வீணாகும் பென்சில்களையும் விருட்சமாக்க புது முயற்சி!



புதுமை

ஹாலிவுட் நடிகர் லியோனார்டோ டிகாப்ரியோ முதல் நம்ம ஊர் விவேக் வரை உலகமே இயற்கைக்கு ஆதரவாகபோராடிக்கொண்டிருக்கிறது. மேலும் சமீபத்தில் வர்தா புயலுக்கு சென்னையில் சுமார் முப்பதாயிரத்துக்கும் அதிகமான மரங்கள் வேரோடு சாய்ந்துவிட்டன. இதற்கு ஈடுகட்டவேண்டிய பெரும் பொறுப்பில் நாம் இருக்கும் நிலையில் கோயம்புத்தூரில் இரண்டு இளைஞர்கள் “Farmcils” என்னும் பென்சில்கள் மூலம் விதைகளை விருட்சமாக்கும் முறையை அறிமுகம் செய்துள்ளனர்.

பள்ளிக் குழந்தைகள் எழுதும் பென்சிலை எழுதித் தீரும் தறுவாயில் தூக்கி எறியாமல் அப்படியே மண்ணுக்குள் புதைத்தால் முளைவிட்டு செடியாக வளரும். “இயற்கையின் முக்கியத்துவத்தை குழந்தைப் பருவத்தில் இருந்து உணரவேண்டும் என்பதை மனதில் வைத்து இதை உருவாக்கினோம்” என ஃபார்ம்சில்ஸ் பென்சில்களை உருவாக்கிய ரஞ்சித் மற்றும் ராஜா கமலேஷ் இருவரும் சொல்கிறார்கள்.

மேலும் ரஞ்சித் கூறும்போது, “எதாவது தனித்துவமா பண்ணனும்னு நானும் என் நண்பனும் நினைச்சு செய்ய ஆரம்பிச்சதுதான் இந்த ஃபார்ம்சில்ஸ் பென்சில்கள். நான் பி.இ. படிச்சுட்டு ஐ.டி. நிறுவனத்துல வேலை செஞ்சிட்டிருந்தேன். என் நண்பரும் நானும் ஒரே கல்லூரியிலதான் படிச்சோம். அவர் பி.இ. முடிச்சுட்டு எம்.பி.ஏ. படிக்கப் போயிட்டார். ஆனால், எங்க ரெண்டு பேருக்குள்ளேயும் ஏதாவது சிறப்பா செய்யணும்ங்கற அந்த எண்ணம் மட்டும் அப்படியே இருந்துச்சு. அதன் தொடர்ச்சியாகத்தான் இந்த பென்சில் உருவாக்கும் முயற்சியில் இறங்கினோம்.

ஏற்கனவே அமெரிக்கா, ஐரோப்பா போன்ற வெளிநாடுகள்ல இந்த விதைகள் கொண்ட பென்சில்கள் இருக்கு. இந்தியாவுலயும் நாம ஏன் இதைக் கொண்டுவரக்கூடாதுன்னு தீர்மானம் செய்தோம். நாங்க எதிர்பார்க்கவே இல்ல இந்த அளவுக்கு மக்கள் கிட்ட வரவேற்பு கிடைக்கும்னு” என்று மகிழ்ச்சி பொங்க கூறினார்.

ஃபார்ம்சில்ஸ் எப்படி இருக்கும் என்பதை அவர் விளக்கும்போது, “சாதாரண பென்சில்... அதுல பின்பக்கம் அழிரப்பருக்கு பதிலா ஒரு சின்ன கேப்சூல் இணைச்சிருப்போம். அதுலதான் விதைகள் இருக்கும். இவ்ளோதான் ஃபார்ம்சில்ஸ். இந்தக் கேப்சூல் நம்ம மாத்திரைகள் மாதிரிதான். தண்ணி பட்டதும் கரைஞ்சிடும். பென்சில் எழுதி தீர்ந்தவுடனே முடியற நேரத்துல தொட்டியில மண்ண நிரப்பி இந்தப் பென்சில கொஞ்சம் சாய்ச்சு பின்பக்கம் உள்ள கேப்சூல மண்ணுக்குள்ள இருக்கற மாதிரி புதைச்சு வெச்சுடணும்.

 அப்புறம் தினம் கொஞ்சம் தண்ணீர் ஊத்தணும். நாம செய்ய வேண்டியது அவ்வளவுதான். அதுக்கப்புறம் ஒரு வாரத்துக்குள்ள சின்ன முளைவிட்டு செடிகள் வளர ஆரம்பிக்கும். நாங்க கொடுக்கற ஒரு பெட்டியில 8 பென்சில் இருக்கும். தக்காளி, கத்தரி, வெண்டை, பூச்செடிகள் இப்படி எட்டு விதமான செடிகளுக்கான விதைகள் இருக்கும். எங்களுக்கு கேப்சூல் செலவுகள்தான் கொஞ்சம் அதிகமாகுது. அதனாலதான் இந்த பென்சில்கள் விலை கொஞ்சம் அதிகம். இருந்தாலும் விற்பனைக்கேற்ப இதனுடைய விலையக் குறைப்போம்.

இப்போதைக்கு கோயம்புத்தூர், மதுரை, காரைக்குடி, பக்கமெல்லாம் விற்பனைக்குக் கொண்டுவந்துட்டோம். சென்னை மாதிரியான சில பெரிய நகரங்களுக்கு சரியான விளம்பரங்களோட சேர்த்து அறிமுகம் செய்யணும். நாங்க ரெண்டு பேர் இதை உருவாக்கி நாங்களே இப்போ பங்குதாரர்களா இருக்கோம். மொத்தம் 20 பேர் எங்ககூட இந்த பென்சில் உருவாக்கத்துல இருக்காங்க.

இந்த ஃபார்ம்சில்லுக்கு அவ்ளோ சீக்கிரம் ஆடிட் பின் (தயாரிப்புக்கான அங்கீகாரம்) கிடைக்கலை. அப்போதான் ஆர்.பி ஆடிட் பண்ற ஒரு மேடம் வந்து ‘என்னதான்பா பண்றீங்க நீங்க? சரி வாங்க பார்க்கலாம்’னு சொல்லிட்டு வந்தாங்க. எங்க பென்சில பார்த்துட்டு அவங்க குழந்தைகளுக்கும் ரெண்டு பெட்டி வாங்கிட்டு பாராட்டிட்டுப் போனாங்க.

அதன் பிறகுதான் எங்களுக்கு இன்னும் நம்பிக்கை வந்தது. எதிர்காலத் திட்டமும் எங்களுக்கு இந்த ஃபார்ம்சில்ஸ்தான். இயற்கையின் முக்கியத்துவத்தை குழந்தைகள் கிட்ட கொண்டு போகணும். அத சார்ந்த இன்னும் நிறைய பொருட்கள் உருவாக்கணும்” என தன்னம்பிக்கையுடன் பேசி முடித்தார் ரஞ்சித்.உங்கள் எண்ணம் ஈடேற வாழ்த்துகள் தோழர்களே! 

- ஷாலினி நியூட்டன்
படங்கள்: C.கார்த்தீஸ்வரன்