வளரத் துடிப்போருக்கு வாய்ப்பளிக்கும் கடன் திட்டங்கள்



வழிகாட்டுதல் 15

வாழ்வில் உயர்வு பெற முயற்சியும் உத்வேகமும் துணைக்கொண்டு உழைக்கத் தயாராக இருக்கும் எந்த ஆண்/பெண்களுக்கும் மத்திய மாநில அரசுகளும் தனியார் நிறுவனங்களும், தொண்டு நிறுவனங்களும் உதவ பல கடன் திட்டங்களை வழங்குகின்றன. சுயமாகத் தொழில் செய்து முன்னேறத் துடிக்கும் அத்தனைபேருக்கும் பயனுள்ள சில கடன் திட்டங்களை இப்போது பார்ப்போம்.

சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வழங்கும் கடன் திட்டங்கள்

இந்திய அரசின் சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா 4500க்கும் மேற்பட்ட கிளைகளுடன் செயல்பட்டுவருகிறது. 70 வயதுள்ளவர்களுக்குகூட வீட்டுக்கடன் மற்றும் 1 லட்சத்திற்கு EMI-ல் கடன் தருகிறது. மேலும் எவ்வித புராஸஸிங் கட்டணமின்றி கல்விக்கடன் வழங்குகிறது. 15 ஆண்டுகள் வரை திருப்பிச் செலுத்தலாம். சிறப்புப் படிப்புகளுக்கு (MCA/MBA) போன்றவற்றுக்கு எவ்விதக் கூட்டுப் பொறுப்பாளர், செக்யூரிட்டி, எவ்வித மார்ஜினும் இல்லாமல் கடன் வழங்குகிறது.

‘சென்ட் சகாயோக்’எனும் திட்டத்தில் தயாரிப்புத் தொழில்களுக்கும், அமைப்பு சாரா தொழில்களுக்கும் கடன் வழங்குகிறது. சிறு கடை, லாண்டரி, ரிப்பேரிங் செய்யும் சர்வீஸ் சென்டர் மற்றும் யூனிட்டுகளுக்கும், பேக்கரி, சிறு மொபைல் கடைகளுக்கும் உடனுக்குடன் கடன் வழங்கப்படுகிறது. ‘சென்ட் வெஹிகிள்’ என்ற திட்டப்படி ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து வாகனக் கடன் பெறலாம். இதில் முதலில் எவ்விதக் கட்டணமும் செலுத்தத் தேவையில்லை.

விவசாயம், கால்நடை வளர்ப்பு, மீன் பிடித்தல், உணவுப் பதப்படுத்துதல் போன்ற தொழில்களுக்கும், சுய உதவிக் குழுக்களுக்கும், பெண்களுக்கும் குறைந்த வட்டியில் கடன் வழங்கப்படுகிறது.முழு விவரம் பெற: Central Bank of India,No. 48 & 49, Monteith Road, Egmore, Chennai - 600008 Landmark: NEAR Ambassador Pallava Ph: 044-23464252/256. www.centralbankofindia.co.in

மூலிகை ஆராய்ச்சிக்கான கடன் திட்டம்

மகாராஷ்டிரா மாநிலம் மூலிகை விவசாயத்தில் சிறந்து விளங்குகிறது. இம்மாநிலத்தின் பல விவசாயிகள் மூலிகைகள், காளான், வெங்காயம் எனப் பல பயிர்களை வளர்த்து இந்தியாவின் இதர மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்கின்றனர். இன்று உலகம் முழுவதும் மருந்துகள் தயாரிக்க மூலிகைகள், விதைகள், வேர் போன்றவை தேவைப்படுகின்றன.

