினாக்களுக்கு விடையளிக்க வேண்டும். இதற்கு 1 முதல் 7 பாடங்களில் உள்ள வினாக்களையும், பாடம் 9-ல் ‘நீர்மை விருப்பக்கோட்பாட்டின் மூன்று நோக்கங்கள் யாவை?’, ‘உண்மைக் கூலிக்கும் பணக்கூலிக்கும் உள்ள வேறுபாடு யாது?’, பாடம் 10-ல் ‘பெருக்கி குறிப்பு வரைக?’, ‘உறுதித் தேவை என்றால் என்ன?’, பாடம் 11-ல் ‘பணத்தின் இலக்கணம் யாது?’, ‘பண அளிப்பின் நான்கு கூறுகள் யாவை?’, பாடம் 12-ல் ‘ஆதம் ஸ்மித்தின் புனித வரிவிதிகளைக் கூறுக?’, ‘பூஜ்ய நிதிநிலை அறிக்கை என்றால் என்ன?’ போன்ற வினாக்களைக் கண்டிப்பாகப் படிக்க வேண்டும்.
பத்து மதிப்பெண் வினாக்கள் பகுதியில் 10 வினாக்கள் கேட்கப்படும். அதில் 6 வினாக்களுக்கு விடையளிக்க வேண்டும். பாடம் 7, 10, 12-ல் இருந்து தலா இரண்டு வினாக்கள் வீதம் கேட்கப்படும். இந்தப் பாடப்பகுதியில் உள்ள 15-வினாக்களை மட்டும் படித்தாலே ஆறு வினாக்களுக்கு விடையளிக்கலாம். இறுதியாக இடம்பெறுவது இருபது மதிப்பெண் வினாக்கள்.
இந்தப் பகுதியில் 6 வினாக்கள் கேட்கப்படும். அதில் 3 வினாக்களுக்கு விடையளிக்க வேண்டும். இருபது மதிப்பெண் வினாக்களுக்கு விடையளிக்க நன்கு தெரிந்த பாடங்களை மூன்று மட்டும் தேர்வு செய்தால் போதும். இருபது மதிப்பெண் வினாக்களைப் பொறுத்தவரையில் 1, 3, 4, 8, 9, 11 பாடங்களில் இருந்து தலா ஒரு வினா கேட்கப்படும்.
மேலும் வரைபடம் உள்ள வினாக்களைத் தேர்வு செய்து படித்தால் முழு மதிப்பெண் கிடைக்கும். பாடம் 3, 4, 8 பாடத்தில் மொத்தம் 13 வினாக்கள் இடம்பெற்றுள்ளன. இதை மட்டும் நன்கு படித்து வரைபடம் வரைந்து பயிற்சி எடுத்துக்கொண்டாலே போதும். தலா 1-கேள்வி கேட்கப்படும். அப்போது 3 வினாவிற்கு சுலபமாக விடையளித்துவிடலாம்.
சுமாராகக் கற்கும் மாணவர்களாக இருந்தால் பாடம் 1, 4, 11 பாடங்களை 20-மதிப்பெண் வினாவிற்கு விடையளிக்க படிக்கலாம். இங்கே குறிப்பிடப்பட்டுள்ள வழிமுறைகளைச் சரியாகப் பின்பற்றி தேர்வுக்குத் தயாரானால் பொருளியல் பாடத்தில் முழு மதிப்பெண் நிச்சயம் பெறலாம். பல மாணவர்களின் எண்ணமும், நோக்கமும் ‘எளிமையாகப் படித்து வெற்றி பெறுவது எப்படி என்பதே’.குறிப்பிட்ட சில பாடங்களை மட்டும் படித்தாலே முழு மதிப்பெண் பெறுவதற்கும் நிறைய வாய்ப்புகள் உண்டு.
|