மத்திய / மாநில அரசுகள் மூலிகைச் செடிகள் வளர்க்க,  மாதிரிப் பண்ணைகள் அமைக்க, தொழில் பயிற்சிகள் வழங்க, மூலிகைகள் பயிரிடுதல் பற்றிக் கருத்தரங்குகள் நடத்த, மூலிகைகளைப் பதப்படுத்த, மூலிகை நர்சரிப் பண்ணைகள் அமைக்க, மூலிகை தரப் பரிசோதனை மையம் தொடங்க, மூலிகை பற்றிப் புத்தகம் / பத்திரிகைகள் வெளியிட, மூலிகை ஆராய்ச்சி மையம் தொடங்க கீழ்க்கண்ட நிறுவனங்கள் பல உதவிகளைச் செய்கின்றன. இந்திய அரசு பொது நிறுவனங்கள், N.G.O. சங்கம், விவசாயிகள் கூட்டுறவு சங்கங்கள் என்றால் 100% நிதியும், தனி நபர்கள், தனியார் நிறுவனங்கள் என்றால் 50% கடன், 50% மானிய உதவியும் வழங்குகின்றன.

முழு விவரங்களுக்கு: Managing Director, National Medicinal Plants Board, Ministry of Ayush, 3rd Floor, Ayush Bhawan B-Block, GPO Complex, I.N.A. New Delhi - 110 023. Ph : 011  2465 1825. E.mail: info-nmpb@nic.in. www.nmpb.nic.in

Siddha Central Research Institute, Arignar Anna Govt.hospital Campus, Arumbakkam, Chennai- 600 106. Tamil Nadu, India
 Ph: +9144 26214925.  Email: crisiddha@tn.nic.in
இணையதளம்: http://crisiddha.tn.nic.in/contact%20us.html

பேங்க் ஆஃப் இந்தியாவின் கடன் திட்டங்கள்

வீட்டுக் கடனுதவிகள்: இதில் ரூ. 3 கோடி வரை புதிய வீடு கட்டக் கடன் கிடைக்கும். பெரிய நகர்களில் ரூ. 5 கோடி வரை கடன் பெறலாம். 25 வருடம் வரை கடனைத் திரும்பச் செலுத்தலாம். இலவச விபத்துக் காப்பீட்டு வசதி உண்டு.டையமண்ட் வீட்டுக் கடனுதவித் திட்டம்: தனி நபர் / நிறுவனம் / கார்ப்பரேட் கம்பெனிகளில் பணிபுரிவோருக்குப் பெரிய நகர்களில் இக்கடன் கிடைக்கும். ரூ.1 கோடி வருட வருமானம் உடையவர்களுக்கு
ரூ.5 கோடி வரை வீட்டுக்கடன் கிடைக்கும்.

சொத்து அடமான கடன்: வியாபாரம் / தொழில் செய்வோர் / டாக்டர் / எஞ்சினியர் / வக்கீல் / நிறுவனங்கள் மற்றும் நல்ல சம்பளம் வாங்குவோருக்கான கடனுதவித் திட்டம். ரூ. 2 கோடி வரை வீடு கட்டக் கடனுதவி வழங்கப்படும். 12 வருடத்தில் கட்ட வேண்டும். இயந்திரக் கடன், நடைமுறை மூலதனம், ஓவர் டிராஃப்ட் கடன் வழங்கப்படும்.

வாகனக் கடன்: 2, 4 சக்கர வாகனங்கள் வாங்க ரூ. 25 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படும்.
கல்விக் கடன்: இந்தியாவில் படிக்க ரூ. 10 லட்சம் வரை, வெளிநாடுகளில் படிக்க 20 லட்சம் வரை கடன் கிடைக்கும். பெண்களுக்கு(மாணவிகளுக்கு) விண்ணப்பதாரருக்கு 1% வட்டி குறைவு.

வித்யா கடன் : இந்தியாவில் உள்ள பெரிய புகழ்பெற்ற நிறுவனங்களில் படிக்க ரூ. 20 லட்சம் வரை கல்விக்கடன் பெறலாம்.இதுபோல் மேலும் தனிநபர் கடன், பென்ஷன் கடன், சுற்றுலா செல்ல கடன், குறுகிய காலத் திறன் மேம்பாட்டுப் பயிற்சி பெறக் கடன், ஊனமுற்றோருக்குக் கடன் என ஏராளமான கடனுதவித் திட்டங்கள் உள்ளன.

முழு விவரங்களுக்கு: BANK OF INDIA, STAR HOUSE, C - 5, “G” Block,Bandra Kurla Complex,
Bandra (East),Mumbai 400 051. Ph: 022-66684444. http://www.bankofindia.co.in/english/contact.aspx                        

எம்.ஞானசேகர்